தமிழ்நாடு அரசின் நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதலும் – 12மணி நேர வேலை சட்டமும்- பிரபுராம்

Estimated read time 1 min read

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023 (Tamil Nadu Land Consolidation (for special projects) Act 2023) கடந்த ஏப்ரல் மாதம் சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சூழலில், இந்த மசோதாவிற்கு ஆளுநர்  ரவி இன்று 25/08/2023  ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தின் மூலம் எந்தவொரு நிலங்களையும் சிறப்பு திட்டங்கள் என வகைப்படுத்தி அரசு கையகப்படுத்த முடியும். அதை சுற்றியுள்ள நீர்நிலைகளும் அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் .(எ.கா)  தனியார் கல்வி நிறுவனங்கள்,புதிய தொழிற்சாலைகள் வருகை அல்லது விரிவாக்கம்,பரந்தூர் புதிய விமான நிலையம்,எட்டு வழிசாலை திட்டங்கள் போன்ற பல திட்டங்களுக்கு இந்த சட்டம்   வலு சேர்க்கும்.

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ரவி இந்த கார்ப்பரேட் நலன் சார்ந்த மசோதாவிற்கு மட்டும் உடனே ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு இந்த சட்ட மசோத கொண்டு வரும் போது பெரிய அளவில் எதிர்ப்புகள் எதையும் சந்திக்கவில்லை.

ஏப்ரல் மாதத்தில் கொண்டுவரப்பட்ட மற்றொரு சட்டமான 12 மணி நேர வேலை தொடர்பான சட்ட மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முற்றிலுமாக ரத்து செய்யப்படவில்லை. இந்த இரண்டு சட்டங்களுமே கார்ப்பரேட் நலன் சார்ந்த திட்டங்களுக்காக உருவாக்கப்பட்டவை. ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. வெளிநாட்டு நிறுவனங்கள் மூலதனங்களை கொண்டுவருவதற்காக ஒன்றிய அரசும் , மாநில அரசு செய்துகொள்ளும் சமரச நடவடிக்கைகள் இவை.

திமுக அரசு தன்னை இந்திய ஒன்றியத்தில் முன்மாதிரி மாநிலமாக காட்டிக்கொண்டாலும் இதுபோன்ற உழைக்கும் தொழிலாளர் வர்க்கம் தொடர்பான நடவடிக்கைகளில் கார்ப்பரேட் நலன் சார்ந்தே முடிவெடுக்கிறது. சட்டவிரோதமாக மூடப்பட்ட ஃபோர்ட் நிறுவனத்தின் தொழிலாளர்கள் போராடும் போது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஃபாக்ஸ்கான் நிறுவனம் பெரிய அளவிலான முதலீடுகளை தமிழ்நாட்டில் செய்துள்ளது. அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் நிரந்தரமற்ற தொழிலாளர்களாகவே உள்ளனர். கடந்த ஆண்டு தங்களது அடிப்படை உரிமைகளுக்காக போராடிய பெண்தொழிலாளர்கள் மீது வழக்குகள்தான் பதியப்பட்டது . காஞ்சிபுரம் ஒரகடம் சிப்காட் பகுதிகளில் தொழிற்சங்க உரிமைக்காக போராடும் தொழிலாளர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள். ஊதிய உயர்வு ,பனிநீக்கத்திற்கு எதிரான தடை உத்தரவு கோரிக்கைகள் நீதிமன்றம் மூலமாக வெற்றி பெற்றாலும் அதை நடைமுறைப் படுத்தாமல் தொழிலாளர்களை மேலும் பழிவாங்கும் நடவடிக்கைகளைதான் நிர்வாகங்கள் செய்கிறன. சான்மினா , ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவு கிடைத்தும் போராடி வருகிறார்கள். இதுபோன்ற பல பிரச்சனைகளில் தொழிலாளர்துறை எந்தவித நடவடிக்கையும் எடுப்பதிலை.
“12மணி நேர வேலை சட்டமும்” எப்போது வேண்டுமானாலும் நடைமுறைக்கு கொண்டு வரப்படலாம் .
உண்மையான சமூக வளர்ச்சி என்பது மூலதனங்களை குவிப்பது மட்டும் கிடையாது. அந்த மூலதனங்களை உருவாக்குகிற தொழிலாளர்களும் மேம்பட வேண்டும். தங்களை மக்கள் நல அரசுகளாக காட்டிக்கொண்டு சில திட்டங்களை அறிவித்தாலும் அடிப்படையில் கார்ப்பரேட் வர்க்க நலன் சார்ந்தே அரசுகள் செயல்படுகின்றன. தொழிலாளர் வர்க்கம் கருத்தியல் ரீதியாகவும் ,அமைப்பு ரீதியாகவும் தங்களை வலுப்படுத்திகொண்டு முன்னேற வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.

பிரபுராம்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours