வாஜ்பாய் மூலம் பாஜகவுக்கு பதிலடி – வருண் காந்தியின் ட்வீட்.!

எழுத்தாக்கம்: யாழினிரங்கநாதன்

பாஜக எம்பி வருண் காந்தி உபி-இல் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், அவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசை எச்சரிப்பது போலவும் பேசும் விடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்

மத்திய அரசு கடந்த ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப், ஹரியான, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பாஜக தலைவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

உபி வன்முறை :-

அப்படிக் கடந்த வாரம் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி என்ற பகுதியில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு எதிராகக் கறுப்புக் கொடி போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர். அதன் பிறகு அவர்கள் அமைதியாக திரும்பிக் கொண்டிருந்த போது, அமைச்சருக்குச் சொந்தமான கார் உட்பட 3 கார்கள் விவசாயிகள் மீது மோதியது.

இதில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். அஜய் மிஸ்ராவின் மகனே காரை ஓட்டி வந்ததாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருண் காந்தி எம்பி :-

லக்கிம்பூர் விவகாரம் தொடர்பாக பாஜகவில் இருந்து வருண் காந்தி மட்டுமே தொடர்ச்சியாகக் கருத்து கூறி வருகிறார். மற்ற பாஜக தலைவர்கள் அமைதி காத்து வரும் சூழலில் வருண் காந்தி மட்டுமே விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன், விவசாயிகள் படுகொலை தொடர்பான வீடியோவை பகிர்ந்த பாஜக எம்பி வருண் காந்தி, இந்த விவகாரத்தில் விவசாயிகளின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனப் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அவர் பாஜகவின் தேசிய செயற் குழுவிலிருந்து நீக்கப்பட்டார். அவர் மட்டுமின்றி அவரது தாயார் மேனகா காந்தியும் பாஜகவின் தேசிய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பானது.

வாஜ்பாய் வீடியோ :-

உபி வன்முறை தொடர்பாக மேலிடத்தின் அனுமதியின்றி வருண் காந்தி கருத்து கூறியதால் அவர் மீது பாஜக மேலிடம் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதற்கெல்லாம் வருண் காந்தி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

தொடர்ந்து அந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் வருண் காந்தி, தனது ட்விட்டரில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பேசுவது போன்ற விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், மிகவும் இளம் வயது தோற்றத்தில் இருக்கும் வாஜ்பாய், விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படும் அப்போது இருந்த அரசுக்கு எதிராகப் பேசும் வகையில் உள்ளது.

மத்திய அரசுக்கு எச்சரிக்கை :-

கடந்த 1980ஆம் ஆண்டு இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.இந்திரா காந்தி அரசு எடுத்த விவசாயிகள் மீது எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இதில் வாஜ்பாய் பேசியிருக்கிறார்.

இணையத்தில் தற்போது வைரலாகியுள்ள அந்த வீடியோவில் வாஜ்பாய், “விவசாயிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அரசை நான் எச்சரிக்கிறேன். எங்களை அச்சமூட்ட நினைக்காதீர்கள்.

அறிவார்ந்த வார்த்தைகள் :-

நமது விவசாயிகள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள். விவசாயிகளின் கோரிக்கைக்கு நாங்கள் முழு ஆதரவு தருகிறோம். மத்திய அரசு எங்களை அச்சமூட்ட நினைத்தாலோ அல்லது இந்த அமைதியான போராட்டத்தை ஒடுக்க முயன்றால் தேவையில்லா விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று வாஜ்பாய் அதில் பேசுகிறார். இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த வருண் காந்தி, “பெரிய மனம் கொண்ட தலைவரின் அறிவார்ந்த வார்த்தைகள்” எனப் பதிவிட்டுள்ளார்.