லக்கிம்பூர் வன்முறை : விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிரா கூட்டணி கட்சிகள் !

எழுத்தாக்கம் : யாழினி ரங்கநாதன்

உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து மாநிலம் தழுவிய பந்திற்கு மகாராஷ்டிரா அரசில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.இதனால் மகாராஷ்டிராவில் இன்று அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் மத்திய இணை அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவருக்கு எதிராகக் கறுப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் முடிந்த பிறகு விவசாயிகள் அமைதியாகத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைச்சருக்குச் சொந்தமான கார் உட்பட 3 கார்கள் விவசாயிகள் மீது மோதியது. இந்த விபத்தில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிராவில் வேலைநிறுத்தம் :-

மத்திய அமைச்சரின் மகனே காரை ஓட்டி வந்ததாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். நீண்ட தாமதத்திற்குப் பிறகு அமைச்சரின் மகனை நேற்று முன்தினம் உபி போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்திற்கு நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்தச் சம்பவத்தைக் கண்டித்து மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு மகாராஷ்டிர அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் இன்று அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் பந்த் இல்லை

நள்ளிரவில் தொடங்கிய இந்த பந்திற்கு மகாராஷ்டிர கூட்டணி அரசியல் இடம் பெற்றுள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் அழைப்பு விடுத்துள்ளன. வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் போதிலும் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இது மகாராஷ்டிர அரசு சார்பில் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டம் இல்லை என்றும் கட்சிகளே இதற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் மகாராஷ்டிர அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. உபி-இல் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மக்கள் இந்த பந்திற்கு ஆதரவு தர வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக் அழைப்பு விடுத்துள்ளார்.

பல்வேறு அமைப்புகள் ஆதரவு:-

தேசியவாத காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசு தொடர் அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளதாக விமர்சித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு மகாராஷ்டிராவில் உள்ள பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாலை 4 மணி வரை கடைகளை மூட முடிவு செய்துள்ளதாகச் சில்லறை வர்த்தகர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.

பாஜக சாடல் :-

வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு முதலே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதேநேரம் இந்த வேலைநிறுத்த போராட்டம் குறித்து மகாராஷ்டிர பாஜக தலைவர் நிதேஷ் ரானே தனது ட்விட்டரில், “நாளை ஆளும் கூட்டணிக் கட்சிகள் எந்த கடையையும் மூடச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. அவர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால், பாஜக தொண்டர்களை எதிர்கொள்ள நேரிடும். இதனால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம். அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல!!” எனப் பதிவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அமைச்சர் மகன் :-

லக்கிம்பூர் வன்முறையில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆசிஷ் மிஸ்ரா உள்பட பலர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல் துறையினர் ஆசிஷ் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.

ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து, இரண்டாம் முறையாக அவர் வீட்டின் முன்பு சனிக்கிழமை காலை 11 மணிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டினர். அதில், இம்முறை ஆஜராக தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தனர்.

அதன்பேரில், நேற்று காலை 10. 30 மணியளவில் ஆசிஷ் மிஸ்ரா லக்கிம்பூர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அப்போது அவருடன் வழக்கறிஞரும், பாஜக எம்எல்ஏ யோகேஷ் வர்மாவும் வந்தனர். ஆசிஷிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

தொடர்ந்து, இரவு 11 மணியளவில் பேசிய டிஐஜி உபேந்திர குமார் அகர்வால், ” ஆசிஷ் மிஷ்ரா விசாரணைக்குச் சரியாக ஒத்துழைக்கவில்லை. அவர் முறையாக பதிலளிக்கவில்லை. அவரை கஸ்டடியில் எடுத்து, விசாரிக்கவுள்ளோம். நாளை (இன்று )அவர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவார்” என தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை 1 மணியளவில் அவர் லக்கிம்பூர் கெரி சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து பேசிய அவரது வழக்கறிஞர், “ஆசிஷ் மிஸ்ராவை காவல் துறையினர் மூன்று நாள்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளனர். ஆனால், அவர் போலீஸ் கஸ்டடியில் இருப்பாரா இல்லையா என்பது, நாளை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில் தான் தெரியவரும். தற்சமயம், அவர் திங்கட்கிழமை காலை வரை சிறையில் இருப்பார்” என்றார்.

விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வரும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்), மத்திய அமைச்சர் மிஸ்ரா பதவி விலக வேண்டும். அவரை காவல் துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளனர்.

லக்கிம்பூர் கெரி சம்பவம் தொடர்பாக இரண்டு வழக்குகள் டிக்குனியா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒன்று ஆஷிஷ் மற்றும் 15-20 பேருக்கு எதிராக கொலை மற்றும் கலவரம் குறித்தும், மற்றொரு வழக்கு அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

லக்னோ மண்டலம் ஏடிஜி சத்யா நரேன் சபாத், தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “வெள்ளிக்கிழமை இரண்டாவது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில், இதுவரை 10 பேரின் பெயர்கள் இந்தச் சம்பவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

10 பேரில் இருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் மூவர் இறந்துவிட்டனர்” என தெரிவித்தார்.

இதற்கிடையில், போராட்டத்தில் விவசாயிகள் மீது ஏற்றி சென்ற வாகனங்களில் ஒன்றை இயக்கியது ஆசிஷ் மிஸ்ரா என்ற குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மறுத்துள்ளார்.