மழை வேண்டுமா? யாகம் நடத்துங்கள்..!


பூமியைப் பிளந்து
16 ஆயிரம் அடி
ஆழ் கிணறு தோண்டி
கச்சா எண்ணெயைக்
களவாடு..!

நிலத்தடி நீரை விசமாக்கி
நெல்வயலுக்கு நெருப்புவை..!

நெற்களஞ்சியத்தை
ஹைட்ரோகார்பனாக
மாற்றிவிடு..!

இப்போது
யாகம் நடத்து
அதுவும்…

“பர்ஜன்ய சாந்தி
வருண ஜபம் வேள்வி” நடத்து!

மழை வரும்

காட்டை அழித்து
பல்லுயிர்களை
வேட்டையாடு!

உல்லாச விடுதிகளை
உயர்த்திக் கட்டி
குடித்து கும்மாளமடி!

இயற்கையைச் சுரண்டி
கோடிக் கோடியாய்
கொள்ளையடி!

இப்போது
யாகம் நடத்து
அதுவும்…

நந்தி பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி
பிராமணனை இறக்கி விடு!

மழை வரும்

மலையில் துளைப் போடு
அணுவைக் கொண்டு
அதைப் பிளந்தெறி..!

இயற்கை எழில் கொஞ்சும்
தேனியை சுடுகாடாக மாற்று
அதற்கு நியூட்ரினோ
ஆய்வகம் என்று பெயரிடு!

இப்போது
யாகம் நடத்து!
அதுவும்…

சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய
ஏழாம் திருமறையை ஓது..!

மழை வரும்

ஆற்று மணலை அள்ளு!
சாய- சாக்கடை- தோல்
கழிவுகளை அதில் தள்ளு!

வழிபாடா?
திரு விழாவா?
சாவா?
சடங்கா?
எதுவாக இருந்தாலும்
ஆற்றையே இலக்குவை

அதை நஞ்சாக்கி
நாசமாக்கு..!

துடித் துடிக்க
அதன் குரல்வளையை
அறுத்தெறி..!

உன் சந்ததிக்கு
ஒரு சொட்டு நீர் கூட
கிடைக்காமல் பார்த்துக் கொள்!

இப்போது
யாகம் நடத்து!
அதுவும்…

நாதஸ்வரம்,
வயலின், புல்லாங்குழல்,
வீணை வாத்தியங்கள் முழங்க… அமிர்தவர்ஷினி
மேகவர்ஷினி
கேதாரி ஆனந்த பைரவி
ரூப கல்யாணி ராகங்களை வாசித்துக் கொண்டே யாகம் நடத்து…

மழை வரும்

8 வழிச்சாலையில் உள்ள
7மலைகளையும் தின்று
ஏப்பம் விடு..!

கோடிக் கணக்கான மரங்களையும் , பல்லுயிர்களையும் வெட்டிச் சாய்த்து;
ஏரி குளத்தில் எரிமேடைக் கட்டிவை..!

தலைமுறை தலைமுறையாக
எமக்கு சோறு போட்ட நிலத்தை
வேரோடு பிடுங்கி எறி!

அதில் நீ போடும்
பளபளப்புச் சாலையில்
எம் உழவர்களை
அம்மணமாக அலையவிடு!

இப்போது
யாகம் நடத்து
அதுவும்!..!

“சிவபெருமானுக்கு
சீதள கும்பம் எனப்படும்
தாரா பத்திர நீர் விழா செய்”

மகா விஷ்ணுவுக்க
சிறப்பு திருமஞ்சனம்…

வருண சூக்த வேத
மந்திர பாராயணமும்…

வருண காயத்ரி
மந்திர பாராயணமும்
செய்து ஓது!

மழை வரும்

அதோடு…
காட்டையும்
கடலையும்
நீரையும்
நிலத்தையும்
வேட்டையாட…
கார்ப்பரேட் காரனுக்கு
எழுதிக் கொடு..!

கூடங்குளத்தையும்
தூத்துக்குடியையும்
புதைகுழியாக மாற்றிவிடு..!

சூயெஸ்க்கும்
எல்.என்.டிக்கும்
தண்ணீரைக்
தாரைவார்த்துக்
கொடுத்துவிடு..!

அப்படியே
அவன்காலை நக்கி,
சிந்தாமல் சிதறாமல்
அவன் கோமியத்தைப்பிடித்து
உலக உருண்டையில்
ஊற்றிக் கழுவு..!

உலகம் குளிர்ந்து விடும்!
மழையும் பொழிந்துவிடும்

ஒன்றும் கவலைவேண்டாம்
எங்கள் ஆட்சியாளர்கள் , வாக்காளர்கள்,

குருடர்களாக…
செவிடர்களாக…
ஊமைகளாக…
அடிமைகளாக…
மூடர்களாக…
சூடு சொரனை அற்றவர்களாக
இருக்கும் வரை…!

உங்கள் காட்டில் மழைதான் ☔

நீங்கள் ஒன்றும் கவலைப்பட தேவையில்லை..!

எங்களுக்கு
மாட்டு மூத்திரமும்,

மாட்டுச் சாணியும்
போதும்..!

நீங்கள் யாகம் நடத்துங்கள்

நிச்சயம் மழை வரும்.