புதிதாய் தொழிலுக்கு வந்த தேசபக்தர்களுக்கு ……மனுஷ்ய புத்திரன்


புதிதாய் தொழிலுக்கு வந்த தேச பக்தனே
எனக்கு தேசபக்தியை கற்பிக்காதே
நான்தான் இந்த தேசம்
நான்தான் இந்த தேசத்தின் குரல்
நான்தான் இந்த தேசத்தின் மொழி
கங்கையும் காவேரியும்
என் ரத்த நாளங்களில் பாய்கிறது
கபீரும் ஆண்டாளும் என்னைத் துயில் எழுப்புகிறார்கள்
இமையமும் குமரியும் நான் நடைபழகும் முற்றங்கள்
நூறு மொழிகள்
ஆயிரம் வாழ்க்கை முறைகள்
பல்லாயிரம் ஒற்றுமைகள் வேற்றுமைகள்
இருந்தும் இந்த தேசம் வெறுப்பினால்
வெல்லப்பட முடியாததாக இருக்கிறது

எனக்கு தேசபக்தியை கற்பிக்காதே
நான் ஒரு உழவன்
நான் ஒரு சித்தாள்
நான் ஒரு பொறியாளன்
நான் எல்லையில் நிற்கும் ஒரு வீரன்
நான் ஒரு கவிஞன்
நான் ஒரு மலம் அள்ளுபவன்
நான் இந்த தேசத்தை உருவாக்கியவன்
தேசத்தை வணங்கச் சொல்லாதே
நான்தான் இந்த தேசம்
என்னை நானே வணங்க
எனக்கு கூச்சமாக இருக்கிறது

நீ புதிதாக தொழிலுக்கு வந்த தேச பக்தன்
உனக்கு இதன் வண்ணங்கள் புரியாது
துப்பாக்கியையும் போர் விமானங்களையும் காட்டி
தேச பக்தியை நிர்பந்திக்கிறாய்
எதிரி உன்னை சிறுபையனைபோல நடத்துகிறான்
சமாதானம் நல்லது என உனக்கு
குழந்தைக்கு சொல்வதுபோல சொல்கிறான்
போர் செய்யும் உலகம் மாறிவிட்டது
நீயோ போர் போர் என ஒட்டிமொத்த தேசத்தையும்
கூச்சலிட சொல்கிறாய்

தேசம் மெளனமாக இருக்கிறது
மக்கள் இறுக்கத்தோடு இருக்கிறார்கள்
ஏற்கனவே அவர்கள்
வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள்
பயத்தோடும் நிச்சயமின்மையோடும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
நீ வேறு அவர்களை இன்னொரு போருக்கு அழைக்கிறாய்
உன்னிடம்
உன் சவடால்களிடம்
உன் அகங்காரத்திடம்
உன் முட்டாள்தனங்களிடம்
மக்கள் ஏற்கனவே களைத்துபோயிருக்கிறார்கள்

போர் என்றால் ரத்தம்
போர் என்றால் சாவு
போர் என்றால் ரேஷன்
போர் என்றால் துணிகளுக்கு பஞ்சம்
போர் என்றால் பலாத்காரம்
போர் என்றால் குழந்தைகள் அனாதைகளாவது
போர் என்றால் அகதிகள்
போர் என்றால் அங்கஹீனர்களாவது
போர் என்றால் இறுதிக் கடிதங்கள்
போர் என்றால் காணாமல்போவது
போர் என்றால் பிணங்களை அடையாளம் காணுதல்
போர் என்றால் சிதறிய உடல்கள்
போர் என்றால் அது எளிதில் நிறுத்த முடியாதது
போர் என்றால் நினைவுச் சின்னங்கள்
போர் என்றால் ஈன்று புறந்தருதல்
போர் என்றால் கங்கைக்கரையில்
ஆயிரம் ஆயிரம் இளம் விதவைகளின்
தலையை மழித்தல்

நீ தேச பக்தியின் ஆடையை
எல்லோரையும் அவசர அவசரமாக
அணியச் சொல்கிறாய்
அது அதிகார வெறியினால் நெய்யப்பட்டிருக்கிறது
வெறுப்பின் சித்திரங்கள்
அதில் தீட்டப்பட்டிருக்கின்றன
அது இறுக்கமாகவோ தொள தொளவென்றோ இருக்கிறது
அது இந்த தேசத்தின் சவத்துணியாக இருக்கிறது
அதை நீயே வைத்துக்கொள்

எனது தேசம் எனது சருமமாக இருக்கிறது
அந்த சருமத்தில் ஏற்படும் ஒரு காயமாக இருக்கிறது
அது பேரன்பாக இருக்கிறது
அது வழிகாட்டும் நீதியின் வெளிச்சமாக இருக்கிறது
போருக்கு எதிரான போரை
இப்போது அது நடத்திகொண்டிருக்கிறது

28.2.2019
இரவு 12.32
மனுஷ்ய புத்திரன்