பாமகவிலிருந்து அடுத்தடுத்து வெளியேறும் உறுப்பினர்கள் – ஜாதி வன்முறையை தூண்டுவதாக கூறி விலகல்!

எழுத்தாக்கம்: யாழினி ரங்கநாதன்

கடந்த நாடாளுமன்ற தேர்தல் முதல், சட்டமன்ற தேர்தல் வரை அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாட்டாளி மக்கள் கட்சி தற்போது நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணி தோல்வியைத் தழுவியதால் கூட்டணியில் நீடிப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என முடிவு செய்த பாமக, உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக விமர்சிக்கப்படுகிறது.

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து முக்கிய பிரமுகர்கள் அதிமுகவிலும், திமுகவிலும் மாறிமாறி இணைந்து வருகின்றனர்.

பாமகவிலிருந்து விலகும் உறுப்பினர்கள் :-

பாமக கட்சி வலுவாக இருக்கும் மாவட்டங்களில் ஒன்றாக தருமபுரியில் இருந்து பல நிர்வாகிகள் திடீரென திமுகவில் இணைந்தனர். பாமக தலைமையை உலுக்கும் வகையில் திடீரென மூத்த நிர்வாகிகள் பலர் திமுக பக்கம் வந்தனர்.

திமுக தருமபுரி எம்பி செந்தில்குமாரின் ஏற்பாட்டின் பெயரில் இவர்கள் மொத்தமாக திமுக பக்கம் வந்துள்ளனர். பல முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்த காரணத்தால் தருமபுரி பாமக கொஞ்சம் ஆட்டம் கண்டுள்ளது.

யார் இணைந்தனர்?

தருமபுரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் அ.சத்தியமூர்த்தி தலைமையில் பா.ம.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளரும் – ஒன்றிய கவுன்சிலருமான பெ.விஜயன், பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் சி.வெங்கடேசன், பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் தலைவர் ராஜிகண்ணு, அரூர் பேரூர்ச் செயலாளர் கி.அய்யப்பன், அரூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பி. அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி பேரூர்ச் செயலாளர் சபரி, லட்சுமணன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

எத்தனை பேர் :-

திமுக தருமபுரி எம்பி செந்தில்குமாரின் ஏற்பாட்டின் பெயரில் இவர்கள் மொத்தமாக திமுக பக்கம் வந்துள்ளனர். அதோடு பா.ம.க.வைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம் ஆனார்கள். இந்த நிலையில் பாமக நிர்வாகிகள் இப்படி திடீரென திமுகவில் இணைந்தது ஏன் என்று செந்தில்குமார் எம்பி ட்வீட் செய்துள்ளார். அதில், பாமக கட்சி #தோழர்களிடமே ஆதிக்க_நிலையை கடைபிடிக்கும் அன்புமணி அவர்கள். கட்சிக்குள் சமூகநீதி என்றால் என்ன?- என்ற நிலைதான் காணப்படுகிறது.

அன்புமணி :-

அன்புமணி அவர்களுக்கும் பாமக கட்சி தொண்டர்களுக்கும் எட்டமுடியாத இடைவெளியை அவரே உருவாக்கியது தான் தோழர்களின் மன வருத்ததிற்கான மிக முக்கியமான காரணம் என்று ட்வீட் செய்துள்ளார். அதோடு செய்தியாளர்களிடம் பேசிய வீடியோ ஒன்றையும் செந்தில்குமார் ட்வீட் செய்துள்ளார். அதில், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பாமக நிர்வாகிகளும்,எம்பி செந்தில்குமாரும், பாமகவில் சமூக நீதி இல்லை.

வன்னியர்களுக்கு பாதுகாப்பான கட்சி பாமக கிடையாது. பாமகவில் இருந்தால் நல்ல உடை கூட உடுத்த முடியாது. நேர்மையாக, தூய்மையாக இருப்பவர்களுக்கு அங்கே வேலை கிடையாது. தலைமைக்கு கூஜா தூக்குபவர்களுக்கு மட்டுமே அங்கே வேலை கிடைக்கும். சமீபத்தில் கூட அன்புமணி மகள் திருமண மேடையில் கட்சியினர் அனுமதிக்கப்படவில்லை. மேடையில் நிர்வாகிகளை அனுமதிக்காமல் தடுப்பு போட்டு இருந்தனர்.

நாம் சமூக நீதி பேசுகிறோம். ஆனால் பாமக கட்சிக்கு உள்ளேயே இதுதான் ஆதிக்க நிலை. கட்சி நிர்வாகிக்கு கூட சம உரிமை கொடுக்காமல் இருந்தனர். அவர்களே மேலே இருப்பார்களாம். நாங்கள் கீழே இருந்து பார்க்கக் வேண்டுமாம்? அவர்கள் இரண்டு வாரம் செலவு செய்து திருமணம் செய்கிறார்கள்.

நிர்வாகிகள் எல்லாம் வறுமையில் இருக்கிறார்கள். இதுதான் நிலை. அவர்கள் முன்னிலையில் நாங்கள் கூனிக்குறுகி நிற்க முடியாது.. அன்புமணியிடம் கூனிக்குறுகி இருக்க முடியாது. அதனால் வெளியேறிவிட்டோம், என்று செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் பாமக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஜாதி வெறியை தூண்டும் அன்புமணி ராமதாஸ் :-

மேலும் இவர்களின் வரிசையில் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” 2004இல் அன்புமணி எம்பி ஆவதற்கு முன்பு பாமகவின் நிலைமை வேறு ஆனால் தற்போது கட்சியில் காடுவெட்டி குரு போல யாரும் மேலே வந்து விடக்கூடாது என்பதில் அன்புமணி கவனமாக உள்ளார்.

பாமகவில் நேர்மையாக இருப்பவர்களுக்கு வேலை இல்லை, 10.5 சதவீத இட ஒதுக்கீடு அவசரகதியில் அதிமுக ஆட்சியின் கடைசி தருவாயில் வாங்கப்பட்டது. ஆனால் அதற்கு செயல் வடிவம் கொடுத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்றார். பாமகவில் உள்ள மாவட்ட செயலாளர்களை ஜாதி சார்ந்த பனியன் போட்டுக் கொள், அரிவாளை எடுத்து வெட்டு, அடிதடி பண்ணு என அன்புமணி ராமதாஸ் தூண்டி விடுகிறார்.

அவரின் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த தீர வேண்டும் என்றார். கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்றின்போது வீட்டின் உள்ளே சென்றவர், மகளின் திருமணத்திற்கு தான் வெளியே வந்தார் என்று அன்புமணியை அவர் கடுமையாக விமர்சித்தார்.

பாமகவின் முரண்பட்ட அரசியல் :-

அரசியலும், ஜாதியும் ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் போல. பல கட்சிகள் மறைமுகமாக ஜாதி அரசியல் செய்கின்றனர். சிலர் நேர்முகமாக செய்கின்றனர். இதில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

குறிப்பாக “தலித் எதிர்ப்பு” என்ற மையப்புள்ளியே இந்த அனைத்து சமுதாயப் பேரியக்க அரசியல் கட்சிகளை இணைத்திருக்கிறதே தவிர, உறுதியான அரசியல் கொள்கைகள் எதையும் இத் தலைவர்களால் முன்வைக்க முடியவில்லை.

அந்த வரிசையில் வருபவர்கள்தான் “பாட்டாளி மக்கள் கட்சி “.ஜாதி ரீதியாக பாட்டாளி மக்கள் கட்சி கூறிய அரசியல் சார்ந்த கருத்துக்களை சற்றே பின் நோக்கி சென்று பார்த்தோம் என்றால், கடந்த 2012 ஆம் ஆண்டு, நடந்து ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு ராமதாஸ்,

“நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து, டாக்டராக வேலை பார்த்ததில் இருந்து, வன்னியர் சங்க காலத்தில் இருந்து, பாமக தொடங்கியப் பின்பு வரை நான் ஜாதி வெறியன் தான். என் மக்கள் முன்னேற வேண்டும், படிக்க வேண்டும், வேலைக்கு போக வேண்டும். 3 வேளை வயிறார சாப்பிட வேண்டும் என நினைப்பவன் ராமதாஸ் மட்டுமே.நாம் ஒற்றுமையாக இருப்போம் என்று சொன்னால் உன் பெண்ணை கொடுக்கிறாயா என்று கேட்கிறார்கள்.

 நமது பெண்களுக்கு காதல் வலை வீசி கடத்திச் செல்கிறார்கள். பெண்ணை பெற்றவர்கள் உஷாராக இருக்க வேண்டும். படிக்க வைக்கும் போது யாரையாவது துணைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள வன்னியர்கள் ஒட்டு மொத்தமாக மாம்பழத்திற்கு தான் ஓட்டுப்போட வேண்டும் என்ற முடிவுக்கு வாருங்கள். வன்னியன் மாம்பழத்திற்கு ஓட்டுப் போடுங்கள்.ராமதாஸ் இருக்கும் போது வன்னியர் ஆட்சி வரவேண்டும் ” என்று கூறி பரபரப்பை உண்டாக்கினார்.

தங்கள் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் தலித் இளைஞர்களால் குறிவைத்து காதல் வலையில் வீழ்த்தப்படுகிறார்கள். பெண்ணின் பெற்றோரிடம் பணம் பறிப்பதற்காகவே இக்காதல் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன என்பது  போன்ற கூறுகளின் அடிப்படையில் இவர்களை பல தரிப்பினர் குற்றச்சாட்டினர்.

இது போன்ற கருத்துக்களால் பாமக  அப்பட்டமாக சாதி வெறி, காதல் எதிர்ப்பு, காதலர் கொலை ஆகியவற்றைக் கொண்டு அரசியல் நடத்துகிறது என பெரிதும் பேசப்பட்டது.

வன்னியர் இயக்கத்தை ஆரம்பித்து பல ஆண்டுகள் தொடர்ந்து போராடி, 21 உயிர்களைப் பலி கொடுத்து, மிகவும் பிற்பட்ட சமூகத்தினருக்கு தனியாக இட ஒதுக்கீடு பெற்று தந்த பின் அரசியல் கட்சியைத் தொடங்கியவர் ராமதாஸ்.

1998-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி, 1999-ல் பாஜக-திமுக கூட்டணி, 2004-ல் திமுக-காங்கிரஸ் அணி என சாதுர்யமாக காற்று வீசும் திசை அறிந்து பாய்மரத்தை செலுத்திய ராமதாஸுக்கு முதல் அடியாக விழுந்தது 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல். அப்போது யாரும் எதிர்பாராத விதத்தில் அதிமுக அணியில் சேர்ந்தார். போட்டியிட்ட இடங்கள் அனைத்திலும் தோல்வி.

2011-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பக்கம் தாவினார். அதிலும் பலத்த அடி. இது போன்று பல முறை கட்சி தாவல்கள். அரசியலில் வெற்றியும் தோல்வியும் தவிர்க்க முடியாதவை. ஆனால் குறுகிய அரசியலை முன்னிறுத்தி கட்சி நடத்துபவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றாக வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.

தோல்வி வரும்போது குறுகிய அரசியல் கொள்கையின் பின் நிற்பவர்கள் அதில் இருந்து ஓடிவிடவே பார்ப்பார்கள். ராமதாஸை பொறுத்தவரை, தொடக்கத்தில் ஜாதி அமைப்பை நடத்தினாலும், கட்சி தொடங்கிய பிறகு, அதன் நோக்கத்தை விரிவாக்கினார். தமிழர், ஈழத் தமிழர், அவர் தம் மொழி, இசை என எல்லா பிரச்சினைகளிலும் முன் நின்றார். வட மாவட்டங்களில் தலித்துகளுக்கும் இடைநிலைச் சமூகத்தினருக்கும் அவர் ஏற்படுத்திய பாலம் உறுதியானது. தென் மாவட்டங்களில் கலவரங்கள் வெடித்தபோது, வட மாவட்டங்கள் அமைதி காத்தன.

ஆனால் தற்போது இது போன்ற ஜாதி சார்ந்த அரசியலுடன் பின்னோக்கிய சித்தாந்ததுடன் பயணிக்க ராமதாஸ் நினைக்கிறாரோ என்ற ஐயம் எழுகிறது. மைய நீரோட்டத்தில் இணைந்து நீந்திக் கரையேறியவர், சிறிய ஓடையில் நீச்சலடிக்க முயல்வது புரியாத புதிராகவே இருக்கிறது.