தொடர்ந்து பாயும் ஹிந்துத்வ தோட்டாக்கள்- Zaddy ப்ரதீப்

தேர்தல் முடிவுகள் பலருக்கு மகிழ்ச்சியை தந்த போதிலும் , உண்மையில் பலருக்கு அது அச்சத்தையே தந்துள்ளது. ஆம் மீண்டும் மோடி அரசு தான் ஆட்சிக்கு வருகிறது. இல்லை இல்லை, ஹிந்துத்துவா அரசு தான் ஆட்சி அமைகிறது. தேர்தல் முடிவுகள் வந்த சில மணி நேரங்களிலே அதன் கொடூர செயல்கள் காற்றில் சிறகடித்து பறந்தவண்ணம் உள்ளன. மூன்று சம்பவங்களை முதலில் இதன் சாட்சியங்களாக எடுத்துரைக்கிறேன் அனைவரும் உணரும்படி.

முதல் சம்பவம் மே 22 :
மத்திய பிரதேஷ் மாநிலத்தில் , சியோனி என்ற பகுதியில் தவுபிக், அஞ்சும் ஷாமா என்ற தம்பதியினர் திலிப் மால்வியா என்பவருக்கு சொந்தமான ஆட்டோ ரிக்க்ஷாவில் பயணிக்கும்போது பசுக்கள் கண்காணிப்பு பிரிவினர் என்ற போர்வையில் வலம் வரும் ஹிந்துத்வா கும்பலிடம் சிக்கி கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்கள். இச்சம்பவம் வாக்கு எண்ணிக்கை துவங்குவதற்கு ஒரு நாள் முன் நடந்ததாகும். தவுபிக் தம்பதியினர் மாட்டிறைச்சி கொண்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில், இந்த கும்பல் அவர்களை சூறையாடியது. மூவரையும் ரோட்டில் இழுத்து போட்டபடி, அவர்களை குருதி வழிய வழிய அடித்தும், கணவனை மிரட்டி தனது மனைவியை செருப்பால் அடிக்க வைத்தனர். அத்துடன் அவர்களின் வெறி தீரா ஒன்றாக மாறியது. அவர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கமிட அந்த கும்பல் வற்புறுத்தியது. இதன் பின்னணியில் ஷுபம் பாகெல், தீபேஷ் நாம்தேவ், ரோஹித் யாதவ், சந்தீப் உய்க்கே மற்றும் ஷியாம் டெஹரியா என்ற ஐவர் காரணமாக இருந்தனர். இதில் ஷுபம் என்பவன் ஸ்ரீ ராம் சேனாவின் தலைவனாக உள்ளான் என்பது கவனிக்க படவேண்டிய ஒன்று. சமூக வலைதளங்களில் இந்த தாக்குதல் தொடர்பான காணொளி பரவியதையொட்டி, போலீசார் ஐவரை கைது செய்தது மே 24 அன்று. அத்துடன் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தது. இதை குறித்து மகாராஷ்டிரா மாநில முதலமைச்சரிடம் கேட்ட போது, சட்டத்தை கையில் எடுக்கும் அனைவரும் தண்டிக்கப்படுவர் என கூறி சென்றுவிட்டார்.

சம்பவம் இரண்டு ( மே 25 ) :
ஹரியானா மாநிலம் , குருகிராம் அடுத்துள்ள ஜேகப் புரா என்ற பகுதியில், இரவு தொழுகை முடித்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த முகமத் பார்க்கர் அலாம் (25 ) என்ற இளைஞர் தாக்கப்பட்டார் . அவரை தாக்கிய நான்கு இளைஞர்கள் கொண்ட கும்பல், அவரை “பாரத் மாதா கி ஜெய்” என்று முழக்கமிட கட்டாயப்படுத்தியுள்ளனர். அத்துடன் அவரை இந்த பகுதியில் தொப்பி அணிந்து செல்வதற்கு தடை என்று கூறி, அவரின் தொப்பியையும் கழட்டி வீசியுள்ளனர். அதன் பின்னர் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று சொல்ல மறுத்ததிற்காக அவரை அடித்து துன்புறுத்தி இருக்கின்றனர். இதன் தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்

சம்பவம் மூன்று ( மே 26 ) :
பீஹார் மாநிலம், பெகுசராய் மாவட்டத்தில் முகமத் காசிம் என்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது குறித்து முகமத் கூறுகையில், ராஜிவ் யாதவ் என்ற நபர் குடிபோதையில் தன்னிடம் பெயர் கேட்டதாகவும், பின்னர் நீ பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று கூறியபடி என்னை துப்பாக்கியால் சுட்டார். பின்னர் மீண்டும் சுட முயற்சித்தபோது அவனை தள்ளிவிட்டு உயிர்தப்பியுள்ளார் . ஊருக்குள் சென்று உதவி நாடிய போதும் யாரும் உதவிக்கு முன்வரவில்லை எனவும், அங்கு சுற்றி இருந்த அனைவரும் யாதவின் துப்பாக்கி அசைவிற்கு பயந்து போய் நின்று கொண்டிருந்ததாகவும் கூறுகிறார்.வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் கூட யாரும் கைது செய்யப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்த தொடர்ச்சியான தாக்குதல்கள் நமக்கு அன்றாடம் என்ன அறிவுறுத்துகிறது? ஹிந்துத்வா தீவிரவாதம் இந்த மண்ணில் மேலும் மேலும், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் போகிறது. இதனை சற்றும் கண்டுகொள்ளாத ஒன்றாக அரசும், நீதிமன்றங்களும் தினம் இயங்கி கொண்டே தான் உள்ளது. மக்களும் சரி இதை தினம் வெறும் செய்தியாக படித்து விட்டு எளிதாக கடந்து செல்வது ஜனநாயகம் அழிந்து போனதை உறுதி செய்கிறது.