தீண்டாமை சட்டத்தை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது – முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று  தலைமைச் செயலகத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

கல்வி, வேலைவாய்ப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் உரிய இடங்களைப் பெற வேண்டும், சமூக அமைப்பில் அவர்கள் எந்தச் சூழலிலும் புறக்கணிக்கப்படக்கூடாது, சாதியைக் காரணம் காட்டி அவர்களது வளர்ச்சி தடுக்கப்படக் கூடாது, அரசியல், பொருளாதாரம், கல்வி ஆகிய அனைத்து மட்டங்களிலும் அவர்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் ஆகிய சிந்தனை கொண்ட அரசுதான் தி.மு.க. அரசு, அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கக்கூடிய தீண்டாமைச் சம்பவங்களைக் கேள்விப்படும்போது வருத்தம் ஒருபுறம் இருக்கிறது. ஆத்திரம் வருகிறது. கோபம் வருகிறது. அதை யாரும் மறுக்க முடியாது.

தீண்டாமை பாகுபாடு :

கல்வி, பொருளாதாரம், நாகரீகம் வளர்ந்தாலும் சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு என்பது அப்படியேதான் இருக்கின்றன. அதில் மாற்றம் செய்ய இன்னும் பல ஆண்டுகாலம் கடக்க வேண்டும் என்றே தெரிகிறது. இதனைச் சட்டத்தின் மூலமாக ஓரளவு சரிசெய்ய முடியும். அத்தகைய சட்டங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 17-ன்படி, தீண்டாமை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தீண்டாமை பாகுபாட்டைக் காட்டுவது சட்டப்படி தவறானது என்ற எண்ணம் சிலருக்கு இல்லை. அதை தைரியமாகவே செய்கிறார்கள். இத்தகைய சட்டமீறல்கள் தடுக்கப்பட்டாக வேண்டும். தண்டிக்கப்பட்டாக வேண்டும். தீண்டாமை குற்றம் இழைத்தவர் தப்பிவிடக் கூடாது. அதே நேரத்தில், அந்தச் சட்டத்தை யாரும் தவறாகப் பயன்படுத்திவிடவும் கூடாது.

இந்த அரசு பொறுப்பேற்றதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச் சட்ட விதியின்படி, மாநில அளவில் இருக்கக்கூடிய உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவைத் திருத்தி அமைத்திருக்கிறோம். அரசும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணையும் குழுவாக இது அமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையிலே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளும், சட்டம் உருவாக்குபவர்களும் இணைந்து இதிலே பங்கெடுத்திருக்கிறார்கள்.

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு :

2021-2022-ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மொத்த நிதி ஒதுக்கீட்டில், ஆதிதிராவிடர் நலத் திட்டங்களுக்காக ரூ.3 ஆயிரத்து 588.87 கோடியும், பழங்குடியினர் நலத் திட்டங்களுக்காக ரூ.543.42 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு கூறுகள் திட்டம் என அழைக்கப்பட்டு வந்த, ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின்கீழ் ரூ.14 ஆயிரத்து 696.60 கோடியும், பழங்குடியினர் துணைத் திட்டத்தின்கீழ் ரூ.1,306 கோடியும் ஒதுக்கப்பட்டு, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இத்துறையின்கீழ் இயங்கிவரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளை மேம்படுத்த சிறப்பு மூலதன ஒதுக்கீடாக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நபார்டு வங்கியின் ஊரக கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் கீழ் ரூ.123 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலி பணியிடங்கள் கணக்கிடப்பட்டு நிரப்பப்படும்.

பொருளாதார முன்னேற்றம் :

தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம், தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலக்குழு ஆகியவற்றை திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்த அரசு எப்போதும் துணையாக இருக்கும் என்பதை இந்நேரத்தில் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தீண்டாமை சட்டத்தின் வரலாறு :

அரசியல் சாசனத்தின் 17-வது சரத்தை நிறைவேற்றும் விதமாக 1955-ல் தீண்டாமையை குற்றமாக அறிவிக்கக்கூடிய “தீண்டாமை ஒழிப்புச் சட்டம்-1955” கொண்டு வரப்பட்டது. இதுவே, 1976-ல் ‘குடியியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்’ (PCR) என்று பெயர் மாற்றப்பட்டது. இருப்பினும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சாதியின் பெயரால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை குறிப்பிட்டு சொல்லும் வகையில் தடுக்க இயலவில்லை. இதனை அடுத்து, தீண்டாமை வன்கொடுமையை ஒழிக்க கொண்டு வரப்பட்ட ”PCR Act” போதுமானதாக இல்லை என்பது உணரப்பட்டதால், 1989-ல் “வன்கொடுமை தடுப்புச் சட்டம்” கொண்டுவரப்பட்டது. “தீண்டாமையால் தொடர்ந்து அநீதிக்கு உள்ளான தலித்துகளின் அதிகரித்த கோபத்தின் விளைவாகவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது” என்கிறார் ஆனந்த் டெல்டும்ப்டே. இந்த வன்கொடுமை தடுப்புச் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியபோது, பின்வரும் விளக்கம் குறிப்பிடப்பட்டது :

“பட்டியலின/பழங்குடி மக்களின் சமூக–பொருளாதார காரணிகளை உயர்த்துவதற்கு பலதரப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அம்மக்கள் கையறுநிலையிலேயே உள்ளனர். அவர்கள் தங்களின் உரிமைகளை கோரும்போதும், தீண்டாமைகளுக்கு எதிராகவும், கட்டாய உடலுழைப்பு உள்ளிட்டவைகளுக்கு எதிராகவும், கூலி உயர்வு கோரி போராடும்போதும், ஆதிக்க சாதியினர் வன்கொடுமைகளை நிகழ்த்துகின்றனர். ஆகையால், அந்த வன்கொடுமைகளை தடுப்பதற்கு சிறப்புச் சட்டம் ஒன்று தேவையாக இருக்கிறது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்புகள் :

1989-ல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டாலும், 1995-ல்தான் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான விதிகள் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டன. ஆனால், விதிகள் கொண்டுவரப்படுவதற்கு முன்பாகவே, 1993-ல் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திலும், 1994-ல் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்திலும் இச்சட்டத்திற்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டன. மத்திய பிரதேசத்தில் தொடரப்பட்ட வழக்கானது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து ஆதிக்க சாதிகளிடம் இருந்த மனநிலையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இவ்வழக்கை தீவிரமாக விசாரித்த மத்திய பிரதேச நீதிமன்றம், பின்வரும் முக்கிய கருத்துகளை கூறியது :

* வன்கொடுமை தடுப்புச் சட்டம் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்கு உதவக்கூடியதாகவே உள்ளது.

* இந்தியாவிற்கு வந்த மதங்களும் சாதியத்தின் கோரப்பிடிக்குள் சிக்கிக்கொண்டதால், பிற மதத்தினருக்கு எதிராகவும் இச்சட்டம் செயல்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

மத்திய பிரதேச நீதிமன்ற தீர்ப்பில் முன் ஜாமின் மறுப்புக்கு எதிராக இருந்த அம்சத்தை எதிர்த்து, மாநில அரசு 1995-இல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்வரும் குற்றங்கள், தீண்டாமை சார்ந்த தனிவகை குற்றங்கள். அவற்றை மற்ற குற்றங்களுடன் ஒப்பீடு செய்யக்கூடாது” எனக் கூறி, “வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளில் முன் ஜாமின் மறுக்கப்படுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நியாயமானதே” என்று தீர்ப்பளித்தது. 1993-ல் ராஜஸ்தானில் தொடரப்பட்ட வழக்கிலும் இதேபோன்றதொரு தீர்ப்பைதான் அம்மாநில நீதிமன்றம் வழங்கியது.

வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா?

தனிப்பட்ட பகைமைகளை தீர்த்து கொள்வதற்கு இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்த சட்டத்தை விமர்சிப்போர் தெரிவிக்கின்றனர்.

வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆபத்தானதா? அவசியமானதா? என்பது தற்போது சமூகத்தில் ஒரு விவாதப் பொருளாகியுள்ளது. இதற்கான ஆதரவும், எதிர்ப்பும் அவரவர் அரசியல் உள்நோக்கங்கள் சார்ந்து அணுகப்பட்டு வரும் நிலையில் ஜாதிகளைக் கடந்த மனிதநேயப் பார்வையில் இதை நாம் அணுக வேண்டியுள்ளது. நமது அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட போது தலித் மக்களை பாதுகாக்கவென்று தனிசட்டம் உருவாக்கப்படவில்லை. 1955ன் குடிமை உரிமை பாதுகாப்புச் சட்டத்திலேயே தலித் மக்களின் பாதுகாப்புக்கான கூறுகளையும் உள்ளடக்கியிருந்தனர்.

அன்றைய தினம் நிலவிய காந்தியத்தின் தாக்கம், பெரியார், நாராயணகுரு போன்றவர்களால் உருவாக்கப்பட்ட சாதிமறுப்பு பார்வைகள், பாரதியார், பாரதிதாசன், தாகூர், சரத்சந்திரர், பக்கிம்சந்திரர்… தொடங்கி பல மாபெரும் படைப்பிலக்கியவாதிகள் சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்பு மேலோங்கியிருந்தது. பிற்காலத்தில் தேர்தல் அரசியல், சாதியத்தின் தேவையை வளர்த்தது. இதைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை தற்காக்கவென்று 1989ல் வன்கொடுமை தடுப்புச்சட்டம் கொண்டுவரபட்டது.

இச்சட்டத்தில் 15விதமான வன்கொடுமைகள் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி வனகொடுமையில் ஈடுபடுவோருக்கு 6மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை தணடனை நிர்ணயிக்கப்பட்டது. இதைத்தவிர்த்து குடிமை உரிமை பாதுகாப்புச்சட்டப்படியும், இந்திய தண்டனைச் சட்டப்படியும் மேலும் 7வன்கொடுமைகள் சேர்க்கப்பட்டு அதற்கு ஏழாண்டுகள் தண்டனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டம் தவறாக கையாளப்படுகிறது. இது தலித்அல்லாதவர்களைச் அச்சுறுத்த, அடிபணிய வைக்கப் பயன்படுத்தப்படுகிறது…. என்ற வாதம் தற்போது வலுப்பெற்று வருகிறது. இந்த வாதத்திற்கு தலித் அல்லாத சில ஆதிக்க சாதியினரின் ஆதரவும் கிட்டியுள்ளது. இந்த எதிர்பபு சில நடைமுறை கசப்பான அனுபவங்களில் இருந்து எழுந்துள்ளது. இந்த வாதத்தை முற்றிலும் புறக்கணிக்க முடியாது. ஆனால் நாம் சில எதார்த்தங்களை, நடைமுறை நிதர்சனஙக்ளை கணக்கில் கொள்ளவேண்டும். “இதுவரை பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளில் 2.2% மட்டுமே நிருபணமாகியுள்ளது. மற்றவை நிருபிக்க முடியவில்லை. எனவே அவையாவும் பொய்வழக்குகள்..” என்பவை எதிர்ப்பவர்களின் வாதம்!

இந்தச்சூழலில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான தேசிய ஆவண காப்பகம் சமீபத்தில் தந்துள்ள தகவல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இரண்டு தலித்துகள் கொல்லப்படுகின்றனர். 12 தலித்துகள் படுகாயப்படுத்தப்படுகின்றனர். ஆண்டுக்கு சுமார் ஆயிரம் தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆண்டுக்கு சுமார் 1000 முதல் 1200 கௌரவ கொலைகள் அரங்கேறுகின்றன…. ஒவ்வொர் ஆண்டும் 30,000க்கு மேற்பட்ட வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன.

இவை ஒரு புறமிருக்க, இந்த வன்கொடுமை சட்டத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்த பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துள்ளன. அவற்றின் சராம்சம் என்னவெனில், ” வன்கொடுமை தடுப்பு சட்டம் ஒரு சில சமூக விரோத சக்திகளாலோ, அல்லது சந்தர்ப்பவாதிகளாலோ தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இவை மிகக் குறைவே. உண்மையில் தலித்துகள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சுலபத்தில் வெளியில் சொல்வதில்லை. ஏனெனில் அதன் எதிர்விளைவுகளை எதிர்கொள்ளும் ஆற்றல் அவர்களில் பெரும்பாலோருக்கு இல்லை. அப்படியே ஒரு சிலர் காவல் நிலையம் வந்து புகார் அளித்தாலும் அவர்களை கடுமையாக அலைகழிக்காமல் அதை காவலர்கள் பதிவு செய்வதில்லை. பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சட்டத் தேவைகளுக்கு உட்பட்டு சாட்சியங்களைக் கொண்டு நிருபிக்க வேண்டிய பொறுப்பு சாதாரணமானதல்ல. இதற்கிடையில் ஆதிக்க ஜாதியினர் தரும் நிர்பந்தம், காவல்துறையின் நேர்மையின்மை போன்றவற்றால் வன்கொடுமை சட்டவழக்கு நிருபிக்கப்பாடாமல் நீர்த்துப் போகிறது. எனவே விடுவிக்கப்பட்டவர்கள் – குற்றம் நிருபணமாகாமல் போனவர்களே அன்றி- நிரபராதிகளல்லர்  என்கிறது அந்த ஆய்வுகள்.

எனவே வன்கொடுமை தடுப்புச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதில் ஒரளவு உண்மை இருந்தாலும், அச்சட்டம் சரியாக பயன்பட்டு தலித்துகளை காப்பாற்றவில்லை என்பது பெருமளவு உண்மை.

தமிழகத்தில் மேலவளவுபடுகொலைகள், திண்ணியம் கொடுமைகள் போன்ற பிரபல வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களே நிரபராதிகளாக விடுவிக்கப்பட்டனர். ஆகவே, வன்கொடுமை தடுப்புசட்டத்தை நியாயமாக அமல்படுத்தவேண்டும். அதே சமயம் எந்த ஒரு சட்டமும் முழு பாதுகாப்பை தந்துவிட முடியாது. மனமாற்றம் தான் முக்கியம். 

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில்தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள், வன்முறைகள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தரு‍வதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சான்றுOfficial Actசட்ட திருத்தங்கள்23 டிசம்பர் 2011சுருக்கம்தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம்முக்கிய சொற்கள்சாதி, தலித், வகொதச பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் சட்டம், வன்கொடுமைச் சட்டம்

பழங்குடியினர் மீது காவல்துறை மற்றும் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் பலாத்காரம் தொடர்பான புகார்கள் அதிகரித்தபோது இந்தச் சட்டம் உருவானது. இந்தச் சட்டத்தைக் காவல்துறையினர் தங்களுக்கு எதிரானதாகவே நினைத்தனர். இதனால் இந்தச் சட்டமும் முறையாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.

சட்டங்களும் அதற்கேற்ற தண்டனைகளும் மலை போல் குவிந்து கிடக்கின்றன. ஆனால் அதனால் பயன் என்பது எப்போது கிடைக்கும் என்றால் அது சரியாக, சரியானவர்களிடத்தில் உபயோகப்படுத்தும் போதுதான். அதிகளவு குற்றங்கள் இங்கே நடப்பதற்கு காரணம் சட்டங்கள் இருந்தும் அவை சரிவர இயங்காமல் இருப்பதே. எப்போது சட்டங்களும், தண்டனைகளும் சரியாக பயன்படுத்தப்படுகிறதோ அப்போதுதான் குற்றங்களின் உண்மை நிலவரம் தெரிய வரும்.

– யாழினி ரங்கநாதன்