
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தாலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு இராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தாலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி, ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர். இதனையடுத்து 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாலிபான்கள் தலையெடுத்திருக்கின்றனர். தற்போது ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது தாலிபான்கள் இயக்கம்.
ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சியை தாலிபான்கள் அமைக்க இருக்கின்றனர்.இதனிடையே தாலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான்,, சீனா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. ரஷ்யாவும் கூட தாலிபான்கள் தொடர்பாக மென்மையான போக்கை வெளிப்படுத்துகிறது. துருக்கியும் தாலிபான்களுக்கு ஆதரவு அளிக்கும் மனநிலையில் இருக்கிறது. தாலிபான்களுக்கான இந்த ஆதரவு கரம் நீள்வது இந்தியாவுக்கு கடும் சவாலானதாக உருவெடுத்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆப்கானிஸ்தானின் அத்தனை மாகாணங்களிலும் பெரும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள ஈரானின் சப்பார் துறைமுகத்தை சீரமைத்தது, ஆப்கானிஸ்தான் மாகாணங்களை இணைக்கும் ரயில் திட்டங்களை செயல்படுத்தியது, ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தையே கட்டி தந்தது என எண்ணற்ற திட்டங்கள் இந்த பட்டியலில் உண்டு. இந்நிலையில் தாலிபான்களின் அடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தாலிபான்களின் செய்தி அறிக்கை:
இந்நிலையில் நேற்று, “ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து வழங்கப்படும்” என தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “எந்த நாட்டு மக்களும் எங்களுக்கு எதிரியல்ல. நாங்களும் யாருக்கும் எதிரியல்ல. அமெரிக்க ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவர உதவிய ஆப்கான் மக்களுக்கு பாராட்டுகள். அண்டை நாடுகளுக்கு எதிராக ஆப்கான் மண்ணை யாரும் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். தங்கள் ஆட்சியை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து வழங்கப்படும். மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெண்கள் வழக்கம்போல் பணிபுரியலாம். அதற்கு தடை இருக்காது.
முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விட்டது. காபூலில் உள்ள தூதரகங்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. அனைத்து தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் உதவி நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எங்கள் படைகள் உள்ளன என்று அனைத்து வெளிநாடுகளுக்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம். யாரையும் பலிவாங்கும் எண்ணம் தாலிபானுக்கு இல்லை. தலைநகர் காபூலின் நுழைவுவாயிலில் போராட்டத்தை நிறுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அரசு தோல்வியடைந்து வெளியேறிவிட்டது. அவர்களால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. இஸ்லாமிய அடிப்படையில் பெண்களுக்கு உரிமைகளை வழங்க தாலிபான் முடிவு செய்துள்ளது. அதன்படி அவர்கள் கல்வி கற்கலாம். பெண்களுக்கு எதிரான பாகுபாடு இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சாலே தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து வழங்கப்படும். மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெண்கள் வழக்கம்போல் பணிபுரியலாம். அதற்கு தடை இருக்காது. முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
கனடா நாட்டின் எதிர்ப்பு :-
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களை சந்திக்கையில், அவரிடம் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜஸ்டின் ட்ரூடோ, ‘தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கும் திட்டம் கனடாவுக்கு இல்லை. அவர்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பலவந்தமாக தூக்கியெறிந்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறார்கள்’ என்றார். மேலும், கனடா நாட்டின் சட்டத்தின்படி, தாலிபான்கள் பயங்கரவாத அமைப்பாகவே அங்கீகரிக்கப்படுவார்கள் என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தாலிபான்களிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் சுமார் 20,000 ஆப்கானியர்களை கனடாவில் குடியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கனடா ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசை பாகிஸ்தான் அங்கீகரித்துள்ளது. தாலிபான் அரசுடன் நட்பு ரீதியிலான உறவை மேம்படுத்த தயார் என சீனா அறிவித்துள்ளது. தாலிபான் செயல்பாட்டை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
தாலிபான்கள் கைவசம் அமெரிக்க ஆயுதங்கள் :
தாலிபான்கள் கைவசம் அமெரிக்கர்கள் வழங்கிய அனைத்து ஆயுதங்களும் உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆப்கான் தேசிய இராணுவ படையின் 3 லட்சம் ஆயுதங்களும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது தாலிபான்களிடம் அதிநவீன ஆயுதங்களுடன் அதிநவீன துப்பாக்கிகள், ஸ்னைப்பர்கள், இராணுவ டிராக்குகள் என கிட்டதட்ட ஒரு குட்டி நாட்டிற்கு இருக்கும் இராணுவ உபகரணங்களைத் தாலிபான்கள் வைத்திருக்கின்றனர். இவை தவிர கையேறி குண்டுகள், சாட்டிலைட் போன்கள் உள்ளிட்டவையும் இப்போது அவர்கள் கையில் உள்ளது. இதில் பெரும்பாலானவற்றில் “Property of USA Government” என்ற முத்திரையைப் பார்க்க முடிவதாகப் பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது தாலிபான்களை ஒடுக்க அமெரிக்கா ஆப்கன் இராணுவத்திற்கு அளித்த இராணுவத் தளவாடங்கள் இப்போது தாலிபான்களுக்கே கிடைத்துள்ளன. அதைத் தாலிபான்கள் இப்போது ஆப்கன் இராணுவத்திற்கு எதிராகவே பயன்படுத்தினர் என்பதுதான் உண்மை. சண்டையின் போது தாலிப்பான்கள் புதிதாக நிறைய மாவட்டங்களைக் கைப்பற்றினர். அதில் அவர்களுக்கு புதிய ஆயுதங்கள் கிடைத்தன. அதைத்தான் தற்போது தாலிபான்கள் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், பயணிகள் விமானங்கள் உள்ளிட்டவை காபூல் விமான நிலையத்தில் தரையிறங்க, புறப்பட முடியும் எனவும் காபூல் விமான நிலையத்தில் 3,500 அமெரிக்க இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
ஆப்கான் மக்களின் எதிர்கால நிலை?
“பெண்கள் உட்பட அனைத்து பொது மக்களுக்கும் தாங்களே பொறுப்பு, யாரும் பயப்பட தேவையில்லை, அமைதியான ஆட்சியை தருவோம்” என்று தாலிபன்கள் நம்பிக்கை தந்தாலும், அதை மக்கள் ஏற்க தயாராக இல்லை. தாலிபான்களின் பழமைவாத சிந்தாந்தங்களோடும், அவர்களின் அடக்குமுறைகளிலும் தங்களால் வாழ முடியாது என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி கொண்டிருப்பதால் பதற்றம் நீடித்து கொண்டே இருக்கிறது.
ஆப்கன் மக்களில் சிலர் தாலிபான்கள் பக்கம் நின்றாலும், ஏராளமானோர் தாலிபான்கள் வருகையை விரும்பவில்லை. அதுமட்டுமல்ல, அந்த நாட்டின் பல்கலைக்கழகங்கள், நூலகங்கள், கல்விக்கூடங்கள் என்னாகும் என்றும் தெரியவில்லை. என்ன மாதிரியான கட்டமைப்புடன் ஆட்சி அமைக்கப்படும் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை என்றாலும், முழுக்க முழுக்க இஸ்லாமிய தலைமையின் கீழ் ஆட்சி அமையும் என்பது மட்டும் தெளிவாகிறது. அதிலும் கடுமையான சட்டங்களுக்கிடையே மக்கள் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் வியப்பில்லை என்கிறார்கள்.
தாலிபான்களின் ஆட்சியும் அதன் சட்டங்களும் எந்த அளவில் இருக்கும் என்று ஆப்கான் மக்களோடு சேர்ந்து உலக நாடுகளும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
– யாழினி ரங்கநாதன்