எழுத்தாக்கம்: யாழினி ரங்கநாதன்
ஆப்கானிஸ்தான் நாட்டில், 20 ஆண்டுகளுக்கு பிறகு, ஆட்சியைக் கைப்பற்றி உள்ள தலிபான் அமைப்பினர், தற்காலிக அரசு அமைத்தும், இதுவரை பதவி ஏற்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் :-
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர்.
இதை அடுத்து ஆப்கன் அதிபராக இருந்த அஷ்ரப் கனி, தலிபான்களுக்கு பயந்து நாட்டை விட்டு தப்பிச் சென்றார். தற்போது அவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து, முல்லா அகுந்த் தலைமையில் தலிபான்கள் தற்காலிக அரசும் அமைத்துள்ளனர்.
தற்காலிக அரசு:-
தலிபான் அமைப்பினர் மூத்தத் தலைவர் முல்லா அகுந்த் தலைமையில், ஆப்கானிஸ்தானில் தற்காலிக அரசை தலிபான்கள் அமைத்துள்ளனர். அவர், ஆப்கனின் செயல் பிரதமராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தலிபான் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் முல்லா அப்துல் கனி பரதர், துணை செயல் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இது போல் பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்களை தலிபான்கள் நியமித்துள்ளனர். எனினும் அமைச்சரவையில் ஒரு பெண்ணுக்கு கூட இடம் அளிக்கப்படவில்லை.
பதவி ஏற்பு தள்ளிவைப்பு:-
அமெரிக்காவில், இரட்டை கோபுர தாக்குதல் நடந்ததன், 20 ஆம் ஆண்டு நினைவு தினமான, செப்டம்பர் 11 ஆம் தேதி, தலிபான்கள் அரசு பதவி ஏற்க உள்ளதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்த தலிபான்கள், விரைவில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என அறிவித்தனர். ஆனால் இதுவரை பதவி ஏற்கவில்லை.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றிய நிலையில், அங்கு 150க்கும் மேற்பட்ட ஊடகங்கள் மூடப்பட்டுள்ளதாக அதிர்ச்சிக்குரிய தகவல் கடந்த மாதம் வெளியாகியது.
அந்நாட்டில் பெண் உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்டவை கேள்விக் குறியாகும் அபாயம் இருப்பதாக உலக நாடுகள் அச்சம் தெரிவித்தன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தியில், ஆப்கானிஸ்தானின் 20 மாகாணங்களில் உள்ள பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்கள் என 153 ஊடக நிறுவனங்கள் தாலிபான்களின் கட்டுப்பாடுகளால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர், தாலிபான்கள் அமைப்பை ஆதரிக்கும் ஊடகங்கள் தங்கள் மீது கவனம் செலுத்தவில்லையெனில் விரைவில் நாட்டில் உள்ள பிற ஊடகங்களையும் மூடும் நிலை ஏற்படும் என கூறினார். இந்த பிரச்னையை தீர்க்க சர்வதேச ஊடகங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் பத்திரிகை மற்றும் மக்களின் சுதந்திரம் விரைவில் பறிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
முன்னதாக கடந்த மாதம் காபூலில் நடைபெற்ற போராட்டத்தை பதிவு செய்து கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் இருவரை கைது செய்த தாலிபான்கள், அவர்களை காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கியது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் என்னதான் நடக்கிறது என்ற முழு விவரங்களும் பெரிதாக தெரிவதில்லை.
தலிபான்களுக்குள் சாதி பிரச்னை?
இந்நிலையில் தலிபான்களுக்குள் சாதி பிரச்னை நிலவி வருவதால், புதிய அரசு பதவி ஏற்பு நிகழ்ச்சி தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்கானிஸ்தானில், பஷ்தோ, பார்சி மற்றும் துருக்கி ஆகிய மூன்று மொழிகள் பேசப்படுகின்றன. மேலும், பஷ்தூன், தஜிக், உஸ்பெக் மற்றும் ஹஸாரா ஆகிய நான்கு பிரிவுகள் உள்ளன.
இதற்குள் பல சாதிப் பிரிவுகள் உள்ள நிலையில், தங்கள் சாதி பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற வகையில், தலிபான் அமைப்பினரிடையே கடும் அதிகாரப் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் தற்காலிக அரசு அமைத்தும் ஆட்சி அமைக்க முடியாமல் தலிபான்கள் திணறுகின்றனர்.
தலிபான் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:
தங்கள் அமைப்புக்குள் எந்தவித மோதலும் இல்லை. சாதி பிரச்னையும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். ஆப்கனில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அரசு விரைவில் பதவி ஏற்கும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அவர் கூறினார்.
ஈரான் மாடல் அரசை இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தானில் அமைக்க தாலிபான்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அதிபரை விட அதிகாரம் பெற்றவராகவும் மதத் தலைவராகவும் சுப்ரீம் லீடர் ( உச்ச தலைவர்) இருப்பார்.
தாலிபான்களின் துணை அமைப்பான ஹக்கானி நெட்வொர்க் முக்கிய பதவிகளை கோரியுள்ள நிலையில், தாலிபான் அமைப்பை தொடங்கிய முகமது ஒமரின் மகன் முகமது யோக்கோபும் முக்கிய பதவிகளை பெற காய் நகர்த்தி வருகிறார்.
இதற்கிடையே புதிதாக அமையவுள்ள அரசில் முக்கியப் பதவிகளை கைப்பற்ற மிகப்பெரிய சாதிய போட்டா போட்டி நிலவி வருவதால் தாலிபான்களால் இதுவரை பதவி ஏற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.