எழுத்தாக்கம்: தோழர் தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
ஆசாரக் கோவை சங்கத் தமிழ் என்றார் யார்?
திரமிள சங்கம் அமைத்த சமண முனிவர் வச்சிரந்தியை ஆசான் ம. செந்தமிழன் வன்சொல் கொண்டு சாடக் கேட்டோம்! தமிழ்க் கழகத்தை ”திரமிள சங்கம் என்று அவன் சொன்னான்”! அம்மட்டோ? திரமிள சங்கத்தை நிறுவி விட்டு
”அவர்கள் சில நூல்களை இயற்றினார்கள், அந்த நூல்களில் ஒன்றுதான் ஆசாரக் கோவை… இதை தமிழ்ச் சங்க நூல்கள் என்ற வரிசையில் இப்போது வைத்திருக்கிறார்கள். இது பெரிய பாவம், பிழையான கருத்து. இது ஒரு வகையில் திரித்தல். இந்த ஆசாரக் கோவைதான் சில குடிகளில் பிறந்தவர்களை பிராமணர்கள் தீண்டக்கூடாது என்ற விதியை எழுதிய முதல் தமிழ்நூல்.”

ஆசான் ம. செந்தமிழன் முதலில் ஒரு வினாவிற்கு விடையிறுக்கட்டும்: ஆசாரக் கோவையைத் தமிழ்ச் சங்க நூல்கள் என்ற வரிசையில் வைத்தது யார்? எப்போது?
சங்க இலக்கியம் என்பது பொ.ஊ.மு. (கிமு) 500 முதல் பொ.ஊ. (கிபி) 200 வரையிலான காலத்தில் இயற்றப்பெற்ற செவ்வியல் இலக்கியத்தைக் குறிக்கும். நாளது வரை கண்டறியப்பட்டுள்ள படி 473 புலவர்கள் இயற்றிய 2,381 சங்கப் பாடல்கள் உள்ளன. எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமான 18 நூல்கள் சங்கத் தமிழ் நூல்கள் ஆகும். இவற்றுக்குப் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்று பேர். இந்தப் பட்டியலில் ஆசாரக் கோவைக்கு இடமில்லை. அது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகத்தான் மதிக்கப்பெறுகிறது.
ஆசாரக் கோவையைத் தமிழ்ச் சங்க நூல் வரிசையில் சேர்ப்பது பெரிய “பாவம்” என்றால், செந்தமிழன் அந்தப் பாவத்தைச் செய்யாதிருக்கட்டும்! கருமவினைக் கொள்கையை நம்பாத ஒருவர் “பாவம்” என்ற சொல்லை வெகு இயல்பாக ஆள்வது வியப்பாக உள்ளது.
எனக்குத் தெரிந்த வரை ஆசாரக் கோவையை தமிழ்ச் சங்க நூல்கள் என்ற வரிசையில் யாரும் சேர்க்கவில்லை. சேர்த்திருந்தால் பிழைதான்! யாரும் சேர்க்காமலிருந்து செந்தமிழன் யாரோ சேர்ப்பதாகச் சொல்வராயின் அது இன்னும் பெரிய பிழை!
ஆசாரக் கோவை தீண்டாமையை வலியுறுத்தும் முதல் தமிழ் நூல் என்கிறார் செந்தமிழன். முதல் என்ற அடைமொழி ஆய்வுக்குரியது. ஆனால் அது தீண்டாமை பேசும் நூல் என்பது மெய்!
ஆசாரக் கோவையில் இடம்பெற்றுள்ள வெண்பா வடிவிலான 100 பாடல்கள், மக்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகள் (ஆசாரங்கள்) எவையெவை எனக் கூறுகின்றன. உண்ணல், உடுத்தல், உறங்கல், நீராடல் போன்ற நடைமுறை வாழ்க்கைக் கூறுகள் முதற்கொண்டு, யாரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ன செய்ய வேண்டும் போன்ற வழிமுறைகளும் சொல்லப்பட்டுள்ளன. சுருக்கமாக அகத்தூய்மை, புறத்தூய்மை என இரண்டுக்கும் வழிகாட்டும் முயற்சி எனக் கொள்ளலாம். எவை செய்தல் நன்மையுண்டாக்கும், எவை செய்தால் தீமைகள் நேரும் என்பதை விளக்குவது நூலின் நோக்கம்.
“இன்றியமையாது நீராடுதல்” என்ற ஆசாரக்கோவை பாடல் எப்பொழுது நீராடவேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
வைகு துயிலோ டிணைவிழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்
ஐயுறா தாடுக நீர். (10)
ஒரு பத்துச் செயல்களைக் குறித்து அவற்றில் எதைச் செய்தாலும் நீராடுதல் வேண்டும் என்கிறது இந்த ஆசாரம். அந்தப் பத்தில் ஒன்று “கீழ்மக்கள் மெய்யுறல்”, அதாவது கீழ்மக்கள் எனப்படுவோரைத் தீண்டி விட்டால் உடனே குளிக்க வேண்டுமாம். தீட்டுக் கழிப்பதற்காக நீராட வேண்டுமாம்!
“செய்யத்தகாதன” என்ற ஆசாரக்கோவை பாடல் எவற்றைச் செய்யக்கூடாது என்று அறிவுறுத்துகிறது.
நீருள் நிழற்புரிந்து நோக்கார் நிலமிராக்
கீறார் இராமரமுஞ் சேரார் இடரெனினும்
நீர்தொடா தெண்ணெ யுரையார் உரைத்தபின்.
நீர்தொடார் நோக்கார் புலை. (13)
பாடலின் பொருள்: செய்யக் கூடாதவை என்பனவற்றைச் செய்ய விரும்பாத ஒருவர், நீருக்குள் தனது நிழலை விரும்பி நோக்க மாட்டார், தரையைக் கீற மாட்டார், இரவில் மரத்தின் பக்கம் இருப்பதைத் தவிர்ப்பார், நோய் கொண்ட நேரத்தில் எத்தனை இடையூறு என்றாலும் நீரைத் தொடாமல் எண்ணெய்யை உடலில் தேய்க்க மாட்டார், எண்ணெய் தேய்த்த பின்னர் நீராடாமல் புலையரை (கீழ்மக்கள் எனக் கூறப்படுவோர்) தனது கண்ணால் நோக்க மாட்டார் (அதாவது ‘கண்டு முட்டு’, புலையரைப் பார்த்தாலே தீட்டு வரும் என்ற மூட நம்பிக்கை).
எண்ணெய் தேய்த்த பின் நீராடாமல் புலையரைக் காணக் கூடாதாம்! தீண்டாமையினும் கொடிய காணாமை!
“நன்னெறி” என்ற ஆசாரக்கோவை பாடலும் எவற்றைச் செய்யக்கூடாது என்று அறிவுறுத்துகிறது.
பெரியார் உவப்பன தாமுவவார் இல்லஞ்
சிறியாரைக் கொண்டு புகாஅர் அறிவறியாப்
பிள்ளையே யாயினு மிழித்துரையார் தம்மோ
டளவளா வில்லா விடத்து. (68)
பாடலின் பொருள்: பெரியோர்கள் விரும்புகின்றவற்றைத் தானும் அடைய விரும்பாமையும், தங்கள் வீட்டுக்குள் கீழ்மக்கள் என்போரை உள்ளே அழைத்து வராமலிருப்பதும், தனக்கு அறிமுகமில்லாதவர் ஒருவரை, அவர் அறியா வயது சிறு பிள்ளையாக இருப்பினும் இழிவாகப் பேசாமல் இருப்பதும் கடைபிடிக்க வேண்டிய நன்னெறிகளாகும்.
கீழ்மக்கள் எனப்படுவோரை வீட்டுக்குள் அழைத்து வரக்கூடாதாம்! சில நன்னெறிகளைச் சொல்லி அவற்றுக்கு நடுவில் தீண்டாமைத் தீநெறியை நுழைக்கும் உத்தி கவனத்துக்குரியது.
(4) “குரவர் பெயர் முதலியன கூறாமை” என்ற ஆசாரக்கோவை பாடலும் எவற்றைச் செய்யக்கூடாது என்று அறிவுறுத்துகிறது.
தெறுவந்துந் தங்குரவர் பேருரையா ரில்லத்து
உறுமி நெடிதும் இராஅர் – பெரியாரை
என்று முறைகொண்டு கூறார் புலையரையும்
நன்கறிவார் கூறார் முறை. (80)
பாடலின் பொருள்: எவை நன்மை தருபவை என நன்கு அறிந்த ஒருவர், சினம் கொண்டு வெகுண்ட நிலையிலும் மூத்தோரைப் பெயர் சொல்லிக் குறிப்பிடமாட்டார், வீட்டில் உள்ளோரிடம் சினம் கொண்டாலும் அதை நீட்டிக்க மாட்டார், தம்மிற் பெரியாரை முறைப் பெயர் கொண்டு இழிவுபட அழைக்க மாட்டார், கீழ்மக்களாகக் கருதப்படுவோரிடம் முறைமை பாராட்டி உறவு கொண்டாட மாட்டார்.
நல்லவற்றைச் சொல்லி அவற்றோடு அல்லவற்றைக் கலந்து கொடுக்கும் அதே தந்திரம்தான்!
(5) “அந்தணர் வாய்ச்சொல் கேட்டல்” என்ற ஆசாரக்கோவை பாடலும் எவற்றைச் செய்யக் கூடாது, எவற்றைச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
தலைஇய நற்கருமஞ் செய்யுங்கா லென்றும்
புலையர்வாய் நாள் கேட்டுச் செய்யார் – தொலைவில்லா
அந்தணர்வாய்ச் சொற்கேட்டுச் செய்க அவர்வாய்ச்சொல்
என்றும் பிழைப்ப திலை. (92)
பாடலின் பொருள்: அறிவுள்ளவர் முக்கியத்துவம் வாய்ந்த நற்செயல்களைச் செய்யும்பொழுது என்றும் புலையரிடத்து நாள் கேட்டுச் செய்யார், ஒழுக்கம் குறையாத ஐயர் ஒருவர் குறித்துத் தரும் நாளில் நற்செயல்களைச் செய்வார். ஏனெனில் அவர் சொல்வது என்றும் பிழையாத் தன்மை கொண்டது. அதுவே நன்மையும் தரும். இங்கு அந்தணர் ஒழுக்கம் குன்றாதவர் என்று காட்டும் பொழுது, புலையர் ஒழுக்கமற்றவர் என்பது சொல்லாமல் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து. மேலும், புலையர் என்று இப்பாடலில் குறிப்பிடப்படுபவர் வள்ளுவர் என்ற சோதிடங்கூறும் கீழ்வகுப்பார் என்று உரை நூல் விளக்கம் தருகிறது.
தமிழகத்தில் குல உயர்வுதாழ்வு, தீண்டாமை என்ற கருத்தாக்கங்கள் எக்காலத்தில் தோன்றின என்பதும், கீழ்மக்கள் என்று ஒரு சிலர் எப்பொழுது விலக்கப்பட்டனர் என்பதும் ஆய்வுக்குரியன.
ஆனால் ஆசாரக் கோவை சங்க காலத்துக்குரியதாக இருக்க வாய்ப்பே இல்லை என்பதற்கு மேற்காட்டிய பாடல்களையே அகச் சான்றாகக் கொள்ளலாம். எப்படியும் அது சங்கம் மருவிய காலத்துக்குரியதாகவோ இன்னும்கூட பிற்காலத்தியதாகவோ இருக்கக் கூடும்.
தீண்டாமையை ஒழுக்கங்களில் ஒன்றாகக் காட்டும் இந்த ஆசாரக் கோவையை இயற்றியது யார்? எப்போது? ஆசாரக் கோவையை இயற்றியவர் திரமிள சங்கத்தவர், அதாவது சமணர் என்பது ஆசான் ம. செந்தமிழனின் சாற்றுரை! அந்தத் திரமிளம் தீது! ஆகவே திராவிடம் தீது! இதுதான் அவர் கற்பிக்கும் எதிர் ஏரணம்!
ஆசாரக் கோவையை இயற்றியவரின் பெயர் தெரியாத ஒன்றோ அல்லது ஐயுறு ஆய்வுக்குரியதோ அன்று. பெருவாயின் முள்ளியார் இயற்றியதுதான் ஆசாரக் கோவை! யார் இந்தப் பெருவாயின் முள்ளியார்? அடுத்துச் சொல்கிறேன்.
(தொடரும்)