எழுத்தாக்கம்: தோழர் தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
ஆசாரக் கோவையை இயற்றியவர் சமணரா? சைவரா?
சமண முனிவர் வச்சிரநந்தி நிறுவிய திரமிள சங்கம் தமிழ்க் கழகத்தை வீழ்த்தியது மட்டுமல்ல, தீண்டாமையை வலியுறுத்தும் ஆசாரக் கோவை நூலையும் இயற்றியது என்பது ஆசான் ம. செந்தமிழன் அவர்களின் குற்றச்சாற்று!
இந்நூலை இயற்றியவர் யார்? என்று செந்தமிழன் எவர் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றாலும், அவர் ஒரு சமணர் என்று உறுதியாக உணர்த்துகின்றார். இரண்டாவதாக அது களப்பிரர் காலத்திய நூல் என்பதையும் அறுதியிட்டுரைக்கின்றார்.
பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய ஆசாரக் கோவையை இயற்றியவர் பெருவாயின் முள்ளியார் என்பதில் ஐயத்துக்கிடமில்லை. இவர் சமணரா? இல்லை என்பதற்கு ஆசாரக் கோவையிலேயே அகச் சான்று உள்ளது. ஆசாரக் கோவையின் 100 பாக்களுக்கும் நுழைவாயிலாக அமைந்திருப்பது தற்சிறப்புப் பாயிரம். அதனை அப்படியே தருகிறேன்:
ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி,
ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம்
யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை
ஆசாரக்கோவை எனத் தொகுத்தான்-தீராத்
திரு வாயில் ஆய, திறல் வண், கயத்தூர்ப்
பெருவாயின் முள்ளி என்பான்.
நூலின் தற்சிறப்புப் பாயிரத்தால், அப்பாடலின் கருத்தினைக் கொண்டு இந்நூலாசிரியர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
தற்சிறப்புப் பாயிரத்தின் முதலடியே இதனைத் தெளிவாக்கி விடுகிறது.
”ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி” என்றால் என்ன?
எயில் என்றால் மதில். மூன்று மதில்களை அழித்தவன் யார்? அரக்கர்களின் மூன்று கோட்டைகளை அழித்தவன் சிவபெருமான் என்பது சிவனடியார்தம் நம்பிக்கை. ”ஆர் எயில் மூன்றும் அழித்தான்” ஆகிய சிவனின் அடி தொழுது நூலியற்றும் ஆசிரியர் சமணராக எப்படி இருக்க முடியும்? அவர் சிவனடியாராக மட்டுமே இருக்க முடியும். வண் கயத்தூர் என்பது அவரது ஊர்ப்பெயர். முள்ளியார் என்பது அவரது இயற்பெயர்.
வண் கயத்தூர் பெருவாயின் முள்ளியார் எனும் சிவனடியார் இயற்றிய ஆசாரக்கோவை தீண்டாமை பேசும் தீநூல் என்றால் அதற்கான பழி சமண முனிவர் கூட்டமாகிய திரமிள சங்கத்தை எப்படிச் சாரும் என்பதை ஆசான் ம. செந்தமிழன் அவர்களே விளக்க வேண்டும்.
ஆசாரக் கோவையை தமிழ்ச் சங்க நூல் வரிசையில் வைத்திருப்பது பெரும் பாவம் என்கிற செந்தமிழன் அப்படி வைத்திருப்பது யார் என்று சொல்லவே இல்லை. எப்படியாயினும் அது சங்கத் தமிழ் நூலன்று, ஆனால் அந்நூலின் காலக் குறிப்பு என்ன? என்பதைக் கணிக்கத்தான் வேண்டும்.
ஆசாரக்கோவை களப்பிரார் ஆட்சியில் திரமிள சங்கத்தில் இயற்றப்பட்ட நூல் என்று கற்பித்துச் சமணத்தின் மீது பழிசுமத்துவது ஆசான் ம. செந்தமிழனின் முயற்சியாக அமைவதால், அந்நூலின் காலக் கணிப்பு ஆய்வுக்குரியதாகிறது.
நூலாசிரியரை அறிந்து கொள்ள நூலிற்குள்ளேயே அகச் சான்று இருப்பது போல் நூலின் காலக் கணிப்புக்கும் அகச் சான்றுகள் உள. பார்ப்போம்.
(தொடரும்)