தமிழரா? திராவிடரா? : பகுதி 7 – தோழர். தியாகு

எழுத்தாக்கம்: தோழர். தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

ஆசாரக்கோவை காட்டும் ஆரியந்தழுவிய சைவம்:

சமணத் துறவிகளின் திரமிள சங்கத்தை நிறுவிய வச்சிரநந்தி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தும் ஆசான் ம. செந்தமிழன் தீண்டாமைத் தீமைக்கான பழியைச் சமணத்தின் மீது சுமத்துகிறார், அதற்கு ஆசாரக் கோவை என்ற நூலையும் அது இயற்றப்பட்ட காலத்தையுமே சான்றாகக் கொள்கின்றார்.

ஆசாரக் கோவையை இயற்றியவர் சமணரல்லர் என்பது மட்டுமல்ல, அவர் பெருவாயின் முள்ளியார் என்னும் சிவனடியாரே என்பதற்கு அந்நூலின் தற்சிறப்புப் பாயிரமே சான்றாக இருக்கக் கண்டோம்.

ஆசாரக் கோவை களப்பிரர் ஆட்சிக் காலத்தில்தான் இயற்றப்பெற்றது என்பதற்கும் சான்றேதுமில்லை. களப்பிரர் ஆட்சி போய் விட்ட பிறகே ஆசாரக் கோவை இயற்றப்பட்டது என்பது தமிழறிஞர் பலரின் துணிபுமாகும்.

ஆசாரக் கோவை அதன் உள்ளடக்கத்தில் தமிழில் எழுதப்பெற்ற மூலநூலன்று என்பதும் ஒரு முகன்மைச் செய்தியாகும். அதன் கருத்துகள் எங்கிருந்து பெறப்பட்டன என்பதிலிருந்து ஆரியச் சிந்தனைகள் எவ்வாறு தமிழ் மரபுக்குள் நுழைந்தன என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

கடந்த 1916ஆம் ஆண்டில் ஆசாரக் கோவையைச் சீர்மை செய்து வெளியிட்ட பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் திரு டி. செல்வகேசவராய முதலியார் தமது பதிப்புரையில் சொல்கிறார்:

”இந்நூலுக்கு ஆதாரம் ஆரிடம் என்பது தற்சிறப்புப் பாயிரத்தில் குறித்திருக்கின்றது. இலக்கண விளக்கவாசிரியர் வழிநூலை விளக்கும் சூத்திரவுரையில் மொழிபெயர்ப்பு நூலுக்கு ஆசாரக் கோவையை உதாரணம் காட்டியிருக்கிறார். இந்நூலிற்கூறிய ஆசாரங்கள் பெரும்பானமையாய் வடமொழியிலுள்ள சுக்ரஸ்ம்ருதியிலிருந்து தொகுத்தவை என வடநூற்புலவர் கூறுகின்றனர்….”

வையாபுரிப்பிள்ளை சொல்கிறார்:

”… இந்நூல் வடமொழி நூலின் வழித்தோன்றியது என்பதில் சிறிதும் ஐயப்பாடில்லை…. ஆனால் ஆரிடத்து என ஆசிரியர் பொதுப்படக் கூறுவதாலும், தொகுத்தான் என விவரித்தலாலும், ஸ்மிருதிகள் பலவற்றிலிருந்து ஆசாரக் கோவைப் பொருள்கள் தொகுக்கப் பெற்றனவென்று கொள்ளுதலே தக்கது. சுக்ரஸ்மிருதி எனப்படும் உசனஸ் ஸம்ஹிதைக்கும் ஆசாரக்கோவைக்கும் கருத்தொற்றுமைகள் பல காணப்படுகின்றன.

“… ஆசாரக்கோவையில் காணப்படும் உண்ணுங்கால் நோக்குந்திசை கிழக்கு” என்பது ஆபஸ்தம்ப தர்ம சூத்திரத்திலும் (I 11, 31, 1) வசிஷ்ட தர்ம சூத்திரத்திலும் வந்துள்ள கருத்தேயாகும். இவ்விரண்டு சூத்திரங்களும் கி.மு. 300க்கு முன் தோன்றியன என்பர். ’ஒழிந்த திசையும் வழிமுறையால் நல்ல’ என்பது கி.பி. 200க்கு முன் தோன்றியதாகக் கருதப்படும் மனுதர்ம சாஸ்திரத்தில் (II, 52) வந்துள்ளது. எனவே இவை சுக்ரஸ்மிருதியினின்றும் கொள்ளப்பட்டனவெனல் பொருந்தாது. ஆசாரக்கோவையிலுள்ள பல கருத்துக்கள் சுக்ரஸ்கிருதியில் காணப்படவில்லை. உதாரணமாக ’ஆசாரம் வீடு பெற்றார்’ இவரெனக் கூறும் இறுதிச் செய்யுளைக் கூறலாம். இங்ஙனமே சுக்ரஸ்மிருதியிலுள்ள கருத்துக்கள் பல ஆசாரக்கோவையிற் காணவில்லை. 3ஆம் அத்தியாயத்தின் பிற்பகுதியிலுள்ள சிரார்த்த நியமங்களும், அதன்பின் இறுதியிலுள்ள 9ஆம் அத்தியாயத்தில் வரும் கழுவாய் நியமங்களும் உதாரணங்களாம். பிற தர்மசூத்திரங்களிலும் காணப்படாது, சுக்ரஸ்மிருதியில் மட்டும் காணப்படும் கருத்துக்கள் பெரும்பாலும் இல்லையென்றே சொல்லலாம்….”

இவ்வாறான அகச் சான்றுகளிலிருந்து வையபுரிப்பிள்ளை ஆசாரக்கோவையின் காலக்கணிப்புக்குச் செல்வதை முன்பே பார்த்தோம். ஆசாரக்கோவையின் ஆசாரங்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பதற்கு மேலும் பல சான்றுகளை அவர் தருகிறார்:

”பிற்பட்ட ஸ்மிருதிகளிலிருந்து சில கருத்துக்கள் ஆசாரக்கோவையில் கொள்ளப்பட்டுள்ளன. ’நிறையுவா மெல்கோலுந்தின்னார்’ (ஆசாரக்கோவை 17) என்பது அவற்றுள் ஒன்று. இது சுக்ரஸ்மிருதியிற் காணப்பட வில்லை. ’லகுஹாரீ தஸ்மிருதியில்’ உள்ளது….”

வடமொழி ஸ்மிருதிகளை கிரந்த வரிவடிவத்தில் எடுத்துக்காட்டி அவற்றுக்கு நிகரான ஆசாரக்கோவையின் ஆசாரங்களையும் வையாபுரிப்பிள்ளை பட்டியலிடுவது கருத்துக்குரிய இலக்கிய ஒப்பாய்வு என்பேன்.

இந்த ஒப்பாய்வின் அடிப்படையில் ஆசாரக் கோவையைக் காலங்கணிக்க வையாபுரியார் முற்படும் போது சிவனடியாராகிய பெருவாயின் முள்ளியார் கோத்துக் கொடுக்கும் ஆசாரங்களின் மூலம் ஆரியமே என்பதும் தெளிவாகிறது. ஆசாரக்கோவையை சமண நூல் என்று கற்பித்துக்கொண்டு ஆசான் ம. செந்தமிழன் சீறித் தொடுக்கும் கணைகள் சிவனியத்துக்கு எதிராகத் திரும்புகின்றன. இதுதான் சைவம் என்றால் சைவத்துக்கு எதிராகத் திரும்புகின்றன. இந்த சைவம் வைதிகத்துக்கு எதிரானதென்று எப்படிச் சொல்ல இயலும்? சைவம் வைதிகத் தொற்றினால் பீடிக்கப்பட்டமைக்குத்தான் ஆசாரக்கோவையைச் சான்றாகக் கொள்ளத்தகும்.

இந்த அடிப்படையில் ஆசாரக்கோவையின் ஆசிரியர் ”பெரும்பாவம் செய்து விட்டார், அவரது குற்றத்தை மறக்காதீர்கள், மன்னிக்காதீர்கள்” என்று செந்தமிழனைப் போல் பொங்க வேண்டியதில்லை. வரலாற்று நிகழ்வுகளை ஆய்வு செய்யும் போது உவத்தல் காய்தலுக்கு இடமில்லை. காலங்கடந்து  எவரையும் கழுவேற்றும் மனநிலை உயிர்ப்புள்ள  அறிஞர்களுக்கு ஏற்றதன்று.

தீண்டாமை பேசிய முதல் தமிழ் நூல், செந்தமிழன் பார்வையில், ஆசாரக்கோவைதான் என்பது மெய்யானால் அது ஒரு சிவனடியார் ஆரியந்தழுவி இயற்றிய நூல் என்பதில் ஐயமில்லை. சமணத்துக்கு எதிராக விரல் நீட்ட அதில் ஒன்றுமில்லை. சமணத்தின் மீது சினங்கொள்ள வேறு அடிப்படை இருப்பின் எடுத்துக் காட்டலாம். ஆசாரக்கோவை அதற்கு உதவப் போவதில்லை.    

(தொடரும்)