எழுத்தாக்கம்: தோழர். தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
ஆசாரக் கோவையின் காலக் கணிப்பு
தீண்டாமை பேசும் ஆசாரக்கோவை களப்பிரர் ஆட்சிக் காலத்தில் திரமிள சங்கத்தில் சமணரால் இயற்றப்பட்டது என்பது ஆசான் ம. செந்தமிழனின் துணிபு. நூலை இயற்றிய வண் கயத்தூர் பெருவாயின் முள்ளியார் சமணரல்லர் என்பது மட்டுமல்லாமல், சிவனடியாரே ஆவார் என்பதைத் தற்சிறப்புப் பாயிரத்தின் சான்று கொண்டு பார்த்தோம். ஆனால் ஆசாரக் கோவையின் காலக் கணிப்பு அவ்வளவு எளிதன்று. அதில் மாறுபாடுகளுக்கு இடம் இருக்கத்தான் செய்யும்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ஆசாரக்கோவை சைவ சமயத்தைச் சேர்ந்தவரால் இயற்றப்பட்ட நூல் என்று சொல்லும் அந்நூலின் சீராளர் (பதிப்பாசிரியர்) தமிழறிஞர் தி. செல்வகேசவராய முதலியார் அது கடைச்சங்கம் மருவிய காலத்து நூல்களுள் ஒன்று என்றும் கணிக்கிறார். இந்நூலுக்கு மூலநூல் ஆரிடம் என்னும் வடநூலெனவும் பாயிரத்திலிருந்து தெரிவதாகச் சொல்கிறார். இந்நூல் தொகுக்கும் ஆசாரங்கள் யாவும் சுக்ர ஸ்மிருதி நூலின் பாடல்கள் என்று வடமொழிப் புலவர் கூறுவதாகவும் எடுத்துக்காட்டுகின்றார்.
ஆனால், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை தமது ‘தமிழ் இலக்கிய வரலாறு’ நூலில், ஆபஸ்தம்ப கிருஹ்யசூத்திரம், ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம், போதாயனதர்ம சூத்திரம், கௌதம சூத்திரம், விஷ்ணு தர்ம சூத்திரம், வசிஷ்ட தர்ம சூத்திரம், மனு ஸ்மிருதி, உசனஸ ஸம்ஹிதா, ஸங்க ஸ்மிருதி, லகு ஹாரித ஸ்மிருதி ஆகிய பல நூல்கள் ஆசாரக் கோவை நூலுக்கு அடிப்படையாய் அமைந்துள்ளன எனக் குறிப்பிடுவார்.
ஆசாரக் கோவை குறித்து மயிலை சீனி. வேங்கடசாமி சொல்வதாவது:
“பல்வேறு வெண்பா வகைகளும் விரவி, கடவுள் வாழ்த்து தவிர்த்து நூறு பாடல்களைத் தன்னகத்தே கொண்டதாய் இந்நூல் விளங்குகிறது. இந்நூல் மக்கள் அன்றாட வாழ்வில் கொள்ள வேண்டுவன இவை, தள்ள வேண்டுவன இவை என்பதைக் கூறுகிறது. எனவே, இதனை வடமொழிக் கருத்துகள் வழங்குவது போன்றதொரு நூல் என்பர். இந்நூலின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் என்பவர். இவர், வடமொழியில் இருடிகள் சொல்லிய ஆசார சீலங்களைத் தொகுத்து ஆசாரக்கோவை என்னும் இந்நூலில் கூறுவதாகச் சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன்று செப்புகின்றது. இவர் காலமும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டாய் இருக்கலாம் என்பர்.”
(மயிலை சீனி. வேங்கடசாமி, களப்பிரர் ஆட்சியில் தமிழகம்)
“நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு”
எனப் பாடப்பெறும் நாலடியார் முதல் ஏலாதி முடியவுள்ள பதினென்கீழ்கணக்கு நூல்களில் திருக்குறள் உள்ளிட்ட ஒருசில மட்டும் கடைச் சங்க காலத்திலேயே எழுதப்பட்டவை. பெரும்பாலானவை களப்பிரர் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்டவை. ஒருசில களப்பிரர் ஆட்சிக் காலம் முடிந்த பின் எழுதப்பட்டவை. ஆசாரக்கோவை ஒப்பளவில் பிற்காலத்தியது என்பதில் ஆய்வறிஞர்கள் உடன்படுவர். அகச் சான்றுகளின் அடிப்படையில் ஆசாரக்கோவையின் காலத்தைக் கணிக்க அறிஞர் வையாபுரிப்பிள்ளை செய்யும் முயற்சி கவனத்துக்குரியதாக உள்ளது.
வையாபுரிப் பிள்ளை எழுதுகிறார்:
“ஆனால் ’ஆரிடத்து’ என்று ஆசிரியர் பொதுப்படக் கூறுவதாலும், ‘தொகுத்தான்’ என விவரித்தலாலும், ஸ்மிருதிகள் பலவற்றிலிருந்து ஆசாரக்கோவைப் பொருள்கள் தொகுக்கப்பெற்றன என்று கொள்ளுதலே தக்கது. சுக்கிர ஸ்மிருதி எனப்படும் உசனஸ் ஸம்ஹிருதைக்கும் ஆசாரக்கோவைக்கும் பல கருத்தொற்றுமைகள் காணப்படுகின்றன….”
“பிற்பட்ட ஸ்மிருதிகளிலிருந்து சில கருத்துக்கள் ஆசாரக்கோவையில் கொள்ளப்பட்டுள்ளன. ’நிறையுவா மெல்கோலுந் தின்னார்’ (ஆசாரக்கோவை 17) என்பது அவற்றுள் ஒன்று. இது சுக்ரஸ்மிருதியிற் காணப்படவில்லை. லகுஹாரீ தஸ்மிருதியில் உள்ளது. இந்த ஸ்மிருதியின் காலமும் கி.பி. 600க்குப் பிற்பட்டதே. ’மண்டலஞ்செய் எண்ணல்’ (ஆசாரக் கோவை 19) என்பது மற்றொன்று. இது சுக்ரஸ்மிருதியில் காணப்படுகிறது; ஆனால் இச்செய்யுளின் இறுதியடியிற் காணப்படும் “கொண்டாரரக்கர் குறித்து’ என்னுங்கருத்து இதன்கண் இல்லை. இரண்டும் ஒருங்கே காணப்படுவது லகுசா தா தபத்திலும்’ லகு அத்திரிஸ்மிருத்தியிலும் தான். இவ்விரண்டும் கி.பி. 600க்குப் பிற்பட்டனவே. வடமொழியில் இந்த ஸ்மிருதிகள் கி.பி. 600க்குப் பின் தோன்றியவையாயின், இவை தமிழ்நாட்டிற்பரவி, மொழிபெயர்க்க வேண்டும அவசியம் ஏற்பட்டு மொழிபெயர்க்கப்படுவதற்கு சுமார் 150 ஆண்டுகள் சென்றிருக்கலாம். ஆகவே சுமார் கி.பி 750ல் ஆசாரக்கோவை இயற்றப்பட்டிருக்க வேண்டும்….”
(எஸ். வையாபுரிப்பிள்ளை, திரிகடுகமும் சிறுபஞ்ச மூலமும் [பழைய உரையுடன்])
பல்வேறு வடமொழி நூல்களோடு ஆசாரக்கோவைக்குள்ள ஒற்றுமையைக் காட்டி அவற்றின் காலக்கணிப்பைத் துணைகொண்டு ஆசாரக்கோவையின் காலக்கணிப்புக்கு வழியமைக்கும் வையாபுரிப் பிள்ளையின் பார்வையை மறுத்தல் அரிதே. மனுஸ்மிருதியோடு ஆசாரக்கோவை ஒத்திருப்பதைக் காட்ட அவர் காட்டும் சான்றினைப் படமாகக் கீழே இணைத்துள்ளேன்,
இவ்வாறு ஆசாரக்கோவையின் அகச் சான்றுகளைக் கொண்டு அது பிற்பட்ட ஸ்மிருதிகளிலிருந்து தொகுக்கப்பட்டது என்பதையும் கி.பி. 750 வாக்கில் இயற்றப்பட்டது என்பதையும் வையாபுரிப் பிள்ளை நிறுவுகிறார்.
எப்படிப் பார்ப்பினும் ஆசாரக்கோவை களப்பிரர் காலத்திய நூலாக இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. ஒருவேளை அப்படி ஒரு வாய்ப்பிருப்பதாக ஆசான் ம. செந்தமிழன் கருதினால், அதற்குச் சில சான்றுகள் தர முடிந்தால் நன்று. ஆனால் அப்போதும் ஆசாரக் கோவை சமணர் இயற்றிய நூலாகி விடாது. அது சிவனடியார் பெருவாயின் முள்ளியர் இயற்றிய நூல் என்பதை மறுக்கவே இயலாது.
சமணம் ஆரியத்துக்கு இசைவானது என்றும் சைவம் ஆரியத்துக்கு எதிரானது என்றும் கருத்துருவாக்க செந்தமிழன் செய்யும் முயற்சிக்கு ஆசாரக்கோவை பற்றிய அவரது பழிதூற்றல் உதவாது. சமணத்தின் மீது காழ்ப்புக் கொள்ள ஆசாரக்கோவையை அடிப்படையாகக் கொள்ளும் ஆசானின் முயற்சி வீண்.
ஆசான் ம. செந்தமிழனின் இறைப்பேருரையிலிருந்து விடை பெறுமுன் பகுத்தறிவு கொண்டு பார்க்க வேண்டிய இன்னும் சில உள. பார்ப்போம்.
(தொடரும்)