”தமிழரா? திராவிடரா?” – பகுதி-2..தோழர் தியாகு.

எழுத்தாக்கம்: தோழர் தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்


கழகமும் சங்கமும்:


ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (பொ.ஊ. 470) சமண முனிவர் வச்சிரநந்தியால் நிறுவப்பெற்ற திரமிள சங்கத்தால் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்க் கழகம் வீழ்த்தப்பட்டது என்று ஆசான் ம. செந்தமிழன் பழி சுமத்துவதன் காலவழுவை எடுத்துக்காட்டினேன்.

தொன்மையில் நிகழ்ந்த இந்தக் குற்றத்தைப் ”பெரும் பாவம்” என்று சாடும் ஆசான் ம.செந்தமிழன் அதை மறக்கவோ மன்னிக்கவோ கூடாது என்று இக்காலத் தமிழர்களாகிய நம்மை உசுப்புகிறார். அவர் சாற்றிடும் குற்ற மடலைக் கேளுங்கள்:

“திரமிள சங்கம் என்று அவன் சொன்னான். எவ்வளவு இறுமாப்பு! இந்த இனத்தின் மீது எவ்வளவு இகழ்வு அவனுக்கு இருந்தால் தமிழ்க் கழகம் என்று இருந்த கழகத்தை அதே மதுரையில் இனி இது தமிழ்க் கழகம் அல்ல, திரமிள சங்கம் என்று கொச்சையாக எழுதி அதை நிறுவி நடத்தினான். யானையை அடித்துத் துன்புறுத்திப் பிச்சை எடுக்க வைப்பதைப் போன்றது தமிழர்களுடைய கழகம் அமைந்த மதுரையில் எதிரிகள் வந்து உட்கார்ந்து கொண்டு திரமிளர் சங்கம் என்று அழைக்க வேண்டும் தமிழர் கழகம் என்று அழைக்கக் கூடாது என்று மிரட்டினார்கள்.”

செந்தமிழன் சொல்கிற படி பார்த்தால் வச்சிரநந்தியார் தமிழ்க் கழகத்தைக் கலைத்து விட்டு திரமிள சங்கத்தை அமைத்திருக்க வேண்டும். தமிழ் காக்கும் தமிழ்க் கழகத்தின் இடத்துக்கு தமிழை அழிக்கும் திரமிள சங்கம் வந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டுமே மொழி சார்ந்த அமைப்புகளாகவே இருந்திருக்க வேண்டும். இருந்தனவா?

மயிலை சீனி. வேங்கடசாமி சொல்கிறார்:
“சமண சமயத்தை வளர்ப்பதற்காக வச்சிரநந்தி அமைத்த திரமிள சங்கத்தையும் சங்க காலத்தில் பாண்டியர் தமிழ் மொழியை வளர்க்க அமைத்த தமிழ்ச் சங்கத்தையும் ஒன்று என்று கருதுவது தவறு. இந்த இரண்டு சங்கங்களும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு காரணத்துக்காக அமைக்கப்பட்ட சங்கங்கள். இரண்டையும் ஒன்றாக இணைத்துக் கூறுவது வரலாறு அறியாதவரின் தவறான கூற்றாகும்.”
(களப்பிர் ஆட்சியில் தமிழகம்.)

மேலும் தெளிவாகவே சொல்கிறார்:
”மூன்று வகையான சங்கங்கள்: களப்பிரர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் (கி.பி. 470ஆம் ஆண்டில்) மதுரை நகரத்தில் திரமிள (திராவிட – தமிழ) சங்கத்தை வச்சிரநந்தி அமைத்தார் என்று அறிந்தோம். வச்சிரநந்தி ஏற்படுத்திய சங்கம் சைன மதத்தை வளர்ப்பதற்கான சங்கமாகும் (சங்கம்- கூட்டம்). பௌத்தப் பிக்குகளின் கூட்டத்துக்குப் பௌத்த சங்கம் என்பது பெயர். பௌத்தப் பிக்குகளின் சங்கத் தலைவர் சங்க பாலர் என்று பெயர் கூறப்பெற்றார். பௌத்தர்களுடைய மும்மணிகளில் பௌத்தப் பிக்குகளின் சங்கமும் ஒன்று. சங்கம் சரணம் கச்சாமி என்பது காண்க. இதன் பொருள் பௌத்த சங்கத்தைச் சரணம் அடைகிறேன் என்பது. சைனத் துறவிகளின் கூட்டத்துக்கும் சங்கம் என்பது பெயர். சங்கத்தைச் (கூட்டத்தை) சைனர் கணம் என்றும் கூறுவர். கணம் என்றாலும் சங்கம் என்றாலும் ஒன்றே. களப்பிரர் ஆட்சிக்கு முன்னே பாண்டியர் தமிழ் மொழியை ஆராய்வதற்குப் புலவர்களின் கூட்டத்தை ஏற்படுத்தினார்கள். அந்தக் கூட்டத்துக்குத் தமிழ்ச் சங்கம் என்பது பிற்காலத்துப் பெயர். அதன் பழைய பெயர் தமிழ்க் கழகம் என்பது. பிற்காலத்துப் பாண்டியர் அமைத்திருந்த சங்கம் மதச் சார்பான சங்கம் அன்று. அது தமிழ் மொழியை ஆராய்வதற்கு ஏற்பட்ட சங்கம்.” (மயிலை சீனி. வேங்கடசாமி, களப்பிரர் ஆட்சியில் தமிழகம், இணைப்பு 2: வச்சிரநந்தியின் திரமிள சங்கம்)

நாம் இப்போது தமிழ்ச் சங்கம் என்று குறிப்பிடுவதைத் தமிழ்க் கழகம் என்பதே சரி என்று ஆசான் ம, செந்தமிழன் சுட்டுவது சரியானதே, பாண்டியர் வளர்த்த தமிழ்ச் சங்கத்துக்குக் கழகம், கூடல் என்ற பெயர்கள் விளங்கின. மதுரையைக் கூடல் மாநகரம் என்பது இதனால்தான். முன்னால் போய்விட்ட தமிழ்க் கழகத்தைப் பின்னால் வந்த சமண சங்கத்தால் எப்படித் தடை செய்ய முடியும்?

ஓடையில் நீர் பருகிக் கொண்டிருந்த மான் குட்டியிடம் ஓநாய் வம்பு செய்த கதை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இருபதாம் நூற்றாண்டுத் திராவிடத்தின் மீது வெறுப்புற்று ஐந்தாம் நூற்றாண்டுத் திரமிள சங்கத்தை மூன்றாம் நூற்றாண்டுத் தமிழ்க் கழகக் கலைப்புக்குக் குற்றவாளியாக்கும் செந்தமிழனின் ஏரணமற்ற முயற்சி காலவழுவின் உச்சம். பாவம், பெரும்பாவம், இறுமாப்பு, இகழ்வு என்ற கடுஞ்சொற்களால் இந்தக் காலவழுவை மறைக்க முடியாது.

அது சரி. தமிழ் ஏன் திரமிளம் என்று திரிந்தது? வச்சிரந்தியின் திட்டமிட்ட சூழ்ச்சியால் என்பது ஆசான் ம. செந்தமிழனின் புரிதல், இந்தப் புரிதலுக்கு என்ன அடிப்படை? மொழியியல் சார்ந்து அவரால் இதற்கு விளக்கம் தர முடியுமா? அடுத்துப் பார்ப்போம்.