சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு – பேராசிரியர் பரபரப்பு குற்றச்சாட்டு!

நாட்டின் தலைசிறந்த கல்வி நிலையங்களுல் ஒன்றான சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடுகள் அவ்வப்போது தலைதூக்கி வருவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில், “சாதிய பாகுபாடுகளுக்கு ஆளானதாக குற்றம் சாட்டி பேராசிரியர்  விபின் கடந்த மாதம் 1ஆம் தேதி ராஜினாமா செய்தது அப்போது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

சென்னையில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவமான ஐஐடியில், மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் பேராசிரியராக விபின் கடந்த 2019ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இவர் சீனாவில் பள்ளிப்படிப்பை முடித்ததுடன், டெல்லி பல்கலைக்கழகம் இந்து கல்லூரியில் பொருளாதாரம் படித்துள்ளார். முனைவர் ஆராய்ச்சி படிப்பை அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். தன்னுடைய துறை சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை பல்வேறு சர்வதேச இதழ்களில் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, மத்திய அரசு அறிவித்த லாக்டவுனால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு குறித்த மதிப்பீட்டாய்வு  செய்து கட்டுரை வெளியிட்டிருந்தார். இதனிடையே தான் அவர் சாதீய ரீதியிலாக தொல்லைப்படுத்தப்பட்டதாக தனது ராஜினாமா கடிதத்தில் குற்றம் சாட்டினார்.

“2019ம் ஆண்டு, நான் பணிக்கு சேர்ந்த நாளில் இருந்தே சாதிய ரீதியாக தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறேன். அரசியல் சித்தாந்தங்கள் மற்றும் பாலினம் என்ற எந்தவிதமான பேதமும் இன்றி அதிகார மட்டங்களில் இருந்தவர்களிடம் இருந்து இந்த பாகுபாடு காட்டப்பட்டது” என்று குறிப்பிட்டு இருந்தார் அவர்.“அரசியல் உறவுகள் மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அதிகார பதவிகளில் உள்ள நபர்களிடமிருந்து பாகுபாடு  காட்டப்படுகிறது.  இதன் காரணமாக தான் ஐ.ஐ.டி.யை விட்டுவிட்டு,  வேறொரு நிறுவனத்திற்கு செல்வதாகவும், “இந்த விஷயத்தைத் தீர்ப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன்” என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்ட விபின் மீண்டும் ஐஐடியில் சேர்ந்துள்ளார். இதனிடையே இன்று சென்னை ஐஐடி -யில் நிகழும் சாதிய பாகுபாடு பற்றி ஒ.பி. சி ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாதிய பாகுபாடு பற்றி ஓ.பி. சி ஆணையத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ள விபின் தற்போது மீண்டும் ஒரு புகாரை அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், தான் பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே தனது சாதி பற்றி ஐ. ஐ. டி பொருளாதார பேராசிரியர் ஒருவர் கேள்வி எழுப்பியதாகவும், சாதிய பாகுபாடு காரணமாக தனக்கு வகுப்பு எடுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, உயர்சாதி பேராசிரியருக்கு தரப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனக்கு நடந்த சாதிய பாகுபாடு முழுவதையும் மனுவில் குறிப்பிடவில்லை என்றும் இது குறித்த விசாரணையில் விளக்கமாக தெரிவிக்க தயார் என்றும் கூறியுள்ளார். சென்னை ஐஐடி -யில் பட்டியல் இன மாணவர்களுக்கு எதிராக சாதிய, பாகுபாடு எழுவதாக அடிக்கடி புகார் வருகிறது. தற்போது பிற்படுத்தப்பட்ட பிரிவு ஆசிரியருக்கே சாதிய கொடுமை நிகழுந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தகுதியில் எந்த வகையிலும் குறையாத விபினுக்கே சாதி அடிப்படையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தகுதி அடிப்படையில் பணியில் சேர்ந்திருந்தாலும் அரசியல் சட்ட பாதுகாப்பு இல்லாமல் பணிபுரிய முடியாத நிலை எழுந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதுமுள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது கடந்த சில வருடங்களில் தொடர்கதையாகிவருகிறது. குறிப்பாக மத்திய கல்வி நிறுவனமான மெட்ராஸ் ஐஐடி-யில் கடந்த சில வருடங்களாகத் தற்கொலைச் சம்பவங்களும், மாணவர்களின் இடைநிற்றல் எண்ணிக்கையும் அதிக அளவில் பதிவாகிக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கல்லூரிக்கு மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதும், மதிப்பெண் குறைவாக எடுப்பதுமே இத்தகைய தற்கொலைகளுக்கும், படிப்பைப் பாதியில் விட்டுச் செல்வதற்கும் காரணம் என்று ஐஐடி நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுவந்தாலும், மறுபுறம் கல்வியாளர்களும், சமூகச் செயல்பாட்டாளர்களும் ஐஐடி-யில் சாதி, மத, நிறப் பாகுபாடு நிலவுவதாகவும், அதனால் ஏற்படும் மன அழுத்தத்தால்தான் மாணவர்கள் பாதியில் நின்றுவிடுவதாகவும், வேறு வழியே இல்லாமல் தற்கொலை முடிவைக் கையிலெடுப்பதாகவும் குற்றசாட்டுகளை முன்வைத்த வண்ணமாக இருந்து வருகின்றனர்.

இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும்விதமாகவே ஐஐடி மெட்ராஸின் சமீபத்தியச் செயல்பாடுகள் இருந்துவருகின்றன. முன்னதாக, ஐஐடி மெட்ராஸின் முன்னாள் பேராசிரியை முனைவர் வசந்தா கந்தசாமி, சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில்தான் ஐஐடி-யில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், தன்னைவிடவும் உயர்ந்த சாதியினர் பணிக்கான போட்டியிலிருந்ததால், தனக்கு வாய்ப்பு வழங்காமல் உயர்ந்த வகுப்பைச் சார்ந்தவர்களுக்குச் சாதியின் அடிப்படையில் ஐஐடி நிர்வாகம் பணி வழங்கியதாக குற்றம்சாட்டி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நெடு நீள சட்டப்போராட்டத்தை நடத்தினார்.

அதில் நீதிமன்றம், மெட்ராஸ் ஐஐடி-யில் சாதியப் பாகுபாட்டுக்கான முகாந்திரம் உள்ளதாகக் கூறி கடுமையாக எச்சரித்திருந்தது. அதைத் தொடர்ந்து, மெட்ராஸ் உள்ளிட்ட இந்தியாவின் பல ஐஐடி-களின் முன்னாள் மாணவர்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த சாதி, மதப் பாகுபாடுகள், பாரபட்சங்கள் குறித்து பொதுவெளியில் பேசத் தொடங்கினர். இப்படி சாதியச் சர்ச்சைகளும், புகார்களும் ஐஐடி மெட்ராஸைச் சுற்றிக்கொண்டிருக்க, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிப்போட்டது கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திஃப்-ன் தற்கொலைச் சம்பவம்.

சென்னை ஐஐடி-யில் எம்.ஏ ஹியுமானிட்டிஸ் அண்ட் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (ஒருங்கிணைந்த) பாடப்பிரிவில் முதலாமாண்டு படித்துவந்த மாணவி பாத்திமா 2019-ம் ஆண்டு, நவம்பர் 9-ம் தேதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பாத்திமா தனது தற்கொலைக் குறிப்பில் ஐஐடி பேராசிரியர்கள் பலரது பெயர்களைச் சொல்லி, தனது மரணத்துக்கு அவர்கள்தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். முன்னதாக, தான் ஓர் இஸ்லாமியர் என்பதால் தன்னை ஆசிரியர்கள் அவதூறாகப் பேசுவதாகவும், மதரீதியாகத் தன்னைத் துன்புறுத்துவதாகவும் பாத்திமா தங்களிடம் கூறியதாக அவருடைய பெற்றோர் கூறியிருந்தனர். மத்திய அரசின் கல்வி நிறுவனம் என்பதால், தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

பலகட்ட விசாரணைகள் நடந்தும், தற்போது வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர். மாணவர்கள் தாங்கள் சாதியக் கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுவதாகக் கூறிவரும் வேளையில், மறுபுறம் ஆசிரியர்களும்கூட சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் மத்திய அரசு 2020-ம் ஆண்டுக்கான உயர்கல்வி குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், நாட்டிலேயே அதிக ஓ.பி.சி மற்றும் எஸ்.சி பிரிவு உயர்கல்வி ஆசிரியர்கள் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு சமூகநீதியைத் தலைநிமிரச் செய்திருந்தது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. சாதிய ஒடுக்குமுறைகளுக்கு அப்பாற்பட்டு இட ஒதுக்கீட்டின் மூலம் ஐஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் ஏராளமானோர் பணிக்கு தேர்வாகிவருகின்றனர். ஆனால், அவர்களில் 10-ல் 7 பேர் நிர்வாகத்தில் நிலவும் சாதிய ஆதிக்கத்தின் காரணமாகப் பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டு, மனதளவில் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

சென்ற மாதம் திமுக மக்களவை குழு உறுப்பினர் டி.ஆர்.பாலு எழுப்பிய ஐஐடி சாதி பாகுபாடு குறித்த கேள்விக்கு, ” சென்னை ஐஐடி-யில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சாதி மற்றும் மத அடிப்படையில் எந்த பாகுபாடும் காட்டப்படுவதில்லை” என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார்.

“மெட்ராஸ் ஐஐடி தனது சாதி, மத, நிறப் பாகுபாடுகளையும், பாரபட்சங்களையும் களைந்து, நிர்வாகக் கட்டமைப்பை மறுசீரமைத்து, எல்லோருக்குமான கல்வி நிறுவனம் என்ற நிலைக்கு மாற வேண்டும்’ என்று கல்வியாளர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்வி என்பது எவ்வாறு எல்லோருக்கும் பொதுவானதோ அதேபோல் கல்வி கற்கும் இடமும் எல்லோருக்கும் பொதுவானது. இங்கே திறமை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டுமே தவிர சாதியையும், மதத்தையும் அல்ல. சாதி பாகுபாடு மற்றும் மத பாகுபாடு போன்ற தீய வன்மங்களை அகற்றும் கருவியான கல்வியிலும், அதை போதிக்கும் ஆசிரியர்கள் மீதும் மீண்டும் இந்த சாதியையும், மதத்தையும் திணித்தால் அப்போது கல்வியின் நிலைதான் என்ன? இது போன்ற நிகழ்வுகளை ஊக்குவிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்காது.

– யாழினி ரங்கநாதன்