ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான கந்தஹாரை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் மொத்தம் உள்ள 34 மாகாண தலைநகரங்களில் 12 தலைநகரங்கள் தலிபான்கள் வசம் சென்றுள்ளன.
கந்தஹார் தலிபான் வசம் சென்றதை அடுத்து, அரசு அதிகாரிகள் விமானம் மூலம் அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதாக தெரியவந்துள்ளது. அதே போல் தலைநகர் காபூல் அருகே உள்ள மூன்றாவது பெரிய நகரமான ஹீரத்தையும் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அடுத்தடுத்து முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றி வருவதை அடுத்து, அங்குள்ள அமெரிக்கப் படைகள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, காபூலில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதே போல், பிரிட்டனும் தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பாக அழைத்து வர 600 இராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஷரியத் சட்டத்தை அமல்படுத்தி கொடூரச் செயல்களில் தாலிபான்கள் ஈடுபடலாம் என்ற அச்சத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை காலி செய்து, வேறு நகரங்களுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்
ஷரியத் சட்டம் :- ( தாலிபான்கள் ஆட்சியில் )
இஸ்லாமிய அடிப்படையில் திருமறை குர்ஆன் மற்றும் அதற்கு விளக்கமாக நபிகள் நாயகம் கூறிய பொன்மொழிகளின் அடிப்படையில் பெறப்பட்ட சட்டமே ஷரியத் சட்டம் என்று பொருள்.
இந்த சட்டத்தில் உதாரணமாக,
ஒருவர் உட்கார்ந்திருந்த இடத்தில் நாம் உட்கார்ந்துவிட்டோம் , சிறிது நேரத்தில் அங்கே ஏற்கனவே உட்கார்ந்து இருந்தவர் நம்மை எழ சொன்னால் அந்த இடத்தை விட்டுகொடுக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து திருடினால் கையை வெட்ட வேண்டும், திருமணத்திற்கு முன் விபச்சாரம் செய்தால் அவனுக்கு 100 கசையடிகளும் , திருமணத்திற்கு பின் செய்தால் அவர்கள் கல் எறிந்து கொல்லப்படவேண்டும் என்ற கடும் சட்டங்களை உள்ளடக்கியது தான் ஷரியத் சட்டம். இந்த சட்டங்கள் இஸ்லாமிய நாடுகள் என்று சொல்லகூடிய அனைத்திலும் அமல்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாது தற்போது பல நாடுகளிலும் இதுபோன்ற சட்டங்கள் அமலில் உள்ளது.
தாலிபான் அரசியல்–மதம் சார்ந்த சக்தியை உருவாக்கியது. இது 1996 இல் காபூலைக் கைப்பற்றிக்கொண்டது. 2000 ஆம் ஆண்டின் முடிவில் தாலிபான்கள் நாட்டின் 95 விழுக்காட்டு நிலப்பரப்பைக் கைப்பற்றினர். இதேவேளை “வடக்கு முண்ணனி” எனும் அமைப்பு, வடகிழக்கு மாகாணமான படக்ஷான்-ல் நிலையூன்றி இருந்தது. தாலிபான்கள், முஸ்லிம் சட்டங்களைக் கடுமையாக அமுல்படுத்தினர். அவர்கள் பிற்காலத்தில் பயங்கரவாதிகள் என்று சர்வதேச சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டனர். தாலிபான்கள், “அல்-காயிதா” தீவிரவாதியான உசாமா பின்லாடனைப் பாதுகாத்தனர்.
1996லிருந்து 2001 வரை தாலிபானின் ஏழு ஆண்டு ஆட்சியில் பெரும்பாலான மக்கள் அவர்களின் சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. கடும் கட்டுப்பாடுகள் காணப்பட்டன. இதன்போது, தாலிபான் அதிகஅளவில் மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டது. பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தடைசெய்தது; பெண்கள் பாடசாலைக்கோ, பல்கலைக்கழகத்திற்கோ செல்வது தடைசெய்யப்பட்டது; இவற்றை எதி்ர்த்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். களவு எடுத்தவர்களின் கைகள் வெட்டி அகற்றப்பட்டன; இதைப்போன்ற கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தாலிபான் ஆட்சியில் ஏற்பட்ட நல்ல நிகழ்வு என்றால், அது 2001 ஆம் ஆண்டு அளவில் “ஆப்கானின் அபின்” எனும் போதைப் பொருள் தயாரிப்பு, முற்றாக முடிவிற்குக் கொண்டு வரப்பட்டதே ஆகும்.
தற்போது இருக்கும் சூழலில் தாலிப்பான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விட்டால் இது போன்ற சட்டங்களை மறுபடியும் மக்கள் மீது கடுமையாக உபயோகிப்பார்கள் என்ற அச்சத்தினாலேயே பல ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது ஆப்கானிஸ்தானை விட்டு வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
– யாழினி ரங்கநாதன்