தாலிபான்கள் மீண்டும் தலைப்புச் செய்தி ஆகியிருக்கிறார்கள். கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருக்கும் ஜனாதிபதி மாளிகையில் கூட்டமாக தாலிபன் வீரர்கள் அமர்ந்திருக்கும் புகைப்படம், அந்த நாடு இனி என்ன கதிக்கு ஆளாகும் என்பதை உணர்த்துகிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கப் படைகளால் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்ட தாலிபன்கள், வெறும் இருபதே நாட்களில் மீண்டும் தேசத்தைக் கைப்பற்றிவிட்டனர்.

20 ஆண்டுகள் அமெரிக்கா பணத்தைக் கொட்டி பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்து வளர்த்த ஆப்கன் ராணுவமும் போலீஸ் படையும் சின்ன எதிர்ப்புகூட காட்டாமல் சரணடைந்துவிட்டன. ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரப் கனி பதவி விலகி தாஜிகிஸ்தான் நாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டார். ”போரால் காபூல் அழிவதை விரும்பவில்லை. எண்ணற்ற தேசபக்தர்கள் உயிரிழப்பதைத் தடுக்கவே இந்த முடிவெடுத்தேன்” என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் அவர்.

ஒரு தேசத்தில் சில தீவிரவாதிகள் இருந்தாலே அது உலகத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக மாறும். ஒரு தேசத்தையே தீவிரவாத அமைப்பு ஒன்று ஆட்சி செய்தால் உலகம் என்ன ஆகும் என்பதற்குப் பாடம் ஆப்கானிஸ்தான். வெறும் ஐந்து ஆண்டுகள்தான் அவர்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தனர். ஆனால், ஆப்கன் மக்களுக்கும் உலகத்துக்கும் அது கொடுந்துயர் காலமாக இருந்தது. ஆண்களுக்கு தாடியைக் கட்டாயமாக்கி, பெண் கல்வியை ஒழித்து, பெண்கள் பணிக்குச் செல்வதை மறுத்து, டெலிவிஷன் உள்ளிட்ட பொழுதுபோக்குகளைத் தடை செய்து நாட்டை இன்னும் பின்னோக்கிச் செலுத்தியது அந்த ஆட்சி.

கடந்த 20 ஆண்டுகளில் டெக்னாலஜி வளர்ச்சி உலகையே அசுரப் பாய்ச்சலை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறது. ஆனால், இனி தாலிபன்கள் ஆப்கனை இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்திச் செல்லக்கூடும்.

தாலிபான்கள் :

பாஷ்தோ மொழியில் ‘மாணவர்கள்’ என்று பொருள்படும் தலிபான்கள் 1994ல் தெற்கு ஆப்கானிஸ்தான் நகரமான கந்தஹாரைச் சுற்றி உருவானார்கள். சோவியத் யூனியன் படைகள் திரும்பப் பெறப்பட்டதையடுத்து, அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும்.இந்த அமைப்பு முதலில் ‘முஜாஹிதீன்’ போராளிகள் என்று அழைக்கப்படுபவர்களிடமிருந்து உறுப்பினர்களை ஈர்த்தது. அவர்கள் அமெரிக்காவின் ஆதரவுடன் 1980 களில் சோவியத் படைகளைத் தடுத்தனர்.

இரண்டு வருட இடைவெளியில், தலிபான்கள் அந்நாட்டின் பெரும்பகுதி மீது தனி கட்டுப்பாட்டைப் பெற்றனர். விளைவு, இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. தொலைக்காட்சி, திரைப்படம் என அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆண்கள் கட்டாயம் தாடி வளர்க்க வேண்டும், பெண்கள் கட்டாயம் முகத்தை மூட வேண்டும், கார் ஓட்டக்கூடாது, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது, குற்றவாளிகளுக்கு பொதுவெளியில் தண்டனை என தாலிபான்கள் வைத்ததே சட்டமாகிப் போனது. அதில் உச்சம் 2001ஆம் ஆண்டு புத்தர் சிலைகளை தலிபான்கள் வெடிவைத்து தகர்த்த நிகழ்வு.

பாகிஸ்தான் ஆதரவுடன் உருவான தலிபான்கள் காலப்போக்கில் அந்நாட்டுக்கே அச்சுறுத்தலாக மாறினர். ஆப்கானிஸ்தானில் அபின் போதைப் பொருளை தடை செய்ததும் தலிபான்கள் தான். ஒசாமா பின்லேடனும் அல்கொய்தாவும் சர்வதேச பயங்கரவாத இயக்கமாக வேர் பிடித்தது தலிபான்கள் ஆட்சிக் காலத்தில் தான்.  2001 ல் அமெரிக்க படைகள் வந்த பிறகு  தாலிபான்கள் 2021 வரை துப்பாக்கி எந்தி போராட்டம் செய்தனர். 1996 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபரை கொன்று பல பொதுமக்கள் முன்னிலையில் மின் கம்பத்தில் தூக்கிலிட்டனர்.

தாலிபான்களின் நட்பு நாடுகள் :

சீனா, ரஷ்யா, அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் ஈரான் போன்றவை நட்பு நாடுகளாக உள்ளது.

ஆப்கான் அரசுக்கு சொந்தமான பணம் முடக்கம் :

தாலிபான்களுக்கு சொந்தமான 10 பில்லியன் டாலர் பணத்தை அமெரிக்கா அதிரடியாக முடக்கியுள்ளது. அதாவது, ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தாலிபான் அமைப்பினர் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இருப்பதால் அவர்கள் நிதியைப் பயன்படுத்த முடியாத நிலையை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. இதற்காக ஆப்கன் மத்திய வங்கிக்குச் சொந்தமான 9.5 பில்லியன் டொலர் சொத்துக்களை முடக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானின் மொத்த சர்வதேச இருப்புக்களில் தாலிபான்களுக்கு அணுகக்கூடிய நிதி ஒரு விழுக்காடுக்கும் குறைவாகவே இருக்கும் என அமெரிக்க தெரிவித்துள்ளது.

தாலிபான்கள் கைவசம் அமெரிக்க ஆயுதங்கள் :

தாலிபான்கள் கைவசம் அமெரிக்கர்கள் வழங்கிய அனைத்து ஆயுதங்களும் உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆப்கான் தேசிய ராணுவ படையின் 3 லட்சம் ஆயுதங்களும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது தாலிபான்களிடம் அதிநவீன ஆயுதங்களுடன்  அதிநவீன துப்பாக்கிகள், ஸ்னைப்பர்கள், ராணுவ டிராக்குகள் என கிட்டதட்ட ஒரு குட்டி நாட்டிற்கு இருக்கும் ராணுவ உபகரணங்களைத் தாலிபான்கள் வைத்திருக்கின்றனர்.

இவை தவிர கையேறி குண்டுகள், சாட்டிலைட் போன்கள், உள்ளிட்டவையும் இப்போது அவர்கள் கையில் உள்ளது. இதில் பெரும்பாலானவற்றில் “Property of USA Government” என்ற முத்திரையைப் பார்க்க முடிவதாகப் பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது தாலிபான்களை ஒடுக்க அமெரிக்கா ஆப்கன் ராணுவத்திற்கு அளித்த ராணுவத் தளவாடங்கள் இப்போது தாலிபான்களுக்கே கிடைத்துள்ளன. அதைத் தாலிபான்கள் இப்போது ஆப்கன் ராணுவத்திற்கு எதிராகவே பயன்படுத்தினர் என்பதுதான் உண்மை. சண்டையின் போது  தாலிப்பான்கள் புதிதாக நிறைய மாவட்டங்களைக் கைப்பற்றினர் . அதில் அவர்களுக்கு புதிய ஆயுதங்கள் கிடைத்தன. அதைத்தான் தற்போது தாலிபான்கள் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தாலிபான்கள் ஆட்சி அதிகாரம் செய்து வருவதால்   உயிருக்கு அஞ்சி அந்நாட்டு மக்கள்  அகதிகளாக வேறு  நாடுகளுக்கு  தஞ்சமடைந்து வருகின்றனர்.

– யாழினி ரங்கநாதன்