எழுதியவர் : வளவன்

பல்வேறு தேசிய இனங்களின் ஒன்றியமான இந்தியா என்கிற ஒரு பன்மைத்தன்மை கொண்ட நாட்டில் அரசியலில் விளையாட்டும், விளையாட்டில் அரசியலும் பின்னிப் பிணைந்து இருப்பது என்பது கன்னித்தீவு கதையை போல நீண்டு கொண்டே போகிற ஒரு நீள் நெடும் பயணம். அண்மையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பெயர் மாற்றப்பட்டதும், அஃது அரசியல் சர்ச்சையாக காழ்ப்புணர்வு என்று விவாதத்துக்கு உள்ளானதும் ஒரு சமீபத்திய உதாரணம். ராஜீவ்காந்தி என்ன விளையாட்டு வீரரா என்று பாரதிய ஜனதா காரர்களும், கிரிக்கெட் மைதானத்திற்கு மோடிஜியின் பெயர் வைத்தீர்கள் அவர் என்ன இந்திய கிரிக்கெட் அணிக்கு உலக கோப்பையை பெற்று தந்த கேப்டனா என்று பதிலுக்கு எதிர் கட்சியினரும் வார்த்தைப் போரில் தர்க்கம் செய்து கொண்டிருக்க சமூக வலைதளங்கள் பற்றி எரிந்து கொண்டிருந்தன.

 இந்த நேரத்தில்தான் ஹாட்ரிக் கோல் அடித்து இந்திய அணியை காலிறுதிக்கு அழைத்துப் போனவரும், வெண்கலத்திற்கான போட்டியில் தேசத்திற்காக கோல் அடித்து தன் பங்களிப்பை நல்கிய, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்த ஒடுக்கப்பட்ட பட்டியலின வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டிற்கு முன்னால், இந்திய அணி தோற்ற சந்தோஷத்தை சாதிய மனநிலையோடு வெடி வெடித்து, தரக்குறைவான சாதியச் சொற்களை பயன்படுத்தி ஆதிக்க சாதியினர் இழிவு செய்தனர் என்ற தகவல் நம்மை வந்து சேர்ந்தது. இந்திய அணி தோற்றதற்கு ஒடுக்கப்பட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் மிக அதிகமாக அணியில் இடம்பெறுவது தான் காரணம் என்கிற வன்மத்தை அந்த ஆதிக்க சாதியினர் கக்கி கொக்கரித்துள்ளனர். அதே நேரத்தில் பதக்கத்திற்காக பி.வி சிந்து பாட்மிண்டனில் போராடிக் கொண்டிருந்த நிலையில் அவரின் சாதி என்னவென்று மிக அதிகமாக கூகுள் தேடுபொறி தளத்தில் தேசப்பற்று கொண்ட இந்தியர்கள் தொடர்ந்து தேடி, தெரிந்து கொண்டு தங்களின் தேசபக்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்கிற தகவலும் வந்து சேர்ந்தது. இந்த இடத்தில்தான் அம்பேத்கர் அவர்கள் சொன்ன ஒரு மேற்கோள் நமக்கு இயல்பாக நினைவுக்கு வருகிறது. “தீண்டாமை என்பது அவர்களுக்கு (ஆதிக்க சாதியினருக்கு) தார்மீக ரீதியில் பாவமாகவோ அல்லது சமூக குற்றமாகவோ தோன்றவில்லை.  கிரிக்கெட் அல்லது ஹாக்கி போன்று அது அவர்களுக்கு ஒரு விளையாட்டு.”   

அப்படி என்றால் தேசம் அல்லது தேசபக்தி என்று சொல்லி ஒரு அணியாக நிற்கிற பொழுது, சாதி அற்றவர்களாக இந்தியாவின் கட்டமைப்பு அந்த அணியினரை ஒருங்கிணைக்கவில்லையா என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அதற்கான பதில் இல்லை என்பது தான்.  தமிழ் கலாச்சாரத்தோடு எப்படி உங்களால் ஒருங்கிணைய முடிகிறது என்கிற கேள்விக்கு நான் ஒரு பிராமணன் என்று அண்மையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அளித்த பேட்டியும், நான் ஒரு ராஜ புத்திரன் என்று ரவிந்திர ஜடேஜா செய்த பதிவும் ஓர் அணி; ஒரு நிறை என்று பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியவர்கள் சாதியற்றவர்களாய் மாறி இருக்கவில்லை என்பதற்கான வெளிப்படையான உதாரணம். 

அடிப்படையில் செல்வம் கொழிக்கக்கூடிய இந்திய கிரிக்கெட் அணியில் எத்தகைய சமூக நீதியும், சகலருக்குமான பிரதிநிதித்துவமும் இருக்கிறது என்பதனை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தாமல், விளையாடுகிற வீரர்களின் பெயருக்கு பின்னால் உள்ள ஒட்டுப் பெயர்களைப் பார்த்தாலே அது நமக்கு கட்டியம் கூறும். இந்த இடத்தில் நான் வைக்கக்கூடிய குற்றச்சாட்டு இடைநிலை ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்டோரின் தோல்விகளை தேசபக்தியை விடவும் மிக அதிகமாக உச்சிமுகர்ந்து வெடி வெடித்து கொண்டாடுகிறார்கள் என்றால் சாதிய வர்ண முறையை அமைப்பில் உச்சாணிக் கொம்பில் இருக்கிறவர்கள் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் குழுக்களில் உட்கார்ந்து கொண்டு சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிள்ளைகளை தெரிவு செய்வதில் பெரும் அளவிற்கு அரசியல் செய்கிறார்கள். 

கடந்த 2016 ஒலிம்பிக் போட்டியில் அப்போதைய ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த விஜய் கோயல் அவர்களின் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. பங்கேற்க சென்ற வீரர்களுக்கு இணையாக அதிகாரிகளும் அமைச்சரோடு ஒரு படையாய் பயணப்பட்டு போய், அங்கே மைதானத்தில் மிக மோசமாக நடந்து கொண்டதாக ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்களால் விமர்சிக்கப் பட்டார்கள்.  இந்த முறை கொரோனா காரணத்தினாலோ அல்லது அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவின் தனிப்பட்ட முடிவினாலோ இந்தியாவின் சார்பில் விளையாட்டு வீரர்களோடு அதிகாரிகள் குழாம் பயணப்படாமல் அவர்களுக்குத் தேவையான பயிற்சியாளர்கள் மருத்துவ வல்லுனர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்டுகள் உடன் அனுப்பப்பட்டனர். 

நம்முடைய இந்திய அணிகளைப் பொருத்தவரை அதில் விளையாடுகிற வீரர்கள் பெரும்பாலும் ஒடிசா, பஞ்சாப், ஹரியானா மற்றும் புது தில்லி போன்ற மாநிலங்களில் அல்லது யூனியன் பிரதேசங்களில் இருந்து வந்தவர்களாக இருக்கிறார்கள். தனியர் விளையாட்டுகளில் வடகிழக்கு மாநிலத்தவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்ற போதும் அவர்கள் அந்தந்த மாநிலங்களில் இருந்து பயிற்சி பெற்றவர்களாக இருப்பது இல்லை. ஒலிம்பிக்கில் இப்போது அசாமை சேர்ந்த லவ்லினா 69 கிலோவிற்கு உட்பட்டவர்களுக்கான குத்துச்சண்டை பிரிவில் வெண்கலம் வென்ற பிறகு தான் அவருடைய கிராமத்திற்கு அவர் திரும்புவதற்குள் சாலை வசதி செய்து தருவதற்கான கட்டமைப்பை அந்த அரசாங்கம் முன்னெடுத்து இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மாநிலத்திலிருந்து அவர் விளையாட்டுப் பயிற்சி பெறுவதற்கான கட்டமைப்பு இருந்திட வழியே இல்லை. அதற்காக அவர்கள் புலம்பெயர்ந்து போவது என்பது தவிர்க்க இயலாதது. அப்படி பயிற்சிக்காக போனவர்கள் மிகப் பெரும்பாலானோர் மேலே குறிப்பிடப்பட்ட மாநிலங்களை நோக்கி நகர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

இந்தியாவின் மகளிர் மற்றும் ஆடவர் ஹாக்கி அணிகள் வெண்கலத்திற்கான போட்டிகளில் மோதிய போதும் அவை முடிந்த பிறகும் இந்த நாட்டின் பிரதம அமைச்சர் திரு மோடி அவர்கள் பெயர் உச்சரிக்கப்பட்டதைவிட ஒடிஷாவின் முதல்வர் திருமிகு. நவீன் பட்நாயக் அவர்களின் பெயர் மிகப்பெரும் அளவில் கொண்டாடப்பட்டது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அடிப்படையில் பள்ளிக்காலத்தில் நவீன் பட்நாயக் ஒரு ஹாக்கி வீரராக இருந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் ஹாக்கி அணியை ஆதரித்து, பின்னாலிருந்து பொருட்செலவு செய்து வந்த சகாரா நிறுவனம் அந்த ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் விலகிய போது, அன்றைய ஒடிசாவின் முதல்வர் திரு. நவீன் இந்திய ஹாக்கி அணியை தத்தெடுத்துக்கொண்டார். அன்றைய தேதியில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்து பின்னாலிருந்து சகலவிதமான பொருட்களையும் ஒடிசா அரசாங்கம் கவனித்துக் கொண்டது. அவர்களுக்குரிய எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து முதல்வரின் கண் பார்வையிலேயே கவனமாய் எல்லா முன்னேற்பாடுகளும் நிகழ்ந்துள்ளன. இன்றைய தேதியில் கிட்டத்தட்ட 350 கோடிக்கும் அதிகமான மதிப்புகளை கொண்ட ஒரு முதலீடாக இந்திய ஹாக்கி அணி களின் மீது ஒடிஸா அரசு செய்துள்ள முதலீடு இருக்கிறது. ஒரு மாநில அரசு செய்திருக்கக் கூடிய இந்த விஷயம் ஏன் ஒன்றிய அரசின் சிந்தனைக்கு உதிக்கவில்லை என்கிற கேள்வி, பதில் அளிக்கப்படாமலேயே இருக்கிறது.

நமக்கு இதிலிருந்து கிடைக்கக் கூடிய இன்னொரு செய்தி குறிப்பிட்ட சாரரின் பிரதிநிதித்துவம் தான் அவர்களுக்கான அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் என்பதுதான். அடிப்படையில் ஒரு ஹாக்கி வீரரான நவீன் ஒரு தேசத்தின் ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகளுக்கு உரியவற்றை செய்கிற அதிகாரத்தில் உட்கார்ந்ததன் விளைவுதான் வெண்கலம் வென்ற ஆடவர் அணி, பதக்கம் வெல்ல முடியாத போதும், தேசத்தால் உச்சிமுகர்ந்து கொண்டாடப்படும் ஹாக்கி மகளிர் அணியும் இன்றைக்கு அடைந்திருக்கக்கூடிய நிலை. ஒரு மாநில அரசு தன்னுடைய மாநிலத்தின் விளையாட்டு வீரர்களை எந்த அளவிற்கு பின்னிருந்து உந்தி செலுத்தி அடுத்தடுத்த நிலைகளுக்கு நகர்த்த வேண்டும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம் ஹரியானா மாநிலம். இந்திய மகளிர் ஹாக்கி அணியின் 16 பேர் கொண்ட குழுவில் அதன் கேப்டன் ராணி ராம்பால் உட்பட 9 பேர் ஹரியானா என்கிற ஒற்றை மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். 

இந்த இடத்தில் நம்முடைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் ஒலிம்பிக்கிற்கு இந்திய அணி பயணப்பட்ட போது அதில் பங்கேற்க இருந்த தமிழ் நாட்டு வீரர்கள் வீராங்கனைகளை வாழ்த்தி அனுப்பி விட்டு ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு 3 கோடி ரூபாயும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு இரண்டு கோடியும் வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ஒரு கோடியும் அரசின் சார்பில் கௌரவிக்கப்பட்டு அளிக்கப்படும் என்கிற ஒரு அறிவிப்பை செய்திருந்தார். நாம் அவரிடத்தில் ஒரே ஒரு வேண்டுகோளை தான் வைக்க வேண்டியிருக்கிறது. இது அவருக்கு மாத்திரமல்ல, தேசம் முழுமையிலும் இருக்கக்கூடிய பல்வேறு மாநில முதல்வர்கள், இப்போது வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத் தொகைகளை அறிவித்து இருக்கிறார்கள் அல்லவா, அவர்கள் அத்தனை பேருக்கும் சேர்த்து தான். இன்னும் மூன்று ஆண்டுகளில் அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. வெற்றி பெற்ற பிறகு வெற்றியாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பது என்கிற பார்வையில் இருந்து மாறி, மீள் பார்வையாக ஒடிசாவை போல, ஹரியானாவை போல ஒலிம்பிக்கிற்கு வீரர்களை தயார் செய்கிற அல்லது உருவாக்குகிற கட்டமைப்புகளை நிர்மானம் செய்ய வேண்டியதும், எந்தவிதமான சாதிய சமூக வேற்றுமை கருதும் புல்லுருவிகளின் ஊடுருவல் இல்லாமல், அத்தகைய கட்டமைப்புகளை சமூகத்தில் எல்லாரும் பயன்படுத்துவதற்கு உரியதாக சமூகநீதியின் பாற்பட்டு அவற்றை நிர்வாகிக்கிற நிர்வாக அமைப்பினை ஏற்படுத்துவது என்பதையும் நாம் இந்த சமயத்தில் வலியுறுத்துகிறோம். 

இந்திய ஒன்றிய அரசு சில பெரு முதலாளிகள் ஒன்று சேர்ந்து கேலோ இந்தியா என்கிற ஒரு திட்டத்தையும் ஒலிம்பிக் அரங்கமே லட்சியம் என்கிற மற்றும் ஒரு திட்டத்தையும் இணைத்து சில விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி செய்தன. ஆனால் இவையெல்லாம் ஏற்கனவே முயற்சி செய்து பல்வேறு நிலைகளில் விளையாட்டு போட்டிகளில் தங்களை ஓரளவிற்கு நிரூபித்து வந்திருக்கக்கூடிய வெளியில் அறியப்பட்ட வீரர்களுக்கான நிதியாக இருந்ததே தவிர புதிய திறமையாளர்களை விளையாட்டு வீரர்களை கண்டறிவதற்கு அல்லது அத்தகைய திறமையோடு உள்ளவர்களை அடுத்த நிலைகளை நோக்கி நகர்த்தி வருவதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லாதவர்களாகவே இருந்தனர். 

ஒலிம்பிக் நடக்கக்கூடிய ஒரு ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டைவிட 8 சதவிகிதம் குறைவாக (230.78 கோடி குறைத்து) நிதி ஒதுக்கக் கூடிய ஒரு தேசமாக இருக்கக்கூடிய இந்த இந்திய ஒன்றிய அரசு எப்படி  மனமுவந்து விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் என்கிற கேள்வி எழுவது தவிர்க்க இயலாதது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான நிதியை குறைத்து விட்டு போகிற இடங்களிலெல்லாம் திருக்குறளைச் சொன்னால் அது மொழிப்பற்று என்று சிலாகிக்க கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கிவிட்ட ஒன்றிய அரசின் தலைவர் திரு மோடி அவர்கள், விளையாட்டுக்கான நிதியை குறைத்து விட்டு வீரர்களுடன் போட்டி முடிந்த பிறகு தொலைபேசியின் வாயிலாக பேசுவதும், அதன் மூலமாக தேசபக்தர்களான தனது பற்றாளர்கள் மூலம் தேசப்பற்றை வளர்ப்பது என்று முடிவெடுத்து விட்டார் போலும். 

ஒரு சுவாரஸ்யமான புள்ளி விபரம். 2018 ஆம் ஆண்டு சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் கல்விசார் குறியீடுகள் ஆராயப்பட்டு ஒரு ஆண்டு முழுமைக்குமான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்தியா முழுக்க சுமார் 596 மாவட்டங்களில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகளிலும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகளிலும் இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மூன்றில் இரண்டு பள்ளிகள் விளையாட்டுக்கு என்று வாரம் தோறும் ஒரு தனி வகுப்பினை மாணவர்களுக்கான அட்டவணையோடு கொண்டவை. இவற்றுள் முதல் இடத்தில் இருந்தவைகள் மகாராஷ்டிரா 93%, கேரளா 83%, தமிழ்நாடு 82%, ஆந்திரா 78% மற்றும் குஜராத் 72%. இந்த தர வரிசையில் கடைசியில் இருந்த ஏழு மாநிலங்களில் 6 மாநிலங்கள் வடகிழக்கு மாநிலங்கள். அங்கிருந்துதான் மிகப்பெரும்பாலான தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற விளையாட்டு வீரர்கள் வருகிறார்கள் என்பது ஒரு பெரு முரணாக இருக்கிறது. 

மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் நான்கில் மூன்று பள்ளிகளிலும் அருணாச்சல் பிரதேசம் மற்றும் மேகாலயாவில் மூன்றில் இரண்டு பள்ளிகளிலும் விளையாட்டுக்கு என்று தனியாக வகுப்புகள் அதற்கான பள்ளிகளில் கட்டமைப்புகளும் பெரிதாக இல்லை என்பது கூடுதல் அதிர்ச்சிக்குரிய தரவு. ஹரியானா மாநிலத்தில் பத்தில் ஐந்து பள்ளிகளிலும் பஞ்சாபில் 3 பள்ளிகளிலும் உடற்பயிற்சிக்கு என்று ஒரு ஆசிரியரே நியமிக்கப்படவில்லை என்பது கூடுதல் சுவாரஸ்யம். அப்படி என்றால் விளையாட்டு என்பது பள்ளியில் வகுப்பாக சேர்க்கப்படுவது என்பதைத் தாண்டி, ஒரு சமூக அமைப்பாக பள்ளிகளுக்கு வெளியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது என்பதனை உணர முடிகிறது. 

இன்றைக்கு விளையாட்டு வீரர்களை தயார் படுத்துவது என்பது முழுக்க முழுக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மயப்படுத்தப்பட்ட கட்டமைப்பு கொள்ளக் கூடியதாக இருக்கிறது. எல்லா விளையாட்டுகளுக்கும் அவற்றுள் களமிறங்குவதற்கு ஆர்வமுள்ள வீரர்களை குறைந்தபட்சம் அவர்களுடைய பதின்ம வயதிலேயே தெரிவு செய்வது அவசியமாகிறது. இத்தகைய பதின்ம வயதினர் மிக அதிகமான அளவில் இந்திய ஜனத்தொகையில் இருக்கிறார்கள் என்றபோதும் அவர்கள் தங்களின் திறமைகளை செழுமைப்படுத்தக்கூடிய பயிற்சிகளுக்கும், நிலைகளுக்கும் செல்ல விடாமல் தடுப்பதற்கு பிறந்த மாநிலங்களை விட இந்தியாவில் தடைகள் கூடுதலாக இருக்கின்றன.

சமூக பொருளாதார காரணங்கள், சாதியம், மதம், மொழி, கலாச்சாரம், பண்பாடு, விளையாட்டு வீரர்களுக்கு உரிய உணவு பழக்கவழக்கங்கள் பின்பற்ற முடியாமை, பொதுச் சமூக மனோநிலை, பாலினம் போன்ற பல்வேறு காரணிகள் மற்றும் தற்போதைய நிர்வாக அடுக்குகளில் இருக்கக்கூடிய குளறுபடிகள் ஆகியவை பெரும் தடைகளாக, இந்தியாவின் பதின்ம வயது  பிள்ளைகள் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு அரங்கங்களை நோக்கி பயணிப்பதை தடுக்கின்றன. 

இந்தியாவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 20 சதவீதம் பேர் போதிய ஊட்டச்சத்தின்மை காரணமாக பாதிக்கப்படுகிறார்கள். 43 சதவிகிதம் பேர் அந்த வயதுக்குரிய எடையை விட குறைந்த எடையுடையவர்களாக இருக்கிறார்கள் என்று நமக்கு தரவுகள் தெரிவிக்கின்றன ஒரு தடகள மற்றும் இதர விளையாட்டு வீரருக்கான போதிய உடல் நலம் என்பது சரிவர பெறுவதற்கான சம வாய்ப்பு இங்கே நல்கப்படவில்லை என்பது யதார்த்தமான உண்மையாக இருக்கிறது.

இங்கே இருக்கக்கூடிய போதிய கட்டமைப்பு மற்றும் சரியான ஊட்டச்சத்து பதின்ம வயதினருக்கு வழங்க இயலாமை ஆகிய காரணிகள் இந்தியா, விளையாட்டுத் துறையில் அடைந்துள்ள பின்னடைவுகளுக்கு காரணம் என்கிற கருத்து ஒருபுறம் வைக்கப்படுகிறது. உலக கோப்பை கால்பந்தைப் பொறுத்தவரை பிரேசில், உருகுவே போன்ற தென் அமெரிக்க நாடுகள் பலமுறை சாம்பியனாக வெற்றி வாகை சூடி உள்ளன. அடிப்படையில் இந்த நாடுகளில் விளையாட்டுக்கான கட்டமைப்பு என்பது உச்சபட்ச குளறுபடிகளோடும் சீரமைக்கப்படாத நிலையிலேயே உள்ளவைகளாக இருக்கின்றன. பிரேசிலை பொறுத்தவரை அங்கே இருந்து கால்பந்தாட்ட அரங்கிற்கு வரக் கூடிய மிகப் பெரும்பாலான வீரர்கள் அங்கே இருக்கக்கூடிய விளிம்புநிலை மனிதர்கள் வாழும் சேரிப் பகுதிகளில் இருந்து வருகிற வர்களாக இருக்கிறார்கள். 

அப்படி என்றால் கட்டமைப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து இன்மை போன்றவைகள் சரியான காரணிகளாக தெரிந்தாலும் அவற்றை விடவும் இந்தியாவில் இருக்கக்கூடிய மற்றுமொரு பிரதான காரணி என்பது உள்ளூர் அளவில் அல்லது அந்தந்த பகுதி அளவில் விளையாட்டினை ஊக்குவித்தல் என்பது பெருமளவில் இல்லாமல் இருப்பதுதான். பெற்றோர்கள் விளையாட்டினை பார்ப்பதற்கு பார்வையாளர்களாகவோ அல்லது தங்களது பிள்ளைகளை உற்சாகப் படுத்துவதற்கும் கூட பெரும்பாலும் மைதானங்களை நோக்கி நகர்வதில்லை. இதுவே மாறாக அமெரிக்காவில் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இடையில் நடக்கக்கூடிய கால்பந்தாட்டம் தேசம் முழுமையாலும் பார்க்கப்படுவதும் பேசப்படுவதும் கொண்டாடப்படுவதாகவும் இருக்கிறது. அங்கே பார்வையாளர்களாக பெரும் பகுதி சமூகம் தன்னுடைய பங்களிப்பை நல்குகிறது. 

கிரிக்கெட் போன்ற மிக அதிகமான விளம்பர வருவாய் மற்றும் பொருளாதார சுழற்சி இருக்கக்கூடிய விளையாட்டு கொண்டாடப்படுகிற அளவிற்கு ஒலிம்பிக் நோக்கி போகிற அல்லது இன்ன பிற விளையாட்டுகள் இந்தியாவில் கொண்டாடப்படவில்லை. இந்தியாவில் மாநிலங்களின் பெயர்களைக் கொண்டு அவற்றில் சர்வதேச விளையாட்டு வீரர்களை பயன்படுத்தி நடத்தப்படுகிற ஐபிஎல் என்கிற தொடரைப் போல பல்வேறு விதமான தொடர்கள் வெவ்வேறு விளையாட்டுகளுக்கும் இருக்கின்றன. ஆனால் ஐபிஎல் அளவிற்கு அவை பிரபலப்படுத்த அதன் பின்னணி மற்றும் அவற்றுள் நிதி ஆதாரத்தை முதலீடு செய்வதற்கு இருக்கக் கூடிய தயக்கம் ஆகியவைகளை இந்திய ஒன்றிய அரசு தன்னுடைய கவனத்தில் எடுத்துக்கொண்டு இதற்குரிய வேலைகளை செய்ய வேண்டியது இன்றியமையாததாகிறது.

அனேக விளையாட்டுகளுக்கான உள்நாட்டுத் தொடர்கள் இந்தியாவில் 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் பெருமளவில் தொடங்கப்பட்டன. ப்ரீமியர் ஹாக்கி லீக் என்னும் பெயரில் உள்நாட்டு அளவில் 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொடர் என்பது பெரும் அளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஐபிஎல் தொடங்கப்படுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்ட இந்த தொடர் ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு கைவிடப்பட்டது காரணம் இந்தத் தொடரில் மிகப் பெருமளவில் ஊழலும் லஞ்ச லாவண்ய குற்றச்சாட்டுகளும் எழுந்தது தான். இவற்றுள் முக்கிய நிர்வாகியாக இருந்த பல்வேறு நபர்கள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தினரால் சங்கத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். 

இந்தியா முழுக்க பெருமளவில் கிட்டத்தட்ட 12 விளையாட்டுகளுக்கு தொழில்முறை சார் விளையாட்டு தொடர்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் மிக லாபகரமாகவும் பெரும்பாலானவர்களால் நுகரப்படுவதாகவும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் தான் உள்ளது. உலக அளவில் நடத்தப்படுகிற எத்தகைய தொழில் முறைசார் விளையாட்டு தொடர்களிலும் அதிக அளவில் வருவாய் ஈட்ட கூடியதாக நான்காவது இடத்தில் ஐபிஎல் இருக்கிறது சராசரியாக 630 கோடி அமெரிக்க டாலர்கள் ஐபிஎல் மூலம் வருவாயாக ஈட்டப்படுகிறது. இது இங்கிலாந்து கால்பந்தாட்ட பிரீமியர் லீக்கை விடவும் அதிகமானது. இந்தியாவின் ஒளிபரப்பு ஆராய்ச்சி நிறுவனம் தந்திருக்கக் கூடிய 2016 புள்ளிவிவரங்களின்படி சராசரியாக தொலைக்காட்சிகளில் 36.2 கோடி பேர் ஐபிஎல் பார்வையாளர்களாகவும், இந்திய கால்பந்து தொடர் போட்டிகளின் பார்வையாளர்கள் 22.4 கோடியாகவும், இந்திய கபடி தொடர் போட்டிகளை 22 கோடி பேரும், உள்நாட்டு குத்துச்சண்டை தொடர் போட்டிகளை 10 கோடி பேரும், ஹாக்கி தொடர் போட்டிகளில் நான்கு கோடிப் பேரும், பேட்மிண்டன் தொடர் போட்டிகளை 3.6 கோடி பேரும் பார்க்கின்றனர். மக்களின் ஆதரவு பெரும்பான்மையாக இல்லாதபோது பெருநிறுவனங்கள் அவற்றில் முதலீடு செய்வது என்பது சாத்தியப்படாமல் போகிறது. அதன் நீட்சியாக வீரர்கள் அடுத்தடுத்த நிலைகளுக்கு போவது என்பதும் வாய்ப்பற்று நிற்கிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் எல்லா தேசிய அளவிலான தொடர் போட்டிகளையும் பெரு நிறுவனங்கள் தான் நடத்துகின்றன. அவற்றின் கணக்கு வழக்குகளில் நிர்வாகம் மற்றும் மேலாண்மையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது மறுப்பதற்கு வழியில்லாத அடிப்படையான குற்றச்சாட்டு. 

நாம் திரும்பத் திரும்ப மாநில அரசுகளை தொடர்ந்து விளையாட்டு துறையில் வீரர்களை உருவாக்குவதற்கும் கண்டறிவதற்கும் ஊக்கப்படுத்தி இடையறாத பயிற்சிகளை கொடுத்து தொழில்நுட்ப ரீதியிலும் அவர்களை தயார்படுத்தி உலக அரங்கை நோக்கி நகர்த்துவதற்கு துணை நிற்க சொல்வதற்கான அடிப்படை காரணம் இந்திய அரசியலமைப்பின் 246 ஆவது உறுப்பின் படி ஏழாவது அட்டவணையில் முப்பத்து மூன்றாவது துறையாக விளையாட்டு என்பது மாநிலப் பட்டியலில் இருக்கக்கூடிய ஒரு துறை. ஒன்றியத்தில் உட்காருகிற எல்லா அரசுகளும் மற்ற மாநில உரிமைகளில் தாமாக முன்வந்து வலிய சட்டம் இயற்றி அவற்றுள் தங்களின் அதிகாரத்தை செய்வார்களே தவிர, இத்தகைய விஷயங்களை முழுமையாக பொறுப்புடன் முன்னெடுப்பதை செய்வார்கள் என்று நாம் சொல்ல இயலாது. மாநில சுயாட்சி பேசுகிற தி.மு.க. வின் தமிழ்நாடு அரசு இதனை இன்னும் தீவிரத் தன்மையோடு உரியவற்றை செய்வதற்கான பணிகளை முறைப்படி முன்னெடுக்க வேண்டும். ஏற்கனவே பல தேசிய மற்றும் ஆசிய நாடுகள் அளவில் எல்லாம் போய் பங்குபெற்று, பதக்கம் வென்று அவர்களை செங்கல் சூளைகளுக்கும், பெட்ரோல் பங்குகளுக்கும் நாம் அனுப்பியிருக்கிறோம் என்பதுதான் அரசுகள் எந்த அளவிற்கு தங்களை நிரூபிக்க விளையாட்டு வீரர்களையும் கூட அக்கறையோடு கவனிக்கிறார்கள் என்பதற்கு சமகால சாட்சி. 

சமக்ரா சிக்ஷா அபியான் மற்றும் பிட் இந்தியா இயக்கம் ஆகிய இரண்டுமே பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை கொடுப்பதற்கும் அவற்றை பராமரிப்பதற்காக சில கொள்கைகளை வைத்துள்ளன என்றாலும் ஒரே விஷயத்திற்காக இரண்டு திட்டங்கள் மற்றும் அவற்றில் தெளிவான, வெளிப்படையான பயன்பாடு மற்றும் செலவீனம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இவையெல்லாவற்றையும் தாண்டி அப்படி செலவிடப்பட்ட நிதிகள் முறையாக பள்ளிகளால் கையாளப்பட்டு பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஒரு தொடர் செயல்பாடாக ஒன்றிய அரசு கண்காணிக்கவில்லை என்பதைத் தான் நமக்கு கிடைக்கக்கூடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. நிர்வகிக்கக் கூடிய நிர்வாகிகள் பெரும்பாலும் அரசு சார்பில் அதிகாரிகளாக இருப்பவர்கள். அவர்களிடம் பல்கிப் பெருகி இருக்கக்கூடிய லஞ்சம் வெளிப்படைத் தன்மை இன்மை அதிகாரப் பகிர்வு குறித்த தெளிவின்மை மற்றும் பொறுப்புகள் குறித்த வரையறை இன்மை ஆகியவை மிகப்பெரிய குழப்பங்களுக்கும் சட்டத்திற்கு புறம்பான பல்வேறு குந்தகங்களையும் விளைத்துள்ளது. 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் ஆணையம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை தன்னுடைய உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கியது அதற்கு காரணம் குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டிருந்தது தான். இது வெளிப்படையாக நம்முடைய நிர்வாக குளறுபடிகளை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய ஒரு நிகழ்வு. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் இயக்குநரும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான FIFA உலகக் கோப்பையின் முன்னாள் இயக்குனருமான திரு ஜாய் பட்டாச்சாரியா இது குறித்து கூறுகையில், “இங்கே நமக்கு அமைப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான அடிப்படை மாற்றங்கள் தேவைப்படுகிறது. கூட்டமைப்புகளுக்கு அதிகாரம் என்பது குவிந்திருக்க கூடியவைகளாக இருக்கிறது. ஆனால், அவர்களுக்கான கடமைகள் என்கிற ரீதியில் எதுவும் பெரிதாக அவர்கள் வைத்துக் கொள்வதில்லை. பொறுப்புகளை தவிர்த்து அதிகார மையங்களாக கூட்டமைப்புக்குள்ளும் ஒன்றியங்களும் மாறுகிற போது இங்கே விளையாட்டு ஒடுக்குமுறை அரசியல் தலை தூக்கும். இந்த அடிப்படை கட்டமைப்பு என்பதனை மாற்றாமல் எந்தவிதமான மாற்றமும் இந்தத் துறையில் ஏற்படப் போவதில்லை. அதிகாரப் பகிர்வு மற்றும் வரைமுறைகளை சரிவர பகுத்து பார்க்கின்றபோதும் துறை சார்ந்த வல்லுனர்களை சிறந்த நிர்வாகிகளை அந்த பொறுப்புகளில் அமர்த்துவது என்பதும் இன்றியமையாததாகும்” என்கிறார். 

இந்திய ஒன்றிய அரசு தனது பட்ஜெட்டில் தேசிய விளையாட்டு வளர்ச்சி நிதி என்கிற பெயரில் தொடர்ந்து பல்வேறு விதமான ஊக்குவிப்பு பணிகளுக்கான நிதியினை வழங்கி வருகிறது. 2019-20 ல் 100 கோடியாக இருந்த இந்த நிதி 2020-21 ஆம் ஆண்டில் 50 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அரசின் நிதிநிலை அறிக்கையின் படி சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு என்று வழங்கப்படுகிற உதவித்தொகையும் கடந்த ஆண்டை விட 40% குறைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டி நடக்க கூடிய ஓர் ஆண்டில் ஏற்கனவே ஒன்றிய அரசினால் திறமை மிக்கவர்களாக கருதப்பட்டு வந்த வீரர்களுக்கு வழங்கப்படுகிற ஊக்கத்தொகை 40 சதவிகிதம் குறைக்கப்படும் என்றால் ஒன்றிய அரசு எந்த அளவிற்கு விளையாட்டு வீரர்களுக்கு (அதிக அளவில் பொருட்களை அல்லது விளம்பரங்களை ஈட்டித் தருகிற கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை தவிர்த்த) உகந்தவர்களாக மரியாதைக்குரியவர்களாக பார்க்கிறது என்பதனை நம்மால் உணர முடியும். 

இதுவரை இந்தியாவில் பள்ளிகளின் அளவிற்கு ஊடுருவி போய் அங்கேயே இருந்து பதின்ம பருவத்தில் ஆர்வமுடைய மாணவர்களின் விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கு என்று எந்த ஒரு பொதுத்துறை நிறுவனமோ அல்லது அரசு நிறுவனமோ உருவாக்கப்படவில்லை. ஒருவேளை அப்படி உருவாக்கப் பட்டிருந்தாலும் தற்போதைய ஒன்றிய அரசு அவற்றுள் பெரும் பங்குகளை இந்நேரம் தனியார் பெருநிறுவனங்களுக்கு விற்றிருக்கும் என்பதில் நமக்கு இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.  

மற்றும் ஒரு பார்வையாக, ஏற்கனவே இருக்கக்கூடிய கட்டமைப்புகளையும் கூட சரிவர ஆர்வமுடைய மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு எதார்த்தமான, இந்தியாவிற்கே உரிய பல்வேறு தடைகள் இருந்து வருகின்றன என்கிற வாதமும் மறுப்பதற்கில்லை. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவர் நாராயணன் ராமச்சந்திரன் இந்திய ஒலிம்பிக் சங்கம் அதன் தடகளம் மற்றும் பல விளையாட்டு வீரர்களுக்கு போதுமான அளவிற்கு எதையும் செய்து தரவில்லை என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். பணம் மற்றும் நிர்வாக கட்டமைப்பு ஆகிய குளறுபடிகள் ஒரு காரணமாக இருந்தாலும் அதை விட இன்னும் ஆழமாக பொதுச் சமூகம் மனோநிலையை அவர் குற்றம் சுமத்துகிறார். விளையாட்டு என்பது அரிதிலும் அரிதானவர்களுக்கு தான் அவர்களுடைய விருப்பப் பட்டியலில் முதன்மையாக இருக்கிறது. ஆர்வமும் திறமையும் உள்ள மாணவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் கூட கல்விநிலை என்பதில் கடைசி இடம்தான் விளையாட்டுகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது என்கிற தன்மை பெரும் தடையாக இருக்கிறது என பதிவு செய்திருக்கிறார். அண்மைக் காலங்களில் பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மாணவர்களை நோக்கி பள்ளிகளை நோக்கி விளையாட்டுகளை ஊக்குவிக்க முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். விளையாட்டு என்பது மாணவர்களின் பதின்ம வயதினரின் ஒவ்வொரு நாளின் ஒரு அங்கமாக மாற்றப்பட வேண்டிய தேவை இன்றைக்கு நம் முன்னே இருக்கிறது.

மிக சுருக்கமாக, நமக்கு அருகாமையில் இருக்கின்ற மக்கள் தொகையில் நம்மோடு மிக நெருக்கமான அளவில் பயணிக்கிற ஆனால் பதின்ம வயதினர் நம்மை விட குறைவான அளவு இருக்கக்கூடிய சீனா விளையாட்டுகளில் அடைந்து இருக்கக்கூடிய உயரங்கள் குறித்து ஒரு ஒப்பீட்டு அளவிலான பார்வையை பார்க்கலாம்.  சீனாவில் விளையாட்டுத்துறை என்பது ஒரு புகழ் மற்றும் கௌரவ மிக்கதாக பொது சமூகத்தால் பார்க்கப் படக்கூடிய துறை. முழுக்க முழுக்க அரசு நிர்வாகத்தின் விளையாட்டு பயிற்சி நிலையங்கள் நாட்டினுடைய எல்லா நிர்வாக அளவிலான இடங்களிலும் இருக்கிறது. அதாவது தேசியம், மாவட்டம், மாநகரம் மற்றும் ஊரக அளவிலும் விளையாட்டுக்கான பள்ளிகள் மற்றும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ளன. மிகச் சிறிய வயதிலேயே அதாவது நான்கு வயது முதலே பிள்ளைகள் இந்த பள்ளிகளில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். முழுக்க முழுக்க அரசினுடைய செலவினங்களின் மூலமாகவே இந்த கட்டமைப்பு இயங்குகிறது. அவர்களுக்கு உடல் மற்றும் மூளை சார்ந்த பல்வேறு பயிற்சிகள் இங்கே அளிக்கப்படுகின்றன. ஒரு நாளில் சராசரியாக 8 முதல் 12 மணி நேரம் வரை இத்தகைய பயிற்சி பள்ளிகள் அந்த குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். தொடர்ந்து அவர்களின் நிறைகுறைகள் ஆராயப்பட்டு ஒவ்வொரு தனியருக்குமான திறன் கூர்மை என்பது செய்யப்படுகிறது. 

யீ ஷிவென் 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் இன் 400 மீட்டர் மற்றும் 200 மீட்டர் நீச்சல் போட்டியில் 400 மீட்டரில் உலக சாதனையையும் 200 மீட்டரில் ஒலிம்பிக் சாதனையும் செய்து இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற 16 வயதான சீன வீராங்கனை. ஹங்க்சோ மாகாணத்திலுள்ள அரசின் விளையாட்டு பயிற்சி பள்ளியில் 6 வயதில் நீச்சல் பயிற்சிக்கு சேர்ந்த அவர் தொடர் பயிற்சியின் மூலம் தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் தேசிய அணியில் இடம் பிடித்தவர்.  

சீனாவில் அரசு சார்பில் நவீனப்படுத்தப்பட்ட சுமார் எட்டரை லட்சம் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் 3000 பிரத்யேக விளையாட்டு பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சீனர்கள் எந்தவிதமான விளையாட்டுகளையும் உள்நாட்டு மற்றும் அன்னிய விளையாட்டுகள் என்று பாகுபடுத்தி பார்ப்பதில்லை. முதல் முறையாக டிராம்பொலின் என்கிற ஜிம்னாஸ்டிக் விளையாட்டு ஒலிம்பிக்கில் 2000 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது இதற்கு அடுத்து ஆண்டுகளிலேயே சீன அரசு இந்த விளையாட்டிற்கான பயிற்சிகளுக்கு என்று நிதி ஒதுக்கி போதிய கட்டுமானங்களை முடுக்கி விட்டு தன் நாட்டின் விளையாட்டு வீரர்களை தயார் படுத்தியது. விளைவு, 2008ஆம் ஆண்டு அந்த விளையாட்டில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கத்தை சீன வீரர்கள் கைப்பற்றினார்கள். 

சீனா தன்னுடைய மகள்களை ஒரு நாளும் தன் மகன்களை விட குறைவாக நடத்தியதில்லை. இந்தியாவில் எந்த போட்டியிலும் ஆண் வீரருக்கான சம்பளமும் பெண் வீராங்கனை களுக்கான சம்பளமும் இன்று வரை ஒன்றாக இல்லை. ஒலிம்பிக்கில் கூட வெற்றி பெற்று வருகிற ஆண்களுக்கான ஊக்கத்தொகை பெண்களுக்கான தொகையை விட பத்து மடங்கு வரை கூடுதலாக சில மாநில அரசுகளும் மற்றும் ஒன்றிய அரசும் அறிவித்திருப்பதை இன்றைக்கும் காண்கிறோம். 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் சீனா வெற்றி பெற்ற 51 தங்கப் பதக்கங்களில் 29 வீராங்கனைகள் பெற்றுத் தந்தது. இங்கே கவனிக்க வேண்டியது இந்தியாவிற்கு கடந்த ஒலிம்பிக்கில் பெண்கள் மாத்திரம் தான் அதிக பதக்கங்களை பெற்று தந்தார்கள் என்ற போதும், கட்டமைப்பு ரீதியாக ஆண்களுக்கான விளையாட்டு பயிற்சி இருக்கக் கூடிய அளவிற்கு வீராங்கனைகளுக்கான பயிற்சிகள் இருக்கின்றனவா என்கிற கேள்வியை இக்கட்டுரையை வாசிக்கிற ஒவ்வொருவருக்கு முன்பும் வைக்கிறோம். சீனாவில் உலக அளவில் இருந்து பல்வேறு நிலையிலான மிகச்சிறந்த பயிற்சியாளர்களை அரசு சார்பில் ஒப்பந்தம் செய்து அழைத்து வருகிறார்கள். இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் ஹாக்கி தாண்டி இன்ன பிற விளையாட்டுகளுக்கு அப்படி நாம் யாரையும் பெருமளவிற்கு அழைத்து வருவதில்லை. இந்த இடத்தில் இது உள்நாட்டு பயிற்சியாளர்களுக்கான அவமானம் என்று கருதுவதற்கு இடமில்லை. குறைந்தபட்ச வழிகாட்டுதலும் இன்ன பிற நாடுகளிலிருந்து துறையில் சிறந்தவர்களை தேசத்திற்கு அழைத்து வருதல் என்பது குறித்து நாம் பரிசீலனை செய்ய வேண்டும். 

விளையாட்டு என்பது ஒரு நம்பிக்கைக்குரிய துறையாக, பொருளாதார ரீதியில் எந்தவிதமான சிக்கல்களையும் பின்னாளில் ஏற்படுத்தாத வண்ணம் சீனாவில் அது இருக்கிறது. சீனாவிலும் மிக வறிய நிலையில் இருந்து தான் பல்வேறு விளையாட்டுத் துறை வெற்றியாளர்கள் வருகிறார்கள். விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அரசு கொடுக்கக்கூடிய சலுகைகளும், ஊக்கத்தொகைகளும் அவர்கள் வேறு ஒரு வேலை குறித்த யோசனையை எடுப்பதற்கு வழி இல்லாமல் செய்து விடுகிறது. 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரம் வரை அவர்களுக்கான கடுமையான பயிற்சி என்பது ஒன்று மாத்திரம் தான் அவர்களின் சிந்தனைக்குள் இருக்குமே தவிர, அவர்களின் வறுமை அல்ல. அதற்கான அத்தனை விஷயங்களையும் அங்கே இருக்கக்கூடிய அரசும் சமூகமும் செய்து தந்திருக்கின்றன. எந்தவிதமான எதிர்காலம் குறித்த பத்திரத் தன்மையையும் இந்தியா தன்னுடைய விளையாட்டு வீரர்களுக்கு வழங்கவில்லை என்பதைத்தான் கடந்த காலமும் நிகழ்காலமும் நமக்கு கட்டியம் கூறுகிறது. 

அதேபோல பதக்கம் வென்ற வீரர்களை பற்றி மாத்திரம் தான் ஒன்றியம் மற்றும் மாநில அரசுகள் பரிசளிப்பு குறித்த விஷயங்களை செய்கிறார்கள். இன்னபிற திறமையாளர்கள் அதற்குப் பிறகு பெட்ரோல் பங்குகளுக்கும், செங்கல் சூளைகளுக்கும், கட்டிட வேலைகளுக்கும் போக வேண்டியதுதான். வீரர்களுக்கும் விளையாட்டு கூட்டமைப்புகளுக்குமிடையிலான முரண்கள் என்பது சீனாவில் பெரும் அளவில் இருப்பதில்லை. இந்தியாவில் வேர்விட்டு கிளைபரப்பி இருக்கக்கூடிய சாதி அமைப்புமுறை மற்றும் இதர வேற்றுமைக் காரணிகள் பல நேரங்களில் வீரர்களுக்கு துணையாக நிர்வாக கூட்டமைப்புகளை நிற்க விடாமல் செய்கின்றன. சீனாவின் மிகப் பெரும்பாலான விளையாட்டு துறை சார்ந்த நிர்வாக கட்டமைப்பு என்பது அந்தத்துறையில் இதற்கு முன்னால் சாதித்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பணி அமர்த்தப்படுகிறார்கள். இந்தியாவில் இத்தகைய தன்மை சொற்பமாக கூட இல்லை. அலங்காரப் பொருளாக அப்பதவிகள் இருப்பது என்பதுதான் இந்திய விளையாட்டுத் துறைக்கான கேடு.

இந்த ஒலிம்பிக் வெற்றிக்கு பிறகு சீன அரசு 2025 -க்குள்ளாக 7 லட்சம் கோடி அளவிற்கு மதிப்புமிக்க ஒரு துறையாக மாற்றுவதற்கு திட்டங்களை வகுத்து அதற்கான ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகளை இப்போது முடுக்கி விட்டுள்ளது. நம்முடைய பிரதமர் தொடங்கியதை பிட் இந்தியா போல அந்த நாட்டில் அதற்கு முன்பாகவே பொதுமக்களின் உடல்நலம் குறித்து தொடங்கப்பட்ட திட்டத்தின் மூலம் 30 லட்சம் பேருக்கு உடற்பயிற்சியாளராக பொதுமக்களுக்கு உடல்நலம் குறித்து பயிற்சி அளிப்பதற்கு அரசுப் பணி வழங்கப்பட்டது. 

கிட்டத்தட்ட ஒரே அளவிலான மக்கள் தொகை கொண்ட இரு நாடுகள் தான் என்றாலும் ஆண்டுக்கு விளையாட்டிற்காக 2596.14 கோடி நிதி ஒதுக்குகிற இந்தியாவும், ஆண்டுக்கு 3 லட்சம் கோடி நிதி ஒதுக்குகிற சீனாவும் நிச்சயம் ஒரே மாதிரியான வெற்றிகளை அடைய முடியாது. 2018 ஆம் ஆண்டு அப்போதைய ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பாராளுமன்றத்தில் தெரிவித்தபடி, ஒரு நாளைக்கு இந்திய ஒன்றிய அரசு ஒரு விளையாட்டு வீரருக்கு 3 பைசா செலவு செய்கிறது. ஆனால் அதே தேதியில் சீன அரசு அதை விட 200 மடங்கு கூடுதலாக ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சிக்காக மாத்திரம் செலவு செய்யக்கூடிய அளவிற்கு நிதியை ஒதுக்கி கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அகப்பையில் ஏன் வரவில்லை என்கிற கேள்வியை தொடர்ந்து எழுப்புகிறவர்கள், சட்டிக்குள் என்னதான் இருக்கிறது என்பதனை ஏன் பார்க்க மறுக்கிறார்கள் என்கிற கேள்வியை எதிர்கொள்ள வேண்டும். 

2019-20 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளை ஒப்பிடுகையில் தேசிய விளையாட்டு கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட நிதி 300 கோடியில் இருந்து 55 கோடி குறைக்கப்பட்டது. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை 111 கோடியில் இருந்து 41 கோடி குறைக்கப்பட்டது. தேசிய விளையாட்டு வளர்ச்சி நிதி 77 கோடியில் இருந்து 27 கோடி குறைக்கப்பட்டது. 

கேலோ இந்தியா என்கிற பெயரில் ஒன்றிய அரசு நடத்திவரும் திட்டத்திற்கு கூடுதலாக 312 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த கேலோ  இந்தியா என்கிற திட்டம் அதற்கு முன்னால் இயங்கி வந்த மூன்று திட்டங்களை ஒன்றிணைத்து ஒரே பெயரில் 2016 ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட திட்டம். ராஜீவ் காந்தி கேல் அபியான், நகர்ப்புற விளையாட்டுக்கூட கட்டமைப்பு திட்டம், தேசிய விளையாட்டு ஆளுமைகள் தேடல் அமைப்பு ஆகிய மூன்றும் கலைக்கப்பட்டு ஒற்றை அமைப்பாக கேலோ இந்தியா நிறுவப்பட்டது. இப்போது இந்த திட்டத்தின் சாதக பாதகங்களை ஆராயலாம். சாதக அம்சங்கள் திறமைகளை வளர்க்க உதவுவது, இளம் தடகள வீரர்களுக்கு குறைந்தபட்ச துணை செய்வது ஆகியவை. பின்னடைவுகளாக பார்த்தால் 17 முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்களை இந்தத் திட்டம் உள்ளடக்கி அவர்களிடமிருந்து திறமையாளர்களை தேடுகிறது. ஆனால் இன்ன பிற நாடுகளில் எல்லாம் அதை விட மிகச் சிறிய வயதிலேயே விளையாட்டு வீரர்களுக்கான தேடல் தொடங்குகிறது. சீனா ரஷ்யா போன்ற நாடுகளில் 6 வயது முதலே இந்த தேடல் தொடங்குகிறது. ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் 10 வயதுக்குள்ளாகவே ஜிம்னாஸ்டிக் மற்றும் நீச்சல் போன்ற பயிற்சிகள் தொடங்கப்படுகிறது. 2018ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி வெறும் 20 சதவிகித ஆரம்ப பள்ளிகளில் தான் இந்தியாவில் உடற்பயிற்சிக்கென்று ஒரு ஆசிரியர் இருக்கிறார்.

கேலோ இந்தியாவிற்கு நிதி அதிகமாக பயன்படுத்தப்படும் அதன் காரணமாக இந்திய விளையாட்டு அமைப்பிற்கு ஒதுக்கப்படுகிற நிதியின் எழுத்தின் அளவு மிக அதிகமாக குறைந்து, அதன் காரணமாக சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்பது என்பது போதிய நிதி ஆதாரம் இன்மை காரணமாக அவர்களின் அடுத்தகட்ட வளர்ச்சி தடைபடுகிற இடத்தை நோக்கி நகர்கிறது. ஆண்டுதோறும் 6 சதவிகிதம் கூடுதல் நிதியை விளையாட்டிற்காக ஒதுக்குகிற சீனாவை ஒலிம்பிக் நடக்கக்கூடிய வருடத்தில் முந்தைய ஆண்டைவிட 8 சதவிகித நிதியை குறைத்து உள்ள இந்தியா உலக அரங்கில் எதிர்கொண்டு வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தகைய மனோநிலை. 

 நாண்டி என்கிற அறக்கட்டளை 1996 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல்வேறு நிலைகளில் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்காக அதிலும் குறிப்பாக பெண்களுக்காக தொடர்ந்து பல்வேறு விதமான பணிகளை செய்து வருகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 14 மாநிலங்களில் இதுவரை நான்கரை இலட்சம் சமூக ரீதியிலான இறக்கங்களை சந்தித்து வரக்கூடிய பெண் பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களில் துணை நின்றிருக்கிறது இந்த அறக்கட்டளை. ரோகினி முகர்ஜி என்கிற அதன் தலைவர் சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்,

“குழந்தைகள் வளரும் போது அவர்களுடன் வாழ்க்கையோடு ஒரு அங்கமாக விளையாட்டுகளை கொண்டு வருதல் என்பது இன்றியமையாதது. கூட்டல், கழித்தல், வகுத்தல், வாசித்தல் போன்றவற்றை எப்படி பழக்க வழக்கமாக்கிக் கொள்கிறார்களோ அப்படியே விளையாட்டுகளையும் அவர்கள் இணைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாகப் பெண்கள் பல்வேறு விதமான விளையாட்டுகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது முக்கியம். விளையாட்டு வீராங்கனையாக இருக்கிற அல்லது மனம் லயித்து ஈடுபாட்டோடு விளையாடுகிற பெண்களுக்கு என்று ஒரு தனித்துவமான உடல்மொழியும் நம்பிக்கையும் பிறக்கும். எந்த அளவிற்கு பாடம் படிக்கிறார்களோ, அந்த அளவிற்கு வகுப்பறைக்கு அப்பாற்பட்ட உடற்பயிற்சி கல்வியும் அவசியமாகிறது. இதன்மூலம் அவர்கள் குழு மனப்பான்மை, தலைமைத்துவம், விரைந்து செயலாற்றுதல், இழப்புகளை எதிர்கொள்ளுதல் போன்ற பல்வேறு விஷயங்களை பயில்கிறார்கள்” என்கிறார். 

பல்வேறுபட்ட புவியியல் அமைப்புகளில் வாழக்கூடிய பெண்களுடன் இருக்கக்கூடிய பரிச்சயத்தின் காரணமாக அவர் மேலும் சில விஷயங்களை எடுத்துரைக்கிறார். “அடிப்படையில் பெரும்பாலான பெண்களுக்கு உடல் வலிமை குறைவாகவும் ரத்த சோகை போன்ற நோய்களும் இருக்கிறது. அவர்களுக்கு சரியான உணவு என்பது கிடைப்பதில்லை. சொல்லப் போனால் அந்த குடும்பத்திற்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து கொண்ட உணவு என்பது எட்டாமல் தான் இருக்கிறது. இது ஒரு பிரச்சனை என்றாலும் அவர்கள் உடலை அவர்கள் ஆரோக்கியமாகவும் சரிவர பேணுவது என்பதை விளையாட்டின் மூலமாக செய்ய வேண்டியது என்பது பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயமாகும். மேலும் இந்தியாவில் விளையாட்டுத் துறையில் நிர்வாகிகளாகவும் பயிற்சியாளராகவும் பார்வையாளர்களாகவும் கூட ஆண் பெண் விகிதாசாரம் என்பது மிகவும் மோசமாக சில நேரங்களில் இல்லாமலே கூட இருக்கிறது என்பது கவலைக்குரிய விஷயமாகும்” என்கிறார். 

கொரோனா பெரும் தொற்றுக்கு முன்னாள் மத்திய பிரதேச மாநிலத்தில் பெண் பிள்ளைகளுக்கு விளையாட்டு பயிற்சி என்கிற ஒரு திட்டத்தை தங்களின் அறக்கட்டளையின் மூலம் இவர்கள் தொடங்கியிருக்கிறார்கள். வாரத்திற்கு இரண்டு மணி நேரம் வீதம் வருடத்திற்கு 40 வாரங்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு திட்ட வரைவை இருபது வருட கால்பந்தாட்ட வீரரான லிசா முரோஸ்க்கி என்கிறவரின் தலைமையில் நிர்மாணித்தனர். இந்த இடங்களில் கள விளையாட்டு என்பதை தாண்டி தங்களுடைய உடல் எப்படி இயங்குகிறது என்பது குறித்தும் மாதவிடாயின் போது சுகாதாரமாக இருப்பது எப்படி என்பது குறித்தும் அடிப்படை ஊட்டச்சத்து உணவில் எடுத்துக் கொள்ளுதல் போன்றவற்றுக்கான பயிலரங்குகள், விழிப்புணர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இந்த திட்ட வரைவில் செய்யப்பட்டு தொடங்கப்பட்டது. 

ஆரம்பத்தில் விளையாட்டுகளில் பங்கு கொள்வதற்கு பெண்குழந்தைகள் தயங்கினார்கள். மிக அதிகமான தயக்கம் என்பது சமூகம் ஏற்படுத்தி இருக்கக்கூடிய பல்வேறு எண்ண ஓட்டத்தின் காரணமாக இருந்தது. ஆனால் அது மிகக் குறைவான காலத்திற்கு தான். கொஞ்சம் வயதில் மூத்த பெண்களை விடவும் மிக இளையவர்கள் விளையாட்டு மைதானங்களை படை எடுக்கத் தொடங்கினார்கள். பல சமயங்களில் தனிப்பட்ட முறையில் இந்த அறக்கட்டளையினரோடு மாணவிகளுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் உள்ள நம்பிக்கையின் காரணமாக தங்கள் பெண் பிள்ளைகள் விளையாட்டு நோக்கி நகர்வதற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிகழ்வுகளும் நடந்தது. நீங்கள் கால்பந்தாட்டம் விளையாடுவதற்கு வருகிறீர்களா என்று கேட்டபொழுது மிகப்பெரிய ஒரு ஆர்வம் பெண்களிடம் இருந்ததை தான் உணர்ந்ததாக ரோகிணி பதிவுசெய்கிறார். முறைப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு தொடர்ந்து இயங்குகிறது பெற்றோர்களிடத்தில் குறிப்பாக பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் இடத்தில் ஒரு நம்பிக்கையை விதைத்து அவர்களை விளையாட்டுகளை நோக்கி அழைத்து வருவது என்பது சாத்தியம் என்பதனை இந்த அறக்கட்டளை செய்து காட்டியிருக்கிறது.

நிறைவாக சில முன்னெடுப்புகளை பரிசீலிப்பதற்கான விவாதம் அமைக்க கருத்துகளை முன் வைக்கிறோம்.. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நல்கக் கூடிய பங்களிப்பினை முறைப்படுத்துவது மற்றும் அரசு சார்பில் அவற்றை ஊக்கப்படுத்துவது என்கிற ஒரு செயல்பாடு அதிமுக்கியமானது. அண்மையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு பாலசந்திரன் அவர்கள் பேட்டி ஒன்றில் பெருநிறுவனங்களுக்கு இத்தகைய விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தல் மற்றும் ஸ்பான்சர் செய்வதற்கு அரசு வழிவகை செய்யலாம். அப்படி ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தினால் ஸ்பான்சர் செய்யப்பட்ட ஒருவர் ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் வெல்லக்கூடிய பதக்கத்தின் மதிப்பை பொறுத்து அவர்களுக்கு குறிப்பிட்ட அளவிற்கு, உதாரணமாக தங்கப்பதக்கம் என்றால் 300 கோடி வெள்ளிப்பதக்கம் என்றால் 200 கோடி மற்றும் வெண்கல பதக்கம் என்றால் 100 கோடி என்பதைப்போல ஒரு தொகை வரிச்சலுகை அல்லது வரிவிலக்கு அளிக்கப்படும் என்று சொல்லுகிற பட்சத்தில் அவர்கள் முன்வந்து அத்தகைய திறமை உள்ளவர்களை தேடி அவர்களுக்கான பயிற்சிகளை தருவதற்கான கதவுகள் பெருமளவில் திறக்கப்படும்.  பெருநிறுவனங்களுக்கு இதனை சமூகப் பொறுப்பை போலவே விளையாட்டு ஊக்குவிப்பு பொறுப்பு (CORPORATE SPORT SPONSORSHIP RESPONSIBILITY) என்றும்கூட வழங்குவதற்கு வழிவகை செய்யலாம் என்றார். இத்தகைய விஷயங்களின் சாத்தியத் தன்மை குறித்து ஒரு உரையாடல் கட்டமைப்பது என்பது இன்றியமையாததாகிறது. 

கிராமப்புற மாணவர்களிலிருந்து ஆளுமைமிக்க, ஈடுபாடு உள்ளவர்களை கண்டறிவதும் களத்திற்கு கொண்டு வருவதும், அவர்கள் விளையாடுவதற்கு உரிய உபகரணங்கள் கிடைப்பது என்பதும் இங்கே நினைத்து பார்க்க முடியாத ஒரு விஷயமாக இருக்கிறது. 

இந்தியாவில் ஒருவர் தடகளம் போன்ற இன்ன பிற கள விளையாட்டு வீரராக தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான பொருளாதார ரீதியிலான பாதுகாப்பின்மை என்பது பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. அவர்கள் வாழ்வதற்கும் பணத்தை ஈட்டவும் இன்ன பிற தொழில்களை செய்வதற்கு தள்ளப்படுகிறார்கள். அரசு ஏற்கனவே ஆர்வமுள்ள, ஊக்கம் உடைய கிராமப்புற விளையாட்டு வீரர்களை கண்டறிவதில் உள்ள பெறும் இடைவெளியும் ஏற்கனவே இப்படி கண்டறியப்பட்ட அவர்கள் நிர்கதியாய் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக தொழில்களுக்கு தள்ளப்படுவதை பார்க்கக்கூடிய கிராமப்புற வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் எத்தகைய நம்பிக்கையோடு ஒரு தொழில்சார் விளையாட்டு வீரராக தங்களின் வாழ்க்கையில் அல்லது தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முன் வருவார்கள்? நம்முடைய நிர்வாக ரீதியிலான உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கி உச்சாணிக்கொம்பில் அதிகாரத்தில் இருக்கக்கூடிய ஒன்றிய அரசு வரை பல்வேறு விதமான விஷயங்களை இவற்றில் முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. 

 கிராமப்புறங்களிலும், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்கும் விளையாட்டு ஈடுபாடு உள்ளவர்களை தேர்ந்தெடுப்பது என்பதை காட்டிலும் அவர்களுக்கான பயிற்சியாளர்களை அழைத்து வருவதும் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது என்பதும் எதார்த்தத்தில் மிகக் கடினமாக இருக்கிறது. இந்திய விளையாட்டு வீரர்கள் உடற்தகுதி இழக்கப்படும் போது, அவர்கள் பல்வேறு விதமான உடல் சார்ந்த அசௌகரியங்களுக்கு அல்லது பிரச்சனைகளுக்கு உள்ளாகும் பொழுது, அதுநாள் வரையிலும் அவர்களுக்கு பின்புலமாய் நிதி உதவி செய்தவர்கள் திரிசங்கு நிலையில் அவர்களை கைவிடுவது என்பது ஒரு தொடர்கதையாக இருக்கிறது. பெரிய அளவிற்கு வெற்றிகளை பெறாத இந்திய ஹாக்கி அணியின் ஒப்பந்தத்தை நீட்டிக்க விருப்பமில்லை என்று சகாரா நிறுவனம் சொன்னதைப் போல. 

பெருமளவு நிதியை முதலீடாக செய்கிறவர்கள் மிக உச்சபட்ச அளவிலான வட்டியோடு அது திரும்ப வருவதற்கான வழிவகைகளை எண்ணி குறிப்பிட்ட பிரபலமான விளையாட்டுகளை நோக்கித்தான் நகர்கிறார்கள். எனவே அரசு மற்ற விளையாட்டுகளை பிரபலப்படுத்துவதற்கும், அவற்றை வெகுஜனத்துக்கு கொண்டு போய் சேர்க்கும் பல்வேறு விதமான முன்னெடுப்புகளை செய்ய வேண்டும். அதற்கான அடிப்படை கட்டமைப்பு அமைப்பது என்பது அதைவிட முக்கியமானது.  உடற்தகுதி இழந்தவர்களுக்கும், குறிப்பிட்ட வயதிற்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கும் அதற்குப்பிறகு எத்தகைய வாழ்க்கையை இந்தியா அமைத்துக் கொடுத்திருக்கிறது என்பதனை நாம் யோசிக்க வேண்டியதும் அதிமுக்கியமானதாகும். 

இதற்காக பொதுத்துறை நிறுவனம் என்கிற ஒரு கட்டமைப்பை முன்னெடுக்க வேண்டியதை நாம் மிக அழுத்தமாக வலியுறுத்துகிறோம். ஒட்டுமொத்தமாக இந்திய விளையாட்டுத்துறையில் சமூகங்களும் வருடங்களும் வர்ணங்களும் பெரும் ஆதிக்கம் செய்தவண்ணம் இருப்பதனால் எத்தகைய மோசமான கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும் நாம் பயணப்பட முடியுமோ அத்தகைய நிலையில்தான் இருக்கிறோம். சமூக நீதி கட்டமைப்பு கொண்டு ஒட்டு மொத்தமாக இந்தியாவின் விளையாட்டுத்துறை முழுமையாக தன்னை மறுகட்டமைப்புக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை என்பது இந்த நிமிடத்து நிதர்சனம். 

நன்றி: The Wire, First Post, Sportskeeda, Bloomberg Quint, 4play