ஆரியரும் தமிழரும் – பாகம் 9- விக்கி கண்ணன்

இந்த தொடரில் இதுவரை சிந்துவெளிக்கு முற்பட்ட காலத்தில் ஆரிய டிஎன்ஏ என அறியப்படும் ‘ஸ்டெப்பி’ இந்தியாவிற்கு வெளியில் கிமு 3000 முதலே கிடைத்திருப்பதையும் ,ஆனாலும் அவை இராக்கிகடியில் கிடைத்த கிமு 2500ஐ சேர்ந்த டிஎன்ஏ மாதிரியுடன் ஒத்துப்போகவில்லை என்பதையும் காட்டி சிந்துவெளி நாகரீக காலத்தில் ஆரிய குடியேற்றம் இந்தியாவில் நிகழவில்லை என்பதை பார்த்திருந்தோம். அதை தொடர்ந்து சிந்துவெளி நாகரீகம் முழுவதும் வீழ்ந்தபின் கிமு 1300 – 1000 வாக்கில் தான் ஆரிய குடியேற்றம் நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதையும் பதிவு செய்திருந்தோம்.

சிந்துவெளியில் ஏற்கனவே இருந்த தெற்காசிய வேட்டை சமூகத்துடனும்/விவசாய சமூகத்துடனும் ‘ஸ்டெப்பி’ டிஎன்ஏ வைக்கொண்ட ஆரியர்கள் கலந்து உருவானதே இன்றைய வட இந்தியர்கள். ஆகையால் வட இந்தியர்களில் பெரும்பான்மை உயர்சாதிகளின் டிஎன்ஏ வில் ஸ்டெப்பி மரபணு உண்டு. இப்படி ஆரிய குடியேற்றம் வட மேற்கில் நடந்து அது கங்கை சமவெளி நோக்கி நகர்ந்தது. இப்படி புதிதாக குடியேறிய ஆரியர்களின் தேசமாக வட இந்திய பகுதிகள் (குறிப்பாக கங்கை சமவெளி) அமைந்துவிட்டதால் அது ஆரிய வர்த்தமாக குறிக்கப்பட்டது. சென்னையில் குடியேறிய பனியாக்களின் பகுதியை சௌகார்பேட்டை என குறிப்பிடுவதுபோல, ஆரியர்கள் குடியேறி அங்குள்ளவர்களுடன் கலந்துவிட்டதால் வட இந்திய பகுதிக்கே அந்த பெயர் ஏற்பட்டுவிட்டது என்பதாக தெரிகிறது.

ஆனாலும் சிலம்புவில் வரும் ஆரியர் எனும் சொல்லாடலை வரலாற்று கால சம்பவங்களுடனும் அச்சம்பவம் நடைபெற்ற காலத்துடனும் பொருத்தி பார்க்கும்போது, அதில் வரும் ‘ஆரிய அரசர்கள்’ பிராமணர்களாக அமைந்திருப்பது குறித்து ஏற்கனவே விவாதித்து விட்டோம். இனி இடைக்கால வரலாற்றில் ஆரியர் – தமிழர் குறித்து வரும் பகுதிகளை காண்போம்.

ஆரியர்களின் மொழியை இந்தோ-ஆரிய மொழிக்குடும்பம் என்றும் தமிழர்களின் மொழியை திராவிட மொழி குடும்பம் என்றும் கூறுவர். இதில் திராவிட மொழி குடும்பம் என்பதன் மூல மொழி தமிழ். இதுகுறித்து தனியொரு பதிவை மொழியியல் ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் காண்போம்.

இந்த இருவேறு மொழி குடும்பத்தையும் தனித்தனியாக பிரித்து கூறும் மரபு இடைக்கால வரலாற்றில் அநேக இடங்களில் வருகிறது. இவ்வாறு ஆரிய மொழியை ஏற்றோர் ஆரியர் என்றும் தமிழை ஏற்றோரை தமிழர் என்றும் அக்காலத்தவர்கள் சுட்டியிருப்பதாக தெரிகிறது.

திருமறைக்காடு பதிகத்தில்,

“#ஆரியன் கண்டாய் #தமிழன் கண்டாய்” – 6:23:5 என திருநாவுக்கரசர் இருவேறு மரபுகளை பிரித்து கூறுகிறார்.

பொதுவாக ‘ஆரிய’ என்பதற்கு உயர்ந்த எனும் பொருளை வழங்குவார்கள். இவ்விடத்தில் எங்ஙனம் உயர்ந்த எனும் பொருளை வழங்க முடியும்? தமிழன் என்பது மொழி அடையாளத்தை சுட்டுகிறது. எனில் ஆரியன் என்பதற்கும் அப்பொருள் தானே வழங்க இயலும். அப்படி பொருள் கொண்டால் சைவ சமய குரவரான அப்பர் பிரானே இருவேறு மரபையல்லவா குறிப்பிட்டு காட்டுகிறார்.

கிபி 6-7ஆம் நூற்றாண்டை சேர்ந்த அப்பரின் பதிகத்தில் காணும் இந்த பேதம் கிபி 10 ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜனின் தஞ்சை கல்வெட்டிலும் காண முடிகிறது. தஞ்சை பெரிய கோவிலுக்கு 400 தளிச்சேரி பெண்டுகளை குடியமர்த்தி அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துக்கொடுத்து அவர்கள் நடனமாடும் போது இடையே ஆரியம் – தமிழ் என இரண்டு மொழியில் பாடுவதற்கு நிவந்தம் தந்திருக்கிறார்கள்.

“#ஆரியம் பாடுவார் மூவர்க்கு அரையன் அம்பலநாதன் ஆன செம்பியன் வாத்யமாராயனுக்குப் பங்கு நாலரையும்,
#தமிழ் பாட ஒருவனுக்குப் பட்டாலகன் காமரப் பேரையனுக்கு பங்கு ஒன்றரையும்” – தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 2 – எண் 66.

தளிச்சேரி பெண்டுகளுக்காக இருமொழிகளில் பாடல்கள் பாடுவது தனி. இவையல்லாது கோவிலில் திருப்பதியம் (தேவாரம்) பாட 48 பேரை நியமித்திருக்கிறான் இராஜராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை

“ஸ்வஸ்திஶ்ரீ இராஜராஜதேவருக்கு யாண்டு இருபத்தொன்பது வரை உடையார் ஶ்ரீராஜராஜேஸ்வரத்து உடையாருக்கு #திருப்பதியம் விண்ணப்பஞ்செய்ய உடையார் ஶ்ரீராஜராஜதேவர் குடுத்த பிடாரர்கள் #நாற்பத்தெண்மரும் இவர்களில் நிலையாய் உடுக்கைவாசிப்பான் ஒருவனும் இவர்களில் நிலையாய் கொட்டி மத்தளம் வாசிப்பான் ஒருவனுமாக ஐம்பத்தின்மருக்கு நிசதம் நெல்லு முக்குறுணி நிவந்தமாய்..” – தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 2 – எண் 65.

இங்கு பாடப்பட்ட ஆரியம் என்பது வடமொழியாக இருத்தல் வேண்டும் என்பது புலனாகிறது. ஆனால் தளிச்சேரி பெண்டுகளின் நாட்டியங்களில் ஆரியம் பாடுவது தவிர்த்து இக்கோவிலில் வேறெங்கும் அவை பாடப்பட்டிருப்பதாக தெரியவில்லை.

இது தவிர்த்து பக்தி இலக்கியங்களில் பயின்று வரும் ‘ஆரியர்’ எனும் சொல்லாடல் குறித்து அடுத்த சில பதிவுகளில் காண்போம்!