ஆரியரும் தமிழரும் – பாகம் 7- விக்கி கண்ணன்

கடந்த பாகத்தில் சிந்துவெளியில் ஆரிய குடியேற்றம் நிகழ்ந்த காலத்தையும் அதன்பின் ஆரியத்துக்கான ‘ஸ்டெப்பி’ மரபணுவானது இன்றைய வட இந்தியர்களின் மரபணுவில் எந்தளவுக்கு கலந்துள்ளது என்பதையும் பார்த்தோம். இந்த பதிவில் ‘ஆரிய’ என்கிற சொல் எப்போதிருந்து முதன்முதலாகவும் பெருமைக்குரிய சொல்லாகவும் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது என்பதை காண்போம்.

ஈரானிய கடவுளர்களுக்கும் வேத கடவுளர்களுக்கும் இருக்கும் ஒற்றுமைகள் குறித்து பல்வேறு கட்டுரைகள் இதுவரை வெளிவந்துள்ளன. இன்றைக்கு ‘ஸ்டெப்பி’ மரபணுவைக்கொண்ட இனக்குழுக்களில் இன்றைய ஈரானியர்களும் வட இந்தியர்களும் முக்கியமானவர்கள். கிமு 1500-1000 வாக்கில் சிந்துவெளி வீழ்ந்த பின்னர் ஆரியர்கள் சிந்துவெளி பகுதியை நோக்கி புலம்பெயர்ந்ததை பார்த்தோமல்லவா, அதுபோல இன்றைய ஈரானிலும் ஆரிய குடியேற்றம் நிகழ்ந்தது. கிமு 5 ஆம் நூற்றாண்டில் ஈரானை ஆட்சிசெய்த டாரியஸ் எனும் மன்னனது கல்வெட்டொன்று இன்றும் ‘Behistun inscription’ என்ற பெயரில் ஈரானில் காணப்படுகிறது. அக்கல்வெட்டில் டாரியஸ் தன்னை பாரசீகத்தை சேர்ந்த ‘ஆரிய இனத்தவன்’ என  குறிப்பிட்டுக்கொள்கிறான். (மறுமொழியில் பார்க்க)

வரலாற்று ரீதியாக முதன்முதலாக, தான் ஒரு ஆரிய இனத்தவன் என குறிப்பிட்டுக்கொண்டவன் டாரியஸ் தான். ஈரானிலும் கூட இந்தியாவில் நடப்பதை போலவே ‘ஆரிய’ இன அரசியலுக்கு ஆதரவு/எதிர்ப்பு என்ற இரண்டு நிலைப்பாடுகளும் உண்டு. ஆனாலும் டாரியஸ் தன்னை ஆரிய இனத்தவனாக கூறிக்கொண்டது ஈரானில் ஆரியத்துக்கான நேரடி வரலாற்று சான்றாக அமைகிறது. அதனை ஆமோதிக்கும் வகையில் வேத கடவுளோடு ஈரானிய கடவுளும் ஒத்துப்போவதை கவனிக்க வேண்டும்.

மத்திய ஆசியாவில் இருந்து குதிரையை கொண்டு வந்தது ஆரியர்களே எனும் கூற்று ஈரானிய வரலாற்று பக்கங்களிலும் உண்டு. ஆனால் ஆரியத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள ஈரானியர்கள் பலர் கிமு 17000வாக்கிலேயே பாறை ஓவியங்களில் குதிரையை காட்டி, இந்த ஆரிய குதிரைக் கதையை முற்றிலுமாக மறுத்துவிட்டனர். ‘குதிரை’ விடயத்தை பொறுத்தவரை இந்தியாவிலும் கூட ஆரிய வருகைக்கு முன்பே பல்வேறு பாறை ஓவியங்களில் குதிரைகள் கிடைத்திருக்கின்றன. ஸ்டெப்பி மரபணுவின் படி ஆரிய இனமே கிமு 1500-1000 இடைப்பட்ட காலத்தில் தான் இந்திய துணைக்கண்டத்திற்குள் ஊடுருவுகிறது. இந்திய பாறை ஓவியங்கள் மிக எளிதாக இந்த காலத்தை தாண்டிவிடும். ஆகையால் ஆரியத்தின் முகமாக காட்டப்படும் குதிரை தியரி என்பது   அறிவியல் பூர்வமாகவே போலியான ஒன்று. இதனை முன்னிருத்தி தான் சிந்துவெளி முத்திரையில் ஆரியத்தை நிறுவ போலியாக குதிரையை வடிவமைத்து கேலிக்குள்ளானார் ஒருவர்.

ஈரானில் ஆரியத்துக்கு ஆதரவான தரப்பு ‘ஆரிய’ எனும் வார்த்தை தான் மருவி ‘ஈரானிய’ என்றானது என்பர். ஆரியர் யார் எனும் குழப்பம் ஈரானிலும் அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிக்கிறது.

கிமு 5ஆம் நூற்றாண்டில் ஈரானில் டாரியஸ் எனும் மன்னன் தன்னை ஆரியனாக முன்மொழிந்துக்கொண்ட அதே சமயத்தில், தென்னகத்தில் தமிழ் சமூகம் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்தது. செழுமையான இலக்கியங்கள் படைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. பானை செய்யும் குயவனும் எழுத்தறிவு பெற்றிருந்தான். உலகின் அனைத்து இனங்களின் வரலாறுகளும் மன்னர்களின் கல்வெட்டுக்கள், பிரமிடுகள், இலக்கியங்கள் என மேல்நிலை சமூகத்தின் எச்சங்களை கொண்டு மட்டுமே அறியப்படுகின்றன. ஆனால் தமிழினம் மட்டுமே பாமர மக்களும் எழுத்தறிவு பெற்றதை பானை ஓட்டின் வழியே பதிவு செய்துள்ளது. இங்கு அறிவார்ந்த சமூகமும் பாமர சமூகமும் போட்டி போட்டுக்கொண்டு  தொல்லியல்/ வரலாற்று சான்றுகளை வாரி வழங்கி வருகின்றன.

பானைகளில் எழுதிய வழக்கத்தின் நீட்சியே இன்றும் கல்யாண சீர்வரிசைகளில் பெயர் எழுதும் வழக்கம். இது கோவிலுக்கு வழங்கும் 40வாட்ஸ் பல்ப்,  சீலிங் ஃபேன் வரை நீண்டிருப்பது சற்று வேடிக்கையாக இருந்தாலும் இவ்வழக்கம் நம் மரபணுவிலேயே கலந்துவிட்டது அதனை மாற்றவே முடியாது என கடந்துவிடலாம்.

எப்போதும் அறிவார்ந்த சமூகம் இவ்வாறு எழுதும் பாமர மக்களின் வழக்கத்தினை சற்று வேடிக்கையாக தான் பார்க்கும். ஆனால் பாருங்கள் அறிவார்ந்த சமூகம் பயன்படுத்திய ஓலைச்சுவடிகளின் ஆயுள் குறைவு. இன்று அது ‘காணாமல் கூட’ போகுது. ஆனால் பானை ஓடுகள் அழுத்தமாக அதன் வரலாற்றை பதிவு செய்கின்றன.

இன்று புறநானூறுகளும் அகநானூறுகளும் கூட பல செய்யுளுக்கு எழுதியவர் பெயர் தெரியாமல் திகைக்கின்றன. அது பதிவு செய்யும் வரலாற்று தகவல்களின் நம்பகத்தன்மையையும் இன்றுள்ள அதே அறிவார்ந்த சமூகம் கேள்விக்குள்ளாக்கி ஒதுக்கி வைத்துவிடும். ஆனால் பானை ஓட்டில் கிடைக்கும் ‘கண்ணனும்’ ‘ஆதனும்’ ‘திசனும்’ தமிழின வரலாற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சுகின்றன.

பாமர சமூகத்தின் வீச்சு என்பது அறிவார்ந்த சமூகத்தினையும் சமயங்களில் அடித்து நொறுக்கிவிடும் என்பதற்கு தமிழக அகழ்வாய்வுகளே சிறந்த சான்று.

தொடருவோம்..