ஆரியரும் தமிழரும் – பாகம் 4- விக்கி கண்ணன்

சிலப்பதிகாரம் கொண்டு தமிழை இகழ்ந்த ஆரிய மன்னர்கள் சுங்கர்கள் அல்லது கன்வர்களாக தான் இருக்க வேண்டும் என்பதை இதுவரை பார்த்தோம். இந்த படையெடுப்பிற்கு உதவிய நூற்றுவர்கன்னர் எனும் சாதவாகனர்களையும் ஆரிய அரசர்கள் என்றே சிலப்பதிகாரம் பதிவு செய்கிறது. அதனை இந்த பதிவில் காண்போம்.

“பேரிசை மன்னர்க் கேற்பவை பிறவும்
#ஆரிய மன்னர் அழகுற அமைத்த
தெள்ளுநீர்க் கங்கைத் தென்கரை யாங்கண்
வெள்ளிடைப் பாடி வேந்தன் புக்கு” – நீர்படைக்காதை 21-24

விளக்கம்: சேரன் செங்குட்டுவன் கேற்பவை அனைத்தையும் ஆரிய மன்னர் அழகுற அமைத்ததுடன் கங்கையின் தென்கரையில் அவர்கள் அமைத்துக்கொடுத்த பாடியில் சேர மன்னன் தங்கினான்.

இந்த ஆரிய மன்னர்கள் நூற்றுவர்கன்னர் தான் என்பதை எப்படி அறிவது? இதே காதையின் பிரிதொரு இடத்தில் இதனை கவனிப்போம்.

“மாடல மறையோன் கொள்கென் றளித்தாங்கு
#ஆரிய #மன்னர் #ஐயிரு #பதின்மரைச்
சீர்கெழு நன்னாட்டுச் செல்கவென் றேவித்” – நீர்படைக்காதை 176-178

விளக்கம்: மாடல மறையோனுக்கு ஐம்பது பொன்னை அளித்துவிட்டு, ஆரிய அரசரான நூற்றுவர்கன்னரை பார்த்து,” நீங்கள் உங்களது சீர்மிகு நாட்டினை நோக்கி செல்க” என விடைதந்து அனுப்பினான் சேரன்.

இதில் வரும் ஐயிருபதின்மர் என்போர் நூற்றுவர்கன்னர் தான் என இதுவரை சிலம்பிற்கு உரையெழுதிய மா.பொ.சி, புலியூர் கேசிகன் முதலானோர் கூறியுள்ளனர்.

சரி நூற்றுவர்கன்னர் என அழைக்கப்படும் சாதவாகனர்கள் ஆரியர்களா? எனில் எவ்வாறு அவர்கள் ஆரிய அரசர்கள் எனும் கேள்வி எழுகிறது. சாதவாகனர்கள் பௌத்தம் முதலான அவைதீக மதங்களை ஆரம்ப காலத்தில் ஆதரித்து வந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மகாயான பௌத்தமே சாதவாகனர்கள் ஆண்ட அமராவதி, நாகர்ஜூனகொண்டாவில் தான் செழித்து வளர்ந்தது என்பது நன்கு அறியத்தக்கது. ஆனாலும் மகாயான பௌத்தத்தை ஆரிய பௌத்தமாக பார்க்கும் வழக்கம் உண்டு. காரணம் நாகர்ஜூனர் எனும் பிராமணர் தான் மகாயானத்தை தோற்றுவித்தவராக கூறுவர். சாதவாகனர்களில் கிபி முதலாம் நூற்றாண்டை சேர்ந்த புகழ்பெற்ற அரசன் கௌதமிபுத்ர சதகர்னி. இவனை தொடர்ந்து அரியணை ஏறிய வசிஷ்டபுத்ர புலுமாவி தனது நாசிக் கல்வெட்டில், கௌதமிபுத்ர சதகர்னியின் புகழாரங்களை பதிவு செய்கிறார். (பார்க்க: Epigraphia Indica Vol 8)

அதில் “சத்திரியர்களின் பெருமையையும் புகழையும் குலைத்தவனும் ஏக பிராமணனுமானவன் சதகர்னி” எனும் புகழாரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதில் இக்கல்வெட்டின் கீர்த்தியினை எழுதியவர் கௌதமிபுத்ர சதகர்னியின் தாய் கௌதமி பாலஶ்ரீ என குறிப்பிடப்படுகிறது.

இதில் கவனிக்க வேண்டியது சாதவாகனர்கள் தாய்வழி பெயரை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை தான். சதகர்னியின் மகன்களும் வசிஷ்டபுத்ர (வசிஷ்டி) எனும் முன்னொட்டை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதுவும் தாய்வழி பெயர்கள் தான்.

சாதவாகனர்கள் பிராமணர்கள் தான் என்பதற்கு இந்த நாசிக் கல்வெட்டு மட்டுமே சான்றாக அமைகிறது என்றாலும் பிராமணர்கள் இல்லை என்பதை மறுப்பதற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆகவே சிலம்பு குறிப்பிடும் ஆரிய அரசர்கள் என்போரில் சுங்கர்கள், கன்வர்களை தொடர்ந்து சாதவாகனர்களும் பிராமண அரசர்களாகவே இதுவரை அறியப்படுவதால் சிலம்பு சுட்டும் ஆரியர்கள் பிராமணர்களாக இருக்கவே அதிக வாய்ப்புகள் உண்டு.

ஆரியர்களை எதிர்த்து செய்த போருக்கு ஆரியர்களே உதவினார்களா? என்றெல்லாம் கேட்க வேண்டாம். வரலாற்று காலம் நெடுகிலும் தமிழ் அரசர்களை எதிர்த்தும் தமிழ் அரசர்களே தான் போரிட்டு வந்திருக்கிறார்கள் என்றும் இன்றைய அரசியல் தளத்தில் திராவிட கட்சியை எதிர்த்து இன்னொரு திராவிட கட்சியே தான் வந்திருக்கிறது என்பதையும் மனதில் கொள்ளவும். அதுபோக யார் யாரிடம் இருந்து இதனை கற்றுக்கொண்டார்கள் என்றும் பார்க்க வேண்டும்.

தொடருவோம்..