ஆரியரும் தமிழரும் – பாகம் 2- விக்கி கண்ணன்

கடந்த பதிவில் ஆரியர் குறித்து சிலப்பதிகாரம் கொண்டு பார்த்தோம். இதில் அகநானூறு பாடலில் வரும் ஆரியர்களை குறித்து காண்போம்.

” மாரி யம்பின் மழைத்தோற் சோழர்
வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை
#ஆரியர் படையின் உடைகவென்
நேரிறை முன்கை வீங்கிய வளையே” – அகம் 336

விளக்கம் : வல்லம் என்னும் ஊரின் வெளிப்புறக் காவல்-காட்டில், தோல் கேடயம் அணிந்துகொண்டு மழையின் நீர்த்தாரை விழுவது போல அம்பைச் சொரியும் சோழர் படையை எதிர்த்துப் போரிட்ட #ஆரியர் படை உடைந்து பின்வாங்கி ஓடியது போல ஓடச்செய்வேன். அப்படி அவர்களை (ஊர்பரத்தையரை) ஓடச் செய்யாவிட்டால், என் கையின் மணிக்கட்டில் உள்ள வளையல்கள் உடைந்து விழட்டும் என நயபரத்தை தோழியிடம் கூறுகிறாள்.

ஆக சேரன் சிலம்பதிகாரத்தில் இமயமலை சாரலில் ஆரியர்களை எதிர்த்து சைவ வேடமிட்டு ஓடியவர்களை பிடித்து இழுத்து வருகிறான். இது வெளிநாட்டு மைதானத்தில் கிடைத்த வெற்றி. ஆனால் அகநானூற்றில் சோழனோ வந்த சண்டையை விடாமல் விரட்டி அடித்திருக்கிறான்.

“#ஆரியர் அலறத் தாக்கிப் பேர்இசைத்
தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சி யன்னவென் னலம்தந்து சென்மே” – அகம் 396

அதாவது சிலம்பு கூறிய அதே சம்பவத்தை அகநானூறு மீண்டும் நினைவூட்டுகிறது.

விளக்கம்:
(செங்குட்டுவன்) சினம் கொண்டு #ஆரியர்களை அலறும்படித் தாக்கி, பழமையான வடமலை இமயத்தில் தன் வளைந்த வில் சின்னத்தைப் பொறித்தான்.
நீ பிரிந்து செல்வதாயின், வில் பொறித்தவனின் தலைநகரம் வஞ்சி போன்ற என் அழகினை, திரும்பத் தந்துவிட்டுச் செல்க என பரத்தை ஒருத்தி தன்னுடன் வந்த தலைவன் ஒருவனை பார்த்து சொல்கிறாள்.

அடுத்த ஆரியர்கள் வாழ்ந்த பகுதியினை அகம்- 398 ஆம் பாடல் ,

“#ஆரியர் பொன் படு நெடு வரை புரையும்” என குறிப்பிடுகிறது. அதாவது பொன்னிறமாக காட்சியளிக்கும் இமயத்தில் அருகே வாழ்பவர்களாக கூறுகிறது.

பொதுவாக இன்றைய நாட்களில் ஆரிய என்பதற்கு உயர்ந்த என்றும் ஆரியர்கள் என்போர் துறவிகள், ரிஷிகள் என்றும் பொருள் கூறப்படுகிறது. ‘ஆரிய’ எனும் வார்த்தைக்கு இவ்வாறும் சில இடங்களில் பொருள் கொள்ளலாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் எல்லா இடங்களிலும் அவ்வாறு பொருள்கொள்ள முடியாது. சமஸ்கிருதமானாலும் தமிழானாலும் மற்ற மொழியானாலும் ஒரு சொல்லுக்கு இரண்டு, மூன்று பொருள் வழங்கப்படும். அது அனைத்தும் அது சுட்டப்படும் இடத்தினை கொண்டு தான் அது எவ்வாறு சுட்டப்பட்டது என்பதை அறிய இயலும்.

எடுத்துக்காட்டாக மேற்குறிப்பிட்ட பாடலை ‘உயர்ந்த’ என்ற பொருளிலும் ‘இமயத்தில் வாழும் துறவிகள்/ரிஷிகள்’ என்ற பொருளிலும் வைத்து பாருங்களேன். அப்படி பார்த்தால் தமிழக அரசர்கள் அப்போதே நாத்திக கோட்பாட்டினை ஏற்று இமயத்தில் இருந்து வந்த சாமியார்களை வெளு வெளுனு வெளுத்து அனுப்பினார்கள் என பொருள் கொள்வதா? இல்லை தங்களை விட பிறப்பின் அடிப்படையில் ஆரியர்கள் எல்லாம் எப்படி உயர்ந்தவர்களாக இருக்கலாம். நாங்களும் உயர்ந்தவர்கள் தான் என இறங்கி அடித்து ஓடவிட்டார்களா? இல்லை சிலம்பு சுட்டுவதை கொண்டு பார்த்தால் அன்றைய துறவிகளும்/சாமியார்களும் கூட இன்றைய சங்கராச்சாரியார்கள் போன்று தமிழை இகழ்ந்ததால் கோபமுற்று படையெடுத்து சென்று அழித்தொழித்தார்களா?

இன்றைக்கு கொடுக்கும் விளக்கத்தை கொண்டு இதனை பார்த்தாலும் கணக்கு சரியாக வரவில்லையே? கடந்த நூற்றாண்டில் தான் இந்த பிரிவினை வந்தது என்றால் சங்க இலக்கியங்கள் கூறும் ஆரியர்கள் எல்லாம் யார்?

இதுபோன்ற பல சான்றுகளுடன் கேள்விகளை தொடருவோம்..