“Zero budget” அரசியல்……அபராஜிதன்.


ஜனநாயகம் இன்று பணநாயகத்தால் தீர்மானிக்கப்படுகிறது என்ற அவலக்குரலை எங்கும் கேட்கிறோம் . ஆம், இன்றைய அளவில் வேட்பாளர்கள் சில கோடிகள் செலவு செய்தால் மட்டுமே வெல்ல முடியும் என்ற சூழல் இருப்பதால் சாமானியர்கள் தேர்தலில் போட்டியிடுவது என்பது குறைந்து வருகிறது.
அதாவது தேர்தலில் கொள்கைகள் ,வளர்ச்சி திட்டங்கள் ,கடந்த கால சாதனைகள் ,நேர்மை ,சமுக பாதுகாப்பு போன்றவைகள் போட்டியிடுவதிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அதனிடத்தில் பணம் மட்டுமே வைக்கப்படுவது.இது உண்மையான அரசியலாளர்களை அரசியல் அரங்கிலிருந்து முற்றிலுமாக நீக்கிவிடுகிறது. ஏனென்றால் நேர்மையான அரசியல்வாதிகள் பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வருவதில்லை. மக்கள் பணி மூலம் தங்கள் வளத்தை பெருக்கிக்கொள்வதும் அவர்கள் நோக்கம் இல்லை. அரசியலை ஓரு தொழிலாகவும் பார்ப்பதில்லை. ஆனால் கோடிகளை கொட்டும் ,அதாவது மூலதனத்தை கொட்டும் ஒரு அரசியல்வாதி(முதலாளி) போட்ட முதலை மட்டுமல்ல அதற்கு மேலும் எடுக்காமல் ஓயமாட்டார்.அதற்காக என்ன செய்யவும் தயங்க மாட்டார். இயற்கை வளங்கள் கொள்ளை, நிதி ஒதுக்கீடுகளில் முறைகேடு , திட்டங்களில் கமிசன் ,ஊழல் என்று போட்டதை ஐந்து, ஆறுமடங்காக்காமல் விட மாட்டார்.

வெறும் 1000 அல்லது 2000 ருபாய்க்காக நாம் வாக்குகளை விற்பதால்தானே அவர்கள் இந்த வெற்றியை ஈட்டுகின்றனர். விலை கொடுத்து வாங்கிய வாக்குகள்தானே , தங்களின் குடிமகனுக்கான உரிமையை விற்றவர்கள்தானே அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது தன்னை கேள்வி கேட்க? என்பதால்தானே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கேள்வியே இல்லாமல் கொள்ளையடிக்கின்றனர்.இது போன்ற கொள்ளையர்களை தேர்ந்தெடுப்பதை கைவிட்டு நேர்மையான அரசியலாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை முன் வைப்பதே “Zero budget “அரசியல்.

தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பணம்தான் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குகிறது. ஒரு வாக்காளர் தன் வாக்கை செலுத்துவதற்கு அதிகபட்சம் ரூ.5000 வாங்கினால் கூட அது ஐந்தாண்டுகளுக்கு கணக்கிட்டால் ஒருநாளுக்கு வெறும் ரூ.2.70 காசுகள் மட்டுமே வருகிறது.
ஆனால் கல்வி, மருத்துவச்செலவு ,தண்ணீர் போன்றவற்றிற்காக ஒரு வருடத்திற்கே பல ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.ஒருவேளை வேலைவாய்ப்பு இருந்தாலும் இந்த செலவுகளை சமாளிக்கலாம் .அதற்கும் இந்த அரசியல்வாதிகள் எதையும் செய்யப்போவதில்லை.உங்களுக்கு வெறும் 2000- 5000 கொடுத்துவிட்டு ஒவ்வொருவர் மூலமாக பல லட்சங்கள் கொள்ளையடிக்கின்றனர். இயற்கை வளங்களை கொள்ளையடித்து வாழ்வாதாரங்களை அழிப்பதோடு மட்டுமல்லால் சாலைகளின் பெயரால் குடியிருக்கும் வீடுகளையும் , விவசாய நிலங்களையும் பறித்துக்கொள்கின்றனர்.
நாம் அவர்களுக்கு அளிக்கும் வாக்கு நம்மை அழிப்பதற்கு நாம் அவர்களுக்கு அளிக்கும் அனுமதியாக மாறி விடுகிறது

 

0 பட்ஜெட் அரசியலில் முதல் அரசியல் வாக்களிக்க பணம் வாங்கக்கூடாது என்பதே.
பணம் வாங்காதபோதே நமது மனநிலை தெளிவாக இயங்கத்துவங்கிவிடுகிறது.
நமது பிள்ளைகளின் கல்வியினை இலவசமாக தருவதற்கு,நமது பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்பவர்களுக்கு,நமது குடும்பத்தினரின் மருத்துவச்செலவை இலவசமாக பார்ப்பதற்கு, வேலைவாய்ப்பு,தண்ணீர் போன்ற வாழ்வாதார தேவைகளை நிறைவு செய்வதற்கு நம்முடன் இணைந்து பணியாற்றும் நபர்கள் யாரோ அவர்களுக்கு வாக்களிக்க உறுதி எடுத்துக்கொள்வது இரண்டாவது அரசியல்.
பணம் கொடுக்க யார் முற்பட்டாலும் அதனை தடுப்பது , பணம் பெறுவதின் தீமைகள் குறித்து பரப்புரை செய்வது மூன்றாவது அரசியல்.
விவசாயம் ,நீராதாரங்கள் போன்றவற்றை பாதுகாப்பது நம் ஒவ்வொருவருடைய கடமையும் பொறுப்பும் ஆகும்.மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் அரசையும் ,அரசியலாளர்களையும் அடையாளம் காணும் பொருட்டு பகுதி,பகுதியாக ஒவ்வொரு கிராமமும் , வட்டமும் தங்களின் கோரிக்கைகளை படிவத்தில் நிரப்பி அதில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் ,வாக்கு தவறினால் பதவி விலகுவோம் என்று கையொப்பமிட அழுத்தம் தரவேண்டும்.அப்படி கையொப்பமிடும் நேர்மையான வேட்பாளருக்கு அவர்களின் பின்னணியை , மக்கள்பணியை கருத்தில் கொண்டு வாக்களிக்கலாம் என்பது நான்காவது அரசியலாகும்.
மக்கள் இத்தகைய பாதையை தேர்வு செய்தால் தேர்தலில் பணம் வாரியிறைக்கப்படுவது கணிசமாக குறையும்.சிறந்த மக்கள் பணியாளரையே தேர்தலில் வெற்றிப்பெற செய்தால் பெரும்பான்மை மக்களின் வாழ்வு பாதுகாக்கப்படுவதோடு இந்தக்கொள்ளை அரசியல்வாதிகளிடம் இருந்து நமது நாடும் பாதுகாக்கப்படும்.

இதைத்தான் நாம் “Zero budget ” அரசியல் என்கிறோம்.
சிலர் வாக்களிக்க பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் ,அது உங்கள் பணம்தான் என்கிறார்கள். திருடனிடம் இருந்து கொள்ளை பொருட்கள் முறைப்படி கையகப்படுத்தப்பட்ட பின் நாம் பெற்றுக்கொள்ளலாம்,முன்னரே பெற்றுக்கொள்வது அவனின் திருட்டில் பங்குபெறுவதாகும்.
பணப்பரிவர்த்தனையற்ற நேர்மையான தேர்தல் பங்களிப்பின் மூலம் நமது வாழ்க்கையினை நாம் தீர்மானிப்போம்.

அபராஜிதன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here