இணைய நேரலை வகுப்புகள்: நிர்பந்தங்களும்,நிதர்சனமும்.-வளவன்.

மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில், உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. மூடப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் கதவுகளும், மூடப்படாத மருத்துவமனை, ஆய்வக கதவுகளும் ஒரு குறியீடு. கோவிட் எனும் பெருந்தொற்று நம்மை பிடித்து, இயற்கையின் இயல்புநிலை திரும்பிடச் செய்து கொண்டிருக்கும் இந்நேரத்திலும், உலகளாவிய நிலையில் எல்லா அரசியலும், பேதங்களும், எவ்வித தொய்வுமின்றி , இன்னும் சொல்லப் போனால் மிகக் கூடுதலாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இனவெறி தொடங்கி அதிகார மமதை, பால் பாகுபாடின்றி, வயது பேதமில்லாத வகையிலான பாலியல் சுரண்டல்கள், குடும்ப வன்முறை, இந்திய இறையாண்மை தத்துவங்கள், உலகப் பொதுமறை பள்ளி பாடப்பிரிவிலிருந்து நீக்கம் முதலியன நிகழ்ந்தபடி தான் இருக்கின்றன. மிக முக்கியமான ஒன்றாக இக்கட்டுரை வழி நாம் காண இருப்பது இணையவழி வகுப்புகள் குறித்த ஒரு சிந்தனை திரட்சியோட்டம்.

தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சி தனது அன்றாட நிகழ்ச்சி அட்டவணையை வெளியிட்டுள்ளது. இது ஜுலை 30 வரை தொடரும் என்றறிவித்துள்ளது. இதனிடையே மத்திய மனித வள‌ மேம்பாட்டு அமைச்சகமும் தன் பங்கிற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கல்வி கற்கும் மாணவர்களினை தொகுத்து ‘ஆறு வர்ண’ வகைப்பாட்டியல் ஒன்றனை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. புதிய வர்க்க பேதத்தை காண்போம்.

1. 4ஜி தொழில்நுட்ப வசதியுடன் கணினி, மடிக்கணினி, திறன்பேசி (ஸ்மார்ட் போன்) மற்றும் தொலைக்காட்சி வசதியுள்ள வீடுகளை சார்ந்தவர்கள்.

2. கணினி நீங்கலாக 4ஜி வசதியுடன் கூடிய திறன் பேசி உள்ள வீடுகளை சார்ந்தவர்கள்.

3. அளவான 2ஜி/3ஜி சேவை வசதியுடனான திறன்பேசி கொண்ட வீட்டுப் பிள்ளைகள்.

4. தொலைக்காட்சி மட்டும் உள்ள வீட்டுப் பிள்ளைகள்

5. வானொலி மற்றும் பண்பலை தொழில்நுட்ப வழியில் மாத்திரம் உலகறியும் குடும்பத்து மாணவர்கள்.

6.  சாதனங்கள் உபயோகிக்காத குடும்பத்து பின்புலமுள்ள மாணவர்கள்.

இனி அந்த அந்த படிநிலைக்குத் தகுந்தவாறான செயல்திட்டங்கள் வகுக்கப்படுமா எனும் கேள்விக்கு மிக கவனமாக நடுவண் அரசின் வழிகாட்டும் நெறிமுறை அளித்துள்ள குறிப்பு:  ” இந்த இணைய வழிக் கற்றல் என்பது முழுமையாக அப்படியே வகுப்பறைக் கற்றலை மறுஉருவாக்கம் செய்திடும் நோக்கம் கொண்டதல்ல” என்பதாகும். இதன் மூலம் இது ஒரு பரிட்சார்த்த முயற்சி என்ற முன்பிணை வாங்கியபடி நகர்த்தியுள்ளனர் பொறுப்பிலுள்ளோர்.

ஆறு பிரிவிலுள்ள குழந்தைகளுக்கு மூன்று விதமாக கற்றல்முறை பரிந்துரைக்கப்‌பட்டுள்ளது
1. நேரடி – நிகழ்நிலைக் கற்றல் (ஆன்லைன் முறை – வகுப்பினை போலவே கலந்துரையாடல் உள்ளிட்ட அம்சங்களுடனான முறை)

2. பகுதி நிகழ்நிலைக் கற்றல் ( அவ்வப்போது துண்டிப்புகளுடனான இணைய வசதியாதலால், காணொளியாக, மின்-புத்தகங்களாக பாடங்களை இணைய தரவுத்தளத்தில் (டேட்டா பேஸ்) சேமித்து வைத்தல் முறையிலான கற்றல்)

3. மறைமுக வழிக் கற்றல் – தொலைக்காட்சி மற்றும் வானொலி வாயிலான கற்றல் முறை.

இனி, இம்முறை எப்படி வர்க்க பேதங்களை உள்ளடக்கியதாகவும், சமத்துவமின்மையை அடிப்படையாக கொண்டதாகவும் இருக்கிறதென சில தரவுகளுடன் காண்போம்.

மத்திய அரசின் சௌபாக்கியா திட்டத்தின்படி நாடு முழுக்க 99.99 % வீடுகளுக்கு மின் இணைப்பு தரப்பட்டுள்ளது (15/07/2020, அரசு இணையதளம்). இன்னும் 0.01% வீடுகள் மின்சார இணைப்பே பெறாதவைகள். அவை 18,734 வீடுகளாகும். இவர்களின் பயில்நிலை மிகப் பெரிய கேள்விக்குறி தான் என்றபோதும் குறைந்தது இவ்வீடுகளிலுள்ள பள்ளி பயிலும் குழந்தைகளுக்கேனும் புத்தகங்கள் வழங்குதல், மின்சார இணைப்பு தேவைப்படாத, மின்கலன் (பேட்டரி) வாயிலாக இயங்கும் வானொலிகள் வழங்கல் மற்றும் வானொலி வழியிலான வகுப்புகள் இன்றியமையாததாகிறது. (பயிற்றுநர் அற்றவர்களாக அவர்கள் இருப்பதற்கான நிலைக்கு மாற்று குறித்த யோசனை இவ்விடம் நினைவூட்டல் நம் கடமையுமாகிறது).

தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் (National Institute of Open Schooling) அதன் பிரத்யேக வாகினி பண்பலையைக் (91.2 எப்.எம்) கொண்டுள்ளது‌ என்பது கவனிக்கத்தக்கது.  இது வரை வானொலி வாயிலாக வகுப்புகள் தொடங்கப்படவில்லை எனினும் அதற்கான, ஆல் இந்தியா ரேடியோ நிறுவனத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வர அறிகிறோம்.

மின்சாரமற்ற வீடுகளைக் கடந்து பார்ப்போமாயின், அந்தியோதயா திட்டத்திற்காக, மத்திய ஊரக வளர்ச்சித்துறையினால் 2017 – 2018 ம் ஆண்டு நாடு முழுக்க வீடுகளில் எடுக்கப்பட்ட தரவுகள் மின்சார இணைப்பு நேரத்தை நமக்கு தெரியப் படுத்துகின்றன.
16% வீடுகளில் – 1 முதல் 8 மணி‌ நேரம் வரையும்
33% வீடுகளில் – 8 முதல் 12 மணி நேரம் வரையும்
47% வீடுகளில் – 12 மணி நேரத்திற்கு மேலாகவும் மின் இணைப்பு தரப்படுகின்றன.
இந்தப் பகுதிகளுக்கென பிரத்யேக செயல்திட்டங்கள் வகுத்தலை வலியுறுத்துகிறோம். குறிப்பாக 16%  (6 பேரில் ஒருவர்), 1 முதல் 8 மணி நேரம் வரையிலான மின் இணைப்புள்ள பகுதி மாணவர்கள்; இவர்களுக்கு நேரடி நிகழ்நிலைக் (Direct Online Mode) கற்றல் என்பது சாத்தியமில்லாதது என்பதனைக் கருதுவதற்கு தேவை உள்ளதென உரிய துறையினர் உணர்தல் அவசியம்.

மின்சாரத்தை கடந்து, அடுத்து அலைபேசி சேவைகள். ஜூலை 27, 2018 ல் அன்றைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர், திரு. மனோஜ் சின்ஹா, மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கான எழுத்துப் பூர்வமான பதிலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் 43,088 கிராமங்கள் அலைபேசி சேவையில்லாமல் இருக்கின்றன. 97% மக்கள் 2ஜி சேவையும், 88% 3ஜி/4ஜி சேவை பெறுகிறவர்கள் என்று குறிப்பிடுகிறார். இந்த அலைபேசி சேவையில்லாத கிராமங்களின் எண்ணிக்கை ஒன்றரை ஆண்டுகளில் குறைந்திருந்தாலும், 100% வழங்கப்பட்டுவிடவில்லை. எனவே, இவர்களைக் கண்டறிதலும், உரிய செயல்திட்டம் வகுத்தலும் தேவையாகிறது.

அடுத்ததாக, இணைய இணைப்புகள். ‘பாரத்நெட்’ எனும் பெயரில், தேசிய அளவிலான கிராம பஞ்சாயத்துகளை கம்பி வடங்களின் வழியிலான (பிராட் பேண்ட்) துரித இணைய சேவையினால் இணைக்கும் திட்டத்தின் முதல் பகுதி 2012 தொடங்கி டிசம்பர் 2017 -ல் நிறைவுற்றது. சுமார் 1.21 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் இதனால் இணைக்கப்பட்டுள்ளன.

இதன் இரண்டாம் பாகம் (Phase II)  2018 தொடங்கி 2021 ஆகஸ்ட் மாதம் நிறைவடைய உள்ளது. சுமார் 1.31 லட்சம் கிராமங்கள் இதன் மூலம் இணைக்கப்பட்டு பயன் பெறும். இப்போது நம் நினைவுக்காக, இந்த பாரத் நெட் திட்டம், இரண்டாம் கட்டத்தின் கீழ் விடப்பட்ட ஏலத்தில் முறைகேடு என்று சொல்லி ‘அறப்போர் இயக்கம்’ வைத்த குற்றச்சாட்டின் நீட்சியாக அது அண்மையில் (27/06/2020) தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டது. இதன் நோக்கம், 1,950 கோடி செலவில், துரித இணைய சேவையை 12,524 கிராம பஞ்சாயத்துகளுக்கு அளித்தல்.
எனில், இன்றைய தேதியில், ரத்து செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் அந்த 12,524 கிராமங்கள் 2ஜி சேவையில், அதிலும் தவழும் குழந்தையாக, ஊரும் நத்தையாக உள்ளன என்பது சமகால சாட்சி, ஒப்புதல். இந்த கிராமப்புற, ஏழை, எளிய மக்களுக்கான தனி கவனம் கருத்தில் கொள்ளத்தக்கது.

இனி தேசிய புள்ளியியல் அலுவலகம்  (National Statistical Organisation) 23 நவம்பர், 2019ல் வெளியிட்டுள்ள, இந்திய வீடுகள் மற்றும் சமூகத்தில் கல்வி சார் முக்கிய குறியீடுகள்  குறித்த அறிக்கையின் (Report on Key indicators of Household social consumption of Education in India) தரவுகளைக் காண்போம்.
அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையைப் பார்த்தால் தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தவரை கிராமப்புறங்களில் 73.7% , நகர்ப்புறங்களில் 30.9% மாணவர்கள் பயில்கின்றனர். இதுவே நடுநிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை கிராமப்புறங்களில் 76.1% , நகர்ப்புறங்களில் 38.1% மாணவர்கள் பயில்கின்றனர். முறையே  உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை கிராமப்புறங்களில் 68% , நகர்ப்புறங்களில் 38.9% மாணவர்கள் பயில்கின்றனர்.

அரசு ஆயிரம் காரண காரியங்கள் கற்பிக்கும் போதிலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இடையிலான போட்டி சமதளத்தில் இல்லை எனும் காரணத்தினாலேயே நாம் தமிழ்வழி, அரசுப்பள்ளி மாணவர்களுக்காக வகுப்பறைக் கல்வி நாட்களிலேயே உள்ஒதுக்கீட்டிற்காக குரலெழுப்பி, இன்று அது மருத்துவப் படிப்பு வரை கோரிக்கையாக ஆலோசிக்கப்படும் இந்த சூழலில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளிடையேயான இந்த இடைவெளி பல்கிப் பெருகி தனித்தனி தீவுகளாக அவர்கள் ஆவதற்கான சமத்துவமின்மையை இந்த இன்றைய தொழில்நுட்ப வழியிலான கல்வி வழங்கிடுவதன் விளைவை இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகான மேற்படிப்புத் தேர்வுகள் (நீட், ஜே.இ.இ), போட்டித் தேர்வுகள், வேலை வாய்ப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சதவிகிதம் தான் நமக்கு சொல்லப் போகிறது.
காரணம் இணைய சேவைகள் இன்றைக்கு அத்தனை மலினமாக இல்லை; அதனை வாங்குமளவிற்கான பொருளாதார தாங்குமை (affordability) பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கு இல்லை எனல் நிதர்சனம். சத்தமில்லாமல் கடந்த மாதங்களில் திறன்பேசி (Smartphone), மடிக்கணினி (Laptop) சந்தையில் விலையேறி உள்ளதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இனி அவ்வறிக்கையில் உள்ள சாதனங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்த விபரங்களைக் காண்போம்.
நாட்டில் கணினி உள்ள வீடுகள் 10.7 % (கிராமங்களில் 4.4% , நகரங்களில் 23.4%), கணினி இயக்க (அ) கையாளத் தெரிந்தோர் கிராமப்புறங்களில் 9.9% ஆகவும் நகர்ப்புறங்களில் 32.4% பேர்.  மேலும் இணையத்தை இயக்குபவர்கள் கிராமங்களில் 13% பேர் , நகரங்களில் 37.1% பேர் ஆக உள்ளனர். இந்நிலையிலுள்ள இயக்கத் தெரியாத அல்லது சாதனங்களுக்கு அறிமுகமில்லாத பெற்றோர்களின் பிள்ளைகள் அவற்றை கையாளுவதில் அவர்களால் உதவுதலோ, நிர்வகிக்கவோ அல்லது நெறிப்படுத்தவோ இயலாதவர்களாக இருப்பர் என்பது கரையிலா காட்டாற்று வெள்ளத்திற்குள் வளரிளம் பருவக் குழந்தைகளை அனுப்புதலே ஆயினும் இச்சமயம் வேறு வழியில்லை.

இதே தரவை பொருளாதார (அ) வருமான ரீதியிலாக பார்த்தால்,
வருமானத்தின் படிநிலையில் கடைசி 20% உள்ளவர்களில்  2.7% பேர் கணினி கையாள்பவர்கள், வெறும் 8.9% இணைய உபயோகிப்பாளர்கள்‌. இதுவே மேலடுக்கில் உள்ள உச்சபட்ச ஆண்டு வருமானமுள்ள 20% பேரில் 20% கணினி இயக்காளர்கள், 50.5% இணையப் பயன்பாட்டாளர்கள்.,
100ல் 51 பேரும், 100ல் 9 பேரும் என்பது எத்தனை சமமான போட்டி.? நாளை இந்த இரண்டு பின்புலமுள்ளவர்களுக்கும் ஒரே நாடு ஒரே பரிட்சை என்று வைக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது, கருத்தில்கொள்ளத்தக்கது.

அடுத்த தரவு, குவாக்குவாரேலி சைமண்ட்ஸ் (Quacquarelli Symonds) எனும் பன்னாட்டு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு. இந்தியாவில் அலைபேசி வழியிலான இணைய சேவையில் மோசமான இணைப்பு (Poor Connectivity) இருப்பதாக 40.2% பேரும்,  அலைவரிசை குறிகை பிரச்சனைகள் ( Signal Issues) இருப்பதாக 56.6% பேரும் தெரிவித்துள்ளனர். எனவே, திறன்பேசி வாயிலாக, எவ்வித இடையூறுகளின்றி படிக்க 3.2% வீட்டுப் பிள்ளைகளால் (கணினி பயன்பாடு நீங்கலாக) மட்டுமே முடியும் என்பதும் உணர வேண்டிய ஒரு தரவு ஆகும்.

அடுத்ததாக, அண்டை மாநிலமான தெலங்கானாவில் நடந்த உதாரணம். அண்மையில் அம்மாநில முதல்வர் மாண்பமை. சந்திரசேகர ராவ் அவர்கள் ஆன்லைன் வகுப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க கல்விமுறையில் பங்காளர்களாக இருக்கும் தெலங்கானா மாநில ஒருங்கிணைந்த ஆசிரியர் கூட்டமைப்பிடம் (Telangana State United Teacher’s Federation – TSUTF) அறிக்கை அளிக்கக் கோரினார்.
அதன்படி அவர்கள் 33 மாவட்டங்களில் உள்ள 1,868 கிராமங்களில் மதிப்பாய்வு (Survey) செய்ததில் மாநிலத்தின் கிராமங்களில் 14.8% பேர் கேபிள் டி.வி இல்லாத வீட்டினர் ஆகவும், 7.4% இரண்டு பிள்ளைகள், ஒரு தொலைபேசி கொண்ட வீட்டினராகவும்,  39.6% அலைபேசி அற்றவர்களாகவும், அலைபேசி உள்ளவர்களில் 58.7% இணைய வசதி இல்லாதவர்களாகவும் இருப்பதாக கூறியுள்ளனர். இதன் பரிந்துரையின் பேரிலேயே ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழி வகுப்புகள் இல்லை எனும் முடிவிற்கு அம்மாநில அரசு வந்தது. இன்றைக்கு 6-12 படிக்கும் மாணவர்களுக்கான வகுப்பிற்கும் தடை கோரிய பொதுநல மனு வழக்காக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்குள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இடத்தில் பள்ளி மாணவர்களின் நலன் குறித்த முடிவிற்காக அறிக்கையளிக்க களப்பணியாளர்களாக உள்ள ஆசிரியர்களின் கூட்டமைப்பை பயன்படுத்திய தெலங்கானா அரசும், வல்லுநர் குழு எனும் பெயரில் அதிகாரிகள், தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி ஆலோசனை நிறுவத்தினரை (Consultancy) உறுப்பினராக்கி, ஒரே ஒரு சமகால அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரோ அல்லது மூத்த ஆசிரியரோ இல்லாத ஒரு குழுவினை அமைந்துள்ள தமிழக அரசும் நமக்கான இருவேறு உதாரணங்கள். தவிர்க்க முடியாமல் பொதுநல வழக்கில் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் பயன்படுத்திய கருத்து ஏனோ நினைவுக்கு வருகிறது.
” நீங்கள் (மத்திய அரசு) டெல்லியில் குளிர்சாதன அறையில் உட்கார்ந்து கொண்டு இணையவழிக் கல்வி முறையினை நெறிபடுத்துதலாகாது; இங்கே களத்துக்கு வந்து அதிலாபாத்துக்கு (தெலங்கானாவிலுள்ள ஒரு மாவட்டம்) வந்து இங்கே வறிய மக்களின் பிள்ளைகள் எத்தனை‌ நலக்கேடான நிலையில் உள்ளனர் என்பதனைக் காண வேண்டும்.”
இது, களப்பணியாளர்களும், கல்வி முறையின் நேரடி பங்காளர்களுமான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இல்லாத ஒரு குழுவினை அமைத்த தமிழக அரசுக்கும் எப்படி பொருந்துகிறது என ஒப்பிட்டுக் கொள்க.

இனி, இது தொடர்பான வேறு சில உள்ளடக்கங்களைக் காண்போம்.

இந்தியா முழுக்க கிராமங்களில் 50% பேரும், நகரங்களில் 21.6% பேரும் என ஒட்டு மொத்தமாக 41.8 % பேர் மதிய நேர சத்துணவை நம்பியிருக்கும் குழந்தைகள். இவர்களுக்கான கடந்த மாதங்களின் ஊட்டச்சத்துக் குறைபாடு என்பதும், மாநில அளவில் மதிய உணவினை வீடுகளுக்கு சென்று அளித்தல் முதலியன குறித்து ஆக்கப்பூர்வமான நகர்வுகள் இல்லை என்பதும் வேதனைக்குரியது.
( இதை எழுதிக் கொண்டிருக்கையில் வந்த செய்தி: தமிழக அரசு சார்பில் ஜூலை மாதத்திற்கு, சத்துணவு உண்ணும் பிள்ளைகளின் வீட்டிற்கே சென்று அரிசி, பருப்பு முதலிய பொருட்களை வழங்க வழிகாட்டப்பட்டு, எனக்கு அறிமுகமான ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் 16/07/20 அன்று சத்துணவு பொறுப்பாளர் மற்றும் சமையலரோடு இன்றைக்கு அதனை தொடங்க இருக்கிறார். இதற்காக தொடர்ந்து குரலெழுப்பி, பேசி வந்த அனைத்து தோழர்களுக்கும் நம் நன்றிகளும் , வாழ்த்துகளும், பேரன்பும்).
இது எந்த அளவிற்கு பதுக்கல் , கள்ளச் சந்தை என்று மடை மாறாமல், கடை நிலையில் உள்ள சத்துணவிற்காக படிக்க அனுப்பப்பட்ட மாணவர்களுக்குப் போய் சேருகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

2. தேசம் முழுவதுமான வயது வந்த பெண் பிள்ளைகளுக்கான சுகாதார அணையாடைகள் (Sanitary Napkins) தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா, தடையற்ற உற்பத்தி நிலவரம் உள்ளதா எனும் கேள்வி பதிலில்லாமல் நிற்கிறது.

3. சிறப்புப் பள்ளி மாணவர்களின் கல்வி குறித்து அரசுகள் கனத்த மௌனம் காக்கின்றன. விழி மாற்றுத் திறன் கொண்டவர்கள், எழுத்து மயக்கம் (டிஸ்லெக்சியா) உள்ளவர்கள், மதியிறுக்கச் செயல்பாடுகள் (ஆட்டிசம்) கொண்ட கல்வி பயிலும் பிள்ளைகள் கேள்விகளே இல்லாமல் இருக்கிறார்கள்.

4.  ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளில் அரசாணையாகவே 2ஜி சேவை மட்டுமே இருக்கின்ற பொழுது அவர்களின் கற்றல் அத்தனை இலகுவாக இருந்திடுமா.?

5. நாடோடி குழுக்கள், நரிக்குறவர் சமூக மக்கள், புலம் பெயர் தொழிலாளர்கள், அன்றாடங் காய்ச்சிகளின் வீட்டுப் பிள்ளைகள் இனி கல்வியைத் தொடர்தல் என்பதல்ல, அச்சொல்லையே வேற்றுகிரக சொல்லாக எண்ணும் காலமும் அண்மையில்‌ உள்ளது.

6. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான பள்ளிக்கல்வி இடைநிற்றல் (Drop Out) மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் அரசு பள்ளிகளை நோக்கி நகர்தல் என்பது வரும் காலங்களில் நமக்கான பெரும் சவால்.

7. இந்த ஆண்டு கல்லூரி இறுதியாண்டு முடித்துள்ள மாணவர்களின் மேற்படிப்பு வாய்ப்பின்மை, மாணவர் வேலைவாய்ப்பு விகிதச் சரிவு, வரிச்சுமை ஏற்றம், குற்றச் செயல்கள் பெருக்கம் போன்றவைகளை அச்சமிருப்பினும் எதிர்கொள்ள வேண்டிய கடமை, பொறுப்பு நமக்குள்ளது.

கொரோனாவினால், வேறு வழியின்றி, இந்த புதிய நவீன தொழில்நுட்ப வர்ணாசிரமத்தில், ஆறு படிநிலைகளாக உள்ள, காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை, குஜராத் தொடங்கி நாகலாந்து வரை வெவ்வேறு புற, அகக் காரணிகளால், வெவ்வேறு கல்வி முறையில் பயில்பவர்களுக்கு எல்லாம் சேர்த்து ஒற்றைப் பரீட்சை என்பார்கள்; மெரிட் அண்ட் எபிலிட்டி அடிப்படை என்பார்கள், நாம் வயிற்றுப் பாட்டுக்கு அலையும் பொழுது நம்  இட ஒதுக்கீடுகளை சத்தமில்லாமல் பழைய வெட்டுக்கிளிகள் தின்றிருக்கும். வழக்குகள் விசாரணை வருவதற்குள் அடுத்தத் தலைமுறை பள்ளிப்படிப்பை முடித்திருக்கும். அமெரிக்காவிற்கு முதல் முறையாக தீண்டாமையினை 2020ல் அறிமுகப்படுத்தியுள்ள பெருமிதங்களோடு ஒரு சாரார் இருக்க, புதிய நவீன சுரண்டல்களை எதிர்கொள்வதற்குத் தயாராவோம்.
பிச்சை புகினும் கற்கை நன்றே என்று சொன்னால் இனி அறை விழலாம், கவனம்.!

– வளவன்.