கொரோனா ஊரடங்கும் பொருளாதார மீட்சியும். – ஷ்யாம்

கொரோனா ஊரடங்கில் இப்பொழுது அரசு பல தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் போன்றவை மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் பொருளாதார சக்கரத்தில் அனைத்து துறைகளும் முழுமையாக இயங்கத் தொடங்கினால் தான் இயல்பு நிலை திரும்பும்.

உதாரணமாக

சரக்குப் போக்குவரத்து ஆரம்பிக்காமல் சிறு தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

பொதுப்போக்குவரத்து தொடங்காமல் பல தொழிலாளர்கள் வேலைக்குப் போவது சாத்தியமாகாது.

அதனால் அந்தத் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்குவது சாத்தியமாகாது.

அந்தத் தொழிற்சாலைகளை நம்பியுள்ள தொழிலாளிகளுக்கு வேலை கிடைக்காது.

அவர்களிடம் பணப்புழக்கம் இல்லாததால் மக்களின் வாங்கும் திறன் குறையும்.

இது மளிகைக் கடை வைத்திருக்கும் அண்ணாச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு சிக்கலான சங்கிலித் தொடர்களால் பிணைக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தில் சுழலாத சக்கரங்கள் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பல துறைகளில் முழு முடக்கம் இன்னும் தொடர்கிறது. சுற்றுலாத்துறை, கோயில் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், சினிமா துறை, கல்வித்துறை, போக்குவரத்து துறை, அழகுபடுத்தும் நிலையங்கள், புகைப்படத் துறை, திருமணம் மற்றும் நிகழ்ச்சிகள் துறை (மண்டபங்கள் முதலியன), திரையரங்குகள், கேளிக்கை பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், தங்கும் விடுதிகள் இந்தத் துறைகளைச் சார்ந்துள்ள குடும்பங்கள் முழுவதுமாக வருமானம் இழந்துள்ளனர். இதில் பண முதலீடு செய்துள்ள முதலாளிகள் தொடர் முடக்கம் காரணமாக பணத்தையும் இழந்து வருகின்றனர்.

உதாரணமாக ஒரு பேருந்து வைத்திருக்கும் முதலாளி பேருந்தை இயக்கவில்லை என்றாலும் அந்த பேருந்திற்கு காப்பீட்டு தொகை செலுத்த வேண்டும். அரசுக்கு இருக்கைகளின் அடிப்படையில் வரி செலுத்த வேண்டும். அந்தப் பேருந்துக்கு கடன் வாங்கியிருந்தால் அதற்கு வட்டியும் கட்ட வேண்டும். அந்தப் பேருந்தை நம்பியிருக்கும் தொழிலாளியின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்திட வேண்டும். இவ்வளவும் பேருந்தில் இருந்து ஒரு ரூபாய் கூட வருமானம் கிடைக்காத சூழ்நிலையில் அவர்கள் செய்திட வேண்டும்.

மேலும் ஒவ்வொரு துறைகளிலும் நேரடியாக மட்டும் இன்றி மறைமுகமாக பலர் ஈடுபட்டு இருப்பர். யானைக்கு ஊட்டும் சோறு சிந்தி விழுந்தால் பல்லாயிரம் எறும்புகளுக்கு உணவு என்பது போல ஒரு பெரிய தொழிலைச் சார்ந்து பல துறைகள் இருக்கின்றன. உதாரணமாக, ஓ.எம்.ஆர் பகுதியில் இயங்கும் ஐ.டி நிறுவனங்களைச் சார்ந்து நூற்றுக் கணக்கான கடைகள், தங்கும் விடுதிகள் இயங்குகின்றன.

இந்நிலையில் நேரடியாக தொழில் நிறுத்தம் ஏற்பட்டு இருக்கும் இந்தச் சூழ்நிலையில் அதனால் மறைமுகமாகவும் பலர் பாதிக்கப்பட்டு இருப்பர்.

இப்போது சிலதுறைகளில் தளர்வு கொடுக்கப்பட்டாலும் மக்களிடம் மிக அதிக அளவில் அச்ச உணர்வு விதைக்கப்பட்டுள்ளது. நாம் ஒவ்வொருவரையும் இந்த நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள எச்சரிக்கும் பல ஆலோசனைகளை வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் தினமும் பெற்று வருகிறோம்.

அதில் பிரதானமாக மக்கள் சிக்கனமாக செலவு செய்ய வேண்டும், ஓட்டல்களில் உணவருந்தக் கூடாது, சுற்றுலா பயணங்களுக்கு செல்லக்கூடாது போன்ற பல ஆலோசனைகள் நம் அனைவருக்கும் வந்திருக்கும்.

இதுபோன்ற மெசேஜ்கள் ஏற்கனவே பலத்த பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த துறைகளுக்கு பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தி விடும். இவை அனைத்தும் மிகப் பெரிய பொருளாதாரச் சுணக்கத்தை ஏற்படுத்திவிடும்.

இந்த நோய்த் தொற்று உலகமெங்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிற நாடுகளிலும் சில துறைகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. அந்த நாட்டு அரசுகள் இந்தத் துறைகளை மீட்டெடுக்க என்ன செயல்கள் செய்தன என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்.

நியூசிலாந்து நாடு மிகப் பெரிய சுற்றுலா நாடு ஆகும். ஆண்டு தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்த நாட்டிற்கு சுற்றுலாவிற்கு வருவர். இந்த சுற்றுலாத் துறையை நம்பி பல்லாயிரக் கணக்கான நியூசிலாந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு அந்த நாட்டு அரசு அங்கு தொழில் செய்யும் நிறுவனங்களிடம் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை என்றால் மக்கள் சுற்றுலாவிற்கு கிளம்பிச் செல்வார்கள். அதன்மூலம் அந்தத் துறை சார்ந்தவர்களுக்கு பொருளாதார செயல்பாடு தொடங்கும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

மேலும் லண்டன் நகரில் பல்லாயிரக்கணக்கான உணவகங்கள், மது விடுதிகள் போன்றவை உள்ளன. இந்த நோய்த் தொற்றுக்கு பிறகு மக்கள் அச்ச உணர்வு காரணமாக உணவகங்களுக்கு செல்வதை குறைத்து விட்டனர். இதனால் இதைச் சார்ந்த தொழில்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின.

இதனை ஈடு செய்வதற்கு அரசு மக்களை உணவகங்களில் செலவு செய்ய ஊக்கப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு நபரும் செய்யும் செலவில் பாதியை செலுத்தினால் போதும். மிச்சத்தை அரசு அந்த ஓட்டலுக்கு தந்து விடும் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி ஒருவர் நம் இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய்க்கு உணவருந்தினால் அவர் தனது பில்லில் 500 ரூபாய் செலுத்தினால் போதும். மீதமுள்ள 500 ரூபாயை அரசு செலுத்திவிடும். இதுபோன்ற நடவடிக்கை எல்லாம் அதிக பாதிப்படைந்த துறைகள் மீண்டு வருவதற்கு உதவி செய்யும் அரசின் நடவடிக்கைகள் ஆகும்.

ஆனால் நமது நாட்டில் அரசு இதுபோன்ற சலுகைகளை வழங்க முடியாது முடிந்தாலும் வழங்க அரசுக்கு மனமில்லை. ஆனால் மக்களாகிய நாம் இந்தத் துறைகளின் மீது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாமல் இருப்போம். ஒரு துறையை பாதிக்கும் வாட்ஸ்அப் செய்திகளை அவற்றின் உண்மைத்தன்மையை அறியாமல் மற்றவர்களுக்கு அனுப்புவதைத் தவிர்ப்போம்.

இதுபோன்ற மெசேஜ்களை அனுப்பியதால் மார்ச் மாத காலத்தில் கோழி இறைச்சியின் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. கோழி சாப்பிட்டால் கொரோனா பரவும் என்று சில விஷமிகள் பரப்பிய தவறான செய்தி தான் இதற்கு காரணம். ஆனால் உண்மை என்னவென்றால் கோழி இறைச்சியை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கொரோனா நோயிலிருந்து காப்பாற்றும்.

ஆகையால் நம் ஒவ்வொருவருக்கும் இந்தப் பேரிடர் காலத்தில் மிகப்பெரிய கடமை இருக்கிறது. பல்வேறு துறைகளை அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து திரும்ப இயக்க அனுமதி அளித்துள்ளது. நாமும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பொருளாதார செயல்பாடுகளை தொடங்கிட வேண்டும். முடிந்தவரை உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும் என்ற கொள்கையோடு நாம் இதனை அணுக வேண்டும்.

அரசே தன் வருமானத்திற்கு குறைவு ஏற்பட்ட காரணத்தினால் டாஸ்மாக் திறக்கும் முடிவினை எடுத்துள்ளது. அரசுக்கே வருமானக் குறைவு கஷ்டத்தை கொடுக்கிறது என்றால் இன்றளவும் மூடப்பட்டிருக்கின்ற இத்துறை சார்ந்தவர்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மேலை நாடுகளில் கொடுக்கப்பட்டுள்ள சலுகை அளவிற்கு கொடுக்க முடியவில்லை என்றாலும் அரசு தம்மால் இயன்றதை இத்துறைகளுக்கு உதவிட வேண்டும். இந்த நிறுவனங்களுக்கு எளிதாக கடன்கள் வழங்குவது பாதிப்புகளில் இருந்து விடுபட உதவும் என்றாலும் ஐந்து மாதங்களாக தொழில் நடத்த முடியாத பாதிப்பை கடன்களால் மட்டும் ஈடு செய்து விட முடியாது. ஏற்கனவே பெற்றுள்ள கடன்களுக்கு வட்டி தள்ளுபடி நேரடி வரிச் சலுகைகள் போன்றவையே பொருளாதாரத்தை மீட்பதற்கு உதவும் அப்பொழுதுதான் அரசின் சுயசார்பு இந்தியா கொள்கைக்கு உண்மையான பலன் கிடைக்கும்.