”இந்துராஷ்டிரமும் தவறான புரிதல்களும்”-பிரபாத் பட்நாயக்


தமிழில்: ஆர்.எஸ்.செண்பகம்

நாமெல்லாம் அறிந்தபடி பாஜக ஒரு இந்துத்துவா சித்தாந்தம் மேலாதிக்கம் செலுத்தும் கட்சியாகும்.  ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவு. பாசிச அமைப்பு. இந்து ராஷ்டிரத்தை கட்டியமைக்க வேண்டும் என்ற வெறித்தனம் நிறைந்த கட்சி.  நான்கு முனைகளிலும் அரசியலமைப்புச் சட்டத்தின் வரையறைக்குள் கட்டுப்பட்டு நிற்க வேண்டியிருப்பதால், பாஜகவினால் தான் சுவீகரித்துக் கொண்ட இந்த நோக்கத்தைப் பற்றி வெளிப்படையாக சொல்ல முடியவில்லை என்றாலும், இந்த நோக்கத்தை நடைமுறைப்படுத்த தன்னாலான அனைத்தையும் செய்ய அது முயன்று கொண்டிருக்கிறது.

ஆனால், இந்து ராஷ்டிரா என்பது உண்மையில் என்ன?  மதச்சார்பின்மையை அழிப்பது என்பது அதற்கு மிக அவசியம்.  அதே போல, முஸ்லிம் சிறுபான்மையினரை இரண்டாம்பட்ச பிரஜைகள் என்ற நிலைக்குக் கொண்டு செல்வது அதைவிட மிக அவசியம்.  ஆனால், வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழி பெயர்த்து பார்க்கும்போது, அது தரும் பொருள் இந்து அரசு என்பது.  பெரும்பாலானவர்கள் இதனை அப்படித்தான் புரிந்து கொண்டுள்ளனர்.  ஏதோ இது இந்து மக்களுக்கான ஒரு அரசினை நிறுவுவது என்று புரிந்து கொண்டுள்ளனர்.   

ஆனால், இது இந்து ராஷ்டிரா பற்றிய மூலக் கோட்பாடுகள் பற்றிய தவறான புரிதல் ஆகும்.  உண்மையில், இந்து ராஷ்டிரா என்பது சர்வாதிகார ஆட்சி அமைப்பு ஆகும்.  அதனால் இந்துக்களையும் முஸ்லிம்களையும் அடக்கி ஆள வேண்டும் என்பது அதற்கு அவசியமாகிறது.  இந்துக்கள் உள்ளிட்ட இந்திய குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை பறிப்பது.  இந்திய அரசியலின் கூட்டாட்சி கட்டமைப்பை அழிக்கக் கூடியது.  முஸ்லிம்களைப் போலவே அதற்கு சற்றும் குறையாமல் பெரும்பாலான இந்துக்களை சர்வதேச நிதி மூலதனத்தின் மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிதி மூலதனத்தின் தன்னல  சுரண்டலுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்க உட்படுத்துவது.  இதனை சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்து ராஷ்டிரா என்பது இந்து மேலாதிக்கத்திற்கான அரசு அல்ல.  இது ஏக போக நிதி மூலதனத்தின் ஆதிக்கத்திற்கான அரசு.  இந்த அரசின் கீழ் இந்துக்கள் முன்பை விட நல்ல நிலையில் இருக்க முடியாது.  மாறாக, இன்னும் வெகு மோசமாக பாதிக்கப்படுவார்கள்.  ஏகபோக மூலதனத்திற்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் அளிக்கப்படுவதன் காரணமாக, முஸ்லிம்களைப் போலவே இவர்களின் வாழ் நிலையும் முன்பை விட மிக மோசமாக பாதிக்கும்.

ஆனால், ஏகபோக மூலதனம், வெகு நாட்களாகவே ஆதிக்க நிலையில் தானே இருக்கிறது என்று ஒருவர் விவாதம் செய்யலாம்.  அப்படி இருக்கும்போது, அது தனது பிடியை சமூகம் மற்றும் அரசியலின் மீது இறுக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியையும் எழுப்பலாம்.  இந்து மேலாதிக்கத்தை முன்னிறுத்திதான் தேர்தல் ஆதாயத்தை தேட வேண்டும் என்ற அவசியம் அதற்கு எங்கு எழுகிறது என்றும் வாதிடலாம்.  காரணம் இருக்கிறது.

உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி என்பத இந்திய பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதித்துள்ளது.  சமீப காலமாக ஏகபோக ஆட்சிக்காக முன்னிறுத்தப்பட்ட ”டிரிக்கிள் டவுன் – சொட்டுச் சொட்டாக பலன்கள் கீழிறங்கும்” என்பது போன்ற பழைய வார்த்தை ஆபரணங்கள் மதிப்பிழந்து போயுள்ளன.  வெகு காலத்திற்கு முன்பே குதிரைக்கு ஓட்ஸ் – சிட்டுக் குருவிகளுக்கு சாணம் என்பதெல்லாம் மலையேறி போய்விட்டது.  அரசு அதனுடைய வரிக் கொள்கையின் மலமாக வளர்ச்சியுற்றுக் கொண்டிருக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து மிகப் பெருமளவில் நிதியாதரங்களை பெற்று ஏழை எளி மக்களுக்கு செலவு செய்யும் என்ற உறுதி மொழி 11வது ஐந்தாண்டுத்திட்டத்தில் ஊசலாட்டம் கண்டு இன்று வெறுமையாகிப் போயுள்ளது.  உண்மையில், வருமான மற்றும் செல்வாதார ஏற்றத்தாழ்வுகள் என்பது அப்போதிருந்து வானளவு உயர்ந்து போயுள்ளது.  அதே நேரத்தில், இந்த நெருக்கடியின் காரணமாக, வேலையின்மை என்பது மகா தொற்றுக்கு முன்பே கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்து போயுள்ளது.  கிராமப் புற மக்களின் துன்பங்கள் மிகப் பெருமளவில் உயர்ந்து போயுள்ளது.  மத்திய அரசாங்கம் அவர்களது நுகர்வு செலவினம் குறித்த தேசிய மாதிரி ஆய்வறிக்கையின் புள்ளி விவரங்களை நேர்மையின்றி மறைக்க முனைந்தது அதனால் தான்.  2011-12க்கும் 2017-18க்கும் இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் கிராமப்புறத்தில் தனி நபர் உண்மை நுகர்வு என்பது 9 சதமானம் குறைந்து போயுள்ளது.  இப்படி நாட்டு மக்களை உறிஞ்சுவது என்பது இந்த அளவிற்கு மோசமாக இதற்கு முன்பு இருந்ததில்லை.  மகா தொற்று இதனை இன்னும் அதி மோசமாக்கியுள்ளது.

ஆனால், இவை மட்டும் இல்லை.  நவீன தாராளவாத்தின் கீழ் இந்த நெருக்கடிக்கு தீர்வு கிடையாது.  அது தான் உண்மையில் இந்திய பொருளாதாரத்தை மூழ்கடித்துள்ளது.  அனால், நிதி மூலதனம் ஒரு நாளும் இந்த உண்மையை ஏற்காது.  அது தான் அதன் இயல்பு.  நவீன தாராளவாதத்தை பின்பற்றி ஆட்சி நடத்தியதன் காரணமாக ஏற்பட்டது தான் இந்த நெருக்கடி.  இன்னும் சொல்லப்போனால், இந்த நவீன தாராளமயக் கொள்கைகளை இன்னும் தீவிரப்படுத்துவதை தான் நிதி மூலதனம் விரும்புகிறது, கோருகிது.  இதற்கு அது தொழிற்சங்கங்கள் அழிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.  பழங்குடி மக்களின் நிலங்களை பறிக்கச் சொல்கிறது.  அதற்கான சட்ட திட்டங்களை இன்னும் எளிமையாக்க வேண்டம் என்று கோருகிறது.  பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை கையகப்படுத்திக் கொள்ள எத்தனிக்கிறது.  பொதுத்துறைகளை இன்றும் பெருமளவில் தனியார்மயமாக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.  அரசின் கஜனாவில் இருந்து இன்னும் அதிகமான நிதியினை முதலாளிகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.  இந்த நடவடிக்கைகளை எல்லாம் தான் மோடி அரசாங்கம் உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் செய்ய வேண்டும் என்றால் நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய, பொருளாதாரம் பற்றிய அதிக ஞானம் இல்லாத ஒரு அரசாங்கம் தேவைப்படுகிறது.  அப்போது தான் அது நிதி மூலதனத்தின் அத்தனை உத்தரவுகளையும் கேள்வியே கேட்காமல் நிறைவேற்றும்.  அதே போல அதன் பின்பு பொது மக்களின் ஆதரவினையும் அந்த அரசாங்கம் அதற்கு ஆதரவாகத் திரட்டிக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டம்.  பாஜக அரசாங்ம் இவை அத்தனையையும் பிசகாமல் அப்படியே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.  அதனுடைய பொருளாதார ஞானம் பூஜ்ஜியம்.  அதனால் தான் அது நிதி மூலதனத்தின் தாளத்திற்கு ஆடிக் கொண்டிருக்கிறது, அவர்களை இந்நாட்டின் செல்வாதாரங்களை உருவாக்குபவர்கள் என்று கூறிக் கொண்டு.  அதே நேரத்தில் அதனுடைய இந்துத்துவா நிகழ்ச்சி நிரலின் மூடுதிரையின் கீழ் நிதி மூலதனத்தின் உத்தரவுகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.  இந்துத்துவா யாருடைய பசியையும் ஆற்றப் போவதில்லை.  ஆனால், நிதி மூலதனத்திற்கு மிகப் பெரும் அளவில்  சலுகைகள் செய்யப்பட்ட போதுதான் பொது மக்களின் – இந்த  நாட்டின் கவனத்தை திசை திருப்ப அயோத்தியாவில் பூமி பூஜை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது – கவனிக்கத்தக்கது.

உண்மைகளை கவனியுங்கள்.  கடந்த பல வாரங்களாக நடைபெற்றவற்றை மீள் பார்வை செய்வோம்.  தொழிலாளர்களின் வேலை நேரம் என்பது பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் 12 மணி நேரமாக உயர்த்தப்பட்டது.  ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சர்வதேச தொழிலாளி வர்க்கத்தால் நடத்தப்பட்ட 8 மணி நேர வேலைக்கான போராட்டம் காற்றில் பறக்க விடப்பட்டது.  சுற்றுப்புறச் சூழலுக்கான நிபர்ந்தனைகள் புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் போது அவற்றிற்குரிய முக்கியத்துவம் இன்றி குறைக்கப்பட்டுள்ளன.  1.45 லட்சம் கோடிகள் முதலாளிகளுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளன.  காலனியாதிக்கத்தை எதிர்த்த போராட்டத்தின் போது அளித்த வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டு, நிலக்கரி போன்ற இயற்கை வளங்கள் தனியார்மயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.  தற்போது இரயில்வே துறையிலும் தனியார் மயம்.  முதலாளிகளும், பெரும் நிதிகளுக்கு சொந்தக்காரர்களும் இதற்கு முன்பு இப்படி சலுகைகளை – ஆதாயங்களை அனுபவித்ததில்லை.  அதே நேரத்தில் தொழிலாளி வர்க்கமும், பழங்குடி இன மக்களும் உடமைகள் பறிக்கப்பட்டு கதியிழந்து நிற்கின்றனர்.  அவர்கள் அதி தரித்திர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இப்படி முதலாளித்துவத்திற்கு ஆதரவாக மோடி அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள எந்த நடவடிக்கைகளும் நெருக்கடியை தீர்க்க எதுவும் செய்யப் போவதில்லை.  மாறாக நெருக்கடியை அதிகமாக்கும்.  இந்த நெருக்கடியில் உள்நாட்டு தயாரிப்புகளுக்கான கிராக்கி குறைந்ததும் ஒரு காரணமாகும்.  மேலும், மோடி அரசாங்கம் தற்போது எடுக்கும் நடவடிக்கைகளால் கிராக்கி மேலும் குறையும்.  முதலாளிகளுக்கு நிதியாதாரங்களை மடை மாற்றம் செய்வது என்பது தொழிலாளி வர்க்கத்தின் மீது அதிக வரிகளை விதிப்பதை அவசியமாக்குகிறது.  இன்றியமையாததாக்குகிறது.  அப்போது தான் நிதி மூலதனம் அறிவுறுத்தும் படியான அளவில் நிதிப் பற்றாக்குறையை  வைத்துக் கொள்ள முடியும்.  அப்படியென்றால் வருமானப் பகிர்மானத்தை தொழிலாளர்களிடமிருந்து முதலாளிகளுக்கு மாற்றிவிட வேண்டும் என்பது தான் பொருள்.  இதனால் ஒட்டு மொதத கிராக்கி என்பது குறைந்து போகும்.  (காரணம் ஒரு தொழிலாளிக்கு ஒரு ரூபாய் கிடைக்கும் போது அந்த தொழிலாளி நுகர்வதை விட குறைவாகத்தான் ஒரு முதலாளிக்கு அந்த ஒரு ரூபாய் கிடைக்கும் போது அந்த முதலாளி நுகர்வார்).  இதனால், பெரும் முதலீட்டினை செய்வதற்கு பதில், தனியார் முதலீடு குறையும்.  இதே போன்று தான் பிற நடவடிக்கைகளும்.  மொத்தத்தில், இந்த நடவடிக்கைகள் அனைத்துமே தொழிலாளர்களிடம் இருந்து முதலாளி வர்க்கத்திற்கு வருமானப் பகிர்மானத்தை திருப்பி விடும் ஏற்பாடே ஆகும்.  எனவே, அவை தவிர்க்க முடியாதபடி நெருக்கடியை அதிகரிக்கும்.  இதிலிருந்து நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி, இந்த நவீன தாராளவாதக் கட்டமைப்பின் கீழ் எந்த ஒரு தீர்வும் இத்ந நெருக்கடிக்கு கிடைக்காது என்பது தெளிவாகிறது.

துல்லியமாக இந்த காரணத்திற்காக மக்கள் மத்தியில் இந்த அரசாங்கத்தின் மீதான விசுவாசம் காலப்போக்கில் குறைந்து போகும். மேலும் இந்த அதிருப்தியைக் கட்டுப்படுத்த, மேலும் மேலும் அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படும்., மேலும் ராமர் கோயிலைக் கட்டுவது, ராமர் கோயிலைத் திறப்பது என்பது போன்ற கவனச்சிதறல்கள் ஏற்பாடு செய்யப்படும். சுருக்கமாகச் சொல்வதென்றால்,  இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் இத்தகைய கவனச்சிதறல்களை உருவாக்க முடியும். இது ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களை மேலும் பிளவுபடுத்துகிறது.  அதோடு மட்டுமல்லாமல், மத பெரும்பான்மையைச் சேர்ந்தவர்கள் உட்பட உழைக்கும் மக்களிடையே அதிருப்தி இருந்தபோதிலும், பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருக்க போதுமான வாக்குகளைப் பெறுவதையும் உறுதி செய்கிறது.

இந்து மேலாதிக்கம் என்பது நிதி மூலதனத்தால் வளர்க்கப்படுகிறது.  ஏனென்றால் அதற்கு இது ஒரு வசதியான – தேவையான சித்தாந்தமாகும்.  பொருளாதார நெருக்கடியின் போது, அது இந்துத்துவா சக்திகளுடன் கூட்டணி அமைத்துக் கொள்கிறது. இல்லையென்றால், அதனுடைய ஆதிக்கமும் விரிவாக்கமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். இந்து மேலாதிக்கம், இந்து ராஷ்டிரம் போன்றவை இந்துக்களின் நலனுக்காக அல்ல, அவை நிதி மூலதனத்தின் நலனுக்காகவே உள்ளன. அதனால்தான் நிதி மூலதனம் இந்துத்துவா சக்திகளை சாத்தியமான எல்லா வழிகளிலும் ஆதரிக்கிறது.

ஆனால், நிச்சயமாக முஸ்லிம்களை வேலைகளிலிருந்தும், பிற சலுகைகளிலிருந்தும் விலக்குவது என்பது இந்துக்களுக்கு ஒரு பெரிய பங்கினை இந்த தளங்களில் அளிக்குமே என்ற கேள்வி எழுப்பப்படலாம்.   இந்து மேலாதிக்கம் இந்துக்களுக்கு பயனளிக்காது என்று நாம் எப்படி சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பப்படலாம். குறிவைக்கப்படும் சிறுபான்மையினர் மக்கள்தொகையில் அதன் பங்கை விட ஒரு பெரிய பங்கிலான வேலைகளை, கல்வி நிறுவனங்களில் அதிக இடங்களை பெறும் நிலைகளில் இருந்தால் இந்த கேள்வி பொருத்தமானதாக இருக்கும். உதாரணமாக, பல கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களைப் பொறுத்த வரையில் இது உண்மையாக இருந்தது. ஆனால் இங்கு குறி வைக்கப்படும் சிறுபான்மையினர் ஒதுக்கி ஒடுக்கப்பட்டு விலக்கப்பட்டவர்களாக இருக்கும் சூழ்நிலையில், இந்தியாவில் வேலைகள் மற்றும் கல்வி தளங்களில் முஸ்லிம்களின் பங்கு இந்துக்களை விட மிக மோசமான நிலையில் உள்ளது. அத்தகைய சூழலில்,இது போன்று முஸ்லிம்கள் குறி வைப்பது என்பது இத்தகைய மோசமான ஆட்சியின் மோசமான சூழலில் இந்துக்களுக்கும் தீங்கினை விளைவிக்கும். சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்து ராஷ்டிராவை நோக்கிய சார்பு நிலை என்பது முஸ்லிம்களையும் இந்துக்களையும் உழைக்கும் மக்களையும் குறிவைத்து தாக்குகிறது. இது இந்துக்களின் நலன்களுக்கு உதவும் என்ற கருத்து தவறான கருத்தாகும். இந்த தவறான புரிதல் விரைவில் அகற்றப்படுவது நன்மை பயக்கும்.