கொரோனாவை முன்வைத்து மக்கள் ஒடுக்கப்படுகிறார்களா? – வசந்தன்.

கொரோனா ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக ஐந்து மாதங்களுக்கு மேல் கடந்திருக்கிறது. நோய் தொற்றின் தீவிரத்தன்மையை கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு, அதைத் தவிர பிற அனைத்தையும் முற்றிலும் முடக்கிப்போட்டிருக்கிறது. விளைவாக கோவிட் 19 தாக்கத்தைவிட கட்டுப்பாடுகளால் முடக்கப்பட்டிருக்கும் மக்களின் வாழ்வாதார சிக்கல்கள் அச்சுறுத்துகின்றன.

ஊரடங்கில் மக்கள் மீது செலுத்தப்படும் மட்டுமீறிய கட்டுப்பாடுகளும், தடைகளும் மக்களின் சிவில் சமூக உரிமைகளை பல்வேறு நிலைகளில் நிர்மூலமாக்கியிருக்கிறது. வெளியே செல்ல தடை, நடப்பதற்கு தடை, அமர்ந்து சாப்பிடுவதற்கு தடை, எல்லைகளை கடக்க தடை என தடைகளை விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறார்கள். உண்மையில் கொரோனாவை காரணம் வைத்து விதிக்கப்பட்டிருக்கும் இந்த தடைகளில் பெரும்பான்மையானவை மத்திய மாநில அரசுகளின் நெடுங்கால இலக்காககூட இருந்திருக்கலாம். காரணம், மத்திய மாநில மக்கள் விரோத போக்குகளை கண்டிக்கும் போராட்டங்களும், இன்னபிற எதிர்ப்பு நடவடிக்கைகளும் இப்போது ஊரடங்கால் குறைந்திருக்கிறது. நாளுக்கொரு சிக்கலை நம்மீது செலுத்தி போராட்டகளின்றி வாழ்வில்லை என்னும் நிலைக்கு தள்ளிய அரசுகளுக்கு மக்கள் எழ முடியாமல் முடங்கியிருப்பது பெரும்லாபம்தானே.

ஊரடங்கை காரணம் வைத்து நமது பொது சிவில் உரிமைகள் பறிக்கப்படுவதை நம்மை அறியாமலேயே ஏற்க பழகிக்கொண்டிருக்கிறோம். எளிய மக்கள் மீது செலுத்தப்படும் அதிகாரம் அதன் பிடியை மேலும் இறுக்கிக்கொண்டிருக்கிறது. மிக அத்தியாவசியமாக வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டாலும்கூட ஊரடங்கு நமக்குள் ஒரு மனத்தடையாக இருக்கிறது. தளர்வுகளற்ற ஊரடங்கு சமயத்தில் காரணமின்றி சுற்றியவர்கள், அவசியமாக சென்றவர்கள் என பாகுபாட்டின்றி அனைவரையும் காவல்துறையினர் இழிவுபடுத்தி அனுப்பியதன் விளைவாக மக்களிடையே பொதுஇடங்களில் புழங்குவதற்கு உளவியல் தடை காணப்படுகிறது.

சமூக, பண்பாட்டு முன்னெடுப்புகளில் ஒருங்கிணைய முடியாமல் மக்கள் பிளவுபடுவது அரசுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனாவுக்கான தனிமனித இடைவெளி சமூக இடைவெளியாகவே மாறியிருக்கிறது. உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு நோய்த்தொற்றை கட்டுப்படுத்த இந்த இடைவெளியும், கட்டுப்பாடுகளும், தடைகளும் அவசியமே என்றாலும் இவைகளுக்கான அளவுகோல் குறித்து நாம் நிச்சயம் சிந்தித்தாக வேண்டும். நகரம், கிராமங்கள் என்ற பேதமின்றி ஒரு பெரும் சமூகத்தை இயற்கையிடமிருந்தும் அந்நியப்படுத்திருக்கும் நிலை ஊரடங்கின் உச்சகட்ட அட்டூழியம்.

மக்களின் அன்றாட வாழ்கையையும், சமூக நடவடிக்கையையும் பாதித்திருக்கும் ஊரடங்கு, எதிர்மறை இயல்புகள் எதையும் நெருங்கவில்லை. முன்னெப்போதையும்விட இந்த ஊரடங்கு காலத்தில் சாதிய படுகொலைகளும், வன்கொடுமைகளும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்திருப்பதாக ஆய்வறிக்கைகள் வெளியாகியிருக்கின்றன. இந்த குறுகிய காலத்தில் நடந்த சாதிய வன்முறைகளை தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனி பட்டியலாகவே வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தின் 60%-க்கும் மேற்பட்ட மக்கள் தம் வாழ்நாளில் எதிர்கொள்ளாத வேலையிழப்பையும், அதனால் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கும் ஆட்பட்டிருக்கிறார்கள். தனிமையும், வெறுமையும் ஏற்படுத்திய உளவியல் தாக்குதலால் மனச்சிதைவை எதிர்கொள்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். கொரோனா பரப்பரப்பால் ஏற்கெனவே நோயுற்று சிகிச்சை பெற்றுவந்தர்கள் பெரும் துயரத்தையே சந்தித்திருக்கின்றனர். இதயநோய், சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய், நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை தேவைப்படும் சூழலில் இருந்த எண்ணற்ற அடித்தட்டு மக்கள் மருத்துவமனையை எட்ட முடியாமல் தவித்திருக்கின்றனர்.

மக்கள் விரோத திட்டங்களை சத்தமில்லாமல் நிறைவேற்றிக்கொள்ளும் பொற்காலமாக இந்த ஊரடங்கை மத்திய மாநில அரசுகள் பயன்படுத்தியிருக்கின்றன. புதிய தேசிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆவணம் முதல் எட்டு வழிச்சாலை திட்டத்தை விரைந்து தொடங்குவதற்கான முயற்சிகள் வரை பெயர்மாற்றப்பட்ட அவசரநிலையாகவே அரசு இந்த ஊரடங்கை கருதி வருகிறது.

இப்போதைய அச்சமெல்லாம் இந்த ஊரடங்கு நோய்தாக்கம் தனிந்தபின்னரும் தனிமனித, சமூக நிலைகளில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தபோகிறது என்பதுதான். சமூக ஒன்றுகூடல்கள், பயணத்திற்கான அனுமதி, பண்பாட்டு முன்னெடுப்புகள் மீதான கட்டுப்பாடுகளை இனிவரும் காலங்களிலும் தொடர வாய்ப்புகள் அதிகமிருக்கிறது. இதன் காரணமாகவே ஜெர்மனி, அமெரிக்கா, நியுசிலாந்து, பிரேஸில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்குக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்தன. நோய்த்தொற்று பரவல் காலத்திலேயே தனிமனித, சமூக உரிமைகளை பறிப்பதாக அவர்கள் ஊரடங்கை எதிர்க்கின்றனர். இந்தியாவில் இன்னும் அதுபோன்ற எதிர்குரல்கள் வலுவாக எழவில்லை என்றாலும், ஊரடங்கின் நீட்சி வருங்காலங்களில் நம் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதை உறுதி செய்துக்கொள்வது மிக அவசியம். எளிய மக்கள் இன்று பெற்றிருக்கும் உரிமைகள் ஒவ்வொன்றும் எண்ணற்ற ஜனநாயக போராட்டங்களால் விளைந்தவை. அவற்றையே மாற்றுக்கொள்கைகளால் குறுக்குவழியில் பறிக்கதுடித்துக்கொண்டிருக்கும் அரசு இது. நோய்தொற்றின் பெயரால் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் மக்கள் மீது செலுத்த கிடைத்த வாய்ப்பை நழுவவிடாது.