7 தமிழர் விடுதலை

இராசிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப் பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், ஜெயக் குமார் ஆகிய எழுவரும் வாழ்நாள் சிறையாளர்களாக இருந்து வருவதும் அவர்கள் விடுதலைக் குறித்து ஒட்டுமொத்த தமிழகமும்  கவலையோடும் அக்கறையோடும் இருப்பது தாங்கள் அறிந்ததே. அவர்கள் 27 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்துவிட்ட நிலையில் தங்கள் விடுதலை வேண்டி மத்திய மாநில அரசுகளையும், இந்திய உச்சநீதி மன்றத்தையும் முறைப்படி அணுகினார்கள். அந்தச் செயல்வழியில் இறுதியாக, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய செப்டம்பர் 9,2018 அன்று அமைச்சரவையில் முடிவு எடுத்து, ஆளுநரின் ஏற்புக்காக அனுப்பி வைத்தது. ஆளுநரின் ஒப்புதலுக்காக அந்த ஏழு சிறையாளர் களும் அவர்தம் குடும்பத்தினரும் மட்டுமல்லாமல், மாந்தவுரிமைகள்பால் அக்கறை கொண்ட அனைவரும் ஆவலோடு காத்துள்ளார்கள். பார்க்கப் போனால், தமிழக மக்கள் இது குறித்துக் கொண்டுள்ள கவலையின் அடையாளமாகவே இலட்சக்கணக்கானவர்கள் அஞ்சலட்டைகள் ஊடாக ஆளுநருக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான தமிழக அரசு கடந்த பிப்ரவரி 19, 2014 அன்றே இவர்களை விடுதலை செய்யும் முடிவை அமைச்சரவைத் தீர்மானமாக எடுத்ததும் தாங்கள் அறிந்ததே. அதிலிருந்தே இப்போது ஐந்து ஆண்டுகள் நிறைவடையப் போகின்றது. எழுவரின் உறவுகள் ஏங்கிய நெஞ்சத்தோடு சிறைக் கதவுகள் திறக்கும் நாளுக்காக காத்திருக்கின்றனர். பிரிவு 161இன் படி மாநில அரசு தண்டனைக் குறைப்புத் தொடர்பில் எடுக்கும் முடிவை ஆளுநரால் மறுக்க முடியாதென்பது பல்வேறு வழக்களில் இந்திய உச்சநீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றமும் உறுதிசெய்த நிலைப்பாடாகும். இந்த எழுவரில் ஒருவரான நளினி தொடர்பான வழக்கும் இதில் ஒன்றாகும். இப்போது மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த நான்கு மாதங்களாக தமிழக அரசின் பரிந்துரை தீர்மானத்தை ஏற்காமலும் மறுக்காமலும் காலந்தாழ்த்தி வரும் நிலையில் அவருக்கு மீண்டும் ஒரு நினைவூட்டலை தமிழக அரசு அனுப்பியிருப்பதாக அறிகிறேன். தமிழக அரசு சார்பில் தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஆளுநரை வலியுறுத்தி பின்வரும் நடவடிக்கைகளை செய்வது எழுவரின் விரைவான விடுதலைக்கு உதவும் என்று கருதுகிறேன்.

  1. வெளிப்படையாக ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்து தமிழக மக்கள் கவலை கொண் டிருப்பதை அறியச் செய்யலாம்.
  2. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அனைத்துக் கட்சிகளின் சார்பாகவும் ஒரு தீர்மானம் இயற்றி இவர்களின் விடுதலைத் தீர்மானத்தை உடனே ஏற்குமாறு ஆளுநரை வலியுறுத்தலாம்.
  3. எழுவர் விடுதலைத் தீர்மானத்தை ஆளுநர் ஏற்க வேண்டி சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கலாம்.

தமிழர் எழுவர் விடுதலை என்பது மாந்த உரிமை, மாநில உரிமை ஆகிய இரண்டும் இணைந்த பிரச்சனையாக உள்ளது. அவர்கள் விடுதலையின் வாயிலில் நீண்ட காலமாக காத்துக் கிடக்கின்றனர். சிறைக் கதவுகளைத் திறப்பதற்கான திறவுகோலை வரலாறு தங்களிடம் விட்டுவைத்துள்ளது. எழுவரின் விடுதலைக்கு ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவதற்கு என்னென்ன வழிகளில் முயற்சி எடுக்கலாம் என்பதைத் தாங்களும் தமிழக அரசும் கருதிப் பார்த்து காலத் தாழ்வின்றி ஆவனச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

கொளத்தூர் மணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here