2021 சட்டமன்ற தேர்தல் வியூகம் :கட்சிகளிடையே நடக்கும் போட்டா போட்டி- சேவற்கொடி செந்தில்.

தேர்தல் வியூகம் என்று ஆள் ஆளுக்கு அவரவருக்கு விருப்பமானவர்களை முன்னிறுத்தி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.இந்த நிலையில் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல்  மற்ற தேர்தல்களை போல அல்லாமல் இந்த முறை வித்தியாசமான சுவாரசியம் நிறைந்த ஒரு தேர்தலாக தான் இருக்க போகிறது.காரணம் அதிமுகவில் ஜெயலலிதா திமுகவில் கலைஞர் கருணாநிதி என்று இரு பெரும் ஜாம்பவான்களை இழந்து தமிழகம் சந்திக்க போகும் பொது தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை இவர்கள் இல்லாமல் பார்த்திருந்தாலும் பொது தேர்தலில் எப்படி இருக்கப்போகிறது என்று  அனைவருக்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் எப்படி தேர்தல்களை நடத்துவது என்று வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.அது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் கொரோனா பரவலை தாண்டி கட்சி தாவல், உட்கட்சி பூசல், யார் முதல்வர், கட்சி கொள்கை என்ன? யார் தேர்தல் உத்தியாளராக இருக்கலாம் என்று தமிழக அரசியல் கட்சிகள் அவர்கள் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர்.தமிழகத்தில் தெருவுக்கொரு கட்சி இருந்தாலும் தமிழகத்தில் 50 ஆண்டுகாலத்தில் இரு பெரும் திராவிட கட்சிகள்  தான் மாறி மாறி ஆட்சியை பிடித்துள்ளனர்.

*திமுக* 

திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு கட்சியின் பொறுப்பை மு.க.ஸ்டாலின் கைப்பற்றுகிறார். அடுத்து அடுத்து அதிரடி முடிவுகள் எடுத்து தேர்தலுக்கு தயாராகி வந்தார்.இவர்களுடன் ஐ பேக் நிறுவனமும் இணைந்து தேர்தல் உத்திகளை வகுக்குமென்று மு.க.ஸ்டாலின் தனது ட்வீட் மூலம் சந்தோசமாக பதிவிட்டார். அப்போது தான் இந்த கொரோனா அவர்களுக்கு ஒரு சிறிய நெருடலாக இருந்தது. கொரோனா பேரிடர் காலத்தில் ஆளும் கட்சியை விட ஒருபடி மேலே சென்று ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலம் மக்களுக்கு உதவி கரம் நீட்டியது மக்களின் நம்பிக்கையை கைப்பற்றியது. இதற்கிடையில் கொரோனா பாதிப்பால் அன்பழகன் காலமானார். இந்த துக்க நேரத்தில்தான் திமுகவில் இருந்து வி பி துரைசாமி போன்றோர் பாஜகவிற்கு கட்சி தாவினர். மூத்த நிர்வாகிகளுக்கு   அங்கு மரியாதை கிடையாது உதயநிதி மற்றும் அன்பில் மகேஷ் இருவரின் கட்டுப்பாட்டில் தான் பெரும்பாலான முடிவுகள் எடுக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டினர். இந்த நேரத்தில் ஸ்டாலின் சிறிது கலக்கத்தில் இருக்க ஐ பேக்  நிறுவனத்துக்கும் திமுகவின் ஐ.டி டீமுக்கும் அடிக்கடி உரசல்கள் வருவது உண்டு. இதையும் சமாளித்து தனது ஒரே லட்சியம்  2021 தேர்தலில் வெற்றி என்று நோக்குடன் சென்று கொண்டிருக்கிறார்.

திமுக இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுடனும் மற்றும் தனது தனிப்பெரும்பான்மையை நிரூபிக்கவும் அதிக முயற்சிகள் எடுக்க வாய்ப்பு உள்ளது.காங்கிரஸ்,விடுதலை சிறுத்தை ,மதிமுக மற்றும் சிறிய தோழமை கட்சிகள் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றனர்.திமுக தற்போது எதிர் கொண்டு உள்ள ஒரு புது பிரச்னை இந்து விரோத கட்சி அதாவது இந்துக்களை புறக்கணிக்க கூடிய கட்சி என்ற குற்றச்சாட்டை  எதிர்கொண்டு பயணிக்கிறது. தற்போது வரை திமுகவில் குழப்பத்திற்கு என்று இடம் கிடையாது கட்சி தாவிய  சிலரை கழித்து மீதம் உள்ளவர்களை வைத்து அரசியல்  களம் காண தயாராக இருக்கிறது. 

*அதிமுக* 

திமுக ஒரு நிலைப்பாட்டில் பயணிக்கிறது என்றால் அதிமுக அப்படியே நேர் எதிர். பல நிலைப்பாடுகளை எதிர்கொண்டு ஆட்சி சக்கரம் ஓடிக்கொண்டிருக்கிறது.முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நிறை சிறிதளவும் குறை பெரிதளவும் தயாரித்து வைத்துள்ளது எதிர்க்கட்சிகள். கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசிடம் நிதி  கேட்காமல் இருந்தது, அனைத்து முடிவும் மத்திய அரசிடம் கேட்டு எடுப்பது, கொரோனா நிவாரண நிதி ரேஷன் பொருட்கள் , இ-பாஸ் என்று அடுக்கடுக்காக தாக்குதல்களை எதிர்க்கட்சிகள்  முன்வைத்தாலும் ஒரு  வாரம் தாங்காது, ஒரு மாதம் தாங்காது என்று கூறிய நிலையில் தற்போது 4 ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்து அம்மாவின் அரசு என்பதை கடந்து அண்ணன் எடப்பாடியார் அரசு என்று முழங்க வைத்திருக்கிறார். அதிமுகவை பொறுத்தவரை யார் தலைமை என்ற பிரச்னை தான். ஏன் என்றால் செப்டம்பரில் சசிகலா  வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சசிகலா வந்தால் யார் யார் அந்த பக்கம் தாவ தயாராக உள்ளார்கள் என்று  பக்கம் பயத்துடன் உள்ளனர்.இரட்டை இலைக்கு கட்சிக்கு பங்கம் வந்து விடுமோ என்ற பயம் ஒரு பக்கமாக இருக்க , அடுத்த பக்கம் யார் முதல்வர் என்று மீண்டும் ஒரு தர்ம யுத்தம் நடத்தலாமா என்ற யோசனையில் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள். இரவோடு இரவாக ஒரு போஸ்டர் ஒட்டியதில் சுதந்திர தினத்தில் ஒட்டு மொத்த தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி அமைச்சர்கள் மாறி மாறி சமாதானம் பேசி தற்போது கட்சி தலைமை இல்லாமல் யாரும் பேச கூடாது என்று  கூட்டாக இ.பி.எஸ், ஓ.பி.எஸ்  அறிக்கை வெளியிட்டனர். இப்போது கூட்டணி ஆட்சியா அல்லது தனித்து போட்டியா என்பது அடுத்த கட்ட முடிவு ,யார் முதல்வர் என்பது தான் முதல் பிரச்னை. ஓ.பி.எஸ் சூசகமாக தொண்டர்கள் எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் நான் எண்ணியதில்லை என்று ஒரு அடி  போட்டுள்ளார். அதாவது யாரும் பேச கூடாது என்று கூறிவிட்டு அதனை கடந்து செல்லாமல் அதே இடத்தில் எனக்கு ஒரு நியாயம் கிடைத்தாக வேண்டும் என்று நினைக்கிறார்.இவர்கள் ஒரு புறம் அடுத்து சசிகலா வெளியே வந்தால் என்ன நடக்கும் என்பது இன்னொரு பக்கம். இவையனைத்தும் தெரியாதது போல மதுரையை 2ம் தலைநகராக்கும் முயற்சியில் ஓருவர் இறங்கியுள்ளார். எனக்கு பதவி முக்கியமல்ல வளர்ச்சி தான் முக்கியம் என்று தென் தமிழக மக்களின் நெஞ்சத்தை லேசாக தொட்டுள்ளார்.

*பாஜகவின் மாற்று கூட்டணி*

இருபெரும் திராவிட கட்சிகளின் நிலை இது வென்றால் தேசிய கட்சியின் நிலைமை இதை விட பரிதாபம்.அவர்கள் கட்சியின் தமிழக தலைவர் நியமனத்தில் பல்வேறு குளறுபடிக்கு நடுவில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். அதாவது இந்த முறை எப்படியாவது 2021 ல் தேசிய கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடித்துவிடட வேண்டும் என்ற ஒரு சீரியஸ் ஆப்ரேஷன். இதற்கு பலரையும் தயார் செய்து வைத்திருக்கிறார்.தனது கடும் உழைப்பில் ஏகப்பட்ட கலை நட்சத்திரங்களை கட்சியில் இணைத்து தலைமை செயலகத்தை அலங்கரிக்க போகிறோம் என்று சூளுரை எடுத்துள்ளார். தமிழக பா.ஜ.க சமீபத்தில் சந்தித்த சில பிரச்சனைகள், பாஜகவை மக்கள் மத்தியில் அருவருப்பை ஏற்படுத்தியது.திருவள்ளுவர் காவி நிறம்,சி ஏ ஏ போராட்டம் கந்த சஷ்டி கவசம் ,வேல் பூஜை ,அபின் கடத்தல் ,தற்போது விநாயகர் சதுர்த்தி.தன்னை மதசார்பற்ற கட்சி என்று முன்னிலை நிறுத்த முயன்றாலும் தனது கட்சியின் இந்து என்ற அடிப்படை குணம் வெளிப்பட்டு விடுகிறது.இவர்களுக்கு தேர்தலில் ஜெயிக்க வேண்டும் எப்படி ஜெயித்தால் என்ன என்பது போல, பாஜக வேட்பாளர்களை ஜெயிக்க வைக்கும் மாவட்ட செயலாளருக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்று கூறியது அதுமட்டுமா பெரிய கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை  தன்வசம் இழுத்து முக்கிய பதவிகளை அவர்களுக்கு வழங்குகிறது.இதில் இன்னும் வசப்படாமல் இருப்பது கமல், ரஜினி மற்றும் சிறிய கட்சிகள் சேர்ந்த சிலர் அதாவது கொள்கை விஷயத்தை தாண்டி வேறு எதுவும் இல்லாமல் வெறும் இந்து என்று ஒற்றை வார்த்தையை வைத்து கொண்டு அரசியல் செய்ய நினைக்கிறது.அதை  தான் ஆப்ரேஷன் தமிழ்நாடு என்று கூறி சமூக வலைத்தளம் ,போன்ற இடங்களில் ஆட்களை நியமித்து கேவலமான செயல்களை சமூக வலைத்தளத்தில் இது  போன்ற வேலைகளை செய்து வருகிறது. கறுப்பர் கூட்டம் ஒரு முறை கடவுளை விமர்சித்து செய்தால் இவர்கள் ஓராயிரம் முறை கடவுளின் பெயரால் கொச்சை படுத்துகிறார்கள்

சரி இவர்கள் தவிர மற்ற கட்சிகள் உள்ளது அவர்கள் நிலை என்று கேட்ப்பீர்கள்,அவர்களில் சிலர் கூட்டணி மூலம் 1 சீட்டு கிடைத்தால் கூட போதும் என்பார்கள்.சீமான் போன்று தனித்து மோதக்கூடிய மற்றவர்கள் தனியே களம் காண்பார்கள்.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று புரிகிறது ரஜினி குறித்து ஒன்றும் இல்லையே என்பதுதானே! இந்த தேர்தலிலும் அவ்வளவுதானா என்றும், ஆம்,அவர் கட்சி ஆரம்பிப்பார் என்பது தண்ணியில் எழுதவேண்டிய வார்த்தைகள்.அவருடைய அரசியல் இந்த காலகட்டத்திற்கு எடுபடாது அதுவும் இல்லாமல் ஆன்மீகத்தை அரசியலாக்குவது சரியானதாக இருக்காது. இந்நிலையில் ரஜினியின் நம்பிக்கைக்குரிய நாயகனாக அறியப்பட்ட ஐ.பி.எஸ் அண்ணாமலை பா.ஜ.கவில் இணைந்து நான் சாதாரண தொண்டனாக,கட்சிக்கு பாடுபடுவேன் என்று அந்த கூட்டத்தில் தானும் ஒரு அங்கம் என்று சரண்டனர் ஆகிவிட்டார். தற்போதும் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி கை கழுவும் நிலைக்கு வந்துள்ளார் என்கின்றனர்,போயஸ் தோட்டம் வட்டாரத்தினர்.

இப்படியான பரபரப்பான அரசியல்  சூழ்நிலையில் கட்சிகள் எதை முன்னிறுத்தினாலும் மக்கள் கடந்த காலங்களில் அடைந்த நன்மை, தீமைகளையும், எதிர்காலத்தில் சந்திக்க போவதையும்  சீர்தூக்கி பார்த்தே முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

*சேவற்கொடி செந்தில்*