2020ஆம் ஆண்டுகள் காணப்போகும் பெரும் பொருளாதார மந்தநிலை – நூரியல் ரூபினி

இந்த கட்டுரையை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் முனைவர் சபூர் அலி.

தொற்றுநோய் தாக்கும் கால கட்டத்தை ஒருபோதும் நாம் நல்ல நேரம் என்று கருத வாய்ப்பில்லை என்றாலும், உலகப் பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருக்கும் இத்தருணத்தில் COVID-19 வைரஸ் நம்மை தாக்கியுள்ளது. நீண்ட காலமாகவே நமது உலகம் நிதி நிலை, அரசியல், சமூக பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்கள் என பல கோணங்களில் விழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்பொழுது இவை அனைத்தும் விழ்ச்சியை நோக்கி செல்லும் வேகம் படு தீவிரமாக அதிகரித்து இருக்கிறது. 

நியூயார்க்கில் –2007-09 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பின்னர், கொள்கை தவறுகளால் உலகப் பொருளாதாரத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அபாயங்கள் அதிகரித்தன. இதனால் ஏற்பட்ட  நிதிச் சரிவு மற்றும் அதனை தொடர்ந்து அடுத்தடுத்து உருவான பொருளாதார  மந்தநிலை ஆகியவற்றின் கட்டமைப்பு சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அரசாங்கங்கள் பெரும்பாலும் குருட்டு நம்பிக்கையில், பெரிய எதிர்மறையான அபாயங்களை உருவாக்கின, அது இப்பொழுது மற்றொரு நெருக்கடியை தவிர்க்க முடியாததாக ஆக்கிவிட்டன. இப்போது அந்த நெருக்கடி வந்துவிட்டதால், அபாயங்கள் இன்னும் தீவிரமாக வளர்ந்து வருகின்றன. பெருமந்தநிலை இந்த ஆண்டு மந்தமான U- வடிவ மீட்புக்கு வழிவகுத்தாலும், துரதிர்ஷ்டவசமாக பத்து அச்சுறுத்தும் மற்றும் ஆபத்தான போக்குகளின் காரணமாக இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் எல்-வடிவ “கிரேட்டர் டிப்ரஷன்” வருவதற்கான அனைத்து சூழ்நிலைகளும் உருவாகி இருக்கின்றன.

முதல் போக்கு, நிதி பற்றாக்குறைகள் மற்றும் அவை தொடர்பான அபாயங்கள்: கடன்கள் மற்றும் கடன்களை திருப்பி செலுத்த இயலாத போக்கு. COVID-19க்கு எதிரான திட்டங்கள் நிதி பற்றாக்குறையை மிகப்பெரிய பெரிய அளவில் அதிகரிக்கும் காரணிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. மேலும்  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% அல்லது அதற்கு அதிகமான அளவீடுகளை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் பல நாடுகளில் பொதுக் கடன் நிலைகள் நிலைத்திருக்கவில்லை என்றாலும் அது  ஏற்கனவே அதிகமாக இருக்கின்றன.

இங்கு மோசமான செய்தி  என்னவென்றால், பல வீடுகள் வருமான இழப்பை சந்திக்கும். தனியார் நிறுவனங்களின் கடன் அளவுகள் நிலை தன்மை இல்லாததாக மாறும். இச்சூழ்நிலை மிகப்பெரிய அளவில் பல துறைகளின் திவால்நிலைகளுக்கு வழிவகுக்கும். பொதுக் கடனின் உயரும் அளவோடு சேர்ந்து,  இவை அனைத்தும் பத்து வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையைத் விட ஒரு மோசமான பொருளாதார மந்த நிலையை உறுதி செய்கிறது.

இரண்டாவது காரணி மேம்பட்ட பொருளாதாரங்களை கொண்ட நாடுகளில்  ஏற்படபோகும் நெருக்கடி. COVID-19 நெருக்கடி சுகாதார அமைப்புகளுக்கு அதிகமான பொது நிதியை ஒதுக்கப்பட வேண்டும் என்பதையும், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் அது தொடர்புடைய பொதுப் பொருட்கள் ஆடம்பர செலவினங்கள் அல்ல அவை அத்தியாவசிய தேவைகள் என்பதையும் காட்டுகிறது. ஆயினும்கூட, பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் அதிக வயதான சமூகங்கள் இருப்பதால், எதிர்காலத்தில் இத்தகைய செலவினங்களுக்கு நிதியளிப்பது இன்றைய நிதியுதவி செய்யப்படாத சுகாதார-பாதுகாப்பு மற்றும் சமூக-பாதுகாப்பு அமைப்புகளிலிருந்து மறைமுகமான கடன்களை இன்னும் பெரியதாக மாற்றும்.

மூன்றாவது பிரச்சினை  ‘பொருளாதார செயல்பாடுகளில்  பொதுவான அளவிலான விலைகளைக் குறைத்தல்’ மூலமாக வளர்ந்து வரும் ஆபத்து. தற்போதைய சூழ்நிலை ஆழ்ந்த  பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்த நெருக்கடி பொருட்கள் (பயன்படுத்தப்படாத இயந்திரங்கள் மற்றும் திறன்) மற்றும் தொழிலாளர் சந்தைகள் (வெகுஜன வேலையின்மை) ஆகியவற்றில் பெரும் சரிவை உருவாக்குகிறது, அத்துடன் எண்ணெய் மற்றும் தொழில்துறை உலோகங்கள் போன்றவற்றின்  விலைகளில் சரிவை ஏற்படுத்துகிறது. இது கடன் மற்றும் விலை குறைப்பை சாத்தியமாக்குகிறது மற்றும் பொருளாதாரம் நொடித்துப் போகும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

நான்காவது (தொடர்புடைய) காரணி நாணய மதிப்பு  குறைப்பு. மத்திய வங்கிகள் ‘விலை குறைதலை’ எதிர்த்துப் போராடவும், வட்டி விகிதங்களை உயர்வதற்கான அபாயத்தைத் தடுக்கவும் முயற்சிக்கும்போது, பணம் சார்ந்த கொள்கைகள் இன்னும் வழக்கத்திற்கு மாறான மற்றும் தொலைநோக்குடையதாக மாறும். குறுகிய காலத்தில், மனச்சோர்வு மற்றும் விலை குறைதலை  தவிர்ப்பதற்கு அரசாங்கங்கள் பணமாக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறையை இயக்க வேண்டும். ஆயினும்கூட, காலப்போக்கில், துரிதப்படுத்தப்பட்ட உலகமயமாக்கல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்புவாதத்திலிருந்து நிரந்தர எதிர்மறை விநியோக அதிர்ச்சிகள் அனைத்தும் தேக்கநிலையை தவிர்க்க முடியாதவையாக மாற்றும். 

ஐந்தாவது பிரச்சினை பொருளாதாரத்தின் பரவலாக்கப்பட்ட டிஜிட்டல் செயல்பாடுகளினால் வரும் சீர்குலைவு. மில்லியன் கணக்கான மக்கள் வேலை இழக்கிறார்கள் அல்லது வேலை செய்கிறார்கள் மற்றும் தேவைக்கு  குறைவாகவே சம்பாதிக்கிறார்கள், இருபத்தியோராம் நூற்றாண்டின் பொருளாதாரத்தில் வருமானம் மற்றும் நலவாழ்வு ஆகியவற்றிக்கு இடையேயான இடைவெளிகள் மேலும் விரிவடையும். எதிர்கால விநியோக-சங்கிலி அதிர்ச்சிகளில் இருந்து பாதுகாக்க, மேம்பட்ட பொருளாதாரங்களில் உள்ள நிறுவனங்கள் குறைந்த விலை பிராந்தியங்களிலிருந்து அதிக விலை உள்நாட்டு சந்தைகளுக்கு உற்பத்தியை மீண்டும் கரைக்கும். ஆனால் வீட்டில் தொழிலாளர்களுக்கு உதவுவதை விட, இந்த போக்கு தன்னியக்கவாக்கத்தின் வேகத்தை துரிதப்படுத்தும், ஊதியங்கள் மீது கீழ்நோக்கி அழுத்தம் கொடுக்கும், மேலும் ஜனரஞ்சகம், தேசியவாதம் மற்றும் இனவெறி ஆகியவற்றின் தீப்பிழம்புகளை மேலும் தூண்டும்.

ஆறாவது காரணி: உலகமயமாக்கலுக்கு எதிரான இயல்பை பற்றியது. ஏற்கனவே சிறப்பாக வளர்ந்து கொண்டிருந்த நிலவியல் ரீதியான பிரிவுகளையும், துண்டு துண்டாக தேசியங்கள் உடையும் போக்கும் தொற்றுநோய் காரணமாக    துரிதப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவும் சீனாவும் வேகமாக தொடர்பை இழக்கும், மேலும் பெரும்பாலான நிறுவனங்கள் உள்நாட்டு நிறுவனங்களையும் தொழிலாளர்களையும் உலகளாவிய இடையூறுகளிலிருந்து பாதுகாக்க அதிகப்படியான கூடுதலான பாதுகாப்புவாத கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் பதிலளிக்கும். பொருட்கள், சேவைகள், மூலதனம், தொழிலாளர், தொழில்நுட்பம், தரவு மற்றும் தகவல் ஆகியவற்றின் இயக்கத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளால் தொற்றுநோய்க்கு பிந்தைய உலகம் குறிக்கப்படும். இது ஏற்கனவே மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுத் துறைகளில் நடக்கிறது, அங்கு அரசாங்கங்கள் நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஜனநாயகத்திற்கு எதிரான பின்னடைவு இந்த போக்கை வலுப்படுத்தும். ஜனரஞ்சகத் தலைவர்கள் பெரும்பாலும் பொருளாதார பலவீனம், வெகுஜன வேலையின்மை மற்றும் அதிகரித்துவரும் சமத்துவமின்மை ஆகியவற்றை பயன்படுத்தி தங்களது சொந்த அரசியல் சக்தியை வலிமைபடுத்துவார்கள். உயர்ந்த பொருளாதார பாதுகாப்பின்மை நிலைமைகளின் கீழ், நெருக்கடிக்கு வெளிநாட்டினரை பலிகடாவாக்க ஒரு வலுவான தூண்டுதல் இருக்கும். குறிப்பாக இடம்பெயர்வு மற்றும் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் செயல் திட்டங்களில், உடல் உழைப்பு தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் பரந்த கூட்டாளிகள் ஜனரஞ்சக சொல்லாட்சிக்கு எளிதில் மயங்கி  பாதிக்கப்படுவார்கள்

எட்டாவது காரணி: அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் விட்டுகொடுக்காத நிலைப்பாடு. தொற்றுநோய்க்கு சீனாவை குறை கூற டிரம்ப் நிர்வாகம் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதால், சீனாவின் அமைதியான உயர்வைத் தடுக்க அமெரிக்கா சதி செய்கிறது என்ற கூற்றை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் ஆட்சி இரட்டிப்பாக்கும். வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, தரவு மற்றும் பண ஏற்பாடுகளில் சீன-அமெரிக்க துண்டிப்பு தீவிரமடையும்.

இதில் மோசமான விஷயம் என்னவென்றால், இந்த இராஜதந்திர முறிவு அமெரிக்காவிற்கும் அதன் போட்டியாளர்களுக்கும் இடையே ஒரு புதிய பனிப்போருக்கு களம் அமைக்கும் – சீனா மட்டுமல்ல, ரஷ்யா, ஈரான் மற்றும் வட கொரியாவிற்கும். தற்பொழுது ஒரு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வருவதால், இரகசிய இணையப் போரில் ஒரு எழுச்சியை எதிர்பார்க்க ஒவ்வொரு காரணமும் உள்ளது, இது வழக்கமான இராணுவ மோதல்களுக்கு கூட வழிவகுக்கும். எதிர்காலத் தொழில்களைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்திலும், தொற்றுநோய்களை எதிர்ப்பதிலும் தொழில்நுட்பம் முக்கிய ஆயுதமாக இருப்பதால், அமெரிக்க தனியார் தொழில்நுட்பத் துறை பெருகிய முறையில் தேசிய-பாதுகாப்பு-தொழில்துறை வளாகத்தில் ஒருங்கிணைக்கப்படும்.

பத்தாவது  காரணி: புறக்கணிக்க முடியாத சுற்றுச்சூழல் சீர்குலைவு. இது COVID-19 நெருக்கடி காட்டியுள்ளபடி, நிதி நெருக்கடியை விட பொருளாதார அழிவை ஏற்படுத்தும் வலிமையான காரணியாகும். தொடர்ச்சியான தொற்றுநோய்களான (1980 களில் இருந்து எச்.ஐ.வி, 2003 இல் எஸ்.ஏ.ஆர்.எஸ், 2009 ல் எச் 1 என் 1, 2011 ல் மெர்ஸ், 2014-16 இல் எபோலா) போன்றவை, உலகமயமாக்கலின் காரணமாக எழுந்த இயற்கை வளங்களை முறையாக சரியான கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்தாத போக்கினால் ஏற்பட்ட காலநிலை மாற்றம் போன்று மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு ஆகும். இவ்தொற்றுநோய்கள் மோசமான உடல்நலம் மற்றும் சுகாதாரத் தரங்களை உருவாக்கி இருக்கின்றன.  இதன் அடிப்படையில் பார்க்கும் போது தொற்றுநோய்கள் மற்றும் காலநிலை மாற்றத்தின் பல நோயுற்ற அறிகுறிகள் அடுத்த ஆண்டுகளில் அடிக்கடி தோன்றும் மேலும் இவை அதிக பொருட் செலவினங்களை உருவக்கும்.

இந்த பத்து அபாயங்களும், ஏற்கனவே COVID-19 தாக்கப்படுவதற்கு முன்பு இருந்தே பெரிதாக வளர்ந்து கொண்டிருக்கின்றன, இப்போது ஒரு முழுமையான புயலுக்கு தயாராகி இருப்பது போல் அச்சுறுத்துகின்றன. இது முழு உலகப் பொருளாதாரத்தையும் ஒரு பத்தாண்டு காலத்திற்கு விரக்தியில் ஆழ்த்தபோகிறது. 2030 களில், தொழில்நுட்பமும் திறமையான அரசியல் தலைமையும் இந்த சிக்கல்களைக் குறைக்கவோ அல்லது தீர்க்கவோ முடியும், மேலும் அனைத்தையும் உள்ளடக்கிய, கூட்டுறவு மற்றும் நிலையான சர்வதேச ஒழுங்கிற்கு வழிவகுக்கும். ஆனால் எந்தவொரு மகிழ்ச்சியான முடிவும் வரவிருக்கும் பெரும் பொருளாதார மந்தநிலையிலிருந்து தப்பிக்க ஒரு வழியைக் கண்டுபிடிப்பதை பொறுத்தே இருக்க முடியும்.

நூரியல் ரூபினி நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் பொருளாதார பேராசிரியராகவும், ரூபினி மேக்ரோ அசோசியேசன்ஸ் தலைவராகவும் இருக்கிறார். கிளின்டன் நிர்வாகத்தின் போது வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர்களின் கவுன்சிலில் சர்வதேச விவகாரங்களுக்கான மூத்த பொருளாதார நிபுணராகவும் இருந்துள்ளார். அவர் சர்வதேச நாணய நிதியம், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி  மற்றும் உலக வங்கி ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார். அவரது வலைத்தளம் NourielRoubini.com