2019 நாடாளுமன்ற தேர்தல்- வெற்றி யாருக்கு?……அபராஜிதன்.

பா.ஜ.க தோற்க வேண்டும் என்பதே பெரும்பான்மையான மக்களுடைய விருப்பமாக இருக்கிறது.ஏனென்றால் கடந்த ஐந்து வருடங்களில் மோடி ஆடிய ஆட்டம் அப்படி.
ஒவ்வொரு கட்சிக்கும் உறுப்பினர்கள் ,ஆதரவாளர்கள் என்றொரு வட்டம் இருக்கிறது.அவர்கள் பெரும்பாலும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிக்குதான் வாக்களிப்பார்கள்.ஆனால் ஆளும்கட்சியின் மோசமான ஆட்சியினால் பாதிக்கப்பட்ட நடுத்தர வர்க்கமும் ,நடுநிலையாளர்களும் தேர்தலுக்கு தேர்தல் தங்கள் நிலைபாட்டை மாற்றுவார்கள்.இந்த தேர்தலில் இந்த வாக்காளர்கள் மோடிக்கு ஆதரவாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

வளர்ச்சி, வளர்ச்சி என்று முழக்கமிட்ட மோடியின் ஆரவாரத்தை நம்பிய இளைஞர்களும் பா.ஜ.க ஆட்சியின் வளர்ச்சி கோஷம் மிகப்பெரிய ஏமாற்றுவேலை என்பதை உணர்ந்தபின் தாமரை மலரவே கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கின்றனர்.

இந்திய அளவிலும் பா.ஜ.க வுக்கு இறங்குமுகம்தான்.தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக வரமுடியுமே அன்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது என்பதை அந்த கட்சியே உணர்ந்திருக்கிறது.

பா.ஜ.கவின் பலவீனம் காங்கிரசுக்கு பலம்.ஆனால் முக்கியமான இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் மிகவும் பலவீனமாக இருப்பதால் மாற்று என்ற வகையில் பிரதான பங்கை வகிக்க அதனால் முடியாது.
தமிழ்நாட்டை பொருத்தவரை அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி மிகவும் மோசமான மக்கள் விரோத கூட்டணியாக இருக்கிறது. அ.தி.மு.க வெல்வதே கடினம் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை இருக்கிறது. அ.ம.மு.க -டி.டி.வி.தினகரன் பல இடங்களில் அ.தி.மு.க வின் வாக்குகளை கணிசமாக பிரிக்கக்கூடிய வாய்ப்புகள் நிலவுவதால் அ.தி.மு.க வின் வெற்றி வாய்ப்புகள் குறைவுதான்.அதன் கூட்டணி கட்சிகள் அவ்வளவு பலமானவை அல்ல என்பதால் தி.மு.க கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் தென்படுகின்றன.
தேர்தல் வாக்குறுதிகள் என்று பார்த்தாலும் காங்கிரஸ்- தி.மு.க கூட்டணியின் வாக்குறுதிகள் மக்கள் மத்தியிலே நம்பிக்கையை ஊட்டியிருக்கின்றன.பா.ஜ.க வின் வெற்று வாக்குறுதிகளும் ,மக்களின் கடந்தகால அனுபவமும், அ.தி.மு.க வின் ” வலியுறுத்துவோம்” வாக்குறுதியும் ஏகமாக நகைப்புள்ளாகியிருக்கின்றன.

ஆனால் இவர்களுக்கு இவர் மாற்று என்பதில் நமக்கு உடன்பாடில்லை.பா.ஜ.க அதன் வழியில் மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்துகிறது.காங்கிரஸ் அதன்வழியில் செய்யும். தி.மு.க வும் ,அ.தி.மு.க வும் அப்படியே.

எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் தோல்வி மக்களுக்கே என்பதுதான் நாம் இதுகாறும் கற்றுக்கொண்ட பாடம். உண்மையான மாற்றை மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் அந்த இடத்தில் தன்னை நிறுத்தி கொள்ளும் அளவிற்கு தன்னை மாற்று என்று சொல்லக்கூடிய எந்த கட்சியும் மக்கள் மத்தியில் வேலை செய்யவில்லை.

திராவிட கட்சிகள் பேசிபேசியே ஆட்சிக்கு வந்துவிட்டனர் என்ற தவறான புரிதலை வைத்துக்கொண்டு அரசியல் பயணம் செய்யும் பலர் மிகப்பெரிய இலக்குகளின் முதல்படியினை கூட எட்டமாட்டார்கள்.
பா.ஜ.க தோற்கடிக்கபடும் . வெல்லும் கட்சிகளின் புதிய ஆட்சி மீண்டும் மக்களை தோற்கடிக்கும் காரியங்களில் இறங்குவதற்கு முன் நாம் செயற்பட வேண்டும். மக்களை வெல்ல வைப்பதற்கு.

அபராஜிதன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here