ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன? . – அஸ்வினி கலைச்செல்வன்.

ஹைட்ரஜனும் கார்பனும் சேர்ந்த கலவை தான் ஹைட்ரோ கார்பன். ஹைட்ரஜனுடன்,கார்பனும் அதோடு ஆக்சிஜனும் சேரும் போது தான் அது எரிபொருளாக மாற்றப்படும்.

ஹைட்ரோ கார்பன் எளிய கரிமச்சேர்மங்கள். பெட்ரோலியம், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, நிலக்கரி, எரிவாயு, நாஃப்தா,ஷேல் எரிவாயு ஆகிய அனைத்தின் ஒட்டுமொத்த வடிவமே ஹைட்ரோகார்பன்கள் தான்.

பூமிக்கடியில் இந்த ஹைட்ரோகார்பன்கள் புதைந்திருப்பதாக 2006 ஆம் ஆண்டே அதை வெளியெடுப்பதற்கான பணிகளை தொடங்கினார்கள். தமிழகத்தில் மட்டும் மொத்தம் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 1700களுக்கு முன்பே ஹைட்ரோ கார்பனை வெளியே எடுத்து வெளி எரி இன்ஜின் (External Combustion) முறையில் பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

வேதாந்தா நிறுவனத்தின் செய்தித்தொடர்பு அலுவலகத்தின் அறிவிப்புபடி, எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளுக்காகத் தமிழகம் உட்பட 41 இடங்களிலும், ஏற்கனவே இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் வளங்கள் இருப்பதாகவும் மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை கண்டறிந்துள்ளது.

இவ்விடங்கள் குறித்த ஆய்வு 2016 ஆம் ஆண்டு தொடங்கி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்ட இடங்களுக்கு ஒப்பந்தங்கள் மூலம் பங்கு பிரித்தன.

முதற்கட்டமாக நெடுவாசலில் பணிகள் தொடங்க ஜெம் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டது.பிறகு மக்களின் கடும் எதிர்ப்பினால் அது காணமல் போனது குறிப்பிட தக்கது. மேலும் ஆய்வு செய்த இடங்களில் எண்ணெய் எடுக்கவே எதிர்ப்பு கிளம்பி வந்த நிலையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை ஆய்வு நடத்தாத இடங்களையும் சேர்த்தே ஆய்வு மேற்கொள்ள ஒப்பந்தம் கோரியிருக்கிறது.

OALP ஒப்பந்தமும் அதிகாரமும்:
Open Acreage Licensing Policy என்பதே அந்த ஒப்பந்தம். அதாவது OALP அடிப்படையில் போடப்படும் ஒப்பந்தங்கள் கிட்டதட்ட நில ஆக்கிரமிப்புச் சட்டத்தை விட அதிக அளவிளான ஏற்புதன்மையற்ற அதிகாரங்களை கொண்டது.

விவசாய நிலங்கள் மட்டுமின்றி,பல வாழிடங்களையும் சேர்த்து அபகரித்து கொள்ளும் அதிகாரம் அந்த ஒப்பந்ததிற்கு உள்ளது. மேலும் இந்த OALP ஒப்பந்தத்தின்படி,கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி, மீத்தேன், ஷேல் ஆயில், ஷேல் கேஸ் உள்ளிட்ட பூமிக்கு அடியில் உள்ள எந்தவித‌மான வளத்தையும் எடுத்துக் கொள்ள‌, திறந்தவெ‌ளி அனுமதி முறையை கடைபிடித்து மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது. ஒற்றை அனுமதி என்பது ஒரே அனுமதியைப் பெற்றுக் கொண்டு, பூமிக்கடியில் இருக்கும் வளம் எதுவாக இருந்தாலும் ஹைட்ரோகார்பன் என்ற பொதுப் பெயரி‌ல் எடுத்துக் கொள்ளலாம். இந்த வகையில்‌, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு, திறந்தவெளி அனுமதி முறையில் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சுற்று அனுமதி அளித்தது மத்திய அரசு. அதில் வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த ஹைட்ரோ கார்பன் வளங்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு தான் எடுக்கப்படும். அதன் பின்னாக நிலக்கரி சுரங்கங்களை தோண்டி எடுத்துக்கொள்ள அதிகாரங்களும் அந்த ஒப்பந்ததிற்கு உள்ளது.

சுமார் 6000 அடிவரைக்கும் இருக்கும் ஹைட்ரோ கார்பனை எடுக்க வேண்டுமானால் அதன் முன்னாக அடர்த்தி அதிகமாக இருக்கும் நிலத்தடி நீரை முழுவதுமாக வெளியேற்ற வேண்டும் என்பதே. ஹைட்ரோ கார்பன் நீரைவிட அடர்த்தி குறைவு என்பதால் அதை எடுக்கும் முன் நீரை வெளியேற்ற வேண்டும். இதனால் பூமிக்கடியில் உருவாகும் வெற்றிடம் நிலத்தட்டுகளின் இடையே அதிர்வுகளும் நகர்வுகளும் நில அதிர்வை உருவாக்கும் என்பது மட்டுமன்றி கடல் நீர் நிலப்பரப்புகளை ஆக்கிரமிக்கும் வாய்ப்புகளும் இருப்பதாக ஆராய்ச்சி குழுக்கள் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

அண்மையில், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழகத்தில் நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட எந்த இடத்திலும் மீத்தேன், ஷேல் காஸ் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை” என்று தெரிவித்தார்.

அவர் தெரிவித்தபடி, இதுவரை எடுக்கப்படவில்லை என்பது உண்மை என்றாலும், ‘ஹெல்ப்’ (HELP- Hydrocarbon Exploration and Licensing Policy) எனப்படும் ஒற்றை உரிமம் திட்டத்தில், இனி ஹைட்ரோ கார்பன்களில் மேற்கூறிய எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள முடியும். இதற்கான திறந்தவெளி அனுமதி அளிப்பதற்கான ஏல நடைமுறை தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே காவிரி டெல்டாவில் ஆபத்தான நீரியல் விரிசல் (ஹைட்ராலிக் ஃபிராக்சர்) சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட விவரமும் அதற்கான ஆதாரங்களும் தற்போது வெளிவந்துள்ளன.

நீரியல் விரிசல் என்றால் என்ன?

நீரியல் விரிசல் முறை என்பது பூமியில் மிக ஆழத்தில் தேங்கியிருக்கும் இயற்கை எரிவாயுவை கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து முழுமையாக வெளியே கொண்டுவர உருவாக்கப்பட்ட முறையே நீரியல் விரிசல் முறை.

இதன்படி 10 ஆயிரம் மீட்டருக்கும் அப்பால் வரை பூமிக்குள் ஆழமாக துளையிடப்படும். பின்னர் அங்கிருந்து பக்கவாட்டில் 2 கிலோ மீட்டர் வரை எல்லா திசைகளிலும் துளை போடப்படும். பின்பு பூமியின் மேலிருந்து மிகுந்த அழுத்தத்தில் வேதி நுண் துகள்கள் கலந்த நீர் துளைக்குள் செலுத்தப்படும். அவ்வாறு செலுத்தும்போது பக்கவாட்டு துளைகளில் செல்லும் நீரானது அந்த துளைகளின் மேலும் கீழும் விரிசல்களை உண்டாக்கும். அந்த விரிசல்கள் வழியே அடைபட்டு கிடந்த எரிவாயு நீரில் ஒன்றாகக் கலக்கும். அவற்றை உறிஞ்சி பூமியின் மேல்பரப்புக்கு எடுத்து வந்து நீர் தனியாக, வாயு தனியாக சுத்திகரிக்கப்பட்டு பிரித்து எடுக்கப்படும். செயற்கையாக பூமிக்கு கீழே நீரின் மூலம் விரிசல்கள் உண்டாக்கி எரிவாயு சேகரிப்பதுதான் நீரியல் விரிசல் முறை.

இதனால் அதிக அளவிலான நிலத்தடி நீர் வீணடிக்கப்படுவதோடு வருங்காலத்தில் இவ்விளை நிலங்கள் முழுவதும் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தான் நீர் வள ஆதாரங்களை பாதுகாக்க வேண்டி ஒதுக்கப்பட்ட 325 கோடியும் முழுமையான வகையில் செலவிடப்பட்டும் நீர் வறட்சியும் குடிநீர் தட்டுப்பாடும் அதிக அளவில் பேசப்படு பொருளாக விளங்க வைக்கும் சதி திட்டத்தை அரசு நேர்த்தியாக செய்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக வெள்ளத்தை சந்திந்த மாநிலங்களில் நீர் தட்டுப்பாடு ஏற்படுகிறதை பற்றிய சரியான உற்று நோக்கல் அவசியம்.

தமிழகத்தில் ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து தொடர் போராட்டங்கள் வலுக்கும் நிலையில், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியிலும் புதிதாக ஹைட்ரோ கார்பன் வளங்கள் எடுக்கும் ஒப்புதலுக்கு அனுமதி வழங்கியுள்ளது அதிர்ச்சியாக உள்ளது.

ஏற்கனவே 54 இடங்களில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் அனுமதி வழங்கி உள்ள இந்நிலையில், நாடு முழுவதும் ஹைட்ரோகார்பன் எடுக்க 2 மற்றும் மூன்றாம் சுற்று அனுமதியை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டாம் சுற்று அனுமதியில் நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 14 வட்டாரங்களிலும், மூன்றாம் சுற்று அனுமதி‌‌யில் 18 வட்டாரங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க திறந்தவெளி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் இரண்டாம் சுற்‌‌றில், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் காவிரி படுகையில் 474.19 சதுர கிலோ மீட்டர் பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றுள்ளது இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம். அனுமதி பெற்றிருக்கும் இந்தப் பரப்பு, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருக்காராவாசல் தொடங்கி, வேளாங்கண்ணி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கரியாப்பட்டி என ஒரு பிரம்மாண்டமான சதுர வடிவிலானது ஆகும். இப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றிருப்பதைத் தொடர்ந்து, நாகை மாவட்டம் திருப்பூண்டி, கரியாப்பட்டினம், கரும்பம்புலம், திருவாரூர் மாவட்டம் மடப்புரம் ஆகிய 4 இடங்களில் ஐஓசி நிறுவம் முதல்கட்டமாக ஆய்வுக்கிணறுகளை அமைக்க உள்ளது.

விவசாயிகளும் பொதுமக்களும் வாழ்வாதாரத்தை இழப்பதோடு,உயிர் வாழ கூட ஏற்பற்ற பாலை வனமாக்கும் முயற்சியையும் அதை தொடர்ந்து அரசு செய்து வரும் சதி திட்டத்தையும் முறியடிக்க வேண்டிய சூழலில் தமிழக மக்கள் செயல்பட வேண்டும். போராடி பெற வேண்டிய நிலையில் போராளிகள் மீது வழக்கு பதிவு செய்து வரும் அரசின் போக்கு மிகவும் கண்டிக்க தக்கது.

“இழிவான அடிமைதனத்தில் ஒருவன் வாழும் போது வெறும் கண்ணீர்துளிகள் மட்டும் போதாது ” என்ற பிடல் காஸ்ட்ரோவின் பொன்மொழிக்கிணங்க கண்ணீரை துடைத்து களம் இறங்கி போராடுவோம்.புரட்சி படைப்போம். முதலாளித்துவத்தை ஒன்று திரண்டு ஒழிப்போம்.

வாழ்க ஜனநாயகம்!
                                

 -அஸ்வினி கலைச்செல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here