ஹைட்ரோகார்பனுக்கு மாற்று?- அஸ்வினி கலைச்செல்வன்

விவசாய நிலங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தொடர்ந்து மத்திய அரசு அனுமதி வழங்கி வரும் நிலையில், எரிவாயுக்காக காவிரி டெல்டா மாவட்டங்களை அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை வேரறுக்கும் திட்டத்திற்கு மாற்றாக சில வழிகள்.

இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வியல் சூழலில் முன்னேற்றமும் இலாபமும் கிடைக்கும் என்பதையும் அடிக்கோடிட்டு விளக்க விரும்புகிறேன். கடந்த சில நாட்களுக்கு முன்னாக எழுதிய ஹைட்ரோகார்பன் திட்ட விளக்க கட்டுரையை வாசித்த சிலர் மாற்றும் கூறியிருக்கலாம் என்றதன் பெயரில் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

மிக மிக எளிமையான முறையில் வீட்டின் மாட்டு தொழுவங்கள், ஆட்டுப்பட்டிகளில் கிடைக்கும் கழிவுகளை சேகரித்து உரமாக பயன்படுத்தி வந்த நிலையில் அதிலிருந்து பதப்படுத்தப்படாத நிலையில் நாற்றத்துடன் கூடிய வாயுக்கள் உருவாகுவதை பலரும் அறிந்திருக்க கூடும். அதுவே சாண எரிவாயு ஆகும்.

சாண எரிவாயு என்பது கால்நடைகளின் சாணத்திலிருந்து நொதித்தல் முறையில் தயாரிக்கப்படும் எரிபொருளாகும்.இந்த நொதித்தல் முறைக்கென கலன்கள் அமைக்கப்படுகின்றன. சாணத்தினை எரிவாயு கலனுக்குள் செலுத்தி மீத்தேன் என்ற எரிவாயுவினைப் பெறுகின்றார்கள்.

இந்த எரிவாயுக் கலன்கள் உட்செலுத்தும் குழாய், செரிப்பான், வாயு சேகரிப்பான், சாணக்கழிவுக் குழம்பு வெளியேறும் குழாய், எரிவாயு வெளியேரும் குழாய் ஆகிய பாகங்களைக் கொண்டுள்ளன.
இந்தியாவில் மாற்று எரிசக்திக்கான சாண எரிவாயுவினை அமைக்க ஒன்றிய அரசு மானியங்களைத் தருகின்றது.இவ்வாறு எரிசக்திக்கென வாயுக் கலன்கள் எண்ணற்ற வடிவமைப்பில் கிடைப்பதால், சில எரிவாயுக் கலன்களுக்கு மட்டும் ஒன்றிய அரசு மானியம் தருகிறது.

கிராமத் தொழில் ஆணைக்குழு இரும்பு டிரம் எரிவாயு கலன்,கதர் கிராம ஆணைக்குழு ஃபைபர் டிரம் எரிவாயு கலன்,கான்கிரீட் சுவர் டிரம் கலன் (பெரோ சிமெண்ட் வடிவம்),பந்து வடிவ நிலையான கூடார கலன் (தீன பந்து வடிவம்) இதற்கான வகைகளில் மானியங்களை தருகிறது.

ஏன் சாண எரிவாயுவை பயன்படுத்தவேண்டும்?

கிராமங்களில் சாணத்தை எருவாக்கி எரிபொருளாகப் பயன்படுத்துவர் அல்லது அப்படியே உரமாகப் பயன்படுத்துவர். இந்த இரண்டு உபயோகங்களையும் ஒன்றாக நமக்கு சாண எரிவாயுக்கலன் மூலம் மட்டுமே கிடைக்கிறது.சாண எரிவாயுக் கலனுக்குள் சாணத்தை செலுத்துவதன் மூலம் ”மீத்தேன்” என்ற எரிவாயு கிடைக்கிறது. அது நமக்கு பெட்ரோலியம் வாயுவைப்போன்று சமையலுக்குப் பயன்படுகிறது.சாண எரிவாயுக் கலனிலிருந்து எரிவாயு தயாரித்த பின் வெளிவந்த மீத கழிவான சாணம் நல்ல சத்துள்ள உரமாகப் பயன்படுகிறது.இவ்வாறு மாட்டுச் சாணத்தை மட்டுமல்ல, அதன் சிறுநீரையும், மனிதர்களின் மலத்தையும் கூட சாண எரிவாயுக்கலன் மூலம் எரிபொருளாகவும் இயற்கை உரமாகவும் மாற்ற முடியும்.இவை அந்த கலனுக்குள் சென்றபின் உற்பத்தியாகும் உரம் சத்து நிறைந்ததாக உள்ளது.தொற்று நோயை உண்டாக்கக்கூடிய ஈக்களோ, கொசுக்களோ மற்றவைகளோ உற்பத்தியாகாது.மற்ற எரிபொருள்களில் இருப்பதைப் போல “மீத்தேன்” வாயுவில் புகை இல்லை. சூடாக்கும் பாத்திரங்கள் தொடர்ந்து பளபளப்புடன் இருக்கும்.

அரசே இதற்கான மானியங்களையும் வழங்கி வருகிறது.மத்திய அரசாங்கத்தின் வழக்கமற்ற எரிசக்தி ஆதாரத்துறை, இந்த காஸ் இயந்திரம் / சாண எரிவாயுக் கலன் அமைப்பதற்காக மானியத் தொகையை கதர் கமிஷன் மூலம் அளிக்கின்றது. இந்த மானியத் தொகை அமைக்கப்படும் காஸ் இயந்திரத்தின் அளவையும், அமைக்கப்படும் இடத்தையும், (அதாவது மலைப்பாங்கான நிலம், அல்லது சாதாரண நிலம்) மற்றும் அமைக்கப்படும் நபரையும் (சிறு விவசாயி, குறு விவசாயி, நிலமற்ற தொழிலாளி) பொறுத்தது. இந்த மானியத் தொகை ஒவ்வொரு வருடமும் மத்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும். மூன்று மாடுகளும், சாண எரிவாயுக் கலனை நிறுவக்கூடிய அளவு வீட்டில் இடமும் உள்ள எந்த விவசாயியும் அதைப் பெறுவதற்காக காதி கமிஷனையோ அல்லது மாவட்டங்களில் உள்ள சர்வோதய சங்க கதர் பவன்களையோ அணுகலாம்.

ஒரு மாட்டிலிருந்து  எவ்வளவு (பசுஞ்சாணம்) கிடைக்கும் ?

இதைப்பற்றி திட்டவட்டமான கணக்குக் கொடுக்கமுடியாது. மாடு பெரியதா, சிறியதா, அது உண்ணும் தீனி, அது தொழுவத்தில் கட்டப்படுகிறதா அல்லது மேய்ச்சல் நிலத்திற்குப் போகிறதா என்பதையெல்லாம் பொறுத்தது அது. ஆனாலும் தொழுவத்தில் உள்ள குறிப்பிட்ட வயது வந்துள்ள நடுத்தர மாடுகளின் விஷயத்தில் கீழ்க்கண்ட கணக்கைச் சராசரியாக வைத்துக் கொள்ளலாம்.

எருமை = ஒரு நாளைக்கு சுமார் 15 கிலோ
காளை அல்லது பசு = சுமார் 10 கிலோ
கன்றுகள் = சுமார் 5 கிலோ
ஒரு கிலோ பசுஞ் சாணத்திலிருந்து உற்பத்தியாகும் (காஸ்) வாயு 1.3 கன அடி.

சாண எரிவாயு சாதனத்தின் அளவு

எத்தனை மாடுகள் அல்லது ஆட்கள் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் எந்த இடத்திலும் ஒரு சாண எரிவாயு சாதனத்தின் அளவைத் தீர்மானிக்க முடியும். மிகச் சிறிய சாண எரிவாயுக் கலனின் அளவு 2 கன மீட்டர். இதற்கு 2-3 மாடுகள் வேண்டும்.

பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருளால், விமானத்தை இயக்க முடியும் என, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பாவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், “நவீன விமான தயாரிப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம்’ குறித்த சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில், உலகின் பல நாடுகளை சேர்ந்த இளம் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டு, தங்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். இதில், சிறந்த ஐந்து திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதைப் பற்றிய ஆராய்ச்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில் முதலிடம் பிடித்த திட்டம், பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருளைக் கொண்டு விமானத்தை இயக்க முடியும் என்பதாகும். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் விஞ்ஞானிகள், இந்த திட்டத்தை சமர்ப்பித்து முதலிடம் பிடித்தனர். அவர்களின் கூற்றுப்படி, பசு மாட்டின் சாணத்தில்இருந்து, மீத்தேன் வாயுவை பிரித்தெடுத்து, ஒரு கொள்கலனில் சேகரித்து, அதை குளிர்விப்பதன் மூலம், விமான எரிபொருளாக பயன்படுத்தலாம். இதை வெறும் ஆய்வறிக்கையாக மட்டுமின்றி அதற்கான செயல்முறை விளக்கத்தையும் அவர்கள் செய்து காட்டினர். இதன்படி, ஒரு விமானத்தை இயக்குவதற்கு, 17,500 கேலன் மீத்தேன் வாயு தேவைப்படுகிறது. ஆனால், இதில் நடைமுறை சிக்கல் ஒன்றும் உள்ளது. ஒரு பசு மாடு, ஓராண்டில் வெளியேற்றும் சாணத்திலிருந்து, அதிகபட்சமாக, 70 கேலன் அளவே மீத்தேன் வாயுவை, பிரித்தெடுக்க முடியும். அந்த வகையில், ஒரு விமானத்தை இயக்க, 1,000 பசுக்கள், மூன்று மாதங்கள் வெளியேற்றும் சாணத்தில்இருந்து தயாரிக்கப்படும் மீத்தேன் வாயு தேவைப்படுகிறது. 

தற்போது விவசாயிகள் பயிர் உற்பத்தியில் நிரந்தரமற்ற வருவாயை மேம்படுத்தவும் மற்றும் கூலியாட்கள் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கும் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். இதனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் ஒருங்கிணைந்த பண்ணை முறை. பயிர் உற்பத்தி, கால்நடை பராமரிப்பு, மீன் வளர்ப்பு, வேளாண்காடுகள் போன்ற வேளாண்சார் தொழில்கள் வேளாண் பொருளியலில் பெரும் ஆற்றல் வகுக்கிறது. இவை விவசாயிகளின் வருவாயை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வேலை வாய்ப்பினையும் உயர்த்தியுள்ளது. இவ்வாறு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒன்றையொன்று சார்ந்த தொழில்களை ஒரே இடத்தில் ஒரே பண்ணையில் இணைத்த செயல்படுவதை ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் ஒருங்கிணைந்த பண்ணையம் எனலாம்.
இதன் மூலம் உயர் வாயு எனப்படும் பண்ணையில் வீணான கழிவுப்பொருட்களான சாணம், அதனுடன் கலந்த வைக்கோல், பசும்புல், இலைகள் மற்றும் சமையலறைக் கழிவுகள் ஆகியவற்றைக் காற்றில்லாச் சூழ்நிலையில் நொதிக்கச் செய்வதினால் உண்டாகும் வாயுவின் வாயிலாக பல கலவையான வாயுக்களை பெற முடியும்.
    
இது கரியமில வாயு, நைட்ரஜன், மீத்தேன் மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வாயுக்களின் கலவையாகும். இவற்றில் மீத்தேன் எரியக்கூடியது. இதன் சதவீதம் 55 ஆகும்.(source :agritech.tnau.ac.in)

மாடுகளுடன் கூடிய ஒருங்கிணைந்த பண்ணையை அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, விவசாயம் மற்றும் அதனை சார்ந்த பலரும் பயன்பெற முடியும். பால் உற்பத்தியாளர்களுக்கும், பொது மக்களுக்கு தேவையான பால் மற்றும் அதனை சார்ந்த பொருட்களின் தேவையும்,விலை உயர்வும் சீராகும் வாய்ப்புள்ளது.விவசாய மற்றும் சாண எரிவாயு உற்பத்தி செய்வதன் மூலம் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். பயிர்களுக்கான இயற்கை உரம், பாதுகாப்பான எரிவாயு,விவசாயிகளுக்கான தொழில் அங்கீகாரம்,பண்ணை தொழிற்வேலைவாய்ப்புகள், பால் உற்பத்தி விலைவாசி சீராக்க என்று பல நன்மைகள் கொண்ட திட்டங்களை செயல்படுத்தி ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வேண்டும்.

அஸ்வினி கலைச்செல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here