வேலையின்மை : முதலாளித்துவத்தின் பரிசு……. – முனைவர் க. ஆலமர், முனைவர் நா. முரளி

வேலையின்மை என்பது ஒரு சமூகக் கொடுமையாகும். அது தரும் இன்னல்களை எந்த புள்ளி விபரங்களாலும் விளக்கிட முடியாது. வேலையின்மை என்பது ஏழ்மை, பணமின்மை என்பதோடு முடிந்துவிடுவதில்லை. அவற்றை விட அது இழிவான வேதனைகளையும், பட்டினி, வீடின்மை, தற்கொலை, தீவிரவாதம் முதலியவற்றிற்கும் வழிவகுக்கிறது; குடிபழக்கத்தை அதிகரிக்கின்றது; மனநிலையை பாதிக்கின்றது; குடும்பங்களை ஒட்டுமொத்தமாக சீரழிக்கின்றது. வேலையில்லாதவர்கள் சமுதாயத்திலிருந்தும் பொருளாதார வாழ்விலிருந்தும் ஓரங்கட்டப்படுகிறர்கள். வேலையை பறிகொடுப்பது மிகவும் பயங்கரமான கேடுகளில் ஒன்றாகும். வேலையை இழப்பது வாழ்க்கையின் மூலஊற்றை இழப்பதற்கு ஒப்பாகும். இன்றைய நாளில் நம்பிக்கையையும், எதிர்காலத்தின் மீதான எதிர்பார்ப்புகளையும் இழப்பதாகும். வேலையின்மை, என்பது வாழ்க்கையின் மீதான பிடிப்பை அகற்றுகிறது. அத்துடன் தார்மீகச் சீர்கேடுகளுக்கு அடித்தளமாக விளங்குகிறது.

*368 வேலைக்கு 26 லட்சம் பேர்*

சமீபத்தில் இந்தியாவில் ஒரு மாநிலத்தில் நடந்த நிகழ்வின் மூலம் வேலையின்மையின் அளவையும் ஆழத்தையும் புரிந்து கொள்ளலாம். 2015 – ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்திரப்பிரதேச மாநில அரசின் தலைமைச் செயலகம் 368 அலுவலக உதவியாளர்கள் பணிக்கு அரசு விளம்பரம் செய்திருந்தது. இந்த வேலையின் தகுதி 8 – ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் மிதிவண்டி ஓட்டும் திறமையும் இருக்க வேண்டும் என்பதாகும். இந்த வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் சுமார் 23 லட்சம் பேர். இதில் 2.22 லட்சம் பேர் பொறியியல் பட்டம் பெற்றவர்கள். 255 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். முதுகலை பட்டம் பெற்றவர்கள் பல்லாயிரக்காணக்கானோர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்விலிருந்து வேலையின்மையின் உச்சத்தை உணரலாம்.

*முதலாளித்துவமும் வேலையின்மையும்*

மனித உழைப்பு நாட்டின் செல்வத்தை உருவாக்குகிறது. மனித உழைப்பை பயன்படுத்தி முதலாளிகள் தங்களின் லாபத்தையும் செல்வத்தையும் பெருக்குகின்றனர். அதற்கு அவர்கள் மூன்று விதமான வழிமுறைகளை கையாளுகிறார்கள். ஒன்று வேலை நேரத்தை அதிகரிப்பது. இரண்டு, சம்பளத்தை குறைப்பது. மூன்று உற்பத்தித் திறனைக் கூட்டுவது. முதல் இரண்டு வழிமுறைகளையும் நடைமுறையில் கையாளுவது முதலாளிகளின் விருப்பமாக இருந்தாலும், தொழிலாளர்களின் எதிர்ப்பால் அவற்றின் நடைமுறை சாத்தியப்பாடு குறைவாகக் காணப்படுகிறது. இதனால் தொழில்நுட்பத்தை புகுத்தி, உற்பத்தி திறனை அதிகரித்து, லாபத்தை பெருக்குதையே உகந்த வழிமுறையாக முதலாளிகள் கருதுகின்றனர். குறைவான கூலி, அதிக உற்பத்தி திறன், அதிக நேர உழைப்பு ஆகியவையே அதிக லாபத்தை முதலாளிகளுக்கு அளிக்கின்றன. இதன் காரணமாக, முதலாளிகளுக்கு அவர்களுடைய உழைப்பு மற்றும் முதலீட்டிற்குக் கிடைக்கக் கூடிய வருவாயை விடக் கூடுதலான லாபம் கிடைக்கிறது. தொழிலாளிகளின் கூலியற்ற உபரி உழைப்புதான் உபரி மதிப்பின் மூல ஊற்றாகும். இதுதான் முதலாளித்துவத்திற்கே உரித்தான அம்சமாகும். மேலும் முதலாளித்துவ சுரண்டலின் சாரமும் இதுவே ஆகும். இதனை மார்க்சியப் பொருளாதாரத்தில் ‘உபரி மதிப்பு’ என்று அழைக்கின்றனர்.

*மூலதனக் குவிப்பு*

உபரி மதிப்பானது மூலதனக் குவிப்பிற்கு அடித்தளமாக அமைகிறது. உபரிமதிப்பு அதிகமான மூலதனக் குவிப்பிற்கு வித்திடுகிறது. மேன்மேலும் செல்வத்தை பெருக்குவது முதலாளிகளின் விருப்பம் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், இந்த முதலாளித்துவ அமைப்பு ஒரு முதலாளியைச் சொத்துக் குவிப்பதற்கு நிர்பந்திக்கிறது என்று பொருளாதார அறிஞர் ஜோஸப் சும்பீட்டர் கருதுகிறார். அவ்வாறு சொத்துக் குவிப்பில் முதலாளி ஈடுபடாமல் இருந்தால், அவர் முதலாளி என்ற அந்தஸ்தை இழக்க நேரிடும். உற்பத்தி முறையில் மூலதனக்குவிப்பு என்பது முதலாளிகள் மீது திணிக்கப்படும் தவிர்க்க முடியாத விதியாகும். இதனால் ஒட்டுமொத்த உற்பத்தி முறையும் முற்றுரிமையை நோக்கி செல்கிறது. இதன் விளைவாக வேலை இழப்பு, வறுமை மற்றும் பட்டினி போன்ற சமூக, பொருளாதார அவலங்கள் சந்தைப் பொருளாதாரத்தின் அங்கங்களாக மாறிவிடுகின்றன. மூலதன திரட்சி தொழில் நுட்ப உற்பத்தி முறைக்கு வழிகோலுகிறது. அதனால் களத்தொழிலாளர்கள் உற்பத்திக்கு தேவையற்றவர்களாகின்றனர். உற்பத்தி செலவை குறைக்கும் முயற்சியில் ரோபோக்கள், கணினிகள் போன்றவற்றை புகுத்துவதால் தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். தொழில் நுட்ப வளர்ச்சி, புதிய வேலையிடங்களை தோற்றுவிப்பதும் இல்லை. வேலையில்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது வேலை செய்யும் தொழிலாளர்கள் மிக அதிகளவில் சுரண்டுவதற்கு முதலாளிகளுக்கு வாய்ப்பை அளிக்கிறது. முதலாளிகள், வேலை நாட்களை நீட்டிக்கிறார்கள். உழைப்பின் தீவிர தன்மையை அதிகப்படுத்துகின்றனர். ஊதியத்தை குறைக்கின்றனர். முதலாளிகள் விருப்பத்தின் அடிப்படையில் எல்லா நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டு வேலை செய்யக் கூடியவர்கள் மட்டுமே உகந்த தொழிலாளர்கள் என முதலாளிகள் கருதுகின்றனர். மேலும் தொழிலாளர்கள் கீழ்படிந்தவர்களாகவும், அதிக கோரிக்கைகளை முன் வைக்காதவர்களாகவும் இருக்க வேண்டும் என முதலாளிகள் விரும்புகின்ற இந்த உபரி மதிப்பானது மூலதனக் குவிப்பிற்கு அடித்தளமாக அமைகிறது. உபரி மதிப்பு அதிகமான மூலதனக் குவிப்பிற்கு வித்திடுகிறது.

*முதலாளித்துவ அமைப்பின் வீழ்ச்சி*

முதலாளித்துவ உற்பத்திமுறை தன்னிச்சையாக அராஜகப் போக்கில் வளர்கிறது. இது பொருளாதாரத்தில் சமமின்மையைத் தோற்றுவிக்கிறது. பொருளாதார நெருக்கடிகளுக்கு இட்டு செல்கிறது. உற்பத்திக்கும் நுகர்விற்கும் இடையிலான சமமின்மையை அதிகப்படுத்துகிறது. இது உற்பத்திச் சூழ்நிலைகள் விற்பனைச் சூழ்நிலைகளுடன் ஒத்துப் போவதில்லை. லாப வேட்கையில் பொருட்கள் மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறைவான கூலி மற்றும் வாங்கும் சக்தி, பொருள் உற்பத்தியின் மதிப்பை விட குறைவாக இருப்பது ஒட்டுமொத்த சந்தையில் தேக்க நிலையை ஏற்படுத்துகிறது. மூலதனம், நிலையான மூலதனம், மாறும் மூலதனம் என இரண்டாக பிரிக்கப்படுகிறது. விஞ்ஞான வளர்ச்சியில் மாறும் மூலதனமாகிய உழைப்பின் பங்கு குறைகிறது. நிலையான மூலதனத்திற்கும் மாறும் மூலதனத்திற்கும் இடையிலான விகிதாச்சாரம் 1:1 என்று இருக்குமானால் திரட்சி நிதியில் பாதி உற்பத்தி சாதனங்களிலும் மறுபாதி தொழிலாளர்களுக்கும் செலவிடப்படுகிறது. இந்த விகிதாச்சாரம் பெரும்பாலும் 9:1 என்ற அளவில் அதாவது நிலையான மூலதனத்திற்கு 9 அலகுகளும், மாறும் மூலதனத்திற்கு 1 அலகும் என்று இருக்கிறது. தொழில் நுட்ப வளர்ச்சியில் இந்த இடைவெளி இன்னும் விரிந்து கொண்டே செல்கிறது. தொழில் நுட்ப வளர்ச்சியில் இந்த இடைவெளி இன்னும் விரிந்து கொண்டே செல்கிறது, இந்தப் போக்கு தானியங்கி உற்பத்தி முறைக்கு வழிவகுக்கிறது. வேலையின்மைக்கு அடிப்படை காரணம் தானியங்கி உற்பத்தி முறை. முதலாளித்துவத்தில் காணப்படும் உள் முரண்பாடுகள், உற்பத்தி முறையை தானியங்கி உற்பத்தி முறைக்கு தவிர்க்க இயலாதவாறு இட்டு செல்கிறது. தானியங்கி உற்பத்தி முறை எல்லாத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. 2023 ம் ஆண்டுக்குள் உலக வங்கியின் ஆய்வறிக்கையின் படி சுமார் 70 விழுக்காடு உற்பத்தி முறை இந்தியாவிலும் சீனாவிலும் தானியங்கி முறையாக மாறிவிடும் என்று வெளியிட்டுள்ளது. இதனால் வேலையிழப்பு வரும் காலங்களில் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது. தொழிலாளர்களை வேலைக்கு எடுத்து கொள்வது குறைந்து வருகிறது. பல தொழிலாளர்கள் தங்களது உழைப்பு சக்தியை விற்பனை செய்ய முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். உழைக்கும் மக்களில் அதிகமானவர்கள் மிகையாகிவிடுவதால் அங்கே வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுகிறது. அவர்கள் தொழிலாளர்களின் காத்திருக்கும் படையாக மாறுகின்றனர். வேலையில்லா திண்டாட்டத்தினால் உழைக்கும் மக்களின் மீதான சுரண்டல் தீவிரமடைகிறது. முதலாளிகள் தொழிலாளர்களது கூலியைக் குறைப்பதற்கும், அவர்களுடை உழைப்பைத் தீவிரப்படுத்துவதற்கும் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள். நாவலாசிரியர் ஜான் ஸ்டென்பெக் என்பவர் “கருஞ்சினக்கனிகள்” என்னும் நவலில் இக்கருத்தைப் பின்வருமாறு தொகுத்துரைக்கிறார். “ஒரு வேலை காலியாக இருந்தால் அதற்கு பத்து நபர்கள் சண்டைப் போட்டார்கள், குறைந்த கூலி கொடுத்தால் போதும் என்றார்கள். ஒருவர் முப்பது சென்ட் கூலி கேட்டால் மற்றொருவர் எனக்கு இருபத்தைந்து சென்ட் போதும் என்றார். இன்னொருவர் இருபதுக்கு வேலை செய்கிறேன் என்றார். அடுத்தவர் நான் பட்டினியாக இருக்கிறேன் எனக்குப் பதினைந்து கொடுங்கள் போதும என்றார். அடுத்தவர் எனக்கு உணவு கொடுத்தால் போதும் வேலை செய்கிறேன் என்றார். முதலாளித்துவம் எப்போதும் நோயால் பீடிக்கப்பட்டிருக்கவில்லை. தன் இளமை பருவத்தில் நிலப்புரத்துவத்திற்கு மாற்றாக வந்த பொழுது அது உற்சாகமிக்கதாய், வேலை வாய்ப்பை உருவாக்க கூடியதாய், ஆற்றல் உள்ளதாய் விளங்கியது. அது மனித குலத்திற்கு சுதந்திரத்தையும் நல்வாழ்வையும் வழங்கியது. காலப்போக்கில் முதலாளித்துவம் தன்னுடைய முன்னோக்கிய வளர்ச்சியில் உச்ச கட்டத்தை அடைந்தபின் பொதுவான மனித முன்னேற்றத்திற்கு மேன்மேலும் தடையாக மாறியது. தனது அந்திம காலத்தை நோக்கித் தவிர்க்க இயலாமல் செல்லக்கூடிய பொருளாதார அமைப்பாக மாறியது. உற்பத்தியின் சமுதாயத்தன்மைக்கும் தனி முதலாளித்துவ அதிகரிப்பு முறைக்கும் இடையிலான முரண்பாடுதான் முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கு அடிப்படையாகத் திகழ்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையில் உபரி மதிப்பும் மூலதனக் குவிப்பும் தவிர்க்க இயலாதவை. முதலாளிகளிடையே நிலவும் போட்டியானது மாறும் மூலதனத்தை குறைத்து மாறா மூலதனத்தை மேன்மேலும் அதிகப்படுத்துகிறது. இது தானியங்கி உற்பத்தி முறைக்கு வழிகோலுகிறது. அதனால் ஏற்கனவே நிலவி வந்த வேலையின்மையை மேலும் தீவிரமடைய செய்கிறது. எனவே அதனுடைய வீழ்ச்சி தவிர்க்க இயலாது என்று மார்க்ஸ் கருதினர். அவருடைய கூற்றுப்படி, இன்று முதலாளித்துவ நாடுகளில் வேலையின்மையும் பிற பொருளாதார சிக்கல்களும் ஆழமாக வேரூன்றியுள்ளன. இதற்கு தீர்வாக உற்பத்தி முறையை பொதுமைப் படுத்த வேண்டும் என்று மார்க்ஸ் கூறுகிறார். சோசலிச உற்பத்தி முறையை சமூக அவலங்களுக்கு தீர்வாக வைக்கிறார்.

கட்டுரையாளர்கள்: பொருளியல் துறை பேராசிரியர்கள், அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர், மதுரை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here