வெனிசுலா- துரோகிகளை எதிர்த்து போராடும் பொலிவாரிய தேசம்.

வெனிசுலா . தென்னமெரிக்க கண்டத்தில் எண்ணெய் வளம் மிகுந்து இருக்கும் நாடு.வழக்கமாக தென்னமெரிக்க நாடுகள் அனைத்துமே அமெரிக்காவிற்கு அடிமைகளாக இருப்பது வழக்கம் .அப்படியே அவர்கள் சுதந்திரமாக ஆட்சி நடத்த முற்பட்டால் அமெரிக்காவிற்கு சுத்தமாக பிடிக்காது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக ஒரு சிலரை தூண்டிவிட்டு் ஆட்சியை கவிழ்க்கும் வரை ஒயமாட்டார்கள். ஒருவேளை அப்படி செய்ய முடியவில்லையென்றால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நேரே அமெரிக்க படைகளை அனுப்பி அவர்களை முடித்துவிட்டு தங்களின் அடிமை ஒருவரை ஆட்சியில் அமர்த்திய பிறகுதான் ஓய்வார்கள்.

வெனிசுலாவிலும் அப்படித்தான் கதை நகர்ந்தது. ஆனால் இந்த வரலாற்றுக்கு முடிவு கட்டும் விதமாக 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஹுயூகோ சாவேஸ் வெற்றி பெற்று சோசலிச முறையிலான ஆட்சியை அமைத்தார்.எண்ணெய் வளம் மிகுந்து இருந்ததால் அதில் வரும் வருமானத்தை கொண்டு நாட்டின் இன்னல்களை தீர்க்க முயற்சி செய்தார் .ஆனால் எல்லாம் தனியார் நிறுவனங்களாக அமெரிக்காவின் கட்டுபாட்டிற்குள் இருந்தன. அவர்கள் வெனிசுலாவின் மொத்த எண்ணெயையும் வாங்கிக்கொண்டு சில எலும்புத்துண்டுகளை மட்டும் வீசினர்.

சாவேஸ் அதிரடியாக அனைத்து நிறுவனங்களையும் அரசுடைமையாக மாற்றியதோடு, இனி கச்சா எண்ணைய்யை அமெரிக்க டாலருக்கு விற்பதில்லை என்றும் அறிவித்தார்.எண்ணெய்யை டாலருக்கு பதிலாக யூரோவிற்கு விற்க துவங்கினார்.
அமெரிக்கா என்னென்னவோ செய்து பார்த்தது .ஆனால் சாவேஸ் அனைத்தையும் முறியடித்து தென்னமெரிக்க கண்டத்தையே வளர்ச்சி பாதையில் அழைத்து சென்றார். பிடல் காஸ்ட்ரோ, ஈவா மோரெலெஸ் போன்ற இடதுசாரி தலைவர்களோடு கைகோர்த்து தென்னமெரிக்க கண்டத்தை அமெரிக்காவின் பிடியில் இருந்து விடுவிக்க துவங்கினார்.
6 வருடங்களுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

அவருக்கு பின் அவரால் கண்டெடுக்கப்பட்ட நிகோலஸ் மதுரோ வெனிசுலாவின் அதிபரானார்.
வெனிசுலாவின் கச்சா எண்ணெய் அமெரிக்காவிற்கு அவசியமாக தேவைப்பட்டது. ஆனால் சந்தை விலையை கொடுத்து வாங்க விருப்பமில்லை. ஈராக்கை வீழ்த்தியாயிற்று,லிபியாவை வீழ்த்தியாயிற்று அவர்களின் எண்ணெய் வளங்களை கைப்பற்றியாயிற்று,இப்போது வெனிசுலா .

அமெரிக்காவின் பரம எதிரியான ரஷ்யாவின் பொருளாதாரம் பெருமளவில் கச்சா எண்ணெய் ,எரிவாயு ஆகியவற்றை சார்ந்தே இருக்கிறது.தனக்கும் மலிவு விலையில் எண்ணெய் வேண்டும் என்பதால் அமெரிக்கா திட்டமிட்டு உலகளவில் கச்சா எண்ணெய் விலையை கடுமையாக வீழச்செய்தது. கச்சா எண்ணெய் ஏற்றுமதியையே அதிகமாக சார்ந்து இருந்ததால் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி வெனிசுலாவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது.அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்யவே திணறியது அரசு.மேலும் அமெரிக்க தென்னமெரிக்க நாடுகளை கையில் போட்டுக்கொண்டு வெனிசுலாவின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.ஆனால் இவற்றையெல்லாம் மதுரோ சமாளித்து வந்தது அமெரிக்காவிற்கு இன்னும் எரிச்சலை ஏற்படுத்தியது.

வெனிசுலாவிற்குள்ளேயே மதுரோவிற்கும்,பொலிவாரிய சோசலிச ஆட்சிக்கும் எதிரானவர்களையெல்லாம் அணி சேர்த்து மதுரோவிற்கு எதிராக கலகங்களை உருவாக்க துவங்கியது.அவைகளும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
சில மாதங்களுக்கு முன்பு வெனிசுலாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடந்த அதிலும் மதுரோவே வென்றார்.ஆனால் மதுரோ தேர்தலை முறையாக நடத்தி வெற்றிபெறவில்லை என்று அமெரிக்கா பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தது.
இதற்கிடையில் அமெரிக்கா,பிரிட்டன் போன்ற நாடுகளில் வைப்பு நிதியாக சில ஆயிரம் கோடிகளை வெனிசுலா வைத்திருந்தது. நாட்டில் உள்ள பிரச்சனைகளை சமாளிக்க அந்த வைப்புநிதிகள்,தங்கம் போன்றவற்றை மதுரோ திருப்பி கேட்க இந்த இரண்டு நாடுகளும் திருப்பி தரமாட்டோம் என்று அடாவடி செய்கின்றன.

அது மட்டுமல்லாமல் வெனிசுலாவின் சபாநாயகராக இருந்த ஜுவான் குவாய்டோ என்பவரை தன் கைப்பாவையாக மாற்றியது. அவர் திடீரென்று தன்னைத்தானே வெனிசுலாவின் இடைக்கால அதிபராக அறிவித்து கொண்டார்.அவரை அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா,லிமா நாடுகள் அங்கீகரித்திருக்கின்றன.
இதைவிட அடாவடி எதுவும் இருக்க முடியாது.

இன்னொருப்பக்கம் ரஷ்யா,துருக்கி,பொலிவியா,மெக்சிகோ,சிரியா போன்ற நாடுகள் மதுரோவிற்கு ஆதரவு வழங்கி வருகின்றன. சீனா வெனிசுலாவிற்குள் வெளியிலிருந்து வரும் தலையீட்டை விரும்பவில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.
அமெரிக்கா வெனிசுலாவிற்குள் செயற்கையாக ஒரு மோதலை உருவாக்கி அதனை காரணம் காட்டி தன் படைகளை அனுப்பி மதுரோவை அகற்ற கடும் முயற்சி எடுத்தது. அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஐரோப்பிய யூனியனும் வெனிசுலாவின் மீது ஆயுத ரீதியான நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.
வெனிசுலாவின் மக்களும் அந்நியப்படையெடுப்பை உயிரை கொடுத்தேனும் தடுத்து நிறுத்துவோம் என்று உறுதியாக இருக்கின்றனர்.
வெனிசுலா தென்னமெரிக்காவில் அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிரான குறியீடு.அதனை காப்பாற்ற அந்த பொலிவாரிய தேசத்தின் மக்கள் தங்கள் அரசினை காப்பாற்ற சித்தமாக இருக்கின்றனர்.
ஐ.நாவும் மற்ற உலக வல்லரசுகளும் அமெரிக்காவின் எண்ணத்தை ஈடேற விடாமல் வெனிசுலாவின் இறையாண்மையை காப்பற்ற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here