“விரும்பி திருமணம் செய்தவர்களை வாழ வழி விடுங்கள்” – கொளத்தூர் மணி

விரும்பி திருமணம் செய்தவர்கள் வாழ வழிவகை செய்ய வேண்டும் என திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த செல்வன், இளமதி ஆகிய இரு‌வரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது காத‌லித்துள்ளனர். இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும், திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த செல்வன், அந்த இயக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினரான ஈஸ்வரன் உதவியோடு சில நாட்களுக்கு முன்னர் இளமதியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

அன்று இரவே கார்கள் மற்றும் பைக்குகளில் வந்த சுமார் 40 பேர் செல்வனை தாக்கிவிட்டு, இளமதியையும் கடத்திச் சென்றதாக கூறப்பட்டது.

இது தொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. பின்னர், காவல்துறையினர் தங்களுக்கு வந்த புகாரை தொடர்ந்து, செல்வன் மற்றும் ஈஸ்வரன் இருவரையும் மீட்டனர். மேலும், செல்வன் கொடுத்த புகாரின் பேரில் 50 பேர் மீது கொளத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனாலும், அடுத்த சில நாட்களாக இளமதி மீட்கப்படவில்லை.

இந்நிலையில்தான், சாதி மறுப்பு திருமண விவகாரத்தில் கடத்தப்பட்டதாக புகாரளிக்கப்பட்ட இளம்பெண் இளமதி, சேலம் மேட்டூர் மகளிர் காவல்நிலையத்தில் நேற்று ஆஜரானார். வழக்கறிஞர் சரவணன் என்பவருடன் ஆஜரான அவரிடம், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தான் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக தன்னுடைய வாக்குமூலத்தில் இளமதி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து, காவல் நிலையத்தில் இருந்த திராவிடர் விடுதலைக் கழக ஆதரவாளர்கள் இளமதியிடம் பேச முயன்றனர். ஆனால், தான் யாரிடமும் பேசவிரும்பவில்லை என்றும் பெற்றோருடன் சென்று வாழ்ந்து கொள்வதாகவும் இளமதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வரும் திங்கட்கிழமை இளமதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். பின்னர், நீதிமன்றம் கொடுக்கும் அறிவுறுத்தலின்படி இளமதியை பெற்றோருடன் அனுப்புவது குறித்து போலீசார் முடிவு செய்வார்கள் எனத் தெரிகிறது.

இதனிடையே, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளமதியை கடத்தியதாக கொளத்தூர் மணி மற்றும் திருமணம் செய்து கொண்ட செல்வன் உள்ளிட்ட 4 பேர் மீது பவானி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் கொளத்தூர் மணி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, “இளமதியின் அப்பா, மாமா, பெரியப்பா உள்ளிட்டோர் கடத்தல் வழக்கில் சிறையில் இருக்கும் பொழுது காவல்துறையினர் இளமதியை பெற்றோர் பொறுப்பிலேயே அனுப்பியது உகந்ததா என்று யோசிக்க வேண்டும். தங்கள் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் அரசியல் தலையீடும் ஒரு அமைச்சரின் தலையீடும் உள்ளது. அது விரைவில் பொதுவெளியில் அம்பலப் படுத்தப்படும்.

உண்மையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால், அன்றே வழக்கு பதிவு வெளிவந்திருக்கும். ஆனால் தற்போது முன் தேதியிட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கலாம் என்ற ஐயம் உள்ளது. இதுபோன்ற பொய் வழக்குகள் எங்களுக்குப் புதிதல்ல. இந்த வழக்கை உரியவகையில் சந்திப்போம். தங்களது அரசியல் அதிகாரத்தை விருப்பம்போல் பயன்படுத்துவோரை பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்க கூடாது. அவர்களை சமூகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும்.

இந்த வழக்கிற்கு சட்ட நடவடிக்கைக்கு செல்ல இருக்கிறோம். மக்கள் திரள் போராட்டத்தின் மூலம் அரசியல் கட்சியினருக்கும் அரசியல் கட்சி என்ற பெயரால் அராஜகம் செய்யும் கும்பலுக்கும் பாடத்தை புகட்டுவோம். இளமதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் போது உரிய ஆணையை நீதிமன்றம் பிறப்பிக்கும் என்று நம்புகிறோம். விரும்பி திருமணம் செய்தவர்கள் வாழ வழிவகை செய்ய வேண்டும்.

ஆணவக்கொலைக்கான தனி சட்டமும் கல்விக்கான சட்டமும் பொதுப்பட்டியலில் தான் உள்ளது. ஆனால் நீட் தேர்வை கொண்டு வரும் பொழுது மாநில அரசின் கருத்து கேட்பு தேவை இல்லை என்று மத்திய அரசு சொன்னது. ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வரும் போது மட்டும் மாநில அரசின் கருத்து கேட்பு தேவை என்று கூறி வருகிறது. தென் மாநிலங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டை தவிர அனைத்து மாநிலங்களும் அவர்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு இதுகுறித்த கருத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டும். மேலும், தமிழக அரசுசுக்கு இந்த சட்டத்தை கொண்டுவர அதிகாரம் உள்ளது. அதன்படி இந்த சட்டத்தை கொண்டு வரவேண்டும். இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும். மேலும், நாடாளுமன்றத்தில் 2012 முதல் கிடப்பில் உள்ள ஆணவ கொலைக்கான தனி சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எங்களது கருத்து” எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here