விடுபடு திசைவேகம்.- சவரிராஜ்.

“எதிர்காலம்…
அது ஒரு நாள் வந்தே தீரும் என்பதே”
– ஆபிரகாம் லிங்கன்

தீர்க்கமாக உழைக்கிற மாணவனுக்கு இந்த உலகம் வீசி எறிகின்ற விமர்சனங்கள், கேலிப் பேச்சுகள், அவமான வார்த்தைகள் எல்லாம் அவன் மீது விழாது..
காதுக்குள் புகுந்து அவனை நிலைகுலையச் செய்யாது..
சராசரிகள் தவழ்ந்து கிடக்கும் தளத்திலிருந்து தப்பித்து இவர்கள் இரைச்சல் கேட்காத, இவர்கள் தொடமுடியாத உயரத்தில் அவனது பயணப் பாதையை அமைத்துக் கொள்வான்.

இந்த அண்டத்தில் எல்லா பொருளுக்கும் ஒரு ஈர்ப்பு விசை இருக்கிறது. இந்த பூமியில் இருக்கும் விசை புவி ஈர்ப்பு விசை. அதுதான் பொருட்களை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. நியூட்டன் ஆப்பிள் பழத்தை மேலே எரிந்து கீழே திரும்பி வருவதை கொண்டு புவியீர்ப்பு விசையை குறித்து தனது ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
எப்படி ஆப்பிள் புவியீர்ப்பு விசையை மீறி மேலே போகும்.?
அப்படி மேலே போக வேண்டுமானால் அதற்கு எவ்வளவு சக்தி தேவை.? எவ்வளவு வேகம் தேவை.? இவற்றை ஆராயும் போதுதான் விடுபடு திசைவேகம் என்ற ஒரு விடயம் கண்டறியப்பட்டது. ஆம் பூமியில் ஒரு பொருளை 1 விநாடிக்கு 11.2 கிலோமீட்டர் என்ற தொடக்க திசை வேகத்துடன் மேல்நோக்கி வீசினால் அது தப்பி ஓடிவிடும். 1 மணிக்கு 25 ஆயிரம் மைல் வேகம். அதிர்ச்சியாக இருக்கிறதா.? ஆச்சரியமாக உள்ளதா.?

கண்டிப்பாக இருசக்கர வாகனத்துக்கோ, மகிழுந்துக்கோ, விமானத்துக்கோ இல்லை.

‘விண்வெளிக்கு போகும் ராக்கெட்’ மீண்டும் பூமிக்கு வராமலிருக்க தேவையான வேகம்தான் அது.

விடுபடு திசைவேகம் (Escape Velocity) எனப்படுவது ஒரு பொருளானது கோளின் ஈர்ப்பு விசையினின்றும் விடுபட்டு செல்வதற்கு கோளின் பரப்பில் அப்பொருளுக்கு அளிக்கப்பட வேண்டிய மேல்நோக்கிய சிறுமத் திசைவேகம் ஆகும்.
ஒரு விநாடிக்கு 11 கிலோ மீட்டர் முதல் 11.3 கிலோ மீட்டர் வேகத்தில் ராக்கெட் மேல் நோக்கி போனால் அது புவியை விட்டு விடுபடும். அதாவது கீழே விழாமல் புவியைத் தாண்டி செல்லும். இது சுமாராக 1 மணிக்கு 25 ஆயிரம் மைல் வேகம் ஆகும். இப்படி ஒரு வேகத்துக்கான புரிதலை, தெளிவை, தீர்க்கத்தை, மனவுறுதியை தங்களுக்குள் தகவமைத்துக் கொண்ட மாணவ மணிகளே இந்த புற சாமானிய உலகின் ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் பொருட்படுத்தாது வசை அழுத்தத்திலிருந்து தப்பித்து விண்ணை நோக்கி – வெற்றியை நோக்கி பயணிக்க முடியும்.

சராசரி மனிதர்களின் வாய்க்கு, வஞ்சக வார்த்தைகளுக்கு செவிகொடுத்து அதனால் ஏற்படும் சுணக்கத்தையும், தயக்கத்தையும், சோர்வையும் அண்டவிடாமல் வேகத்திற்கு, தெளிவிற்கு தங்களை தயார் படுத்திக் கொள்வதற்கு இந்த ‘விடுபடு திசைவேகம்’ கோட்பாடு பற்றிய புரிதல் மிகவும் கைகொடுக்கும். நம்முடைய சம்மதம் இல்லாமல் எவராலும் நம்மை வீழ்த்தவோ, நம்முள் தாழ்வான எண்ணத்தை ஏற்படுத்திவிடவோ முடியாது என்கிற உண்மையை ‘விடுபடு திசைவேகம்’ புரிந்தவராக செயல்படுத்திக் காட்டி வெற்றி பெறுவோம்.

சவரிராஜ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here