விசைப்படகை கப்பல் மோதிய விவகாரமும் எங்களின் கோரிக்கையும்…

0
11
7.8.2018 அன்று ஓசானிக் என்ற முனம்பம் விசைப்படகை தேஷ்சக்தி என்ற இந்திய கப்பல் ஆக்ரோஷமாக மோதியதில் விசைப்படகு நொறுங்கி அப்படியே நீருக்குள் மூழ்கிப் போனது.
ஓசானிக் விசைப்படகு 6.8.2018 அன்று இரவு பத்தரை மணிவாக்கில் கேரளாவின் முனம்பம் துறைமுகத்திலிருந்து தொழிலுக்குச் சென்றது. அன்று இரவில்தான் நாங்களும் முனம்பத்திலிருந்து தொழிலுக்குச் சென்றோம். இரவு ஒன்பது மணியிலிருந்து நடுஇரவு ஒன்றரை மணிவரை நான்தான் படகை ஓட்டினேன். பின்னர் வோறொருவரிடம் படகை ஓட்டக் கொடுத்துவிட்டு, அவர் அருகிலேயே படுத்துக்கிடந்தேன்.
விடியற்காலை நான்கு மணியளவில் இஞ்சின் வேகம் குறைந்ததை உணர்ந்து திடுக்கிட்டு எழும்பி, “என்ன ஆச்சு?” என்று ஓட்டியவரிடம் கேட்டேன்.அதற்கு அவர்,”கப்பல் வருது பாருங்க”என்று சொன்னார்.
நான்   குறுக்காக வரும்  கப்பலின் வரவை கவனித்து, ” கீயரை தட்டிப்போடு” என்று சொன்னதும்  அவர் கீயரை நியூட்ரலில் போட்டார்.   கீயர்ஸ்பீடில் மெதுவாக ஓடிக்கொண்டிருந்த  படகு நின்றது. இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து எங்கள் படகின் முன்பக்கமாக  அந்த கப்பல் எந்த ஒலியும் எழுப்பாமல் வேகமாக கடந்து சென்றது.  அது கடந்து சென்றபிறகு நாங்கள் படகை ஓட்டிச் சென்றோம்.
ஓசானிக் படகின் துணைப்படகான பசிபிக் என்ற விசைப்படகின் கேப்டன், விடியற்காலை நான்கரை மணியிலிருந்தே ஓசானிக்கை ஒயர்லஸில் அழைத்துக்கொண்டே இருந்தார். அங்கிருந்து எந்த மறுபதிலும் வரவில்லை.( இரவு இரண்டு மணிவரை இரு படகினரும் ஒயர்லஸில் பேசிக்கொண்டுதான் ஓடிவந்திருக்கிறார்கள்.)
 ஒயர்லஸின் சவுண்டை குறைத்து வைத்திருக்கிறார்களோ அல்லது ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ என்று நினைத்தவாறே   வலை போடாமல்  வந்தவழியைப் பார்த்து திரும்பி, ஓசானிக்கைத் தேடி   படகை ஓட்டிச் சென்றார் பசிபிக் கேப்டன்.
 ஓடிக் கொண்டிருக்கும்போதே ஒவ்வொரு சேனலாக “ஓசானிக்கை பார்த்தீர்களா? அவர்கள் லைன்ல வந்தார்களா?” என்று ஒயர்லஸ் வழியாக கேட்டுக்கொண்டே சென்றார். எல்லா சேனலிலும் ‘ அவர்கள் லைனில் வரவில்லை. போட்டை பார்க்கவில்லை’ என்றே பதில் வந்தது.
காலை ஆறரை மணிவாக்கில் மஞ்சுமாதா என்ற படகினர், 10.25 N, 075.38 E என்ற பொசிசனில்  தொழில் செய்து கொண்டிருக்கும்போது,  கடலிலே உயிருக்குப் போராடி தத்தளித்துக் கொண்டிருந்த இருவரை பார்த்தவுடன் விரைந்து சென்று அவர்களை படகில் தூக்கி எடுத்தார்கள். அப்போதுதான் அவர்கள் ஓசானிக் படகில் போகும் தொழிலாளர்கள் என்றும்,  கப்பல் இடித்து படகு நொறுங்கி முழுவதுமாக மூழ்கிப் போனது என்றும் தெரியவந்தது.
ஒவ்வொரு  ஒயர்லஸ் சேனலிலும் இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது. பதினான்கு தொழிலாளர்களில் இரண்டுபேரை காப்பாற்றிய நிலையில், மீதி பன்னிரண்டுபேரை காப்பாற்றும் நோக்கில் செய்தியறிந்த அனைத்து விசைப்படகுகளும் உடனடியாகவே வலைகளை இழுத்து எடுத்துவிட்டு ஆட்களை தேட ஆரம்பித்தனர். பதினைந்து நாட்டிக்கல் மைல் தூரத்தில் இருந்த நாங்களும் ஆட்களை காப்பாற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் விபத்து நடந்த இடத்தை நோக்கி ஓடிச் சென்றுகொண்டிருந்தோம்.நாங்கள் அந்த இடத்தை சென்றடைய இரண்டு மணிநேரம் ஆகும் என்று ஜி.பி.எஸ்-ல் காட்டியது.
கோஸ்ட் கார்டையும் நேவியையும் ஒயர்லஸ் சேனல் பதினாறில் சென்று உதவிக்கு அழைத்துப்பார்த்தோம். யாருக்கும் லைன் கிடைக்கவில்லை. எங்கள் ஒயர்லஸ் ரேஞ்ச்  சுமார் முப்பது நாற்பது நாட்டிக்கல் மைல் வரைதான் கேட்கும். அவர்கள் அதற்கும் தூரத்தில் இருந்திருக்கலாம்.
விபத்து நடந்த பகுதியில் சுமார் நூறு விசைப்படகுகள் ஆட்களை காப்பாற்ற அங்குமிங்குமாக தேடி அலைந்தன. அப்போது மூன்று பேரை இறந்த நிலையில் கண்டெடுத்தனர். அதில் ஒருவர் படகில் வந்த பிறகு இறந்து போனார்.
ஆட்களை கண்டெடுத்த விசைப்படகினர் கரையை நோக்கி வேகமாக ஓடிச் சென்றனர். அவர்களிடம் ஓசானிக் படகின் முதலாளி போண் நம்பரும், படகில் போனவர்களின் வீட்டு போண் நம்பர்களும், மீனவ மக்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்து வாழும்  ‘தாமஸ் கொச்சேரி மீன் தொழிலாளர் யூனியன்’ ஒருங்கிணைப்பாளர் பணி.ஆன்றனி கிளாரட்டின் போண் நம்பரும் ஒயர்லஸ் மூலம் கொடுக்கப்பட்டது.
  விபத்து நடந்த கடல்  பகுதியில் நீரோட்டம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 180டிகிரியில் ஓடிக்கொணடிருந்தது.
மீதி ஒன்பது பேரைத் தேடி மற்றுள்ள படகுகளெல்லாம் நீரோட்டம் அறிந்து அகன்று சென்று தேடி அலைந்தனர்.
நாங்கள்   இரண்டு மணிநேரம்  ஓடியபிறகு விபத்து நடந்த பகுதியில் வந்தடைந்தோம். அப்போது வலை இழுத்து தேடுவதற்கு அனைத்து படகினரும் சேர்ந்து தீர்மானிக்கப்பட்டு வலைபோட ஆயத்தமானோம் .
தண்ணீரின் மேலே பத்து நாட்டிக்கல் மைல் சுற்றளவிற்கு எந்த பொருள் கிடந்தாலும் படகினர் கண்களிலிருந்து தப்பாது. அப்படி ஆட்கள் கிடைக்காத போதுதான் வலை போட்டுத் தேடி உடல்களையாவது கரை சேர்ப்போம் என்ற எண்ணத்தோடு வலைகளை போட்டோம். அங்குமிங்குமாக வலையை தரையோடு இழுத்து வந்து, பின்னர் வலையை படகின் மேலே எடுத்துப் பார்த்தோம். யாருடைய வலையிலும் உடல்கள் கிடைக்கவில்லை.
கரையில் ஓடிச்சென்ற படகினர் செல்போண் சிக்னல் கிடைத்தவுடன் ஒவ்வொருவருக்கும் போண் செய்து தகவலை தெரிவித்தனர்.
மதியம் சுமார் பன்னிரண்டரை மணியளவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் விபத்து நடந்த கடல் பகுதியில் வந்து வட்டமிட்டு பறந்து கொண்டேயிருந்தன.
 கரையில் தகவல் அறிந்து பத்திரிகையாளர்களும் அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் முனம்பம் துறைமுகத்தில் திரளாக வந்து கூடினர். உயிரோடிருந்தவர்களை முதலுதவி சிகிச்சைக்காகவும், இறந்தவர்களை பிறேதப் பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனர்.
கடலில் மூழ்கிய ஓசானிக் விசைப் படகில் குமரி மாவட்டத்திலுள்ள ராமந்துறை ஊரிலிருந்து ஏழு பேரும், முள்ளூர்துறையிலிருந்து இரண்டு பேரும், மணக்குடியிலிருந்து இரண்டு பேரும், வடமாநிலத்திலிருந்து இரண்டு பேரும், கேரளாவிலிருந்து ஒருத்தரும்  அப்படி பதினான்கு பேர் தொழிலுக்குச் சென்றிருந்தனர்.
தகவல் அறிந்ததும் குமரிமாவட்டத்திலிருந்து உறவினர்களும், ராமந்துறை பங்குத்தந்தையும், தாமஸ் கொச்சேரி மீன் தொழிலாளர் யூனியன் ஒருங்கிணைப்பாளர்  ஆன்றனி கிளாரட்டும் மற்றும் சமூக சேவகர்களும் முனம்பத்தில் வந்து சேர்ந்தனர்.
பத்திரிகையாளர்களிடமும் டிவிகாரர்களிடமும் அரசியல்வாதிகளிடமும்  அதிகாரிகளிடமும் கிடைக்காத உடல்களை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து தர வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தனர்..
ஒவ்வொரு நாளும் கரையிலிருந்து விசைப்படகுகள் ஆட்களைத் தேடி வந்துகொண்டிருந்தன.மூன்றுநாள் கழித்தும் எந்த உடல்களும் மிதக்கவில்லை. நேவி கப்பலும் அந்த இடத்தில் வந்து கிடந்தது.
பதினொன்றாம் தேதி ஒரு விசைப்படகின் வலையினுள் கேரளக்காரரின் உடல் அகப்பட்டு வந்தது.
பன்னிரண்டாம் தேதி  இன்னொரு உடல் மிதந்து கிடந்ததை விசைப்படகினர் பார்த்து நேவியின் உதவியுடன் படகில் தூக்கி எடுத்து கரையில் கொண்டு சேர்த்தனர்.
10.27N,   075.38E  என்ற ஜி.பி.எஸ் நம்பர் கொண்ட கடல் பகுதியில் ஒரு விசைப்படகின் வலையும் போர்டும் ஏதோ ஒன்றில் மாட்டி கடலில் போய்விட்டது. அந்த இடத்தை பதிவு செய்து ஒரு மிதவையை அதில் போட்டுவிட்டு நேவிக் கப்பலுக்கு தெரியப் படுத்தினார்கள்.
நேவிக் கப்பல் மதர்தெரசா என்ற விசைப்படகின் உதவியுடன் அந்த இடத்தை விசைப்படகுதானா என்று ஸ்கேன் செய்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
குமரிமாவட்டத்திலிருந்து  முனம்பத்தில் வந்தவர்கள், இறந்து போனவர்களின உடல்கள் கிடைக்காததால் அங்கேயே தங்கி இருந்தனர் . இவர்களோடு பணி. ஆன்றனி கிளாரட்டும் முனம்பத்திலே தங்கி இருந்து ஆக வேண்டிய காரியங்களை செய்து கொண்டிருந்தார்.மற்றும் துணைப் படகாக சென்ற பசிபிக் கேப்டனும், ஆமென் கேப்டனும் தொழிலுக்குச் செல்லாமல் கரையில் இருந்து பல உதவிகளை செய்து கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பொதுநலவாதிகளும் உடனிருந்தனர்.
மூழ்கிக் கிடக்கும் கப்பலின் வீல்ஹவுஸின் உள்ளேயோ அல்லது வலைகளிலோ மாட்டியிருக்கும் ஏழு உடல்களை மீட்டுத் தாருங்கள் என்று அதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமும் டிவிசேனலிலும் கோரிக்கை விடுத்தார்கள்.
அதன் பிறகு கேரளத்தில் வெள்ளப்பெருக்கு வந்து அனேக இடங்கள் வெள்ளத்தில்  மூழ்கி அபாய கட்டத்தை எட்டிக்கொண்டிருந்தன. விபத்துப் பகுதியில் நின்றிருந்த நேவியும்  வேறொரு முக்கிய காரணத்திற்காக அந்த இடத்திலிருந்து வேறு பகுதிக்கு மாற்றப்படலானது.
உடல்களை கைப்பற்றுவதற்காக   முனம்பத்தில் தங்கியிருந்தவர்களும் வெள்ள அபாயத்தால் அவரவர் ஊர்களுக்கு வந்து சேர்ந்தனர்.
ஆகஸ்ட் 21ம் தியதி ராமந்துறையில் ஆயர் தலைமையில் இறந்தவர்களுக்கு திருப்பலியும் அதைத் தொடர்ந்து இரங்கல் கூட்டமும் நடைபெற்றது. அதில் குமரி மாவட்ட அனைத்து எம்.எல் ஏக்களும் அரசியல் பிரமுகர்களும் அருட்பணியாளர்களும் பொதுநலவாதிகளும் கலந்து கொண்டு இரங்கலை தெரிவித்ததோடு  இறந்தவர்களின் போட்டோக்களுக்கு மலர் வைத்து மரியாதை செலுத்தினர்.
இனி….
கடலில் தொழில் செய்யும் மீனவர்களான எங்களின் கோரிக்கை
*******************************
 அரபிக்கடலில் குமரிமாவட்டத்திலிருந்து குஜராத் வரை லட்சக்கணக்கான விசைப்படகுகளும் நாட்டுப்படகுகளும் தொழில் செய்து கொண்டிருக்கின்றன. இந்த பகுதிகளிலெல்லாம் கப்பல்கள் ஒரு வரையறையுமின்றி ஆடுமாடுபோல் அங்குமிங்குமாக மேய்கின்றன. கப்பல் படகை இடித்தால்  படகும் மூழ்கும். உயிர்ச் சேதமும் ஏற்படும். படகும் படகும் இடித்தால்  உயிர்ச்சேதம் ஏற்படுவதில்லை.
படகுகளின் கூட்டத்தில் கப்பல் வந்தால் ஒருசில கப்பல்கள் வேகம் குறைத்தே வரும். ஒருசில கப்பல்கள் வேகமாக கடந்து செல்லும். ஒலி எழுப்புவதில்லை. ஏதோ ஒரு கப்பல் ஒலி எழுப்புவதை எப்போதாவது ஒரு முறை கேட்போம்.
கடலில் படகை ஓட்டுவதற்கும்  சாலையில் வாகனத்தை ஓட்டுவதற்கும் வித்தியாசம் உண்டு.
சாலையில் நாம் வாகனத்தை ஓட்டும்போது நம் கவனம் முன் நோக்கியே இருக்கும். குறுக்குச் சாலைகள் வரும்போது அங்கிருந்து வாகனம் வருகிறதா என்றும் கவனித்துக் கொள்வோம். பின்னாலிருந்து வாகனம் வருவதை முன்பக்க கண்ணாடியில் தெரிந்து கொள்வோம். கொஞ்சம் கவனக்குறைவானால் சாலையிலிருந்து விலகிவிடும் என்பதால் முழுக் கவனத்தோடு ஓட்டுவோம்.
ஆனால் கடலில் அப்படி அல்ல. இங்கே எல்லாமே சாலைதான்.
நம் கவனம்  முன்னோக்கி  இருக்கும். குறுக்காக வேகமாக வரும் கப்பலை எப்பொழுதும் கவனித்துக் கொண்டிருக்க முடியாது. இடையிடையே அங்குமிங்குமாக திரும்பி பார்த்துக் கொள்வோம். எந்த நேரமும் தலையை திருப்பித்திருப்பி பார்த்துக் கொண்டிருக்க எந்த தம்புரானாலையும் முடியாது. பின்னாலிருந்து வேகமாக வரும் கப்பலையும் எப்பொழுதும் கவனிக்க முடியாது. விபத்து நடந்தால் நடந்ததுதான். அதற்காக படகை ஓட்டியவரை முழுதும்  பழிசுமத்த முடியாது.
இரவு நேரங்களில்  படகின் லைட்டுகள் கடல்பரப்பு முழுவதும் அங்கங்கே தெரிந்து கொண்டிருக்கும். அதன் நடுவில் கப்பலின் லைட்டும் தெரியும். காற்றும் மழையும் வந்தால் ஒரு லைட்டும் தெரியாது. எது எப்படி வருகிறதென்று ஒன்றும் கணிக்க முடியாது.
 விசைப்படகுகளின் கேப்டன்கள் இரவு நேரங்களில் எல்லா நேரமும் படகை ஓட்ட மாட்டார்கள். பகல் முழுவதும் அவர் மட்டுமே ஸ்டீயரிங்கில் இருக்க வேண்டும் என்பதால், இரவுவேளை பாதி நேரமாவது கொஞ்சம் அனுபவம் உள்ள தொழிலாளர்கள் தான்  மாறிமாறி படகை ஓட்டிச் செல்வார்கள். அப்படிபட்ட  ஒருசில தொழிலாளர்களுக்கு கப்பலின் லைட்டுகளை வைத்து, இந்த திசையை நோக்கித்தான் வருகிறது என்று கணிக்கத்தெரியாமல் போய்விடுகிறது.
கடந்த ஒன்றரை வருடத்தில் ஏழுமுறை கப்பல் விசைப்படகை மோதி பெரும் விபத்துக்குள்ளாக்கி உயிர்ச் சேதத்தையும ஏற்படுத்தியிருக்கிறது என்று  ராமந்துறையில் இரங்கல் கூட்டத்தில் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார்     தெரியப்படுத்தினார்.
இப்படி அசம்பாவிதமாக எந்த உயிரும் போகக்கூடாது. மற்றுள்ளவர்களின் உயிரைவிட எந்தவிதத்திலும் மீனவர்களின் உயிர் குறைந்ததல்ல.சொல்லப்போனால் ஒருபடி மேலே என்றே சொல்லத்தோன்றும்.
மீனவக் கிராமங்களில் பெரும்பாலும் குடும்பத் தலைவனே அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுபவராக இருப்பார். அவரே எல்லாமுமாக இருப்பார். அவரை இழந்தால் மொத்தமும்  நிலைகுலைந்து தடுமாறிப் போகும்.
ஓகிப் புயலில் கணவனை பறிகொடுத்த  மீனவப் பெண்மணி,  தெருவோரம் இருந்த கண்ணீர் அஞ்சலி பேனரில் தன்னுடைய கணவனின் படத்தைப் பார்த்து, எல்லாம் இழந்துபோன நிலையில்  ஆழாத் துயரோடு ஓடிச்சென்று அவர் முகத்தோடு முகம் பதித்து குமுறி அழும்போது… எந்த அளவிற்கு அவர்களால் பிரிவை தாங்க முடியாமல் வேதனிப்பார்கள் என்பதை உணர்த்தும்.
ஆகவே இப்படிப்பட்ட துயரங்கள் நிகழாமல் இருக்க, எல்லா கடலிலும் கண்டபடி  ஓடும் கப்பல்களின் வழித்தடங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
இழுவை தொழில் செய்யும்   விசைப்படகுகளின் கடைசி எல்லை ரெட்றிங் கிரவுண்ட் ஆகும். ஏகதேசம் கரையிலிருந்து ஐம்பது அல்லது அறுபது நாட்டிக்கல் மைல் தூரம்தான். இதற்கும்  பத்து அல்லது இருபது நாட்டிக்கல் மைல் ஆழ்கடல் பகுதியை கப்பல் வழித்தடமாக அமைத்தால் யாருக்கும் எந்த ஆபத்தும் வராது. கப்பலுக்கும் மெதுவாகச் செல்லவேண்டிய தேவை இருக்காது. எவ்வளவு வேகத்திலும் செல்லலாம்.
ஒரு துறைமுகத்திலிருந்து கப்பல் புறப்படும்போது நேரே ஆழ்கடல் பகுதியில் அறுபது நாட்டிக்கல் மைல் சென்றுவிட்டு, அதன்பிறகு குறுக்காக எந்த வேகத்திலும் ஓடிப்போங்கள். எந்த இடையூறும் இருக்காது. அதைப் போல் வரும்போதும். துறைமுகத்திலிருந்து ஆழ்கடலை நோக்கி போகும்போதும் வரும்போதும் படகுகளை கவனித்து ஒலி எழுப்பிக் கொண்டு சென்றால்  விபத்துகளை தவிர்க்கலாம்.
கன்னியாகுமரியிலிருந்து மங்கலாபுரம் நேரே ஆழ்கடல் பகுதியிலுள்ள ரெட்றிங் கிரவுண்ட் ஜி.பி.எஸ் நம்பர்கள்…
07.33N, 077.58E.
08.00N, 076.40E.
09.00N, 075.29E.
10.00N, 075. 33E.
11.00N, 075.03E.
12.00N, 074.21E
13.00N, 073.51E.
இந்த ஜிபிஎஸ் நம்பருள்ள இடத்திலிருந்து கரைநோக்கிய கடற்பகுதியில் தான்  நாட்டுப்படகுகளும் இழுவை விசைப்படகுகளும் தொழில் செய்யும். ஆகவே இந்த நம்பரிலிருந்து பத்திருபது  நாட்டிக்கல் மைல் ஆழப்பகுதியில் கப்பல் ஓடினால் நன்றாக  இருக்கும்.
   தூண்டில் தொழில் செய்யும் விசைப்படகுகளை வரைமுறைப்படுத்த முடியாது. அவர்கள் அதிக ஆழம் கொண்ட பகுதியில் செல்பவர்கள்.
கப்பல் இடித்து இறந்துபோய் உடல் கிடைத்தவர்களின் குடும்பத்திற்கும்
உடல் கிடைக்காமல் போன குடும்பத்திற்கும் நாட்களை  தாமதப் படுத்தாமல் உடனடியாகவே உரிய நிவாரணம் வழங்கி அந்த குடும்பங்களை கைதூக்கிட அரசியல்வாதிகளிடமும் சமூகப் போராளிகளிடமும் மீனவர்கள் சார்பில் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
கடிகை அருள்ராஜ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here