வளர்ச்சியில் சீனாவை மிஞ்சுமா இந்தியா?.- இயான் மார்லோ.

“Economic times இணையத்தளத்தில் வந்த இந்த கட்டுரையை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் ஒமன் நாட்டில் ஆசிரியராக பணியாற்றும் ஆபிரகாம் தெய்வநாதன்.”

 பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பின் பொழுது ஒரு அரிய தேசிய அறிவிப்பை செய்தார். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுடன் ஒரு “விண்வெளி சக்தியாக” தன்னை நிலைநிறுத்த, குறைந்த சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் ஒன்றை அழித்துவிட்டோம் என்று பெருமையடித்துக் கொண்டது அந்த அறிவிப்பு.

சீனாவின் நீண்டகால புவிசார் அரசியல் எதிரிகளை எதிர்த்து நிற்காமல் இருந்த தனது முன்னோடிகளிடம் இருந்து வேறுபட்டு நின்ற மோடிக்கு, ஏவுகணை சோதனை “மிகுந்த பெருமை” சேர்க்கும் தருணமாக அமைந்தது. ஆயினும்கூட சீனா 2007 ல் அதாவது சுமார்  பத்து ஆண்டுகளுக்கு முன்னரே இதேபோன்ற சோதனை ஒன்றை வெற்றிகரமாக நடத்தி இருந்தது.  இந்த நிகழ்வு உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட இரு நாடுகளுக்கு இடையிலான வலிமையின் இடைவெளி எவ்வளவு தொலைவு என்பதை காட்டுகின்றது.

மோடியின் ஆளும் கட்சி நடந்து முடிந்த தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது  தேசிய பாதுகாப்புக்கு தாங்கள் தான் தகுதியானவர்கள் என்று நிருபிக்க பாகிஸ்தானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது. மேலும் மோடி அவர்கள் மேற்கொண்ட 80 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணங்கள் மூலம் இந்தியாவின் புகழை உயர்த்துவதற்கு தங்களை ஒரு உயரிய பொருளாதார சக்தியாக சித்தரித்துக்கொண்டது. இதனை தொடர்ந்து மோடியின் அரசாங்கம் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற சீன ஜனாதிபதி சீ(Xi)சின்பிங் இன் பெல்ட் மற்றும் சாலை உள்கட்டமைப்பு மன்றத்தில் பங்குபெற மறுத்துவிட்டது.

இவ்வளவு இருந்தும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை சீனா இன்னும் பின்னுக்குத் தள்ளியுள்ளது. இந்தியாவைவிட பல மடங்கு கூடுதலாக பாதுகாப்பு துறையில் சீனா தொடர்ந்து செலவழித்து வருகிறது, மேலும் அதன் இராணுவ மற்றும் அரசதந்திர கட்டமைப்புகளில் பெரும் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்தியாவின் அண்டை நாடான பாகிசுதானில் சீனாவை மேலோங்கச் செய்யும் கட்டமைப்புகளை மிகவும் நேர்த்தியாக உருவாக்கி அந்நாட்டிற்கு புதிய இராணுவ தொழில்நுட்பங்களை வழங்கி வருகின்றது.

இந்தியா சீனா இராணுவ செலவினங்கள் ஓர் ஒப்பீடு

மோடி பதவியேற்றதில் இருந்து பாதுகாப்பு செலவினங்களில் இந்தியாவை விட சீனா தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.

“சீனாவின் வளர்ச்சி வேகத்துடன் இந்தியாவால் போட்டி போட சாத்தியமில்லை” என தென் கொரியாவின் முன்னாள் இந்திய தூதரும் ஷாங்காயில் உள்ள தூதரக தளபதியுமான விஷ்ணு பிரகாஷ் கூறுகிறார். மேலும் அவர் “நம்மிடம் அதற்கு தேவையான பொருளாதார வலிமை இல்லை” என்றும் கூறுகின்றார்.

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், இந்தியாவின் அடுத்த அரசாங்கம் சோவியத் ஆட்சி கால காலாவதியான (MiG)மிக் ரக போர் விமானங்கள், இராணுவ மேம்பாடுகளை தவிர்க்கும் அதிகாரத்துவம் மற்றும் எண்ணிக்கையில் மிகவும் குறைந்த அரச தூதுவர்களை கொண்டதாக இருக்கும்.  சீனாவிடம் இருந்து தன் எல்லைகளை பாதுகாக்க, அமெரிக்கா மற்றும் தன்னை போல சீனாவிற்கு எதிரான கோட்பாட்டை கொண்டிருக்கும் ஆசியாவில் உள்ள பிற நாடுகளை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கும்.

இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் சொந்த புவியியலை சுற்றி இராணுவத் தளங்களை உருவாக்கி, சீனா தன்னை முடுக்கிவிடாது என்பதை உறுதிப்படுத்துவது இந்தியாவின் ஒரு நீண்டகால சோதனை ஆகும் “என்று ஆஸ்திரேலிய பல்கலைகழகத்திற்கு கீழ் இயங்கும் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தலைவரான ரோரி மெட்காஃப் கூறுகின்றார்.  “டெல்லி ஒரு நீண்ட விளையாட்டை விளையாடுகின்றது. இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில், அது உலகின் மூன்றாவது மிகப்பெரிய பாதுகாப்பு செலவினங்கள் செய்யும் நாடாக மாறக்கூடும். 

மேலும் ஓர் பின்னடைவு

இந்தியாவின் பொருளாதாரம் 2.6டிரில்லியன் டாலர்களாக விரிவடைந்து, பிரான்சு நாட்டை பின்னுக்கு தள்ளியபோதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், சீனா தான் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகும்.

மோடியின் கீழ், இந்தியா திறமையுடன் சீனாவுடன் உறவுகளைக் கையாண்டது.  பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்தது மட்டுமின்றி ஆயுதப்படைகளுக்கு கூடுதலான தன்னாட்சியை வழங்கியது,என்கிறார் ஆளும் பாரதீய சனதா கட்சியின் செய்தித் தொடர்பாளரான G.V.L. நரசிம்ம ராவ்.

“சீனா தனது சொந்த தேவைகள் மற்றும் திட்டங்களுக்கு ஏற்ப மிகப் பெரிய பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தை கொண்டுள்ளது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று ராவ் கூறினார். மேலும் அவர் “இந்தியா எந்தவொரு நாட்டுடனும் எந்தவொரு ஆயுதப் பந்தயத்திலும் இல்லை, மற்றும் அதன் தேவைகளுக்கு ஏற்ப போதுமான பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தை கொண்டுள்ளது. ஆயுதப்படைகளையும் சீர்திருத்தங்களையும் நெறிப்படுத்துவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும்.” என கூறினார்.

இருப்பினும், லோவி இன்ஸ்டிடியூட்டின் ஆசிய சக்தி குறியீட்டின்படி, பொருளாதார வளங்கள், இராணுவ திறன்கள் மற்றும் இராஜதந்திர செல்வாக்கு ஆகியவற்றின் படி நாடுகளை வரிசைப்படுத்தும் லோவி இன்ஸ்டிடியூட்டின் ஆசிய மின் குறியீட்டின் படி, ஒவ்வொரு புவிசார் அரசியல் அளவுகோள்களிலும் இந்தியா தொடர்ந்து சீனாவுக்கு பிந்தய நிலையில் தான் காணப்படுகின்றது.

ஆசியாவின் ஆளுமை இடைவெளி

இந்திய வெளியுறவுக் கொள்கையில் தனிப்பட்ட உற்சாகத்தை மோடி காட்டினபோதும், வெளியுறவு அமைச்சகத்தின் விவகாரங்களுக்கான ஊழியர்களின் எண்ணிக்கை உயர்ந்ததாக தெரியவில்லை என புது டெல்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச படிப்புகளின் இணைப் பேராசிரியரான ஹேபிமோன் ஜேக்கப் கூறினார். இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் விவகாரங்களுக்கான ஊழியர்களின் எண்ணிக்கை  சுமார் 940, ஆனால் சீன வெளியுறவு துறை ஊழியர்களின் எண்ணிக்கையோ 7,500 பேர்.

இதே நிலைமை தான் இராணுவத்திலும் எதிரொலிக்கிறது. சீனாவின் இராணுவ சீர்திருத்தங்களை சீனத் தலைவர் சீ(Xi) மிக நுட்பமான முறையில் கையாண்டுள்ளார். போர் பணியில் தொடர்பு இல்லாத பணியாளர்களை குறைத்ததோடு நிற்காமல் இராணுவ தொழில்நுட்பத்தை விண்வெளி மற்றும் இணைய தொழில் நுட்பங்களுடன் புதுபித்துள்ளார். ஆனால், இந்தியாவோ 1.4 மில்லியன் வலுவான இராணுவத்தை பெற்றிருப்பதன் மூலம் அதன் பாதுகாப்புப் பணத்தின் பெரும்பகுதியை சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்களிளே செலவழிக்கிறது. இது புதிய தொழில்நுட்ப உபகரணங்களைக் வாங்குவதற்கு தடையாக உள்ளது.

“இந்திய இராணுவத்தில் உள்ள முப்படைகளூம் தனித்தனியாக ஒரு போரை சந்திக்கலாம் என்ற ஓர் தவறான நிலைபாட்டினை கொண்டுள்ளது,” என்றும்ஜேக்கப் கூறுகிறார்.

அரசு தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையின் ஓப்பீடு

எம்.ஐ.டி-யின் அரசியல்-அறிவியல் இணை பேராசிரியரான விபின் நாரங் கருத்துப்படி, செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை பற்றிய மோடியின் அறிவிப்பு கூட சீனாவிற்கு எந்த அச்சுறுத்தலும் கொடுப்பதாக தெரியவில்லை. ஏனெனில் “இந்தியா அழிக்க வேண்டியிருக்கும் சீன செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பது மட்டுமல்லாமல்,செயற்கைக்கோள்களைக் அழிக்கும் தொழில்நுட்பத்தில் சீனா இந்தியாவை விட ஒரு படி மேலோங்கியே இருக்கின்றது” என்று நாரங் கூறுகிறார்.

அரசியல் செல்வாக்கு

மோடியின் தற்போதைய நோக்கம் என்னவென்றால் வளர்ந்து  வரும் சீனாவுக்கு எதிராக குரல் கொடுக்கும் நாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதும் அதோடு பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் ரஷ்யா போன்ற ஆயுதங்களை விற்க விரும்பும் இன்னும் பல நாடுகளுடன் நல்லுறவை மேம்படுத்துவதே ஆகும்.

கடந்த ஆண்டு ஆசியாவை குறிப்பாக சீனாவை எதிர்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து “தி குவாட்” (The QUAD)என்று அழைக்கப்படும் குழுவில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் குறிப்பாக இந்தியாவை ஈடுபடுத்த முயன்று வெற்றியும் கண்டது,

“அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பிரான்ஸ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட இந்தோ-பசிபிக் கூட்டாளர்களுடன் இந்தியாவின் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் அமெரிக்கா காட்டும் தீவிரத்தினால் சீனா உண்மையான அபாயத்தைக் காண்கிறது” என்று ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தலைவரான ரோரி மெட்காஃப் கூறுகின்றார். ” இந்தியா, சீனாவுடன் முறையான நட்பு பாராட்டவும் அல்லது சீனாவை முழு நேர எதிரியாக நோக்க தேவையில்லை என்ற நிலைபாட்டை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் கொண்டுள்ளனர். மேலும் அவர்கள்,இந்தியா, சீனா மீது பொது நிலைபாட்டுடன்  இருந்து – இந்தியப் பெருங்கடலில் ஒரு திறமையான மற்றும் வளர்ந்து வரும் ஆற்றல் மிகும் நாடாக உருவெடுத்து, இந்தியக் கடற்படை சீனாவின் செல்வாக்கை சிக்கலாக்கும் படையாக மாறவும் மற்றும் அதன் அரசியல் செல்வாக்கு ஒவ்வொரு நாளும் ஆசியாவுக்காக குரல் கொடுப்பதில் சீனாவுக்கு மட்டும் பங்கில்லை எங்களுக்கும் உண்டு என்பதை நிரூபிக்கவும் வேண்டும் என விரும்புகின்றார்கள்.

சீனாவும் இந்தியாவும் தங்கள் நாட்டுக்கு இடையிலான பதட்டங்களுக்கு ஒரு தற்காலிக தீர்வை தற்போது சுமூகமாக கண்டது. பூட்டானுடனான ஒரு எல்லைப் பகுதியில் சீன மற்றும் இந்திய துருப்புகள் எதிர்கொண்டபோது இமயமலையில் ஒரு பதட்டமான நிலைப்பாட்டிற்குப் பிறகு, மோடிக்கும் சீன அதிபர் சீ(Xi)க்கும் இடையிலான ஒரு உச்சிமாநாடு பதட்டங்களைத் தணித்தது.

“உலகில் உள்ள எல்லா நாடுகளுக்குள்ளும் எதாவது ஒரு போட்டி இருக்க தான் செய்யும்.  அது போல தான் நாம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டியை காண வேண்டும்” என்று சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகத்தில் நிதி ஆய்வுகளுக்கான சோங்கிங் இன்ஸ்டிடியூட் ஃபார் ஃபினான்சியல் ரிசர்ச் இன் இணைப் பேராசிரியரான வாங் பெங் தெரிவிக்கிறார். மேலும் அவர் “இந்தியாவுக்கும் சீனாவுக்கும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் ஆக்கப்பூர்வமான போட்டிக்கு நல்ல வழி உள்ளது” எனவும் தெரிவிக்கின்றார்.

இருப்பினும், சீனாவின் உள்கட்டமைப்பு முதலீடுகள் நீண்டகால தொலைநோக்கு பார்வையோடு நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதில் ஒரு பங்காக சீன அரசு, சீனா பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத் திட்டங்களுக்கும், மியான்மரிலிருந்து இலங்கை வரையிலான துறைமுகங்களுக்கும் 60 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் கூடுதலாக செலவு செய்துள்ளது. இந்திய-பசிபிக் உள்கட்டமைப்பு தொடர்பான சமீபத்திய ஹென்றி ஜாக்சன் சொசைட்டி அறிக்கையின்படி, சீனாவுக்கு நிகரான இந்தியாவின் உள்கட்டமைப்பு முதலீடுகள் மிகுந்த “மந்தமாக” தான் உள்ளது.

அணுசக்தி பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் அணுசக்தி சப்ளையர்கள் குழுவிலிருந்து பெய்ஜிங் இந்தியாவை ஒதுக்கி வைத்துள்ளது, மேலும் புல்வாமாவில் அரங்கேறிய தற்கொலை குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்ற பாக்கிசுதானை சேர்ந்த ஒரு குழுவின் தலைவரை பயங்கரவாதியாக பட்டியலிட ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய மற்றும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிகளைத் சீனா தடுத்தது. இந்த குண்டுவெடிப்பில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதை நாம் அறிவோம்.

“சில வழிகளில், இந்தியா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது சிறந்து விளங்குவதாக தோற்றம் அளித்தாலும், சீனாவின் வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், இந்தியா இன்னும் பின் தங்கி உள்ளதாக தான் தெரிகிறது” என்று நியூயார்க்கில் உள்ள வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலில் முன்னாள் அமெரிக்க தூதரும் தெற்காசியாவின் மூத்த உறுப்பினருமான அலிஸா அய்ரெஸ் கூறுகின்றார்.

இக்கட்டுரையை பிட்டர் மார்ட்டீன் அவர்கள் துணைகொண்டு எழுதியவர்

—இயான் மார்லோ

மொழிபெயர்ப்பு- ஆபிரகாம் தெய்வநாதன்

Source- The Economic times

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here