வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு….. ரஞ்சன் கோகோய் – துளசியம்மாள்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்கு உட்பட்டவர். ” உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் ஒரு பொது அதிகார அமைப்பே ஆகும் அதனால் அதுவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(RTI) வரம்புக்குள் உட்பட்டதே” என்கின்ற வரலாற்று சிறப்புமிக்கதாக போற்றப்படும் இந்த தீர்ப்பை வழங்கியது வேறுயாருமல்ல உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான _ நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தான். பெரும்பான்மை அடிப்படையில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

வரும் 17ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், முன்பு அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி பாலகிருஷ்ணன் “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வெளிப்படைத்தன்மை அப்பாற்பட்டது” என கூறியதற்கு மாறாக தீர்ப்பு வழங்கியுள்ளது வரலாற்றில் சிறப்பு மிக்கது என சிலாகிப்பது ஒருவகையில் ஏற்புடையதுதான்.

இருப்பினும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உண்மையிலேயே தனது அலுவலகத்தில் நடப்பது என்ன என்பதை பொதுமக்கள் தகவல்களாக அறிவதற்கு உறுதுணையாக எந்த அளவுக்கு நேர்மையாக நடந்து உள்ளார் என்பதை பாருங்கள்.

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் நீதிபதி ரஞ்சன் கோகாய் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் கடிதம் ஒன்றை எழுதினார்.

அந்தப் பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க, நீதிபதி என். வி ரமணா உள்ளிட்ட 3 உறுப்பினர்கள் கொண்ட உள்விவகார குழு அமைக்கப்பட்டது. நீதிபதி என். வி ரமணா இக்குழுவில் பங்கேற்பது குறித்து குற்றச்சாட்டு எழுப்பிய பெண் ஆட்சேபம் தெரிவித்ததால். அவருக்கு பதிலாக நீதிபதி இந்து மல்ஹோத்ரா இடம் பெற்றார். விசாரணைக் குழுவிற்கு நீதிபதி எஸ். ஏ. பாட்டே தலைமை வகித்தார்.

விசாரணை மேற்கொண்ட உள் விவகார குழு, “புகாரில் எந்த முகாந்திரமும் இல்லாததால் தள்ளுபடி செய்வதாக” கூறியுள்ளது உள் விசாரணைக் குழுவின் அறிக்கை உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதோடு, சம்பந்தப்பட்ட நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கும் நகல் வழங்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உள்விவகார குழு, தனது அறிக்கையை வெளியிட தேவையில்லை என தனக்குத்தானே கூறிக் கொண்டதோடு, பாலியல் புகார் அளித்தவருக்கு கூட அறிக்கையின் நகலை தர மறுத்துள்ளது.

“எதனடிப்படையில் குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டன” என்பது வெளிப்படுத்தப்படவில்லை. நீதிபதி ரஞ்சன் கோகாய் புனிதராகிவிட்டார்.

“உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் வெளிப்படைத்தன்மை உட்பட்டதே. அங்கு நடப்பவைகளை மக்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அறிந்து கொள்ளலாம்” என்று நீதிபதி ரஞ்சன் கோகாய் தற்போது சொல்வதன் பொருள் என்ன?

“குற்றச்சாட்டு தன்மீது என்கின்ற போது வக்கீலாகவும், பிறர்மீது என்றால் நீதிபதியாகவும் நடந்து கொள்கின்ற பாமரனை விட எந்த விதத்திலும் மேலானவர் அல்ல நீதிபதி ரஞ்சன் கோகாய்”.

துளசியம்மாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here