ரெனால்ட் நிசான் தொழிற்சங்க தேர்தல்.நிர்வாகத்தின் சதியை முறியடித்து வெற்றியீட்டிய தொழிலாளர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட்டில் அமைந்துள்ள ரெனால்ட் நிசான் கார் தொழிற்சாலையில் சுமார் 3500 நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் . பல ஆண்டுகளாக தொழிற்சங்க உரிமைக்காக போராடி வரும் தொழிலாளர்கள் ,கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு நிர்வாகம் சட்ட விரோதமாக நடத்திய தேர்தலை புறக்கணித்தனர். பின்னர் நிர்வாகம் தங்களுக்கு சாதகமான சிறுபான்மையாக உள்ள தொழிலாளர்களை கொண்டு ஒரு சங்கத்தை அமைத்து பெருபான்மையான தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வந்தது . பின்னர் பெரும்பான்மையான தொழிலாளர்கள் பல்வேறு சட்ட மற்றும் கள போராட்டங்களை நடத்தினர்.சென்னை உயர் நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இந்த தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. சட்ட போராட்ட வழக்குகளை ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பின் நிறுவனர் திரு பிரகாஷ்(உயர் நீதிமன்ற வழக்கறிஞர்)அவர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். நிர்வாகத்திற்கு சாதகமான தொழிற்சங்கத்தை முறியடிக்க 2700 தொழிலாளர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது இந்த வழக்கில் மட்டுமல்லாது தொழிற்சங்க வரலாற்றில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

தீர்ப்பின் அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி திரு.ஹரிபரந்தாமன் அவர்கள் தேர்தல் அதிகாரியாக இந்த தொழிற்சங்க தேர்தலை நடத்தினார். கடந்த சனிக்கிழமை 27.04.2019 அன்று நடைபெற்ற தேர்தலில் 3500 தொழிலாளர்கள் வாக்களித்தனர்.தலைவர், செயலாளர், பொருளாளர்,எட்டு இணைசெயலாளர்கள் என 11 பதவிகளுக்கு நடந்த தேர்தலில் 48 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் ஏற்கனவே ஓரே அணியில் பெருபான்மையான தொழிலாளர்கள் இருந்ததால் வெற்றி எதிர்பார்க்கப்பட்டாலும் தேர்தலின் முடிவு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.ஆம் நிர்வாகம் வாக்குகளை சிதறடிக்க பல தொழிலாளர்களை வேட்பாளராக களம் இறக்கியது .அதனை முறியடிக்கும் விதமாக தீவிரமாக செயல்பட்ட தொழிலாளர்கள் தங்களின் தேவை என்பதே முதலில் ஒற்றுமைதான் என உணர்ந்தனர். இதுவரை கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்தனர் .முடிவு ஓரே அணியை சேர்ந்த 11 வேட்பாளர்களும் 3100 வாக்குகளுக்கு மேல் பெற்று அதாவது 95% வெற்றியை பதிவு செய்து இந்திய அளவில் மிக பெரிய தொழிற்சங்கமாக உருவாகியுள்ளனர்.இந்த வெற்றி நிசான் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது மற்ற தொழிற்சாலை தொழிலாளர்களுக்கும் உற்சாகத்தை அளிப்பதாக இருக்கும்.

இந்திய அளவில் தொழிற்சங்க உரிமை சட்டங்கள் இன்னும் சரியாக அமல்படுத்தப்படாத சூழ்நிலையில் ஓரே தொழிற்சாலையில் பல்வேறு சங்கங்களாக இல்லாமல் ஓரே சங்கமாக இருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இனி இந்த வெற்றி நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தின் கண்களை உறுத்தும். எப்பாடுபட்டாவது ஒற்றுமையை சீர்குலைக்கவே நினைக்கும்.நிர்வாகம் தொழிலாளர்களை பிரிக்க நினைக்கும் என்பது சரி, இதில் அரசாங்கம் ஏன் தலையிடபோகிறது? என நினைக்கும் தொழிலாளர்களுக்கு ” இந்த வெற்றி மற்ற தொழிற்சாலை தொழிலாளர்களையும் இது போன்றே செயல்பட தூண்டும் அனைவருமே தொழிற்சங்க உரிமையை நிலைநாட்டி விட்டால் முதலாளிகளின் லாப வெறிக்கு தொழிலாளர்கள் ஆபத்தை ஏற்படுத்துவார்கள். தொழிற்சங்க வழக்குகளை அரசாங்கம் இழுத்தடிக்க முடியாது.

ஒரு வழக்கு மிகவும் இழுத்தடிக்கப்படுகிறது என்றால் முதலாளிகளுக்காக அரசாங்கம் அதை செய்துகொண்டிருக்கிறது என தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.எனவே அரசாங்கத்தின் தலையீட இருக்கும், இருந்து வருகிறது.இது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இதற்கு ஒரு தொழிலாளி சிறந்த தொழிற்சங்கவாதியாக மட்டும் இருந்தால் போதுமா என்றால் போதாது .தொழிலாளர்கள் சிறந்த சமூக ஜனநாயகவாதிகளாக மாற வேண்டும்.எனவே இந்த வெற்றி என்பது பரவலாக்க பட வேண்டும் அனைத்து தொழிலாளர்களின் ஒற்றுமையும் நீடித்து நிலைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

“பொருளாதார வகைப்பட்ட அரசியல்
எனும் நீர்த்துபோன கஞ்சி மட்டும்
ஊட்டப் பெறுவதற்கு நாங்கள்
குழந்தைகள் அல்ல
மற்றவர்கள் தெரிந்துகொண்டுள்ள அனைத்தும் நாங்கள் அறிய விரும்புகிறோம்
அரசியல் வாழ்கையின் எல்லா அம்சங்களின் விவரங்களை நாங்கள்
அறிய விரும்புகிறோம்
ஒவ்வொரு அரசியல் நிகழ்ச்சியிலும் தீவிரமாக கலந்துகொள்ள விரும்புகிறோம்.
ஆம்..ஏனெனில் நாம் தொழிலாளர்கள்..” தோழர் லெனின்


. .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here