ரங்கராஜ் பாண்டேவும்,அவர்தம் சனாதான புரட்டுகளும் – வளவன்

கடந்த 08-06-2020 அன்று பிரபலமானவரும், அச்சு, காட்சி, வலையொளி என சகல விதமான ஊடகங்களிலும் தனது பங்களிப்பை நல்கி(ய)வரும் திருமிகு. ரங்கராஜ் பாண்டே அவர்கள், இந்துத்துவவாதிகளால் அன்புடன் ஈ.வெ.ரா எனவும் , பிற வெகுசனத்தினரால் பெரியார் எனவும் அழைக்கப்படும் சுயமரியாதை இயக்கத் தோற்றுவாயான ஐயா அவர்களின் பெண்ணியப் பார்வைகளினை மறு பார்வைக்கு உட்படுத்தி ‘பெண்களை மதித்தாரா பெரியார்?’ எனும் தலைப்பில் விவாத களமொன்றை அமைத்துத் தந்துள்ளார். அவர்தம் பதிவும், அதற்கான பதில்களுமாக இந்தக் கட்டுரை.

பாண்டே அவர்களின் பேச்சு, பாரதியாரின் கதம்பப் பாவுடன் தொடங்குகிறது. ஆம்..! ஒற்றைப் பாடல் போல திரையில் காட்டப்பட்டாலும் அவை முறையே பெண்மை எனும் தலைப்பில் உள்ள பாடலின் முதல் சரணத்தின் முதல் இரண்டு வரிகள், தொடர்ந்து மூன்றாவது சரணதத்தின் முதல் மூன்று வரிகள், மற்றும் 6,8 வது சரணங்கள் முழுமையாகவும் கொண்டு, அதன் தொடர்ச்சியைப் போல பெண்கள் விடுதலைக் கும்மியின் 2, 5, 6, 7, 8 வது சரணங்களோடு நிறைவுற்றதனை அவர் படித்துக் காட்டக் கேட்டோம்.

இந்த வெட்டி ஒட்டப்பட்ட பாடல் அமைப்பு என்பது நமக்கான குறியீடு. ஒரே பாடலில் எப்படி இடையிடையே வரிகளையும், சரணங்களையும் விட்டு விட்டு, இடையில் பாதியை கடந்து தமக்கு பிடித்தமானவற்றை அல்லது தாம் அழுத்தமானவை என்று நினைக்கிறவற்றை பாரதியிடமிருந்து எடுத்து பாண்டே தொடுத்துள்ளாரோ அவ்வண்ணமே, பெரியாரின் கட்டுரைகளில் சில வரிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்து, செறிவாகத் தொடுத்து, அவ்வார்த்தைகள் பெண்மைக்கான மதிப்பா என்பதனை கேட்பாளர்களுக்கானதாக விட்டுவிடுவதாகச் சொல்லியுள்ளார்.

பாண்டே அவர்களுக்கு: பாடல்களில் சரணங்களுக்குள், ஒரே சரணத்தின் வரிகளுக்குள்ளாகவே கூட தொடர்ச்சி, நீட்சி இருக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக பௌத்தர்களும், சமணர்களும் எழுதினார்கள் என்கிற அரசியலினால் இலக்கிய மேடைகளில் தூக்கிப் பிடிக்கப் படாமல் புறக்கணிக்கப்படுகிற நான்மணிகடிகை ஒவ்வொரு பாடலிலும் நான்கு அறம் கொண்டது; அவ்வரிகளைப் பிரித்து, ஒன்றை மாத்திரம் தனியாக எடுத்து உவமையாக, சொல்லலாம். கவிதைகள் இத்தன்மைத்தானதே; அதனால் தான் நீங்கள் இடையில் வரிகளை, சரணங்களை விடுத்த போதும் பாரதியார் பாடல்கள் ஒற்றைப் பாடலைப் போல நின்றன. ஆனால் கட்டுரை என்பது, இந்தத் தன்மை உடையது அல்ல.
ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு காற்புள்ளியும், ஒவ்வொரு பத்தியும், முந்தைய வரியின், பத்தியின் நீட்சியாகவும், அடுத்த பத்தியின் பொருட்கருவைச் சுமப்பவையாகவும் இருக்கும்.
எனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக வரிகளைச் சுட்டி, கட்டுரையாளருக்கு பிம்பம் கற்பித்தல் என்பது, படத்தில் ஐந்து நிமிடங்களை மாத்திரம் பார்த்து விட்டு முழு படத்துக்கும் விமர்சனம் தருவதைப் போன்றதாகும். ஒரு நிமிட டீசரைப் பார்த்து விட்டு, காட்மேனை, விஸ்வரூபத்தை, பத்மாவத் தை எதிர்த்தவர்களைப் போன்ற பக்குவமற்ற பார்வையும், விமரிசனங்களே வைக்கப்படக் கூடாத மகாபுனிதம் என்கிற புரட்டாளர்களின் வெறுப்புணர்வுக் கருத்தென ஆகி நிற்கும் அபாயம் கொண்டதாகவும் உள்ளதென உணர்தல் வேண்டும்.

“கடைந்தெடுத்த ‘இந்துத்துவவாதி’ என்ற சொல்லில் நின்று இந்துத்துவம் என்னவோ ஒரு அவச்சொல் போல, பழிச்சொல் போல, பாவகாரியம் போல பேசி வருகிறார்கள்; அது தான் எதிர்நிலையாளர்களின் நாகரீகம் ” என்கிறார்.
பாண்டே அவர்களே! இந்து யார் ? இந்துத்துவவாதி யார்? கோவிலுக்கு போய் சாமி கும்பிடுபவர் இந்து; சாமி கும்பிட வருபவன் வேறு ‘வர்ணத்தவன்’ என்று அவனை சுட்டுக் கொள்பவன் இந்துத்துவவாதி. உத்திரபிரதேசத்தில் மே 31, 2020 கோவிலுக்குள் நுழையக்கூடாது என நான்கு பேர் சேர்ந்து ஒரு 17 வயது தலித் பிள்ளையைக் கொன்றார்களே, அந்தக் கோவில் என்ன சமணக் கோவிலா அன்றி நின்று தடுத்தவர்கள் பௌத்தர்களா? நீங்கள் இந்துவாக இருப்பதில் எங்களுக்கு பிரச்சனையில்லை; ஆனால் இந்துத்துவவாதியாக இருப்பதில் உண்டு, அந்த தலித் தம்பியைக் கொன்றவர்களுக்கு இந்தப் படிநிலையை எதன் பெயரால் போதித்தார்கள்? உங்களின் சனாதனத்தின் பெயரால். இந்துத்துவம் என்பது அவச்சொல் அல்ல திரு. பாண்டே, அபாயாகரமான அபத்த சிந்தனைகளின் தொகுப்பு. சித்தாந்தம் என்கிற நிலையினை அடைகிற அளவுக்கு தகுதிப்பாடு பெற்றதல்ல உங்கள் அழிவு, படிநிலைப் பிரிவினை பிரச்சாரம்.

இனி, திரு பாண்டே அவர்களின் பார்வைகளும், அதற்கான எனது மறுப்புகளும்.
பாண்டே: 2019 , செப்டம்பரில் BBC – தமிழுக்கு பேட்டியளித்த திரு. கி. வீரமணி அவர்கள், பெரியார் அடிக்கடி வலியுறுத்தி சொல்வார்: “பாசத்துக்காக பிள்ளை பெத்துக்கனும்னு என்ன அவசியம் இருக்கிறது. Enjoyment without responsibility” இதுக்கு என்ன அர்த்தம்னு நீங்க புரிஞ்சிக்கோங்க.

பதில்: இதற்கு என்ன அர்த்தம் என்றால் திருமணம் செய்வதன் நோக்கம் பிள்ளை பெற்றுக்கொள்வது அல்ல; இளையோர், உடற்கூடலின்பம் உள்ளிட்ட சகல விதமானவற்றையும் தனித்து அல்லாமல் உடனொருவரோடு அனுபவிக்கத் தலைப்படுகிறார்கள்; துணைவராக ஒருவரினைத் தேர்ந்து எடுத்து கொள்கிறார்கள்; இளமைத் ததும்பலில், இன்ப நுகர்வு எனும் தேடலில், துணையுடன் தொடங்கும் பயணம், பிள்ளைகள் பிறந்த உடன் திசை மாறி, பாதை மறந்து, பின் பொறுப்புகள் அழுந்த அவர்களின் வேட்கை வற்றி, ஒருவருக்கொருவர் இரண்டாம் பட்சமாகி, பிள்ளைகள் முதல் பட்சமாக நின்றிருத்தல் என்பது தான் முடிவு என்றால், அவர்கள் ஏன் அங்ஙனம் பயணித்தல் வேண்டும்?
வளரும் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் ஊடல்களின் தகிப்பு ஏது? அன்பின் வெளிப்பாடாய் ஏதேனும் செய்யும் சமயம் , என்னடா புதுசா கலியாணம் ஆன மாதிரி என கேட்கிறவர்களின் ஆதார சுருதி, ரெண்டு பிள்ளை பெத்த பின்னாடி இன்னும் என்ன உல்லாசம் என்கிற புத்தி. ஆக, பிள்ளை பெற்றாகி விட்டது; மூல நோக்கம் முடிந்து விட்டது; இப்படி இருப்பதால் தான் திருமண லட்சியம் வெற்றி பெற்றதாகுமா?

குறிப்பு: கல்யாணமான இரண்டாவது மாசமே ஒண்ணும் விசேஷமில்லையா என்று கேட்கிற இடம்,பொருள் அறியா, பண்பிலா பெருமக்களுக்கான பதில்: அது அவர்களின் தனிப்பட்ட உரிமை, முடிவு. அவர்களின் படுக்கையறை குறித்த கவலைகளை விடுதல் உங்களுக்கு நலம். நாங்கள் பிள்ளை பெறாமல் வாழ்வதாக முடிவெடுக்கையில் வந்து பிள்ளைகளின் மகத்துவம் குறித்து வகுப்பெடுக்க வேண்டாம். நன்றி.

பாண்டே: 2014, மார்ச் 7, விகடன்.காம் இல் வந்த கட்டுரையிலிருந்து: 1928 – செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டு அழைப்பிதழில் இருந்த வரிகள்: “தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபச்சாரிகள் என்று தங்களை கருதிக் கொள்வோர் சிறப்பாக இம்மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்”.

பதில்: இது எதனால் வாசித்துக் காட்டப் பட்டது எனும் நோக்கம் அவருக்கு தான் தெரியும். காரணம், கேள்வி எதுவும் தொடர்ச்சியாக வைக்கப்பட வில்லை.
எனினும் நம்முடைய பார்வை பெரியாரின் சொல்லாட்சி மீது தாம். ‘விபச்சாரிகள் என்று தங்களை கருதிக் கொள்வோர்’ – ஆம்! அவளை அப்படி ஒரு பெயருக்குரியவர்களாக எண்ண வைத்துள்ளது சமூகம்; ஆனால் உண்மையில் அப்படியா?; கற்பு எனும் கபட இத்யாதிகள் பெண்ணுக்கு மட்டும் என இருக்கிற ஒரு பிற்போக்கு, ஆணாதிக்க சமூக அமைப்பின் வரையறை ஏற்புடைத்ததல்ல. எனவே, நீங்களாகத் தாம் கருதிக் கொள்கிறீர்கள் என்ற பொழுதும், உங்களில் யாரும் விபச்சாரிகள் அல்ல எனும் பார்வை.

பாண்டே: ஒரு கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வியும், பெரியாரின் பதிலும் பின்வருமாறு :
கேள்வி: “பல மனைவிகள் உள்ள கடவுள்களை எதிர்க்கும் சுயமரியாதை இயக்கம், முதல் மனைவி உயிருடன் இருக்கும் பொழுதே இரண்டாவது திருமணம் செய்து கொள்வதை ஏற்கிறதா?”
பதில்: “கடவுள்களை விமர்சிப்பதாலேயே அவர்களின் எல்லா செயலையும் நாம் கண்டிப்பதாகாது; பலதார மனத்தை நாங்கள் ஏற்கிறோம்; இதே உரிமை பெண்களுக்கும் வேண்டும்”.
பாண்டே: ” நல்லா கவனிக்கனும். இது பெரியாரின் மறுமணம் பற்றிய கருத்து அல்ல, கணவன் இறந்தாலோ, மனைவி இறந்தாலோ வேறொருவரை திருமணம் அது அல்ல; பல தார திருமணம், எத்தனை பேரை வேண்டுமானாலும் கட்டிக்கலாம் அப்படின்னு, ஆண்கள் இல்ல, பெண்களும் (அழுத்தமான உச்சரிப்பு) எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் கட்டிக்கலாம் என்று அந்த கட்டுரை சொல்கிறது. இது பெண்களுக்கு ஏற்புடையதா? பெரியார் எந்த அளவுக்கு பெண்களை மதித்தார் என்பதற்கு சான்றாக இருக்கு என்பதை கவனிக்கனும்.”

பதில்: கவனிக்க, பெரியார் இதை வலியுறுத்திய காலம், இந்து விவாக ரத்து சட்டம் இல்லை. அதாவது திருமணம் நடந்தால் சாகும் வரை கணவன் அல்லது மனைவி எத்தனை மோசமானவர்களாக அன்றி ஆதிக்கம் செலுத்துபவராக அல்லது வன்முறைக்கு உட்படுத்துபவராக இருந்தாலும் பிரியக்கூடாது, பிரிந்தாலும் மற்றொரு மணம் அவர் உயிருடன் உள்ளவரை செய்தல் கூடாது, அன்றைய ஒரு தார முறை என்ற அடக்குமுறையில் (சட்டம் உயிருடன் உள்ள நிலையில் ரத்து அல்லது வேறுமணம் அனுமதிக்கவில்லை).
இவ்விடத்தில் பெரியார், மன முறிவு ஏற்பட்டால், சட்டப்படி மணம் முறியா விட்டாலும் பரவாயில்லை, மறு தாரம் தான் தீர்வு என்கிறார். பெண்களும் (அழுத்தமாக) எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம் என பொழிப்புரை எழுதிய அண்ணன் பாண்டே அவர்களே.! எந்த இடத்திலும் அவர் எந்த பெண்ணையும் ஒரே நேரத்தில் அண்ணன், தம்பி என ஐவரை மணம் செய்து இல்லறம் மேற்கொள்க என்று சொல்லவில்லை. எந்த ஆணையும் போகும் ஊரெல்லாம் ஒரு பெண்ணை மணந்து கொள்ள சொல்லவுமில்லை. அப்படி பட்ட மாமுற்போக்கான ஒரே நேர பலதார மணம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்குமானதாய் தமது பாத்திரங்களின் மூலம் புராணமாய் சொல்லி சொல்லி தன் யானைமுக உதவியாளரைக் கொண்டு எழுதியவர் வேத ‘வியாசர்’, பெரியார் அல்ல.

பெரியார் சொன்ன பலதார மணம் எப்படியானது என்பதற்கான சான்று, ஒரு திருமணத்தில் அவர் மணமக்களினை வாழ்த்தியதை மணமகளின் அண்ணன் பின்னாளில் பதிவு செய்ததிலிருந்து கொள்ளலாம்.
திருமண மேடையில் மணமகளுக்கு வாழ்த்து : ” இந்த மாப்பிள்ளை உன்ன யோக்கியமா வச்சுப்பான்னா இவன் கூட வாழு. இல்லன்னா எவன் உன்ன யோக்கியமான வச்சு குடும்பம் நடத்தறானோ அவன் கூட வாழு” – சட்டம் தராத விவாக ரத்தை குடுத்துட்டு அடுத்த தாரத்தோட வாழு என்பது தான் பெரியாரின் கருத்து.

பாண்டே: பெண் உரிமைகள் குறித்து குடியரசு இதழில் வெளியான கட்டுரை தலைப்புகள் சில:

 1. ஆண்மை அழிய வேண்டும் 2. முஸ்லிம் பெண்களும் அடிமைகளே தான். 3. பர்மாவின் கொடுமை 4. கத்தோலிக்க மதமும், பெண்களும் 5. பெண்கள் நாடு ஆண்களுக்கு வேலை இல்லை. 6. பெண்களும் தொழிலாளிகளே
  இது எல்லாம் பெண்களை போற்றக் கூடிய தலைப்புகளா என பார்த்துக் கொள்ளுங்கள். நான் எந்த விமர்சன பார்வையும் வைக்க விரும்பவில்லை.

பதில்: பெரியார் அல்லது தி.க – வினர் இந்து மதத்தை மட்டும் தான் தாக்குகிறார்கள் என்ற விமர்சனங்களை உடைக்கிற மாதிரியான தலைப்புகளைத் திரட்டி தந்ததற்கு நன்றி திரு. பாண்டே. ஆக, இஸ்லாம் மற்றும் கிறித்துவத்தில் உள்ள பிற்போக்குத் தனங்களையும் பெரியார் சாடி உள்ளார். மேலும், ஆண்மை அழிந்தாக தான் வேண்டும் என்கிறாரே என்று பதறுகிறீர்கள். ‘அவன் ஆம்பள’, ‘நான் ஆம்பள’, எதையும் செய்வேன் என்று ஆண்மையின் பெயரிலான அபத்தமாக பேசப்படுகிற பாலியல் ஆதிக்கம் அழியக் கூடாது என்கிற ஆசையோ உங்களுக்கு?
கொஞ்சம் கூடுதலான வார்த்தை தான் என்றாலும் உங்களுக்கு இந்நேரம் விளக்குவதற்காக: கணவனுக்கு கூட அவன் மனைவியின் கர்ப்பப்பை மீது உரிமையில்லை. ‘ஆண்மை’ திமிரில், ஆண் வாரிசுக்காக மனைவியை வன்முறைக்குள்ளாக்கி அவளின் கருப்பைக்குள் ஊடுருவுபவனின் ஆண்மை செருக்குக்கு என்ன மெரினாவில் சிலை வைத்திடல் வேண்டுமா? அழித்தாகத் தான் வேண்டும்.

பாண்டே: ‘விடுதலை’ இணையதளத்தில் கி. வீரமணி அவர்கள் அக்டோபர் 1,2018 கட்டுரையில், பெரியார் அவர்கள் “திருமணமே ஒரு தண்டிக்கப்படவேண்டிய குற்றம்” என்று சொல்லியுள்ளார் என்கிறார். நல்லா கவனிக்கனும், திருமணம் செய்து கொள்ளுங்கள் அல்லது வேண்டாம் என்பதல்ல; அது குற்றம் , அதுவும் தண்டனைக்குரியது என்கிறார்.

பதில்: 1921 மக்கள் தொகைப்பதிவின் படி இந்தியாவில் 18,892 பேர் 0-5 வயது விதவைகள்; 2,32,147 பேர் 15 வயதுக்குட்பட்ட விதவைகள்; 30 வயதுக்குள் 26,31,788 பேர். ஐந்து வயது, எட்டு வயது பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்து அவர்கள் பருவம் அடைந்து, பாலியல் வளர்ச்சி அடைவதற்கு முன்பாகவே வன்முறைக்குட்படுத்தி உடலுறவு செய்வதை, புருஷன் அயோக்கியன் என்றால் விவாக ரத்து செய்ய சட்டத்திலும் கூட வழி இல்லாத புதைகுழியை, 26 லட்சம் பெண்களை நீ விதவை, உனக்கான உடற்தேவைகள் எதையும் நீ யோசிக்கக் கூடாது என பருவமடையுமுன்பே விதவையான பெண்ணின் மீது திருமணத்தின் பெயரால் இவ்வளவு ஒடுக்குமுறையும் செய்யப்படுகிற அமைப்பை குற்றம் என்று சொல்லாமல் நோபல் பரிசுக்குரிய சமூக வாழ்வியலமைப்பு எனலாமா?
தன் தலைமையில் நடந்த ஒரு திருமணத்தில் பெரியார், ‘’கல்யாணத்தையே தடை செய்யனும். ஒரு பெண்ணோட வாழ்க்கையை சீரழிக்க எத்தனைபேர் இங்க கூடி இருக்கிறார்கள். இனி மணமக்களை வாழ்த்தி பேசுறவன், கல்யாணத்தை நடத்தி வைக்கிறவன், கல்யாணத்திற்கு தலைமை தாங்குறவன் இவனுங்க எல்லோரையும் புடுச்சி ஜெயில்ல போடனும்’’ என்கிறார். சுயமரியாதை திருமணத்திலேயே இப்படி பேசியிருக்கிறார். காரணம் தன் தலைமையில் நடந்த பல திருமணங்கள் திருமணத்திற்கு பிறகும் பெண்கள் சமைக்க, துவைக்க, பணிவிடை செய்ய என்று பயன்படுத்தப்படுகிறார்களே என்ற கோபம் பெரியாருக்கு.

குறிப்பு: இன்றைக்குப் பதினெட்டு வயதுக்குட்படாத பெண்னை திருமணம் செய்தலும், வன்முறையால் உடலுறவு கொள்ளுதலும் (கணவனே ஆனாலும்), மறுமணம் செய்யக்கூடாது என மிரட்டுதலும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். அந்த சிந்தனை பெரியாரிடம் இருந்துள்ளது. எனவே பெரியார் தொலை நோக்குடைய முற்போக்குவாதி என கொள்க. ஆம்.! இன்றைக்கும் தனது விதைப்பைக்கு விலை பேசுகிற ‘ஆண்மை’ மகன்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான்.

பாண்டே: இடதுசாரி சிந்தனையுள்ள ‘கீற்று’ எனும் பத்திரிக்கையில் ‘நிமிர்வோம்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் ரமணி 2019 டிசம்பர்ல ஒரு கட்டுரை எழுதுகிறார்கள்‌.
பெரியார் சொன்னதாக,
“நம் பெண்கள் நாட்டுக்கும், சமூகத்துக்கும் பயன்படாமல், அலங்கார பொம்மைகள் ஆனதற்கு, ஆண்களின் கண்களுக்கு விருந்து ஆனதற்கு காரணம் இந்த பாழாய் போன, ஒழுக்கமற்ற சினிமா படங்களே… சினிமா பெண்களின் தன்மை என்ன? சினிமா பெண்களின் ஒழுக்கம் என்ன? சினிமா பெண்களின் வாழ்க்கை என்ன? “என்று அந்த கட்டுரை குறிப்பிடுகிறது. இதை குஷ்பு போன்ற காங்கிரஸ் கட்சியில் இருக்கிற, பெரியார் பெண்ணியம் பேசினார் என்கிறவர்களுக்கும், சினிமாவில் இருப்பவர்களுக்குமாக இருக்கிறவர்களுக்கு இந்த கேள்வியை வைக்கிறேன்.

பதில்: வார்த்தைகளின் மீதான பத பிரிப்பு ஜாலம் இங்கே குற்றச்சாட்டாக திரிக்கப் பட்டுள்ளது. காப்பிய மகளிர் என்பவர்கள் எப்படி காப்பியத்தில் கதாபாத்திரமாக வரும் பெண்களோ, அப்படி சினிமா பெண்கள் என்பது சினிமாவில் பெண்களால் ஏற்று நடிக்கப்படுகிற பாத்திரங்கள். உங்கள் புராண நாயகிகளான கண்ணகி, சீதை, பாஞ்சாலி என அனைத்து பாத்திரங்களினை எப்படி விமர்சித்தாரோ அப்படியான சினிமாத்தனம் கட்டமைத்த பெண்களின் மீதான விமர்சனம்.
உதாரணமாக: 1965 ல் வெளியான சாந்தி எனும் படம். பார்வையற்ற பெண் நாயகி; கணவன் தொலைந்து விட, கண் பார்வை வரும் பொழுது கணவனின் நண்பனை கணவன் என்று சொல்லி விடுகிறார்கள்; கணவன் மீண்டும் வருகிறான்; கடைசியில் உண்மை தெரிந்து அவள், என் கணவனாக இன்னொரு ஆடவனை ‘நினைத்த’ நான் எப்படி உயிர்த்திருக்கலாம் என ஆற்றில் விழுந்து தற்கொலை செய்கிறாள். காப்பாற்ற குதித்து கடைசியில் இருவரும் இணைந்து சவமாக கரை ஒதுங்குகிறார்கள். அறிவுள்ள பெண் என்ன செய்வாள். ஆள் மாறாட்ட வழக்கு போட்டு, கணவனின் உடந்தைக்கான காரணங்கள் கேட்டு தொடர்ந்து அவனுடன் வாழ்வதா அல்லது தனித்திருப்பதா என்று முடிவு செய்திருக்கக் தானே வேண்டும்.
1965 லேயே இப்படி என்றால், அதற்கு முந்தைய கால கட்ட கதைகள்..?
மனதால் மாற்றானை நினைத்தால் கற்பு போய்விடும் என்கிற பிதற்றல் கட்டமைப்பினை சுமக்கிற சினிமா பெண்களின் மீதான கேள்விகள் தான். தன்மை என்ன ? வாழ்க்கை என்ன ? என்பதெல்லாம். ஆனால் பாண்டே அவர்களின் குறிப்பு காங்கிரஸில் இருக்கிற பெண்கள் ஏற்கிறார்களா எனும் கேள்வியின் மூலம் பா.ஜ.க வினர் ஏற்க மாட்டார்கள்; பெரியார் அவர்களின் எதிர்நிலை ஆளுமையாக என்றைக்கும் இருக்கிறார் என மீண்டுமொரு முறை நினைவூட்டியமைக்கு நன்றி.

பாண்டே: அம்பேத்கர் மாத இதழில் பெரியார் வாழ்ந்த காலத்திலேயே அதாவது நவ-டிச 1963 ல் இப்படி குறிப்பிடப்பட்டது. “துணி விலை ஏறி விட்டதற்கு காரணம், இப்போது ப_ளெல்லாம் ரவிக்கை போடுவதுதான் என்று பெரியார் கூறினார். அதற்கு நாம் மறுப்புக் கூறினோம்” எனும் செய்தி பெரியார் சொன்னதாக சொல்லுது. அப்படி பெரியார் சொல்லவில்லை என யாராவது நிரூபித்தால் நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.

பதில்: 1962 தேர்தல் களத்தில் திணிக்கப்பட்ட ஒரு வாதம். இது குறித்து அப்பொழுதே விரிவான கட்டுரை எழுதினார் பெரியார். அவருடைய வார்த்தைகளே திரு. பாண்டோவுக்கு பதிலாக :
“நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாகத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கின்றார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லைச் சொன்னாலும் அதை ஒழிப்பதற்காக சொன்னதுதான். எலக்சன் போது ராமசாமி நாயக்கர் பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களே அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர் என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கின்றார்கள். அதைக் கண்டு சிலர் என்னிடம் வந்து நீ எப்படிச் சொல்லலாம் எனறு கேட்டார்கள். நான் சொன்னது உண்மைத்தான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்குமுன் ரவிக்கைப் போடக்கூடாது போட்டால் துணியே போடக்கூடாது அப்படி இருந்த சமுதாயம் கால மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கின்றது. இன்றைக்கு ரவிக்கையில்லாமல் பார்க்க முடியவில்லை என்று சொன்னேன். இதைக் கொண்டு அந்த இனமக்களை எனக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதே ஆகும் என்பதை விளக்கியதும் அவர்கள் புரிந்து கொண்டனர்.”
(11-12-1968 அன்று சென்னை – அயன்புரத்தில் தி.மு.க மேயர் வேலூர் நாராயணனுக்கு நடந்த பாராட்டு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.) -“விடுதலை” 15-12-1968
அவர் வாழும் காலத்தில் இருந்த, அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ் ஸால் கவரப்பட்டார் என்று இன்றைக்கு கிளப்பி விடுகிற நாக்பூர் தலைமையக வாட்சப் வரலாறு தொழிற்கூடம் போன்ற அமைப்புகளின் முன்னோடிகளினால் செய்யப்பட்ட திரிபு இது; வாழும் காலத்திலே அவரின் மறுப்புரையும் தரப்பட்டுள்ளது. மகிழ்ச்சி தானே பாண்டே சார்.

 • இனி ‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலில் இருந்து அவர் முரணென கருதும் கருத்துக்களும், நமது மறுப்புகளும்‌

பாண்டே: “சில சமூகங்களில் பர்தா என்றும் , கோசா என்றும், திரை என்றும், அதாவது பெண்கள் அறைக்குள் இருக்க வேண்டியவர்கள் என்றும், முகத்தை மூடிக்கொண்டு வெளியில் போக வேண்டியவர்கள் என்றும் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகளும், புருஷன் பல பெண்களை மணக்கலாம், பெண்கள் ஒரு புருஷனுக்கு மேல் ஏக காலத்தில் கட்டிக்கொண்டு வாழக்கூடாது … என்று கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. (பக்கம் 12)”. இந்தக் கருத்து பெரியார் சொல்லியுள்ள கருத்து; பெரியார் இயக்கத்தோடு தோளுக்கு தோளாக நிற்கக் கூடிய இசுலாமிய சகோதரர்களுக்கு ஏற்புடையதா என்ற கேள்வியை முன்வைக்கிறேன்.

பதில்: பெரியார் அவர்களின் மத பழக்கங்களைக் கேள்வி கேட்டார்; பாகிஸ்தான் போங்கள் என்று சொல்லவில்லை; இயக்கத்தினருடன் கூட்டமாக போய் ஜெய் ஸ்ரீ ராம் என சொல்ல சொல்லி அடித்துக் கொல்லவில்லை; பசு மாட்டினை சாப்பிடக் கூடாது என்று அவர்களின் தட்டினை கட்டுப்படுத்த முயலவில்லை அல்லவா… சிலருக்கு இசுலாமியத் தோழர்களுக்கும், பெரியாரிய உணர்வாளர்களும் தோளொடு தோள் நிற்பது உறுத்துவதாய் படுகிறது. பெரியார் எப்படி திருவள்ளுவரின் பெண்வழிச் சேரல் , வாழ்க்கைத் துணை நலம் , புலால் மறுத்தலை ஏற்காத பொழுதும், முரண்களினூடே குறளினைத் தூக்கிப் பிடித்தாரோ, அங்ஙனம், அவர் பிற்போக்கு என்று கருதி மதங்களில், சம்பிரதாயங்களில் விமர்சித்த இடங்களை மரியாதையோடு மறுத்து, இந்துத்துவத்தின் பெயரால் சிறுபான்மையினர் மீதான வன்முறை எதிர்ப்பில் , சமத்துவம் பேணுவதில் என்றைக்கும் மாச்சரியங்களன்றி தோளொடு தோள் நிற்பார்கள் இசுலாமியர்களும், பெரியாரியக்கத்தினரும்.

பாண்டே: ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால், காதல் என்பதன் சத்தற்ற தன்மையும், உண்மையற்றத் தன்மையும், நிச்சயமற்றத் தன்மையும், காதலை பிரமாதம் படுத்துவதன் அசட்டுத் தனமும் எளிதில் விளங்கிவிடும் (பக்கம் 24)

பதில்: துரத்தி துரத்தி மூன்று வருடங்களாக காதலித்து மணந்த மனைவியை கணவன் கொன்ற செய்தி (08/06/2020), காதல் மனைவியை திருமணமான அன்று இரவே கடப்பாரையால் அடித்து கொன்று , தானும் தற்கொலை செய்த கணவன் எனும் செய்தி (10/06/2020) எனும் செய்திகள் தான் காதலின் நிலையான தன்மைக்கான எடுத்துக்காட்டுகளோ?
பொள்ளாச்சியும், நாகர்கோவில் காசியும் உண்மையுள்ள தன்மையில் காதல் செய்தவர்களா? இவை மோசமானவை எனவே கொண்டால் இயல்பான ஒரு யதார்த்த கேள்வி : காதல் முறிவு அல்லது கைக்கூடாமல் போன ஆண்களும் , பெண்களும் வேறொருவரை மணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழவில்லையா? இதுதான் அவர்கள் கொண்ட காதலின் நிச்சயமானத் தன்மையோ? எனவே, யதார்த்தத்தனால் தத்துவார்த்தத்தை தகர்த்துள்ளார் பெரியார். இங்கே, எவையெல்லாம் புனிதப்படுத்தப் படுகிறதோ , அது ஏதோ ஒரு சுரண்டலுக்கானது என்பது திண்ணம்.

பாண்டே: இந்தக் காதல் காரணத்தினாலேயே, ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து கட்டாயப்படுத்தி வரப்படுகிறது. (பக்கம் 24)

பதில்: அது உண்மை என்பதனால் தாம், கள்ளக் காதல் எனும் சொல்லே புழக்கத்துக்கு வந்துள்ளது. மன முறிவு வருங்காலும் கட்டாயப்படுத்தி, காதல், குடும்பத்தின் பெயரால் அவருடனேயே இருக்கச் சொல்லும் காரணத்தினாலேயே, மனம் விரும்பிய வாழ்க்கைக்கு தடை என்று அதனை விலக்கிட எண்ணி, கணவன் கொலை, மனைவி கொலை எனும் குற்றங்களுக்கு வழிவகை செய்கின்றன. காதலின் பெயரால், குடும்பத்தின் பெயரால், ஒரு குடிகாரனை, ஒரு போதைப்பொருள் அடிமையை திருத்துகிற பணியை பெண்களின் மீது ஏற்றுதல் அயோக்கியத்தனம். அவர்கள் ஒன்றும் போதை மறுவாழ்வு மைய்யத்தினர் இல்லை. அதனை சேவையாக அல்லது தொழிலாக செய்கிற நிறுவனங்களை நாடுதலே சரி‌.
(செய்தி: காதலினால், கடைசி வரை தான் எத்தகைய ஒழுக்கக் கேடுடையவனாயினும், உடன் இருந்து குடும்பம் நடத்த நிர்பந்தப்படுத்துதல் ஏற்புடைத்தன்று; அது ஒரு ஒப்பந்தம், முறிவு என்பது இருவர் சார்ந்தது, இப்படி பண்ணலாமா என மூன்றாமவர் கலாச்சார காவலராய் அடுத்த வீட்டுக்குள் அசிங்கமாய் அழையாமலே நுழைந்து போதித்தலை கைவிடல் நலம்)

பாண்டே: இன்னும் சிறிது வெளிப்படையாய், தைரியமாய், மனித இயற்கையையும், சுதந்திரத்தையும், சுபாவத்தையும், அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால், இவையெல்லாம் ஒரு மனிதன், தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்கு பிடித்த ஒரு பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவதைப் போலவும், அவனுடைய தனி இஷ்டத்தையும், திருப்தியையும் (அழுத்தமான உச்சரிப்பு) மாத்திரமே சேர்ந்தது(பக்கம் 25)
“எந்த பெண், எந்த ஆண் என்று தேர்ந்தெடுப்பதற்கான உதாரணம் மட்டும் உங்கள் கவனத்திற்கு; ஓட்டல்ல, சுவீட் ஸ்டால்ல போய் பிடித்ததை எடுத்து சாப்பிடறது என்கிறார் பெரியார்”
பதில்: பாண்டே அவர்களுக்கான பதிலை பெரியாரே தந்து விட்டார். மேலே உள்ள வரிகள் அப்படி அவர் முடித்துள்ள படி முடியவில்லை, தொடர்கிறது.
“… இவையெல்லாம் ஒரு மனிதன், தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்கு பிடித்த ஒரு பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவதைப் போலவும், அவனுடைய தனி இஷ்டத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்தது என்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசித்தல் அதிகப் பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுந்தான் என்று சொல்ல வேண்டும்…”
எனவே திரு‌. பாண்டே அவர்களே பெரியாரின் பார்வையிலான அதிகப் பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதும் நாம் யாரும் செய்யாமலிருக்கலாம். எனினும் நீங்கள் கேட்டதற்கு எனது பதில்: பெண் பார்க்கிறேன் என்கிற பெயரில் வேன்ல ஏறி குடும்பமா ஊர், ஊரா போன, போகிற வைபவத்தினர் எல்லாம் ஒரு வீட்டுக்கு போய் அந்தப் பெண்ணையே மணந்தவர்களோ? ஒரே நாளில் இரண்டு பெண் பார்க்க குடும்பங்களாகவே போதெல்லாம் நடக்கவில்லையா? நாங்க எவ்வளவோ இடத்தில வரன் பார்த்தோம், ஆனா இந்த இடம் தான் திருப்தி யாக இருக்கு என சொல்வது என்ன திருப்தியோ இது அந்த திருப்தி தான்.
ஒரு வேலை சாப்பாடு, ஆறு மாதம் போடுகிற உடை இவற்றுக்கே தனி மனித இஷ்டமும், திருப்தியும் தேவை எனும் பொழுது, இணக்கமாக ஆண்டுகணக்கில் வாழப் போகும் இணைத்தேடலுக்கு வேண்டாமோ? ஏற்ற இறக்க உச்சரிப்புகளினால் நீங்கள் நினைக்கும் பொருளினைப் புகுத்த விழைதல் வீண்வேலை‌.

பாண்டே: “எப்படி பெண்கள் தங்கள் கால்விரல்களைப் பார்த்து நடப்பதுதான் கற்பு என்றால், பெண்கள் அதுபோல எல்லாம் நடப்பதை போல நடித்து, தங்களை கற்புள்ளவர்களாக காட்டிக் கொள்கிறார்களே, அதுபோல… (பக்கம் 30).

பதில்: குடும்பப் பெண் என்றால் இப்படி எல்லாம் இருக்க வேண்டுமென்று சொல்லி விட்டதனால், அவர்கள் அதனை கடைபிடிக்கிறார்கள் அல்லது அவ்வண்ணம் காட்டிக் கொள்கிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், திருமணமான பெண்கள் தாங்கள் விரும்பியே தாலி அணிவதாகவும், அது கட்டாயப்படுத்தப் படவில்லை எனவும் கூறினர். அதுசமயம் அங்கிருந்த தோழர். ஓவியா அவர்கள், கட்டாயப்படுத்தவில்லை தானே. ஒருநாள் நான் இந்தத் தாலியை கழட்டி வைக்கிறேன் என்று, செய்ய வேண்டாம், வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி மட்டும் பாருங்கள்; பிறகு தெரியும் அது விருப்பமா அல்லது ஆதிக்கத் திணிப்பா என்பது என்றார். எதிரில் கனத்த மௌனம். பெண்கள் சொல்லப்பட்டதால் செய்கிறார்கள், நடிப்புதான்.

பாண்டே: புருஷன் – மனைவி என்ற வாழ்க்கையானது நமது நாட்டில் உள்ள கொடுமையைப் போல வேறு எந்த நாட்டிலும் இல்லை எனலாம். நமது கல்யாணத் தத்துவங்கள் எல்லாம் சுருக்கமாய்ப் பார்த்தால் பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வது என்பதைத் தவிர வேறு ஒன்றுமே அதில் இல்லை (பக்கம் 32).

பதில்: ஆணும், பெண்ணின் கையால் தாலி வாங்கிக் கொள்ளட்டும்; ஆண்களின் அப்பாக்களும் கன்னிகா தானம் செய்யட்டும் ( யாரின் கன்னித் தன்மைக்கும் யாரும் கண்காணிப்பாளரும், பொறுப்பாளரும் ஆக முடியாது ); முதலிரவு நாளை பெண்கள் முடிவு செய்யட்டும்; உடலுறவுக்கு இணங்கும் முடிவு சுயேட்சையாகட்டும்; பிள்ளை வளர்ப்புக்காக ஆண்கள் சில ஆண்டுகள் வேலையை விடட்டும்; இன்னும் பல நடக்கட்டும், பிறகு சமத்துவம் தானா என்று ஆய்வு செய்வோம். அதுவரை அடிமைத்தனம் தான், ஆதிக்கந்தான்.

பாண்டே: நமது சீர்திருத்தவாதிகள் பலர், ஒரு மனிதன் இரண்டு பொண்டாட்டி களைக் கட்டிக் கொள்வதைப் பற்றி மாத்திரம், குடி முழுகிப் போய் விட்டதாய் கூச்சல் போடுகிறார்கள். இவர்கள் எதை உத்தேசித்து இப்படி கூச்சல் போடுகின்றனர் என்பது நமக்கு விளங்கவில்லை (பக்கம் 34)
“இரண்டு பெண்டாட்டி கட்டினா என்ன பிரச்சனை, எதுக்கு இப்படி கூப்பாடுன்னே எனக்கு தெரியல என்று பெரியார் சொல்கிறார்”

பதில்: பாண்டே அவர்கள் படித்த பத்தி முடியவில்லை. “…இவர்கள் எதை உத்தேசித்து இப்படி கூச்சல் போடுகின்றனர் என்பது நமக்கு விளங்கவில்லை. மதத்தை உத்தேசித்தா? அல்லது பகுத்தறிவை உத்தேசித்தா? என்பது நமக்கு சற்றும் விளங்கவில்லை. அல்லது தனிமனித ஒழுக்கத்தை உத்தேசித்து இப்படிப் பேசுகிறார்களா என்பதும் விளங்கவில்லை. “
ஆக, மதம் என்று பெரியார் தாக்கியதை படிக்க மனமில்லாமல் நகர்ந்து விட்டார் திரு. பாண்டே. மதம், பகுத்தறிவு, தனிமனித ஒழுக்கம் என்ற மூன்று தளமுமே பலதார மண எதிர்ப்புக்கான சரியான களம் இல்லை என்பது பெரியார் தரப்பு. மேலும் இதற்கான பதிலின் நீட்சியை தனது அடுத்த கேள்வியாக்கி உள்ளார் பாண்டே.

பாண்டே: விவாகரத்து சட்டம் ஏற்படாமல் போனால், கல்யாண மறுப்பு பிரச்சாரமும், கல்யாணமான புருஷன்களுக்கும், பெண்களுக்குமான பலதாரப் பிரச்சாரமும் தான் செய்ய வேண்டி வரும். அன்றியும் இது சமயம், ஒற்றுமைக்கும், திருப்திக்கும், இன்பத்துக்கும் உதவாத பெண்களின் புருஷர்கள், தைரியமாக முன் வந்து, தங்களுக்கு இஷ்டமான பெண்களை திரும்பவும் மணம் செய்து கொள்ள துணிய வேண்டுமென்றும் தூண்டுகிறோம் (பக்கம் 35)

பதில்: இதற்கான பதில் பெரியாரின் அந்த பத்தியிலே உள்ள அடுத்த வரிகள் தாம். “… இது சமயம், ஒற்றுமைக்கும், திருப்திக்கும், இன்பத்துக்கும் உதவாத பெண்களின் புருஷர்கள், தைரியமாக முன் வந்து, தங்களுக்கு இஷ்டமான பெண்களை திரும்பவும் மணம் செய்து கொள்ள துணிய வேண்டுமென்றும் தூண்டுகிறோம். ஏனெனில், அப்படி ஏற்பட்டால் தான் தெய்வீகம் எனும் பெயரை சொல்லிக் கொண்டு புருஷர்களுக்கும், பெண்களுக்கும், சம்மதமும், முன்பின் அறிமுகமுமில்லாமல் செய்யப்பட்டு வரும் கல்யாணங்களினால் மணமக்கள் அடையும் துன்பங்களிலிருந்து ஒழிபட முடியும்”.
எனவே, புதைக்கப்பட்ட புனிதங்களின் மீது தான் விலங்குடைத்து விடுதலை பெற்ற பெண்கள் நிற்பார்கள்.

பாண்டே: மனிதன் இருக்கும் வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும், திருப்தியும் ஆகும். இதற்கு ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் முக்கிய சாதனமாகும் (பக்கம் 35).

பதில்: வர்ணத்தின் பெயரால் அடக்குமுறைகளை பார்ப்பனர்கள் செய்யாமலிருந்திருந்தால் இங்கே ஒவ்வொரு மனிதனும் தனக்கான இன்பத்தினையும், திருப்தியையும் நோக்கிய பயணங்களில் திளைத்திருப்பார்கள் என்பது தான் திண்ணம். நான் பெரியார் சொன்னதன் நீட்சியாக சேர்க்கிறேன் பாண்டே அவர்களே.! ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் மாத்திரமல்ல; திருநருக்கு ஆணும், திருநருக்குப் பெண்ணும், திருநருக்குத் திருநரும், பெண்ணுக்குப் பெண்ணும், ஆணுக்கு ஆணும் இந்த இன்பம், திருப்திக்கான வாழ்க்கைப் பயணத்தில் துணைநிற்கும் சாதனங்கள் ஆகுதல் தான் இயல்பு, இயற்கை. என் படுக்கையறையில் நான் யாருடன், எப்படி இருக்க வேண்டும் என்பதை மனு-வினைப் போலக் கட்டளையிடுகிற அயோக்கியத்தனங்களைத் தவிர்த்தலே சரியானது.

பாண்டே: “முதல் மனைவி, மணமகனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது கூட, மறுமணம் செய்து கொள்வதை சுயமரியாதைக் கொள்கை ஆதரிக்கிறது” (பக்கம் 43). இதை எல்லாம் பெண்கள் ஏற்கிறார்களா? பெரியார் தான் பெண்களை மதித்தார் என்று சொல்லக்கூடிய பெண்கள் இதெல்லாம் ஏற்கிறார்களா? நான் வந்து பெரியாரை எந்த விதத்திலும் விமர்சனம் பண்ண மாட்டேன்; எனக்கு தேவையில்லை. எனக்கு விமர்சனம் பண்ண வேண்டியதில்லை; அவர் பெரியார்; நான் அந்த பக்கமே போகலை; ஆனா பெண்களின் சுயமரியாதை குறித்து பெரியார் தான் பேசினார் என்கிறவர்கள் ஏற்பார்களா என்கிற கேள்வியை மட்டும் வைக்கிறேன்.

பதில்: இது தொடக்கமும், முடிவும் கத்தரிக்கப்பட்ட ஒரு கேள்வி. பெரியாரின் புத்தகத்திலுள்ள வார்த்தைகள் :
“தவிரவும், முதல் மனைவி, மணமகனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது கூட, மறுமணம் செய்து கொள்வதை சுயமரியாதைக் கொள்கை ஏன் ஆதரிக்கிறது என்பதை சற்றுக் காண்போம்.”
ஆக, தவிரவும் என்று பத்தி தொடங்குவதனால், அதற்கு முன்பாக உள்ள ஏழு பக்கங்களின் தொடர்ச்சி அது; பின்னால் இதற்கான காரண, காரிய ஆராய்ச்சியை தொடர்ந்து அதே கட்டுரையில் அடுத்த ஒன்றரை பக்கங்களில் செய்யப்பட்டுள்ளது. பெரியாரை நீங்கள் விமர்சிப்பதில் யாருக்கும் பிரச்சனையில்லை திரு. பாண்டே. முழுமையாக படித்து விமர்சிக்க கேட்டுக் கொள்கிறோம். ஒன்பது பக்க கட்டுரையில் ஒரு வரியை, அதுவும் தலையும், வாலும் கத்தரித்து, அதனை கேள்வியாக்குதல் உலக அபத்தம்.

பாண்டே: “ஆண்களுக்கு உள்ள சௌகரியங்களும், உரிமைகளும், பெண்களுக்கும் வேண்டும். அப்பொழுது தான் பெண்கள் திருப்திகரமான இன்பத்தையும், ஆசையையும் அடைய முடியும் என்று கருதுகிறோம்” (பக்கம் 44).

பதில்: திருப்தி, இன்பம், ஆசை என்பதை இரண்டாவது முறையாக அழுத்தமாக படித்ததன் நோக்கம் புலப்பட்டது. உலக ஆய்வுகள் 67 – 77 % பெண்கள் கட்டாயத்தினால் அல்லது விருப்பமில்லாத நேரங்களில், கணவனால் ஆதிக்கத்துடன் உடலுறவுக்கு ஆட்படும் பொழுது, போலி உச்சநிலை (Fake Orgasm) அடைந்ததாக காட்டி அதனை முடித்துக் கொள்கிறார்கள் என்று பேசுகிறது. இந்தத் தரவுகளை அறிவியலோடும், உளவியலோடும் சேர்ந்து நோக்குக. ஆண்கள் பெண்களில் பாதி சதவிகிதத்தினரும் இந்த போலி உச்சநிலை எய்தலை செய்துள்ளதும் ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிடப்பட்டுள்ளது. திருப்தி, இன்பம், ஆசையினை அடைந்ததாக ஏமாற்றும் பெண்களை, அது நோக்கி, அத்தகைய போலி வாழ்வினை நீங்குவதற்காக, செயல்படத் தூண்டிட வேண்டிய தம் பணியைச் செறிவாகவே செய்துள்ளார் பெரியார்.

பாண்டே: கணவனும், வைப்புக்காரனும், மற்றொருவுருக்கு, தன் சம்மதத்தின் பேரில் கூட்டி விடுவான் ஆனால் அதை அவர்கள் விபச்சாரம் என்று சொல்வதில்லை‌. (பக்கம் 45). இப்படி ஒரு லாஜிக்கலான கேள்வி கேட்கிறார்.

பதில்: பாண்டே அவர்களே.! லாஜிக்கா கேட்டதுனால் தான் அவர் பெரியார். இன்னமும், மறைந்து 47 வருடம் கழித்தும், அவர் தர்க்கங்களை, நான் விமர்சிக்கவில்லை, கேட்கிறேன் பொறுப்புத் துறப்புடன் உங்களை கவனமாகப் பேசிட வைத்தது அவருடைய லாஜிக் தான் எனபதில் எள் மூக்கின் முனையளவும் ஐயமில்லை. மேலே நீங்கள் குறிப்பிட்ட, 1942 க்கு முன்னால் பெரியார் பேசிய இந்த லாஜிக்கை தான் 27/09/2018 அன்று பூரணமாய் உணர்ந்து , உச்சநீதிமன்றம், IPC, 497 வது சட்டப்பிரிவை நீக்கியது. 76 வருஷத்துக்கு முன்னாடி சொன்ன பகுத்தறிவுக்குக் களங்கம் கற்பிக்க முயலுகிற முயற்சிகளுக்கு பாராட்டுகள், இவை யாவும் என்றைக்கும் பெரியாரிய உணர்வாளர்களால் முறியடிக்கப்படும் என்பதில் மிக உறுதியாக உள்ளோம்‌.
குறிப்பு: புருஷன், அவன் விருப்பப்படி நினைத்தவர்களுக்கு, அவனுடைய மனைவியை கூட்டி விடுவது தண்டனைக்குரிய குற்றமல்ல என 2018 வரை இருந்ததே, அவள் என்ன வாடகை சைக்கிளா, நிலமா, புருஷன் குத்தகைக்கு விட்டு பிழைக்க.

பாண்டே: “பெண்கள் சுதந்திரம், பெண்கள் விடுதலை என்பவைகளுக்காக நடைபெறும் காரியங்களில் விபச்சாரம் எனும் காரியம் முட்டுக்கட்டை போடுமானால், அதை தைரியமாக எடுத்து எறிந்துவிட்டு முன்னோக்கி செல்ல வேண்டியது, உண்மையான உழைப்பாளிகளின் கடமை” (பக்கம் 52). விபச்சாரத்தை தூக்கிப்போட்டு பெண்கள் வரனும் என்கிறார் பெரியார்.
அவரே “கேவலம் தாசிகளுக்கு சொத்துரிமை இருப்பதால் , அவர்கள் தங்கள் குடும்பங்களில், தங்கள் சமுதாயத்தில் எத்தனை சுதந்திரமாக இருக்கிறார்கள்” (பக்கம் 69) சொல்கிறார்.
என் கேள்வி: தாசிகள், தேவதாசிகள் என்ற பெயரில் பெண்கள் ஒதுக்கப்படறதை , ஒடுக்கப்படறதைக் கண்டித்ததாக சொல்லக்கூடிய பெரியார், என்ன ஆரம்பிக்கிறார், எப்படி ஆரம்பிக்கறார், ‘கேவலம்’ தாசிகள் அப்படின்னு ஆரம்பிக்கறார். அப்படினா தாசிகளை ஒழிக்கனும் என்று சொல்லிக்கிட்டு இருந்தவர் இந்த இடத்தில் எப்படி அவரை பார்க்கிறார் கணிக்கறார் என்பதை பார்க்கனும், கவனிக்கனும்.

பதில்: திரு. பாண்டே. உங்க ஊர்ல லாம் எப்படி நல்லா இருக்கற உணவா, மருந்தா பயன்படுகிற மரங்கள பிடுங்கி வீசுவீங்களா இல்ல விஷச்செடிகளையா? யாரிடமாச்சும் இப்ப நீங்க வேலை செய்யற நிறுவனம் பிரமாதமான நிறுவனம்; வேலையை விட்டுவிடுங்க என அட்வைஸ் பண்ணுவிங்களா? ஏன் சார், அது கேவலம் என்பதனால் தான் ஒழிக்க வேண்டும் என்கிறார் பெரியார்.
தாசிகள் என்பது கலைக்கான ஏற்பாடு என்பதனை விட, வீட்டில் மனைவிக்கான மாதவிடாயின் பொழுது ஊர் பெரியவர்கள் என்று சொல்லிக் கொண்ட ஆதிக்க சாதியின் ஆண்களுக்கான மாற்று ஏற்பாடாக செய்யப்பட்டது. நீங்கள் ஏன் தாசிகளைக் கேவலம் என்றால் இத்தனை வருத்தமடைகிறீர்கள்? ஓ! “இன்றைக்கு தேவதாசிகளை ஒழிக்கச் சொல்கிறீர்கள்; நாளைக்கு பார்ப்பனர்களை அர்ச்சகராக்குவதையும் எதிர்க்கலாம்; தேவதாசிகளை ஒழித்துவிட்டால் பகவானின் புண்ணிய காரியங்களை யார் செய்வார்கள்? ” என்று சட்டமன்றத்தில் தொண்டை வறள தேவதாசிகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் கொடி பிடிக்கப் பேசிய சத்தியமூர்த்தி அய்யர் அவர்களை ரொம்ப ஆழமாக படித்து விட்டீர்களா? இத்தனை கரிசனம் தேவதாசிகள் மீது.

பாண்டே: பெண்களின் விடுதலைக்கும் சுயேச்சைக்குமே கர்ப்பம் விரோதமாய் இருப்பதால், சாதாரணமாய் பெண்கள் பிள்ளைகளைப் பெறுவதை அடியோடு நிறுத்திவிட வேண்டும் (பக்கம் 71).
புரிகிறதா! ஓங்கி அடிச்சிட்டார்; பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டாம்; இதையெல்லாம் நான் பெண்களுக்கு, புரட்சிப் பெண்களின் பார்வைக்கு விட்டுவிடறேன்.

பதில்: “அவர்களின் கர்ப்பப்பை, அவர்களின் உரிமை”. சாதிக்கு ஆள் சேர்த்து விடுகிற தொழிற்சாலைக்கூடம் அல்ல அவர்கள். திருமணத்துக்கு பிறகு, பிள்ளையின் பெயரால், தன் லட்சியங்களை, பணியை, இலக்குகளை அப்படியே புதைத்து , மறந்து, சுயேச்சை இழந்தவர்கள் எத்தனை ஒரு பத்து கோடி ஆண்கள் இருப்பார்களா ? திரு. பாண்டே. பார்வைக்கு விடுவது மாத்திரமல்ல, கர்ப்பப்பை மீதான முழு அதிகாரமும், முடிவுகளும் அவர்கள் சுதந்திரமாய் செலுத்திட இடையூறு செய்யாமலிருத்தல் தான் நாம் செய்ய வேண்டியது.

பாண்டே: ஆண்களுக்கு, பெண்களுக்கு, இந்த இருவருக்கும் அவர்களது சுயேச்சையையும், விடுதலையையும் கெடுப்பது இந்தக் குழந்தைகள், குஞ்சுகள் என்பவையே (பக்கம் 71). அதனால்தான் நாம், கண்டிப்பாய், பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும் என்கிறோம் (பக்கம் 72). இதை ஒரு தடவை சொல்லிட்டார்; தெரியாம சொல்லிட்டார்; டங்க் சிலிப் ல சொல்லிட்டார்; வேற எதையோ வலியுறுத்த சொல்லிட்டார் அப்படின்னு லாம் சொல்லக் கூடாது. இதெல்லாம் உங்களுக்கு உடன்பாடா அப்படின்னு பெண்களை மதிக்கக் கூடிய பெரியார் என்று சொல்கிறவர்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

பதில்: ஒரு விஷயத்தை சொல்லிட்டு, அப்பறம் அதுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி தந்துவிட்டு வந்து, வீரர் என்று பேருக்கு முன் சேர்த்து வெளியில் சொல்லிக் கொள்கிறவர்கள் வேறு குழு. அவரின் சீடர்களுள் ஒருவர் தான் வல்லபாய் படேல் இறப்புக்கு கூட நேரு போகவில்லை என்று பேசி, பின்னர் காங்கிரஸ் கட்சி நேரு கலந்து கொண்ட செய்தி பிரசுரிக்கப்பட்ட செய்தித்தாளை வெளியிட்ட உடன் அது அட்மின் தவறாக அப்டேட் செய்துவிட்டதனால் தவறாகி விட்டது என்று நழுவியவர். அப்படிப்பட்டவர் அல்ல பெரியார், அவர் வாய் தவறி பேசுகிறவர் அல்ல; பல நச்சுப் பாம்புகளின் விஷப்பல்லை பிடுங்கிடப் பேசுபவர். இந்த கருத்தை தான் ஆரம்பத்தில் “Enjoyment without Responsibility” எனும் சொற்றொடரால் குறித்துள்ளார் பெரியார். நான் இன்னும் கூடுதலாக சேர்த்து சொல்கிறேன்: “Self Empowerment and Global Prosperity with not being a Biological parent”

பாண்டே: மதுவிலக்கு பிரச்சாரத்தை விட, தொத்து வியாதிகளை ஒழிக்கும் பிரச்சாரங்களை விட, இந்த கர்ப்பத்தடை பிரச்சாரம் மிக முக்கியமானது என்பதே நமது அபிப்பிராயம் (பக்கம் 73).

பதில்: குடும்ப நல அமைச்சகம் என ஒன்று நிறுவப்பட்டு, சிகப்பு முக்கோணத்தை கவிழ்த்து குறியீடாக்கி, கொரோனா நேரத்தில் ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு ஆணுறை வழங்குகிற அளவிலான அக்கறை மிகுந்த விஷயமாக, ஒரு அரசு இன்றைக்கும் பேசுகிற, செயல்படுகிற ஒன்றை அன்றைக்கே சொல்லியது கசக்கிறதோ? சொன்னவர் பெரியார் என்பதனாலா?

பாண்டே: பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காக பாடுபடுவதாகவும், ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம், பெண்களை ஏமாற்றுவதற்கு செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலையுண்டா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலையுண்டா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்கு செல்வம் பெருகுமா? (பக்கம் 75).

பதில்: பாண்டே பிரதர்.! என்ன கடைசில ஒரு வரியை காணோம்? பெரியாரின் வார்த்தைகள்:
” ..‌. எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்கு செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதோருக்கு சமத்துவம் பெருகுமா?…” ஆக, நீங்கள் அதை கவனமாக தவிர்த்தன் காரணம், பார்ப்பனர்கள் சமத்துவம் தருவது என்பதல்ல, மாறாக அது குறித்த பேச்சினைக் கூட தவிர்த்திடத் தான் பார்ப்பார்கள் என்கிற புத்தி எனலாமா?
பூனை எலிகளை சாப்பிட்டதைப் போலத் தானே உழைப்பாளர்களின் உதிரத்தினை உறிஞ்சிய வரலாறு பார்ப்பனருடையது; தூய்மை பணியாளரை, எங்களின் மலத்தை அள்ளுவதனால் தான் நீ வாழ்கிறாய் என்று கொரோனா காலத்திலும் சமத்துவம் பேணாமல், நன்றி கருதாமல் பேசியவரின் மரபுவழி வந்த மனு தர்மம்(?) இதற்கு நடுவில் இருப்பதனால் தான் அந்த வரிதனைக் காணாததைப் போலக் கடந்தீர்களோ?

பாண்டே: பெண்கள் பிள்ளை பெறும் தொல்லையிலிருந்து விடுதலை ஆக வேண்டும் என்கிற மார்க்கத்தைத் தவிர, வேறு எந்த வகையிலும் பெண்களுக்கு விடுதலை இல்லை என்கிற முடிவு, நமக்கு கல் போன்ற உறுதி உடையதாக இருக்கிறது (பக்கம் 77-78).
பாண்டே அவர்களின் முடிவுரை: எனக்கு என்ன கேள்வின்னா, யாருமே கடைபிடிக்காத மனுதர்மத்தை சுட்டிக் காட்டி, காட்டி, காட்டி, மனு தர்மத்தில் இப்படி சொல்லியிருக்கிறதே, மனு தர்மத்தில் இப்படி சொல்லியிருக்கிறதே என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
முந்தா நேத்து வரைக்கும் இருந்த பெரியார், இன்று வரை மேற்கோள் காட்டப்படுகிற பெரியார், அவருக்கென்று ஒரு பெரிய இயக்கம் இருக்கக் கூடிய பெரியார், அவர் சொன்ன கருத்துக்களை இவர்கள் ஏற்கிறார்களா?
என்னைக்கோ சொல்லப்பட்ட மனுதர்மத்தை, யாருமே கடைபிடிக்காத மனுதர்மத்தை, இவர்கள் இன்று வரை சுட்டிக் காட்டி , குட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறார்களே, இன்று வரை பெரியாரியக்கத் தோழர்கள் இதையெல்லாம் ஏற்கிறார்களா? தூக்கிப் பிடிக்கறார்களா? என்பதுதான் என்னுடைய கேள்வி. அப்ப இதுக்கு ஒரு வேளை பெரியாரியக்கவாதிகள், அந்தக் காலத்தோடு பொறுத்திப் பார்க்க வேண்டும், சொல்ல வந்த செய்தி என்ன என்று பார்க்க வேண்டும் என்று சொல்வார்களேயானால் , அதே வாதம், அந்தக் காலத்தோடு பொறுத்திப் பாருங்கள், சொல்ல வந்த செய்தி என்ன என்று பாருங்கள் , வார்த்தைகளில் நிற்காதீர்கள் என்கிற வாதம், இவர்கள் சுட்டிக் காட்டுகிற , குட்டிக் காட்டுகிற சனாதனத்துக்கும், இந்து மதத்துக்கும், மனு தர்மத்தின் கும் பொருந்துமா ? பொருந்தாதா? அப்ப பெரியாருக்கு வந்து ஒரு வாதம் கற்பிப்பார்களேயானால் அதே காரணம் மனுதர்மத்துக்கும் மற்றவைகளுக்கும் பொருந்துமா? பொருந்தாதா? இவை நான் வைக்கக் கூடிய கேள்விகள். அவ்வளவுதான்.உங்களுடைய பார்வைக்கு. நான் எந்த முடிவையும் சொல்லவில்லை.

பதில்: மனுதர்மம் இன்றைக்கும் கடைபிடிக்கப்பட வில்லையா பாண்டே அவர்களே.! அப்படி என்றால் இவைகளைச் செய்வோமா..?

 1. மனு தர்ம புத்தகங்களை எல்லாம் பறிமுதல் செய்து யாகம் வளர்த்து இட்டுவிடுவோமா? மேலும் இணையத்தில் உலவும் அப்புத்தகத்தின் மின்நகல்களை எல்லாம் அரசே நீக்கி விடட்டுமே.
 2. சோமன், அக்னி, அவன், இவன், வந்தவன், போனவனுக்கு எல்லாம் பெண்ணை கொடுத்து கடைசியாக மாப்பிள்ளைக்கு கொடுப்பதாய் சொல்கிற கொச்சையான திருமண மந்திரங்களை பார்ப்பனர்கள் சொல்லி திருமணம் செய்து வைக்க வேண்டாமே. மேலும் பார்ப்பனர் செய்யும் திருமணங்களில் மாப்பிள்ளைக்கு தாலி கட்டும் வரை போலிப் பூனூல் போட்டு திருமணம் செய்யாமல் இருக்கலாமே.
 3. மாதவிடாயின் பொழுதும் சொந்த வீட்டு சாமி அறையில் பெண்கள் புழங்கட்டுமே.
 4. மடாதிபதியாக, ஜீயராக பருவம் வந்த அதே வேலை மாதவிலக்கு நின்றிராத பெண்களை, பட்டியலினத்தவரை, பஞ்சமரை ஆக்கி அழகு பார்க்கலாமே.
 5. மலம் அள்ளும் தொழிலை, பிணம் எரிக்கும் தொழிலை, சமத்துவத்துடன் வந்து பார்ப்பனரும், இடைச்சாதியினரும் பகிரலாமே.
 6. நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் என்கிற பொருளுள்ள செய்யுளை, கீதையிலிருந்து நீக்கி இனி அச்சடிக்காமல் இருக்கலாமே.
 7. சேரிகளில் இடம் வாங்கி, அதன் நடுவில் பார்ப்பனர்கள் வீடுகட்டி (தீண்டாமைச் சுவர் எழுப்பாமல்), சமத்துவமாய் பழகி, ஊர், சேரி அல்லது காலனி என்பதனை கலைக்கலாமே.
 8. தேர் இழுக்கும் பொழுது, அய்யர் மாரும் சேர்ந்து சாமியுடன் உட்கார்ந்து அல்லது நின்று அவர்களையும் சேர்த்து இழுக்கச் செய்து பவனி வராமல் கீழே இறங்கி நடந்து, உடன் தேரிழுத்துப் போகலாமே.
 9. பொம்பள மாதிரி பேசு என பெண்ணிடம் அடக்குமுறையும், பொட்டை மாதிரி நடக்காத என ஆணிடம் கண்டனமும் செய்யாமல் இருக்கலாமே.
 10. மனுதர்மம் இன்றைக்கு கடைபிடிக்கப் படாமல் போனதற்கான காரணமான அதன் பிற்போக்குத் தனங்களை எல்லாம் விரிவாக பள்ளி பிள்ளைகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கட்டாயப் பாடங்கள் ஆக்கலாமே.
 • இவற்றை எல்லாம் முயற்சிக்கவேனும் செய்யுங்கள்; பிறகு தெரியும் இன்றைக்கு கடைப்பிடிக்கப் படாத மனுவா என்று.

பெரியாரின் கருத்துக்கள் அன்றைய காலத்தோடு, சூழலோடு மாத்திரமல்ல, என்றைக்குமான காலம், சூழலோடு பொருந்தி நிற்கும். ஒவ்வொரு வார்த்தையிலும் நின்று திடமாக தன் எண்ணங்களைச் சொன்னவர் பெரியார். நீங்கள் வாசித்த எல்லாவற்றையும் இன்றைக்கும் ஏற்கிறோம்; தூக்கிப் பிடிக்கத்தான் செய்கிறோம்.
நாக்பூர் மய்ய நீரோட்டத்துப் புரட்டுகளுக்கு ஈரோட்டு மய்ய நீரோட்ட அரசியல் தான் என்றைக்குமான எதிர்நிலை சித்தாந்தம். அண்மையில் பிரதமர் பாராட்டிய மதுரை முடிதிருத்துநர் குடும்பத்தினரை வலுகட்டாயமாக கட்சியில் பா.ஜ.க இணைத்ததனைப் போல, கடந்த வருடம் அவர்களாகவே கட்சியிலும், மதத்திலும் உறுப்பினராக்கிக் கொண்ட, திருவள்ளுவரின் கருத்துக்களோடு முரண்பட்டு, பெரியார் அதே நூலில் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு வரியைக் கூட காணொளியில் விமர்சிக்க வில்லை பாண்டே அவர்கள்.
ஏனெனில் இவரின் நோக்கம், மனுதர்மம் மீதான தாக்குதலுக்கு பதிலாக பெரியாரின் மீது புரட்டுகளை அள்ளித் தெளிப்பது என்பதுதான். மேலும், வள்ளுவர் சனாதனத்துக்கு எதிராக எல்லாவற்றையும் பேசியவராதலால், அவரை இந்து மதத்தவராக அன்றைக்கு விஷம பிரச்சாரத்துக்காக தூக்கிப் பிடித்ததை தன்னையறியாமல் வெளிப்படுத்தி, வள்ளுவர் மீதான விமர்சனத்தைக் காணாமல் கடக்கிறார் திரு. பாண்டே அவர்கள். அய்யா பெரியாரிடம் கடன் வாங்கிய சொற்றொடரில் சொல்வதாயின் “பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது”.

~ வளவன்.