யாருக்கு வாக்களிப்பது.. D.ஜெயசேகர்.கருங்கல்


தேர்தல் என்றாலே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று குழப்பங்கள் பலருக்கு வரும். ஆனால் இப்போதய ஆளும் கட்சியும் இதற்கு முன்பு ஆண்ட கட்சியும் மக்கள் நலனை விட தங்களின் பொருளாதாரத்தை எப்படி எல்லாம் உயர்த்திக்கொள்ள முடியுமோ அப்படி எல்லாம் உயர்த்துவதற்காகவே தேர்தலில் போட்டி இடுகிறார்கள். அதனால்தான் கோடிகணக்கில் செலவும் செய்கிறார்கள்… ஆனால் ஆளும் கட்சி சொல்கிறது நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம் ,இதை செய்வோம் என்று கூறுகிறார்களே தவிர மக்களுக்காக அதை செய்தோம், இதை செய்தோம் என்று சொல்லி எவரும் வாக்கு கேட்க வில்லை. அதைப்போல்தான் எதிர்கட்சிகளும் சொல்கிறது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம், இதை செய்வோம் என்று வாக்கு கேட்கிறார்கள்.

 

ஆனால் ஆளும் கட்சியிலும் சரி ,எதிர் கட்சியிலும் சரி இப்போது பதவியில் இருக்கும் நாடளுமன்ற வேட்பாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏன் தங்கள் உறுப்பினர் நிதியிலிருந்து மக்களுக்காக எதையும் செய்யவில்லை? ஏனென்றால் அவர்களது நோக்கம் மக்களுக்கு நல்லாட்சி தருவது அல்ல. அவர்கள் நோக்கம் பணம் மட்டுமே என்பதாக இருக்கிறது. இப்படி இருக்கும் போது இவர்களுக்காக ஏன் நம் வாக்குகளை வீணடிக்க வேண்டும்? இப்போதைய காலகட்டத்தில் பரப்புரையானது மக்கள் மனநிலையை பார்த்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதை வரையறுத்து ,அவர்களை வெற்றிபெற விடக்கூடாது என்று அதற்கு எதிராக இருக்கும் எதிர்க்கட்சியை சார்ந்த பிரபலங்களை அடையாளப்படுத்தி அவர்தான் வெற்றி பெறுவார் என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்துகிறது. அதனால் சாதாரண கட்சியில் உள்ள வேட்பாளர்களையோ அல்லது சுயேட்சை வேட்பாளர்களையோ பெருவாரியான மக்கள் மட்டுமல்ல ஊடகங்களும் கண்டு கொள்வதே இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி மாற்றத்தை உருவாக்க முடியும்?
இங்கு யார் மக்களுக்காக மக்களோடு நின்று செயல்படுகிறார்களோ அவர்களுக்கு உங்கள் வாக்குகளை செலுத்தலாம்.
அப்படி இல்லை என்றால் இந்த இரண்டு கட்சிகளில் எதாவது ஒரு கட்சிக்குத்தான் உங்கள் ஓட்டு என்று சொன்னால் உங்களைப்போல ஏமாளிகள் யாரும் இருக்கமாட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உங்கள் வாக்குகளை கொடுப்பதினால் அவர்கள் எளிதில் வெற்றி பெறுகிறார்கள் .

ஆட்சி மாற்றம் நடைபெற்றபின் அவர்களுக்கான பொருளாதாரத்தை பல கோடிகளில் உயர்த்தி மக்கள் பணம் எல்லாவற்றையும் சுருட்டுவதோடு மட்டுமல்லாமல் நாட்டின் கடனையும் அதிகரித்து வைக்கிறார்கள். அனால் அவர்கள் சொத்து மட்டும் பல மடங்கு அதிகரித்து இருப்பதை பார்க்க முடியும் இது எப்படி வந்தது என்று தேர்தல் ஆணையம் மற்றும் நீதித்துறையும் கேட்காது .ஆனால் புதிதாக வந்து இருக்கும் சிலக் கட்சிகள் மீது மக்களுக்கு நாட்டம் இருப்பினும் வாக்கு சிதறிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கும் கட்சிக்கு வாக்களித்து விடுகிறார்கள். இதனால் திரும்பவும் அவர்களே மாறி மாறி ஆட்சி அமைத்து விடுகிறார்களள். இதனால் மக்களுக்கு ஒரு பலனும் இல்லை என்பதை இந்த மக்கள் புரியாத வரை மக்களுக்கான ஆட்சியை கொடுக்கமாட்டார்கள்.

மக்கள் இந்தமுறையாவது புதிய கட்சிகளில் உள்ள நல்ல சமூக செயல்பாட்டாளர்களை வெற்றிபெற செய்தால் சிறிதளவாவது மாற்றம் வரும் என்பதை உணர்வுபூர்வமாக நம்பலாம்..
உங்கள் வாக்குகளை நல்ல சமூக செயல்பாட்டாளர்களுக்கு செலுத்துங்கள் (ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை தவிர்த்து) மாற்றத்தை நோக்கி உழைக்கும் மக்களுக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்.

D.ஜெயசேகர். கருங்கல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here