மோடியை பார்த்து கேள்வி கேட்கிறோம் என்று கிளம்பியிருக்கும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்…..

கேள்வி கேட்பவர்களை பார்த்து சிலர் வியந்து போவார்கள்.. ஆகா…! பார், எப்படி கேள்வி கேட்டுவிட்டார் என்று.

ஆனால், இவையெல்லாம் மோடியையும், பா.ஜ.க அரசையும் அசைத்துப் பார்த்து விடுமென நம்பிக்கை கொண்டிருப்பீர்கள் என்றால் நாம்தான் இந்த நூற்றாண்டின் சிறந்த மடையர்கள்.

இந்தியாவின் முதலாளி வர்க்கம், வங்கிகள், உச்ச, உயர்நீதிமன்றங்கள், ஆர்.எஸ்.எஸ். படை , பா.ஜ.க ஊழியர்கள், இராணுவம், காவல்துறை , அடியாட்கள் படை, ஊடகங்கள் என்று அசுர பலத்துடன் விளங்கும் இன்றைய மோடி அரசாங்கத்திற்கு எதிராக வெறும் வாய்வீச்சை வைத்துக் கொண்டு வெற்றி பெற்றுவிடலாம் என்பதுதான் யுக்தியா?

“ஆமாம், இப்படியெல்லாம் கேள்வி கேட்டால்தானே அதில் உள்ள நியாயத்தை பார்த்து பாதிக்கப்படும் மக்கள் பொங்கி எழுவார்கள், அப்போதுதானே மாற்றம், புரட்சி எல்லாம் ஏற்படும்.” என்கிறீர்களா?

“இதுவரை ஏற்பட்ட மாற்றம், புரட்சியினை காண்பியுங்கள்” என்று மறுமொழி கேட்டால், “அதெல்லாம், அதுவந்து மெதுவாகத்தான் நடக்கும், அதெற்கெல்லாம் மக்களுக்கு புரிய வேண்டும், அவர்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை” என்பதாக பலவிதமான சப்பைக்கட்டுகள் வரும்.

கேள்விகள் கேட்பது, ஐ.நாவில் முறையிடுவது, மெழுகுவர்த்தி ஏந்தி போராடுவது, பதாகைகள் பிடித்துக் கொண்டு நிற்பது இவையெல்லாம் இந்த சர்வாதிகார அரசை அசைத்துப் பார்க்கும் என்று பாமரன் கூட நம்ப மாட்டான்.

இன்றைய தேதியில் இந்த நாட்டை காவல்துறைதான் ஆள்கிறது. இராணுவம் இன்னும் களத்திற்கு வரவில்லை. இதற்கே நம் மக்கள் அச்சத்தின் முழுப்பிடியினில் நிற்கும்போது புரட்சி, மாற்றம் என்று வாய்வீச்சு மட்டும் வீசி வருபவர்களை என்னவென்பது.

உண்மையில் இவர்கள் அரசுக்கெதிரான மக்களின் உணர்வை மடைமாற்றுகிறார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கிறது.

இந்த வாய்வீச்சுக்காரர்கள் மக்களிடம் செல்வதில்லை, மக்கள் ஆதரவும் இவர்களுக்கு இருப்பதில்லை. ஆனால் அறிவுஜீவி பட்டங்களை மட்டும்
தனக்கானதாக வைத்திருக்கிறார்கள்.

யாராக இருந்தாலும் சரி, உங்கள் அறிவுத்திறன், பேச்சுக்கள் ஒரு ஒழுங்கமைந்த செயல்பாட்டை நோக்கி செல்லுமா? செல்கின்றனவா? என்று பாருங்கள். ஒரே ஒரு தெருவின் மக்கள் உங்களின் முன்வைப்புகளுக்கும், முன்னெடுப்புகளுக்கும் செவிமெடுப்பார்களா? என்பதைப் பாருங்கள்.

எதிர்கட்சியான காங்கிரஸ் காலாவதியாகி விட்டது , இடதுசாரிகள் அதிகபட்சமாக பதாகைகள் ஏந்தி நிற்பதோடு சரி, தொழிற்சங்கங்கள் செயலற்று கிடக்கின்றன.

மேற்குவங்கமும், கேரளாவும் சற்றே எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள். காஷ்மீரில் நடந்தேறிய அடக்குமுறைக்கு நம்மால் அதிகப்பட்சமாக என்ன செய்ய இயன்றது. ஒரு மாநிலம் துண்டாடப்பட்டு வேட்டையாடப்பட்ட போதே நம்மால் ஏதும் செய்ய இயலாதபோது பெருநிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டிய பொழுதுகளில் சூரியனை பார்த்து குரைக்கும் நாய் போலத்தான் நாம் நிற்கிறோம் என்பதை உணரவேண்டும்.

மாவோ சொன்னதை போல மக்களிடம் செல்வோம், மக்களிடம் கற்றுக்கொள்வோம், மக்களுக்கு வழிகாட்டுவோம் என்பதை செயலாற்றாமல் மீண்டும், மீண்டும் ஆவேசமாக பொங்கி பேசிவிட்டு பின்னர் கவிழ்ந்து படுத்து உறங்க சென்றுவிடும் நம்மால் கேள்விதான் கேட்க முடியும், அதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்ற ரீதியில் செல்வது தொடர்ந்தால் இங்கே மாற்றங்கள் நிகழவே நிகழாது.

சமூகத்திற்காக நிற்கிறோம் என்று சொல்லக்கூடிய பல்லாயிரக்கணக்கான முன்னணிகள் மக்களிடையே வேலை செய்வதற்கு முன்னுரிமை தரவேண்டும்.

தோழர் முத்துக்குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)பகிர்ந்து கொண்டதாவது,…….
சென்னையில் வியாசர்பாடி பகுதியில் சென்று சிலரிடம் பேசினோம். கொரோனா பற்றியும் அதன் பாதிப்பு பற்றியும் அதனால் நம்மைப் போன்ற சாமானியர்கள் பாதிக்கப்படுவது பற்றியும் பேசினோம். இதைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் மக்களுக்கு துணையாக நின்று வழிகாட்ட வேண்டும். உதாரணமாக உணவுக்கு, பாலுக்கு நெருக்கடி ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது என்று பேசி முடிவு செய்து மக்களுடன் இணைந்து பணியாற்றி வழிகாட்ட வேண்டும் என்று பேசினோம். அவசியம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதேபோல சிஏஏ, என்ஆர்சி பற்றி கேட்டபோது தேவையற்ற சட்டங்கள் என்றார்கள். ஏன் தேவையற்றது என்று கேட்டதற்கு அந்த அளவுக்கு விரிவா தெரியாது நீங்க என்ன செய்யணும்னு சொல்லுங்க செய்யலாம் என்றார்கள். சரி விவரமாக பேசலாம் என்றோம். அதே நேரம் தற்போது ஏற்பட்டுள்ள வேலையின்மை, விலைவாசி, கொரோனா ஆகிய பாதிப்புகள் நம் மக்களை வீதிக்குத் தள்ளுகிறது. அரசு அதற்கு முறையான பதிலளிப்பதில்லை. மக்களை பிளவுபடுத்தி,தான் தப்பித்துக்கொள்கிறது. மெரினா ,டெல்லி ஆகிய இடங்களில் பார்த்தது போல போலீசுடன் பாஜக ஆர்எஸ்எஸ் ஆட்கள் வந்தால் என்ன செய்வது? நம்மை தற்காத்துக்கொள்ள இப்போதே தயாராக வேண்டும் என்றும் பேசினோம்.

நம்ம பகுதி இளைஞர்களுக்கு போதுமான வழிகாட்ட சரியான ஆட்கள் இல்லை. நீங்கள் வாருங்கள் அதற்கான வேலைகளை நன்றாக செய்யலாம் என்றார்கள். இளைஞர்களை இதுபோன்ற விசயங்களில் கவனம் செலுத்த வைக்க என்ன செய்யலாம் என்று விவாதித்தோம். அந்த பகுதியில் பாக்சிங் கற்பவர்கள் சிலர் உள்ளார்கள். அத்துடன் சிலம்பம் கற்றுத்தர ஏற்பாடு செய்யலாம், யூடியூப் சேனல்கள் உதவியோடு கானா பாடும், டான்ஸ் ஆடும் இளைஞர்களை சிஏஏ எதிர்ப்பு,கொரோனா விழிப்புணர்வு பாடல்கள் பாடச்செய்து வெளியிடலாம் என்று முடிவு செய்தோம்.

தினசரி சிலரை சந்திப்பது, அவர்களை குழுவில் இணைப்பது, வாரம் ஒரு சிறப்பு கூட்டம் நடத்துவது என்றும் திட்டமிட்டுள்ளோம். இதன்மூலமாக நாம் உருவாக்கும் படைப்புகளை சேகரித்து சில பிரபலங்களுக்கு அனுப்பி, அவர்களை அந்த பகுதிக்கு அழைத்து பேசவைப்பது என்றும் திட்டமிட்டுள்ளோம்.”

இது ஒரு எளிமையான வேலைத்திட்டம், ஆனால் மிகவும் பலன்தரக்கூடிய வேலைத்திட்டம். இது போன்ற வேலைகளின் மூலமாக மக்களிடம் நெருங்கி நின்றோமானால், மக்களுக்காக நம்மை அர்ப்பணித்துக்கொண்டால், நம்மால் மக்களை எழுச்சிக் கொள்ள வைக்க முடியும்.

மோடி ஆட்சி போன்ற அராஜக ஆட்சியினை எதிர்த்து போராடுவதற்கான அடித்தளங்களை கட்ட முடியும்.

நம் விவாதங்கள் மூலமாக மட்டுமே அனைத்து முடிவுகளையும் வந்தடைந்துவிட முடியாது. நடைமுறை அரசியலையும் , மக்களையும் புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கான தத்துவத்தையும், அரசியலையும் செழுமைப்படுத்திவிட முடியாது. நமது பல்வேறு சந்தேகங்களை நடைமுறையில்தான் தீர்த்துக்கொள்ளவும் முடியும். தத்துவார்த்த அரசியலை ஒதுக்கிவிட்டு நடைமுறைவாதம் பேசுகிறேன் என்று யாராவது போர்க்கொடி தூக்கிக்கொண்டு வரலாம். மாவோவின் ” நடைமுறை பற்றி” என்ற அறிவுறுத்தலின் வரம்புக்குள் நின்றுதான் இவற்றை முன்வைக்கிறேன்.

மக்களை நாம் புரிந்துக்கொள்ளும் தருணத்திலும், நம்மை மக்கள் புரிந்து கொள்ளும் தருணத்திலும்தான் புரட்சிக்கான அடித்தளம் அமைக்கப்படுகிறது. அத்தகைய மக்கள்தளங்களை உருவாக்கும் பணியினை மேற்கொள்வதை முதற்கடமையாக கொள்வோம். மக்கள்விரோத அரசுகளை விரட்ட மக்களை தயார்படுத்துவோம்.

நம் செயல் நம் அரசியலை பேசட்டும்.

இளந்திரையன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here