சரிந்து செல்லும் இந்திய பொருளாதாரம்- சுமதி விஜயகுமார்.

இன்றைய இந்தியாவின் பொருளாதாரம் எந்த அளவிற்கு பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது என்பதை சிறிய ஒரு உதாரணத்திலிருந்து துவங்குவோம்.

ஒரு சிறிய பலசரக்கு கடை. மாலைவேளையில் ஓரு சிறிய ஆண்குழந்தை தன் தந்தையுடன் இரவு நேர சமையலுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருகிறான்.அப்பா காசு பார்த்து பொருட்களை வாங்க ,அந்த சிறுவன் ஆசையாக ஒரு பிஸ்கட் பாக்கெட்டை கேட்கிறான்.அதை வாங்க காசு இல்லாததால் பல காரணங்களை சொல்லி தந்தை அவனை அழைத்துக்கொண்டு வீடு செல்கிறார்.அவன் கேட்டது விலையுயர்ந்த பிஸகட் கிடையாது வெறும் ரூ.5 மதிப்புள்ள சிறிய பாக்கெட்தான்.
அதைக்கூட வாங்க முடியாமல் ஏக்கத்துடன் அந்த சிறுவன் வீடு சென்று ஒரு சில மாதங்களில் அந்த பிஸ்கட் கம்பெனியே இழுத்து மூடப்படுகிறது.அந்த நிறுவனம் PARLE- G.

பல் வேளைகளில் ஏழை மக்களின் நொறுக்கு உணவு இந்த parle- G தான். சில சமயங்களில் உணவே இதுதான்.
தொழிலாளர்களுக்காவும் ஏழைக்குழந்தைகளுக்காகவும் ஏற்ற விதத்தில் சிறிய பாக்கெட்டில. அதிக செலவில்லாமல் கிடைக்கும் உணவுப்பண்டம்.அதை இழுத்து மூடுகிறார்கள் என்பது இந்திய பொருளாதாரம் எந்த அளவிற்கு பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறது என்பதற்கான சிறு அறிகுறியாகும்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை உருவானது.அமெரிக்கா போன்ற வல்லரசுகளே ஆட்டம் கண்டது.ஆனாலும் இந்தியாவில் அதிக பாதிப்பு இல்லை.இப்போது உலகம் மீண்டும் ஒரு பொருளாதார மந்தநிலையை எதிர்பார்த்து அதற்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில் இந்தியா மட்டும் ,பொருளாதார மந்தநிலையை நோக்கி விரைவதில் அனைத்து நாடுகளையும் விஞ்சிக்கொண்டிருக்கிறது.ஆனால் அதை பற்றியெல்லாம் சிறிதும் வருத்தப்படாமல்,அதில் இருந்து மீள்வதற்கான வழிகளை எல்லாம் அடைத்துவிட்டு வெறும் மதவெறி கூச்சல் போட்டுக்கொண்டு சமுக ஆர்வலர்களையும், போராளிகளையும் ஒடுக்குவதிலேயே குறியாக இருக்கிறது இந்த அரசு.

ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை அடைந்த இந்தியா தனக்கான கனவுகளை வைத்திருந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த நாட்டை தொழில்வளர்ச்சியின் பக்கம் திருப்ப முயன்றார்.அதன் விளைவாக மத்திய அரசால் பல பொதுத்துறை நிறுவனங்கள் துவங்கப்பட்டது.இப்போது அதில் 5 நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க முடிவெடுத்துள்ளது மோடி அரசு.இது ஒன்றும் புதிய விடயமல்ல.பொதுமக்களின் சொத்தும் ,இந்தியாவின் பாதுகாப்பிற்கு கேந்திரமான துறைமுகங்களையும், விமான நிலையங்களையும் அதானி,அம்பானி குடும்பத்தாருக்கு வாரி இரைத்து கொண்டிருக்கிறார் மோடி

சேலம் ஸ்டீல் ஆலையை தனியாருக்கு மாற்ற கடும்எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அந்த முயற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ரயில்வேதுறை தனியார்மயமாவதை எதிர்த்து அதன் பணியாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்..

கூறுகூறாக இருந்த சமஸ்தானங்களை எந்த முதலாளித்துவத்திற்காக ஆங்கிலேய அரசு ஒன்றிணைத்ததோ அதை இப்பொழுது மோடி அரசு விற்றுக்கொண்டிருக்கிறது.

2016 பணமதிப்பிழப்புதான் இதன் துவக்கம் .அப்போதே 60% மேல் உள்ள informal sector என்ற சிறுகுறு தொழில்கள் முடக்கப்பட்டது.அதாவது நேரடிவரி அன்றி மறைமுக வரிதான் இந்திய அரசின் பெரும் வருமானம். சாலைகளின் ஓரம் எளிய கடைவீதிகளில், நடைபாதையில் செய்யப்படும் வியாபாரம் ,மிகப்பெரிய மால்களின் வியாபாரத்தை விட அரசுக்கு அதிக வருமானம் பெற்றுத்தருவது சில்லறை வணிகம்.
பணமதிப்பிழப்பின் போது பணத்தட்டுப்பாட்டால் இந்த சில்லறை வியாபாரம் பெருமளவிற்கு
பாதிப்பிற்குள்ளானது.இதை நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான வியாபாரிகளும் ,அன்றாட வர்த்தகத்தினரும் தடுமாறி பலரும் தங்கள் தொழிலை விட்டுவிட்டு கூலித்தொழிலுக்கு செல்லும் நிலை உருவானது.

பணமதிப்பிழப்பிற்கு பின் ஏறக்குறைய 50 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளார்கள்.இதனை பற்றி கேட்டால் பிரதமரோ பக்கோடா விற்று பிழைத்துக்கொள்ள சொல்கிறார்.பக்கோடா போட முதலீட்டை புரட்டினால்கூட, அதை வாங்கி சாப்பிட யாரிடமும் பணமிருக்காது.
அடுத்து கொண்டு வரப்பட்ட GST வரியோ நடுத்தர தொழில்துறையை பாதித்தது.காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வரையறுக்கப்பட்ட GST மோடி அரசால் அவசர வரிவிதிப்பாய் அமல்படுத்தப்பட்டது.பல நிறுவனங்களும் விழிபிதுங்கி நின்றன.
GST யால் எதிர்பார்த்த வரியை விட மிக குறைந்த வரி வசூலானதை அரசே ஒப்புக்கொண்டுள்ளது.இன்னும் கட்டிய வரிக்கு refund செலுத்தவில்லை இந்த அரசு.ஆனால் இதில் குறிப்பிடவேண்டிய விடயம் என்னவென்றால் இதனால் அதானிகளோ,அம்பானிகளோ கொஞ்சமும் பாதிக்கப்படவேயில்லை.

பொருளாதார மந்தநிலை சிறிதும் இல்லை என்று அரசு ஒருபுறம் சொல்லிக்கொண்டிருக்க,மற்றொருபுறமோ வாகன உற்பத்திதுறை கடும் சரிவை கண்டது.பல நிறுவனங்கள் உற்பத்தி குறைந்ததால் தங்கள் உற்பத்திக்கான வேலை நேரத்தை குறைத்துள்ளன.இதை அடுத்து Reserve Bank of India – வின் வைப்பு நிதியில் இருந்து ரூ. 1.76 லட்சம் கோடிகளை பெற்றுள்ளது மோடி அரசு.அந்தப்பணத்தை வைத்து தொழிற்துறையை முன்னேற்றப்போகிறார்கள் என்று சாமனியமக்கள் கனவு கண்டு கொண்டிருக்க,மோடி அரசோ சத்தமே இல்லாமல் பெருநிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியை 25.2 சதம் குறைத்துள்ளது.இதன் மூலம் அரசுக்கு ரூ. 1.45 லட்சம் கோடி வருவாய் இழப்பு.

மிகசமீபத்தில் வலைத்தளத்தில் காங்கிரசை சேர்ந்த பொருளாதார வல்லுநர் அளித்த பேட்டி ஒன்று வலம் வந்தது. அதில் அவர் ஆண்கள் வாங்கும் உள்ளாடையின் விற்பனை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.கடந்த 40 ஆண்டுகளில் முதன்முறையாக நுகர்வோர் செலவழிக்கும் திறன் 3.7 சதவிகிதமாக சென்ற ஆண்டு குறைந்துள்ளது.இது்எதன் குறியீடு என்றால் வருமானம் இல்லாததால் வாங்கும்திறன் குறைந்துள்ளது.வாங்கும்திறன் குறைந்துள்ளதால் விற்பனை குறைந்துள்ளது.விற்பனை குறைந்துள்ளதால் உற்பத்தியை குறைத்துள்ளது தொழிற்துறை நிறுவனங்கள்.உற்பத்தி குறைக்கப்பட்டு லாபம் குறைந்ததால் இழப்பை சரிசெய்ய தொழிலாளர்களின் வேலை நாட்களை குறைத்துள்ளது. இது மீண்டும் மீண்டும் நிகழும் ஓரு சுழற்சி.இந்த நிலையை ஓரளவிற்கு சரிசெய்ய வேண்டுமென்றால் ,அரசு தொழில்களில் அதிக முதலீட்டை கொண்டு வரவேண்டும்.உற்பத்தி பெருகுவதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகும்.ஆனால் அரசிற்கும்,பெருமுதலாளிகளுக்கும் லாபம் மட்டும்தான் எப்போதும் ஒரே நோக்கம்.உலகப்பொருளாதார வல்லுநர்கள் இந்தியப்பொருளாதாரத்தை
பற்றி குறிப்பிடுவது அனைத்தும் சாமானியரின் வயிற்றில் புளியை கரைப்பதாகவே இருக்கிறது. வல்லுநர்கள் எதிர்பார்த்ததை விட இந்திய பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் அதன் உண்மைநிலை. இப்பொழுது துவங்கி இந்த நிலையை சரிசெய்ய நினைத்தால் கூட நமது பொருளாதாரம் பழையநிலையை அடைய குறைந்தது 10 ஆண்டுகள் பிடிக்கும்.அதற்கான எந்த திட்டங்களையும் வரையறை செய்யாதபோது மேலும் சில ஆண்டுகள் பிடிக்கும்.

எளியவர்களும்,வறியவர்களும் வறுமையில் உழல, நடுத்தர வர்க்கமோ விழிபிதுங்கி நிற்க,தொழிற்துறையோ தட்டுத்தடுமாற ,அரசோ பொதுத்துறை நிறுவனங்களை தனியார்களுக்கு ஏலம் போட்டு விற்றுக்கொண்டிருக்கும் பணியை செவ்வனே செய்துக்கொண்டிருக்கிறது.தற்போதைய நிலை இன்னும் மோசமடையும் என்பதுதான் உண்மையாக இருக்க, நமக்கு நமது நாடு சென்று கொண்டிருக்கும் பாதையை உன்னிப்பாக கவனிப்பதற்கான கடமை இருக்கிறது. நமது நாட்டின் பொருளாதார வீழ்ச்சி நமது வீழ்ச்சியாகும்.
இந்த மோடிக்கும்பலை தடுத்து நிறுத்துவதுடன் நமது பொருளாதாரத்தை மீட்பதும் நமது கடமையாகும்.

சுமதி விஜயகுமார்.
 
 
 
 
 

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here