முகிலனை மறப்போம்……..அபராஜிதன்


மறப்பது நல்லது.மனிதனுக்கு மறதி என்பது ஒரு வரம்.தனக்கு வரும் எல்லா நெருக்கடிகளையும் கடந்து போவதற்கு உதவும் அருமருந்து. மறக்கக்கூடிய வழக்கம் மட்டும் இல்லையென்றால் நாம் அனைவரும் குற்றவுணர்ச்சியால் மரணித்துவிடுவோம்.

பொள்ளாச்சியில் 250-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் பயங்கரத்தை கூட இன்னும் சில நாட்களில் நம்மால் மறந்து கடந்து செல்ல முடியும். இதுவரை கடந்த பத்தாண்டை எடுத்துக்கொண்டால் கூட நடந்திருக்கும் அநீதிகள்தான் எத்தனையெத்தனை? நாம் எவற்றிலாவது வெற்றி பெற்றிருக்கிறோமா?

அநேகமாக இருக்காது.தயவு செய்து ஜல்லிக்கட்டு புரட்சி என்றெல்லாம் ஆரம்பித்துவிடாதீர்கள் .ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற விடயங்கள் தமிழ்நாட்டில் ஒரு தவறான வெற்றி மனநிலையை உருவாக்கியிருக்கிறதே தவிர உள்ளபடியே அதில் ஒன்றுமில்லை.

சரி.இந்த கட்டுரையிலாவது முகிலனை மறந்துவிடாமல் இருப்போம்.முகிலனை பொறுத்தவரை அவரை குறித்து பல மாற்று கருத்துகள் பலருக்கு இருக்கலாம்.ஆனால் அவர் எடுத்துக்கொண்டு போராடிய சமுக-அரசியல் பிரச்சனைகள் அவ்வளவு சாதாரணமானவையல்ல.கூடங்குளம் ,தாதுமணல் கொள்ளை, காவிரி மணல் கொள்ளை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் அனைத்துமே மக்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடியவை. இவற்றையெல்லாம் அடையாளமாக செய்தவரில்லை.மக்களிடையே தங்கி அவர்களை திரட்டி ,போராட்டங்களை நடத்தி பிரச்சனைகளை முன்நகர்த்தியவர். அவர் மர்மமான முறையில் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்.

காணாமலாக்கப்படுதல் என்ற வார்த்தையை அடிக்கடி நாம் ஈழத்தில் காணாமலடிக்கப்படும் தமிழர்கள் விடயத்தில் கண்டிருக்கிறோம்.அப்படி ஒரு அரசபயங்கரவாதத்தை இப்போது தமிழ்நாட்டில் உணர்கிறோம்.அந்த அளவிற்கா இங்கே அரசு மாறிவிட்டது. ஆம் ,தூத்துக்குடியில் 13 -க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்தபோதே அதற்கான முன்னறிவிப்பு வந்துவிட்டதென நாம் அறிந்திருக்கவேண்டும். இன்று பல இயக்கங்கள் பயப்படுகின்றனர் வழக்குகள் பாயுமென,கைது செய்யப்படுவோமென! அரசின் கடுமை கண்டு தனிநபர்களும் பின்வாங்குகின்றனர். முற்போக்கு இயக்கங்கள் 2009-ல் 20 ஆக இருந்தது இன்று 200 ஆகிவிட்டிருக்கிறது.அது பலம் அதிகரித்ததால் அல்ல,பலவீனமானதால்.

அத்தனை இயக்கங்களும் திரண்டு வந்தாலும் கூட ஒரு போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்களை பார்க்க இயலாது. ஆட்களை அதிகமாக திரட்டும் போராட்டங்களை இன்னும் அரசியல் கட்சிகளால்தான் கூட்ட இயல்கிறது.ஆனால் அரசியல் கட்சிகளை ஒருபோதும் நம்ப இயலாது. தங்கள் தேர்தல் கூட்டணி, சீட்டு பேரம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கும் அதேவேளை மக்கள் விரோத நிலைப்பாட்டினை தங்கள் கட்சி கொள்கை என்ற பெயரில் முன்வைத்து முதுகில் குத்துவார்கள்.ஆளுங்கட்சிக்கு எதிராக உள்ளவர்கள் ஒரு நல்ல எதிர் கட்சியாக இருந்தால் ஆளுங்கட்சிக்கும் ஒரு அச்சம் இருக்கும். தங்கள் தன்மானங்களை முன்னரே இவர்கள் அடகு வைத்துவிடுவதால் இவர்களை பற்றி அச்சப்படுவதற்கு ஆளுங்கட்சிக்கு ஒன்றுமில்லாமல் போகிறது.

முற்போக்கு இயக்கங்களும் கருத்துப்போராட்டங்களை தனிநபர் போராக மாற்றுவதன் மூலமும் , முற்போக்கு இயக்கங்களில் இருக்கும் மாற்று அரசியலாளர்களை தூற்றுவதையும்,ஒழிப்பதையுமே தங்கள் வாழ்நாள் செயல்திட்டமாக வைத்திருக்கிறார்களே தவிர,அரசை எதிர்த்து செயல்படுவதையல்ல.
தேர்தல் அரசியல் கட்சிகள் வெளிப்படுத்தும் ஒற்றுமையை கூட இந்த முற்போக்கு அரசியலாளர்கள் வெளிப்படுத்துவதில்லை.எங்கே தங்களை யாரும் குறை சொல்லிவிடுவார்களோ என்பதற்காக ஒரு அடையாளப்போராட்டத்தை நடத்தி முடித்து மறக்கும் படலத்தை துவங்கி வைப்பவர்களும் அவர்கள்தான்.அனைவரும் ஓரு பிரச்சனையை எடுத்துக்கொண்டு அவரவர் வழியில் போராடி ஒரேயொரு வெற்றியை பெற்றால் கூட இந்த சமுகம் அவர்களை நம்பத்துவங்கும்.நம்புவதற்காக காத்துக்கொண்டிருக்கிறது.

முகிலனை நாம்தான் காணாமலடித்திருக்கிறோம்.நம்முடைய பலவீனங்களால் ,ஓற்றுமையின்மையால் , அமைப்பை கட்டும் திறமையின்மையால், மக்களை திரட்டும் திறமையின்மையால் ,அரசை எதிர்த்து நின்று போராடி பணிய வைக்கும் இயலாமையினால்.
இயலாமையின் இறுதி மறதிதானே?
இன்று முகிலன் , நாளை ?

அபராஜிதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here