மிருக பலத்துடன் மீண்டும் அதிகாரத்தில் பா.ஜ.க – தீர்வு என்ன?- செழியன்.

கடந்த ஐந்தாண்டு பா.ஜ.க ஆட்சியில் பல்வேறு முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

அவற்றில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மிக முக்கியமானது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழல் ஒழியும், பயங்கரவாதம் ஒழியும், கள்ள நோட்டுகள் ஒழியும் என்று பா.ஜ.க.வினரால் சத்தியம் செய்து சொல்லப்பட்டது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு புல்வாமா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன, புதிய கள்ளநோட்டுகள் பல கோடி கைப்பற்றப்பட்டுள்ளன, புதிது புதிதாக ஊழல் முறைகேடுகள் நடந்தவண்ணம் உள்ளன. ஆக, பா.ஜ.கவினர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு கூறிய எதுவும் உண்மை இல்லை.

ஒருவேளை பண மதிப்பிழப்பு நடவடிக்கை அவசியமாக இருந்தால் கூட அதை அறிவிக்க வேண்டிய நபர் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஆவார். ஆனால் நாட்டின் பிரதமர் இதை ஏன் அறிவித்தார் என்பது இன்றுவரை தெரியவில்லை. அன்று முதல் தொழிலாளிகள், விவசாயிகள், சிறு குறு தொழில் செய்பவர்கள் சந்தித்து வரும் பொருளாதார பிரச்சினைகள் குறைந்தபாடில்லை. சிறு குறு தொழில்கள் ஏராளமானவை அழிந்துள்ளன.

மற்றொரு பக்கம் ஜி.எஸ்.டி என்ற வரிவிதிப்பு முறையை அறிவித்ததன் மூலம் மாநில அரசுகளுக்கான உரிமைகள் அனைத்தையும் பறித்து, மைய அரசை சார்ந்து இருக்கும்படி செய்துள்ளது. மைய அரசை எதிர்த்தால் தமது மாநிலத்துக்கு தனியான எந்த மக்கள்நலத் திட்டங்களையும் நிறைவேற்ற முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. சிறு தொழில் செய்பவர்களை கடும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

மோடி அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை செல்லாக்காசாக்கியது. நீம் (NEEM), ஃபிக்சட் டெர்ம் எம்பிளாய்மென்ட் (FTE) உள்ளிட்ட கடும் தொழிலாளர் விரோத, தொழிற்சங்க விரோத திட்டங்களை புகுத்தியது. தொழிற்சாலைகள் சட்டத்தை நீர்த்துப் போக வைத்தது.

தொழிலாளிகளின் எதிர்காலத்திற்கான சேமிப்பான வருங்கால வைப்பு நிதி பணத்தை சூறையாட துணிந்தது, வங்கி, எல்.ஐ.சி போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பணங்களை, மக்களின் சேமிப்புகளை முதலாளிகளுக்கு தாரை வார்த்தது.

ஆதார் அட்டை பற்றி பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என்று நீதிமன்றங்கள் வலியுறுத்திய பின்பும் வலுக்கட்டாயமாக பல்வேறு வழிகளில் மக்கள் மத்தியில் திணித்தது.

தீண்டாமை ஒரு பாவச் செயல் என்று சொல்லிக்கொண்டே உணவின் மீது தீண்டாமையை கடைபிடித்து மாட்டுக்கறி உண்ணுகிறார்கள் என்ற காரணத்தைக் காட்டி சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீது பா.ஜ.க.வின் பல்வேறு குண்டர் படையினரை வைத்து தாக்குதல் நடத்தி கொலை செய்தனர். இவற்றை நாடு முழுவதும் உள்ள மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

இவற்றையெல்லாம் எதிர்த்து ஜனநாயக முறையில் கேள்வி கேட்டவர்களை கொலை செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் பகுத்தறிவு இயக்கம் நடத்திய மருத்துவர் நரேந்திர தபோல்கர்,
கர்நாடகாவில் மூடநம்பிக்கைகளை எதிர்த்து பிரச்சாரம் செய்த எம்.எம் கல்புர்கி,
இந்துத்துவ பயங்கரவாதத்தை கண்டித்து எழுதி வந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ்,
மராட்டிய அரசன் சிவாஜி பற்றிய உண்மை வரலாற்றை எழுதிய கோவிந்த் பன்சாரே உள்ளிட்டோர் இந்துத்துவ பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்

தொழிலாளிகள், விவசாயிகள், பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடிய பேராசிரியர் சாய்பாபா, சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லக்கா, வரவர ராவ் உள்ளிட்டோர் கொடூர சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு இன்னமும் கொட்டடி முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

மோடி அரசு நீதிமன்றம், காவல்துறை போன்றவற்றை எந்த வரை முறையும் இன்றி அடியாள் படை போல பயன்படுத்தி வந்துள்ளது.

பா.ஜ.க தலைவராக இருந்த, இப்போது உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமித்ஷா மீதான வழக்கில் நீதிபதியாக இருந்த லோயா அவர்களை விலை பேசியுள்ளனர். அவர் மறுக்கவே மிரட்டியுள்ளனர், முடியாமல் போகவே கொலை செய்துள்ளனர். அதுவும் சக நீதிபதிகள் உதவியுடனே இதைச் செய்துள்ளனர்.

சுருக்கமாகச் சொன்னால் தமது நோக்கங்களுக்கு அடிபணிய மறுப்பவர்களை விலை பேசுவது, அச்சுறுத்துவது, அதன் பிறகும் பணிய மறுப்பவர்களை கொலை செய்வது இதுதான் கடந்த ஐந்து ஆண்டு பா.ஜ.க ஆட்சியின் தாரக மந்திரம். இதற்கு ஏற்கனவே இருக்கும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட தனது குண்டர் படைகளையும், தேர்தல் மூலம் தான் கைப்பற்றிய அரசுக் கட்டமைப்பையும் முழுமையாக பயன்படுத்தி உள்ளது. எல்லா இடங்களிலும் ஒரேமாதிரி இல்லாமல் தேவைக்கேற்ப, இடத்திற்கு ஏற்ப பயன்படுத்தி வந்துள்ளது.

இவை அனைத்தையும் எதிர்க்கட்சிகளும், பிற மாநிலக் கட்சிகளும் எவ்வாறு எதிர்த்தன என்பதையும் நாம் பார்த்தோம். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கூட வரிசையில் நிற்க வைத்ததை தவிர்த்திருக்கலாம், முன்னரே அறிவித்திருக்கலாம், போன்ற சில காரணங்களைச் சொல்லி மட்டுமே எதிர்த்தனர். தவிர, அதனால் ஏற்படும் இழப்புகள் பற்றியும் சாமானிய மக்கள் பாதிப்பது பற்றியும் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு முதலாளிகள், சுய தொழில் செய்பவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து அணி திரட்டவில்லை.

மோடி அரசின் அலட்சியத்தால் 40 படைவீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து அவர்களை பாதுகாப்பதில் அரசின் தோல்வியை அம்பலப்படுத்தாமல், பா.ஜ.க வின் தேசவெறி பிரச்சாரத்துக்கு துணை சென்றனர்.

இந்தப் பின்னணியில் தற்போது நடந்த தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.

இதைப்பற்றி எதிர்க்கட்சிகள் தற்போது என்ன சொல்கின்றன என்றால், ஓட்டுப் பெட்டிகளை மாற்றிவிட்டனர், வாக்குப் பதிவு மெசினை ஹேக் செய்தனர், கள்ள ஓட்டு போட்டனர், வாக்காளர்களை மிரட்டி தாங்களே ஓட்டுக்களை போட்டுக்கொண்டனர், காங்கிரஸ் கட்சியை செயல்படவிடாமல் அதன் தலைவர்களை சிபிஐ, ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் போன்றோரை கொண்டு முடக்கிவிட்டனர் என்றும் கூறுகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் பா.ஜ.கவினர் எவ்வாறு அதிகாரிகளை, அரசு எந்திரத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தினார்களோ, குண்டர் படைகளைக் கொண்டு மிரட்டி பணிய வைத்தார்களோ, எதிர்ப்பவர்களை கொலை செய்தார்களா, அரசு அமைப்புகளை தமது சொந்த நோக்கத்துக்காக பயன்படுத்தினார்களோ, ஊடகங்களை தமது பிரச்சாரத்தை செய்ய வைத்தார்களோ, சமூக ஊடகங்களில் வெறுப்பு பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டார்களோ அதையே தான் தேர்தலிலும் செய்துள்ளார்கள். அதன் விளைவாகத்தான் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் ஜனநாயகப் படுகொலையாக முடிவடைந்துள்ளது.

இதைப்பற்றி பேசத் துணிவில்லாத எதிர்க்கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் அமித்ஷாவால் தான் பா.ஜ.க வென்றது, அமித்ஷா போன்ற தலைவர்கள் தமது கட்சிக்கும் வேண்டும் என்றும் கூச்சமே இல்லாமல் பேசுகின்றனர். அதாவது, தாமும் பா.ஜ.க போன்ற மோசடி, அடாவடி, வன்முறை கட்சியாக மாற வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கின்றனர். வெட்கங்கெட்டவர்கள்.

இந்தச் சூழலில் மேற்கண்ட நடவடிக்கைகளால் பெரும்பான்மை உழைக்கும் மக்களாகிய தொழிலாளிகள், விவசாயிகள், சிறு குறு குறு தொழில் புரிபவர்கள் அனைவரும் எதிர்காலம் பற்றிய கடும் அச்சத்திலும், அதிருப்தியிலும் உள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் ஏதும் பேசாமல் பா.ஜ.கவினரின் அத்துணை அடாவடித்தனங்களையும் வேடிக்கை பார்த்த எதிர்க்கட்சிகளும் பிற மாநிலக் கட்சிகளும் இனிமேலும் நமது ஜனநாயக உரிமைகளையும், பொருளாதார நலன்களையும் காப்பார்கள் என்று நம்ப முடியுமா?

அல்லது இந்த ஐந்து ஆண்டும் முடியட்டும் அடுத்த ஆட்சி மாற்றம் நடக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று ஒதுங்க முடியுமா? முடியாது என்பதுதான் எதார்த்தம்.

என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

உச்சநீதிமன்றத்தில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டித்து வெளிப்படையாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறிய வார்த்தைகளை கவனியுங்கள். அவர்களே “நீதிமன்றங்களை பா.ஜ.க விடமிருந்து எங்களால் காப்பாற்ற முடியவில்லை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று உழைக்கும் மக்களாகிய நம்மிடம் தான் வந்தனர்.

வானளாவிய அதிகாரம் படைத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கே இதுதான் நிலைமை என்றால் நம்மைத்தவிர வேறு யாரால் பா.ஜ.க வை எதிர்கொள்ள முடியும்?

அன்பார்ந்த தொழிலாளர்களே, ஒன்றைக் கவனித்தீர்களா?

விவசாய பெருங்குடி மக்கள் போராடிய போதெல்லாம் கொஞ்சம் கூட சட்டை செய்யாத இந்த அரசு வருங்கால வைப்பு நிதியை பாதுகாக்கும் பொருட்டு பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளிகள் போராட்டத்தை கண்டு பணிந்தது ஏன்?
தமிழக விவசாயிகளை சந்திக்கக் கூட முடியாது என்று மறுத்த பா.ஜ.க வினர் போஸ்ட் ஆபீஸ் தொழிலாளிகளின் போராட்டத்தை கண்டு உடனடியாக பணிந்தது ஏன்?
வங்கித் தொழிலாளர்களின் போராட்டத்தைக் கண்டு பின் வாங்கியது ஏன்?

ஏனென்றால் முதலாளித்துவம் ஆதிக்கம் செலுத்தும் நம் நாட்டுப் பொருளாதாரம் ஆலைகளில் நடைபெறும் பெரும் உற்பத்தியையும் வங்கி, ஐ.டி, ஐ.டி சேவை, பங்குச் சந்தை, சேவைத் துறை உள்ளிட்டவைகளை மையமாக வைத்து இயங்குகிறது. இவை அவர்களது ரத்த ஓட்டத்தை இயக்கும் இதயம் போன்றவை. இதில் ஒரு சிறு கீறல் விழுந்தாலும் ஆளும் வர்க்கத்தால் தாங்கிக்கொள்ள முடியாது.

தொழிலாளிகளது போராட்டம் இந்த இதயத்தின் இயக்கத்தை தடுத்து நிறுத்தும் வல்லமை பெற்றது. வேறு யாராலும் இதனை தடுக்க முடியாது.

நடந்து முடிந்த தேர்தல் நமக்கு பல்வேறு பாடங்களை கற்றுத்தந்துள்ளது. இதனை உணர்ந்து நமது கடந்தகால வழிமுறைகளை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
தொழிலாளிகளாகிய அனைவரும் தொழிற்சங்கங்களில் இணைய வேண்டும்.
வெவ்வேறு நிறுவனங்களிலும், வெவ்வேறு துறைகளிலும் உள்ள தொழிற்சங்கங்கள் இணைந்து செயல்பட வேண்டும்.

சக தொழிலாளிகள் மற்றும் பிற உழைக்கும் மக்களது கோரிக்கைகளை செவிமடுத்து கேட்க வேண்டும், ஆதரவு கொடுக்க வேண்டும். அவர்களது போராட்டத்தில் களமிறங்கி கைகோர்த்து நிற்க வேண்டும்.

இவ்வாறு தொழிலாளி வர்க்கம் அமைப்பாக ஒன்றுபடுவதன் மூலம்தான் ஆளும் தொழிலாளர் விரோத, விவசாய விரோத, சிறு தொழில் விரோத பா.ஜ.க-ஆர்,எஸ்,எஸ் கும்பலை எதிர்கொள்ளவும் நமது உரிமைகளை மீட்கவும் முடியும்.

தொழிலாளிகளாகிய நாம் தான் இந்த வழியில் பயணத்தைத் துவங்கி பிற விவசாய மக்களையும், சிறு குறு தொழில் புரிபவர்களையும், வேலையில்லா திண்டாட்டத்தால் சிக்கித் தவிக்கும் இளைஞர்களையும், பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

முதலாளிகளையும், சாதி/மத வெறி அமைப்புகளையும் எதிர்ப்பதற்கென்றே உருவான தொழிற்சங்கம் என்ற வர்க்க அமைப்பும், மார்க்சியம் என்ற சிந்தனை ஆயுதமும் நம்மிடம் உள்ளது.

சங்கமாகத் திரள்வோம், திரட்டுவோம், அரசியல் வெற்றி பெறுவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here