மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்குமா தமிழக அரசு?

         கொரோனா இரண்டாவது அலையானது வேகம் எடுத்து நாடெங்கும் வீசி வருவதால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது . இதனால் மருத்துவ ஆக்சிஜன் தேவை உயர்ந்திருக்கும் நிலையில், மத்திய அரசு உத்தரவின் படி சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஐநாக்ஸ் ஆலைதான் சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்குகிறது .சென்னையில் ஏற்கனவே கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும்போது இங்கிருந்து மற்ற மாநிலங்களுக்கு அனுப்பியது ஏன் என்ற கேள்வி எழுகிறது .

         ஒப்பீட்டளவில் பார்த்தால் கூட தமிழகத்தில் 79 ஆயிரம் பேர் கொரோனா நோய்க்கான சிகிச்சை பிரிவில் உள்ளனர் .ஆனால் ஆந்திராவிலும் ,தெலங்கானாவிலும் அந்த எண்ணிக்கை முறையே 53,42 ஆயிரம் என்ற அளவில் தான் உள்ளது .இதுகுறித்து தமிழக மருத்துவமனைகள் மேலாண் இயக்குனர் உமாநாத் ஐ.ஏ .எஸ் கூறியதாவது ,தமிழக அரசின் அனுமதியின்றி ஆக்சிஜன் திருப்பிவிடப்பட்டது என்பது உண்மை. இந்த செயலுக்காக தமிழக அரசின் அதிருப்தியை மத்திய அரசிடம் தெரிவித்து உள்ளோம் என்றார். 

          தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 79 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். தற்போதைய நிலையில் சராசரியாக நாளொன்றுக்கு 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது .இந்த மாத இறுதியில் தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை 465 டன் மெட்ரிக் டன்னாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது பயன்படுத்துவதை விட இரண்டு மடங்கு ஆக்சிஜன் தேவைப்படும் .ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு 200 மெட்ரிக் டன் என ஒதுக்கீடு செய்துவிட்டு ஆந்திரா,தெலங்கானா மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை 360 மெட்ரிக் டன்னாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

             மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்பட்டு வரும் போக்கை எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்ததோடு,இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டன. இந்த நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் ஆகிய மருந்துகளை பிற மாநிலங்களுக்கு அனுப்பிவைத்தது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து கையில் எடுத்துள்ளது.பிற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறை தமிழகத்திற்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

           இச்சூழல் காரணமாக தமிழக அரசு, தற்போதைய சூழலில் ஆக்சிஜன் தயாரிக்க நிறுவனங்கள் முன் வந்தால் அவர்களுக்கான உரிமம் உடனே வழங்கப்படும் என அறிவித்ததைத் தொடந்து, இந்த வாய்ப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதற்காக,தூத்துக்குடியில் 2018 ஆம் ஆண்டு தமிழக அரசால்  மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து அதில் ஆக்சிஜன் உற்பத்திப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கவேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுதாக்கல் செய்திருக்கிறது. மனுவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  சிகிச்சை அளிக்க முடியாமல்  நாட்டில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.இதனைக் கருத்தில்கொண்டு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கான கட்டமைப்புகள் இருப்பதால் அதனைக்கொண்டு ஒருநாளைக்கு 1050 டன் ஆக்சிஜன் அளவு உற்பத்தி செய்யமுடியும் எனவும்,அதனைத் தயாரித்து இலவசமாகத் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எனவே ஆலை இயங்க அனுமதிக்க வேண்டுமெனக் கேட்டுள்ளது.

               இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது,ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது. இந்த வழக்கில் பதிலளிப்பதற்கு அவகாசம் அழைக்கும்படி தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

               இதற்கிடையே ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கூடாது என தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. பொது மக்கள் உயிரைக் காவுவாங்கக் காரணமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலைத் திறப்பிற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் மதிமுகாவின் பொதுச்செயலாளர் வைகோ. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஆலையைத் திறக்கக்கூடாது என பொதுமக்களும் ,சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அதன் பின்னர் ஆலையைத்திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

              இச்சூழலில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது இந்த ஸ்டெர்லைட் ஆலையைத்திறக்க தூத்துக்குடி மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிக்கை அனுப்பியிருப்பதாகவும்,அதில் ஆலையைத்திறக்க அனுமதிக்கக்கூடாது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நாட்டிலுள்ள வேறு ஆலைகளில் ஆக்சிஜன் தயாரிக்கலாம் எனவும் தமிழக அரசுத்  தரப்பு கூறியது. இந்த ஸ்டெர்லைட் ஆலையை அரசே எடுத்து நடத்தத் தயாரா? இவ்வாலையைத் தமிழக அரசே எடுத்து நடத்தினாலும் கவலையில்லை எனத் தலைமை நீதிபதி தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர்,ஆலையைத் திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும்,இந்த ஆலை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறியதையடுத்து, அதிருப்தி அடைந்த நீதிபதி மக்கள் இறந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கமுடியாது என அரசே சொல்வதா?எனக் கேள்வி எழுப்பினார். சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி ஆலையைத் திறக்கமுடியாது எனச்சொல்லக்கூடாது என்றார் நீதிபதி.

               தமிழகம் முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த ஆக்சிஜன் கைப்பற்றும் செயல் நடந்தேறியுள்ளது. மத்திய அரசின் சட்டங்களுக்கும் ,திட்டங்களுக்கும் முழு ஒத்துழைப்பு அளித்துவரும் தமிழக அரசு ,இந்த ஆக்சிஜன் எடுப்பிற்கும், ஸ்டெர்லைட் ஆலை திறப்பிற்கும் நிரந்தரமாக என்ன முடிவு எடுத்து மக்களைக் காக்கப்போகிறது? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.வேலூர் ,குரோம்பேட்டை அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப்  போக்க அரசு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறது? எடுத்துவருகிறது ? இந்த நிலை தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இருந்தால் என்ன நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்? ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்குவதற்கான அடுத்த நடவடிக்கைகள்  என்ன? பரவிவரும் கொரோனவைக் கட்டுப்படுத்த அரசின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்?   இப்படி மனதில் எழும் பற்பல கேள்விகளுக்கு வரும் காலங்களில் விடை தெரியும் . .

க.சித்திரசேனன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here