மாணவர்களை அச்சுறுத்தும் 5,8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு – அஸ்வினி கலைச்செல்வன்

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி செய்வதில் மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்ததை தொடர்ந்து 5, 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான சட்டத்திருத்தத்தை கடந்தாண்டு டிசம்பர் மாதம் கொண்டு வந்தது.பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இலவச கட்டாயக்கல்வி சட்டத்திருத்தப்படி ,பள்ளிக் கல்வியின்கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு (2019-20) முதல் பொதுத்தேர்வு நடத்துவதற்காகவும் வழிகாட்டவும் தொடக்கக்கல்வி இயக்குநர் அனுமதி கோரியுள்ளார்.

8ம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி செய்வதால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாக கூறி அரசு பொது தேர்வை கட்டாயப்படுத்துவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இதனால், இடை நிற்றல் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகளவில் ஏற்படும் அபாயம் உள்ளது.

நடப்பு கல்வியாண்டு (2019-2020) முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் பல்வேறு அரசியல் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதை தொடர்ந்து 24 மாநிலங்களில் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்தது.

புதிய சட்டத்திருத்தப்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வாக நடத்தப்படவிருக்கும் அரசுப் பொதுத் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களில் உடனடி தேர்வு நடத்த வேண்டும். அந்த தேர்விலும் மாணவர்கள் தோல்வியடையும் பட்சத்தில் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

அதுசமயம் பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ள பள்ளி கல்வித்துறை இனி வரும் காலங்களில் மொழித்தாளுக்கான தேர்வுகள் முதல் தாள் இரண்டாம் தாள் என்றில்லாமல் ஒரே தாள் தேர்வாக நடத்த திட்டமிட்டுள்ளது. அதையேற்று நடப்பு கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத் தேர்வுகள் இனி ஒரே தாளாக நடத்தப்படும் எனவும் அறிவித்ததுள்ளது. எதிர்ப்புகளுக்கிடையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான அரசு பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

5-ம் வகுப்பு பொதுத் தேர்வு 2020 ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது.தேர்வுகள் முறையே15- ஏப்ரல்-தமிழ், 17- ஏப்ரல்-ஆங்கிலம், 20-ஏப்ரல் கணக்கு என நடைபெற உள்ளன.

8-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு 2020, மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதியுடன் முடிவடைகிறது. 30-மார்ச் -தமிழ், 2-ஏப்ரல்-ஆங்கிலம்,8- ஏப்ரல் -கணக்கு,15- ஏப்ரல்- அறிவியல், 17-ஏப்ரல்-சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெற உள்ளன.

இந்த இரு வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள், காலை 10:15 மணிக்கு தொடங்கி, 12:15 மணிக்கு முடிவடையும். மாணவர்கள் வினாத்தாள்களைப் படிப்பதற்கு 10 நிமிடங்களும், விவரங்களைப் பதிவுசெய்ய 5 நிமிடங்களும் வழங்கப்படும் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய தேவைகளான அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, படிப்பதற்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலிருப்பது போன்ற குறைபாடுகளை சரிசெய்வது பூர்த்தி செய்ய வலியுறுத்தி வரும் நிலையில்
இதற்கு கொஞ்சமும் செவிமடிக்காத அரசு தொடக்க கல்வியிலேயே பயத்தைத்தூண்டி, பொது தேர்வின் சுமைகளை திணித்து ,இடைநிற்றலை ஊக்குவிக்கும் விதமாக செயல்படுவது கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சட்டத்திருத்தின் விளைவாக பாதிக்கப்படவிருக்கும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர், ஆசிரியர்கள், அரசி்யல் கட்சிகள் மட்டுமின்றி பொது கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் குழுவும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அஸ்வினி கலைச்செல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here